Sunday, 19 April 2015

ஜெய ஜெய ஜெயகாந்தனின் சித்திகளும் முக்திகளும் -ஒரு வாசகனின் பார்வை ! எஸ்.எம்.எம்.பஷீர்"விடையிலிருந்து  புதிர் ஒன்றை உண்டாக்குபவனே ஒரு எழுத்தாளன்" - கார்ல் கிராஸ் ( பிரபல ஆஸ்திரிய நாடகாசிரியர் கவிஞர்)

விடலைப் பருவத்தின் பிந்திய பகுதிகளில் பாடசாலை விடுமுறைகளில் ஜெயகாந்தனை தற்செயலாக  வாசிக்க நேரிட்டது . மட்டக்களப்பு வாசிக சாலையில் , அதுவும் ஒரு தற்செயல் நிகழ்வாக , அவரின் முதல் நாவலான "வாழ்க்கை அழைக்கிறது" என்ற நாவலையே இரவல் பெற்று வாசிக்க நேரிட்டது இன்னமும் பசுமையான நிகழ்வாகவே இருக்கிறது. அதுவரை வாசித்த  நாவல்களில்  இல்லாத ஒரு  விசித்திர  அனுபவத்தை பெற்றதனால் ,  அந்த நாவலை தொடர்ந்து இரண்டு முறை அடுத்தடுத்து வாசிக்க நேரிட்டது மட்டுமல்ல ஜெயகாந்தனை தேடி வாசிக்க வேண்டும் என்ற ஒரு ஈர்ப்பினையும் அந்த நாவல் ஏற்படுத்தியது.

 வாழ்க்கை அழைக்கிறது" என்பது அவரின் பின் வந்த நாவல்களுடன் ஒப்பிடும் பொழுது சுமாரானதாக  தோன்றுமளவு அவரின் பிந்திய எழுத்துக்கள் பிரமிப்பை ஏற்படுத்தின. ஒரு புதிய தமிழ் இலக்கிய உலக தரிசனம் கிடைத்தது. ஜெயகாந்தனின் புனைவுகளின்  பாத்திரங்கள் வெறும் கதை மாந்தர்களுக்கு அப்பால் மனதில் உறைந்து போனார்கள் , நிஜ வாழ்வின் விம்பங்ககள் போலவே தோற்றமளித்தார்கள் . எழுத்துக்களுக்கு அப்பால் ஜெயகாந்தனை ஊடறுத்து தேட வேண்டிய ஒரு தனி மனித உந்துதல் இயல்பாகவே எழுந்தது. ஜெயகாந்தனின் எழுத்தின் மீதான ஒரு பிரேமை ,  அவரின் சமூக அரசியல் சிந்தனைவாத ஆளுமையின்  மீதான பார்வை பற்றிய வாசிப்பினை  ஊக்குவித்தது. 
ஜெய ஜெய  சங்கரா எனும் அவரின் நாவலை இறுதியாக வாசித்து  முடித்தது ஞாபகத்தில் படிந்திருக்கிறது. அதற்குப் பின்னால் ஜெயகாந்தனை வாசிக்கும்  விருப்பின் மீதும் ஒரு தொய்வு   ஏற்படத் தொடங்கியது. 


அதற்கான காரணங்களில் ஒன்று;  கால, தேச வர்த்தமான மாற்றங்கள்  என்மீது ஏற்படுத்திய  சூழ்நிலை மாற்றங்கள். மற்றையது ஜெயகாந்தன் சமரசம் செய்துகொண்ட   சங்கதிகளுடன் சமரசம் செய்து கொள்ள முடியாமல் போனது. ஒரு குறிகாட்டும் பெயர்ப்பலகை காணாமல் போனதும் பயணிப்பவன் குழப்பிப் போவது போல ,  ஜெயகாந்தனின் மீது ஈர்ப்புக் கொண்டவர்கள் , அவரைத் பின் தொடர்ந்தவர்கள் ( சிந்தனை வயப்பட்ட வாசகர்கள்)"ஜெயகாந்தன் "  எங்கே  என்று தேட வேண்டி நேரிட்டது. அந்த கால  கட்டத்தில் சினிமாவுக்குள்ளும் ஜெயகாந்தன் நுழைந்தும் விட்டார். அவரை திரை மூடவில்லை,   அவரே அவருக்கு திரையானார். அவரின்  திறைமைகள் திரையிலும்  தெரிந்தன. அவரின் மொழி (தமிழ் தெய்வீக மொழி ) ,மத (சனாதன தர்மங்கள்)  , நம்பிக்கை , அரசியல் (மார்க்சியம்/தேசியம்)  என்ற  சிந்தாந்த  அரசியல்  அவருக்கு  அடையாளச் சிக்கல்களை ஏற்படுத்தின .  தன்னையும்  உண்மை சுடுகிறது என்ற தன்னுணர்வுடன் அபத்தமாகவேனும் அவற்றை அவர்  ஆழ்ந்த அனுபவமிக்க வாசகனாக ஏற்றுக் கொண்டார். அதன் மூலம் அவரின் முரட்டு  நியாயங்களை  வெளிப்படுத்திய வேளையில் அவரின் சுய முரண்பாடுகளையும்  சுதாகரித்துக் கொண்டார். 

அவரின் இலக்கிய ஆளுமை என்பது , அவரின் சித்தாந்த அரசியல் மத சமூக சித்தாந்த  முரண்பாடுகளைத்  தாண்டி வழங்கிய அடையாளமாக நிலை பெற்று விட்டது. ஆனாலும் அவர் ஒருதடவை சுய ஒப்புதலாக நான் முரண்பாடுகளின் ஒரு பொதி ( “I am a bundle of contradictions” ) என்று குறிப்பட்டதை நான் .ஞாபகத்தில் வைத்துள்ளேன். !  அதுவே அவரின் முழு சமூக அடையாளமாக வரலாறு பதிவு செய்யும் என்பதே  யதார்த்தமானது !   
 
ஜெயகாந்தன் மார்க்ஸியம் பற்றியும் அவ்வப்பொழுது  பத்திரிக்கைகளில் எழுதி வந்துள்ளார் .அந்த எழுத்துக்கள் மூலம் மார்க்சியம் பற்றிய ஈர்ப்பு ஏற்பட்டதாக பலர் பின்னாளில் சிலாகித்துக் கூறியதுண்டு. எனினும் காங்கிரசின் கட்சிப் பத்திரிக்கையான "ஜெய பேரிகை"யை நடத்திய பொழுது ஜெயகாந்தன் எழுதியது பற்றி இந்திய மார்க்சிய கருத்தாளர் ஒருவர் , அந்த (காங்கிரஸ்) பத்திரிகையில் ஜெயகாந்தன் மார்க்ஸ் பற்றிய எழுதிய கருத்தான " இவனுக்கு (மார்க்ஸ் ) முந்திய வரலாறு அனைத்தும் இவனில் (மார்க்ஸில் )  முடிந்து பிந்திய வரலாறு அனைத்தும் இவனில் தொடங்குகின்றன " என்ற கருத்து பற்றி சிலாகித்து கூறி , இப்படியெல்லாம் எழுதிய ஜெயகாந்தன் உண்மையில் மார்க்ஸை தெரிந்து வைத்திருந்தார் , அவரின் கோட்பாடுகளை தெரிந்து வைத்திருக்கவில்லை  என்று குறிப்பிடுமளவு ஜெயகாந்தன் மத சமூக அரசியல் நடவடிக்கைகளில், தனது  எழுத்துக்களில் முரண்பாடுகளை பிண்ணிக்  கொண்டே தன்னை வெளிப்படுத்தினார். 

இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியிலிருந்து அவர் விலகினார் என்று சொல்லப்பட்டதை அவர் மறுத்துள்ளார்,   ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை  விலக்கி  வைக்க நேரிடும் வகையில் ஜெயகாந்தனின் கருத்துப் பிறழ்வுகளும் கம்யூனிஸ்ட்கள் மீதான விமர்சனங்களும் அமைந்தன என்பதே உண்மையாகும். பின்னர் முதலாளித்துவ அமைப்பு முறையின்   நியாயங்களை , தனது பல தரப்பட்ட சித்தாந்த கருத்தியல் மாற்றங்களை ஒரு கருத்துப் பரிமாற்றத்தின் (Thought Process) பரிணாமம் என்று சமரசம் செய்து கொள்கிறார். தன்னையே கடவுளாகக் காண்பதே ஆத்மீகம் என்பதும் வர்ணாச்சிரம தத்துவங்ககளை விளங்குவதில் உள்ள தவறைக் கொண்டு ஜாதிமுறையை புறக்கணிக்க முடியாது என்றும்  சொன்னவர் ஜெயகாந்தன். அவரின் இலக்கிய சாதனைகளைக் கடந்த சாதிகளைக் கடந்து அங்கீகரித்தவர் ஒரு உன்னத உலகைக் காண விழையும்  மனிதாபிமானமும் சமூக அக்கறையும் கொண்ட ஒரு  எழுத்தாளன் என்ற அவரின் இலக்கிய விலாசம் ஒரு மேதாவிலாசமாகும்.!

ஜெயகாந்தனை ஒரு சிந்தனையத் தூண்டும் நாவலாசிரியனாக , சிறுகதை எழுத்தாளனாக உரை  நடை எழுத்தாளனாக ,    மட்டுமல்ல  திரைப்பட கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் இலக்கிய விமர்சகர் என்ற அவரின் பல்வேறு  பரிமாணங்களைக் கொண்ட தடயங்கள் மிக  ஆழமாக தமிழ்  உலகில் பதிந்துள்ளன . எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடம் காணப்பட்ட   துணிச்சல் மிகுந்த, எவருக்கும் அடிபணியாத  கருத்து வெளிப்பாடு என்பது அவரின்   தனித்துவ  மேன்மையாக  இருந்தது. 1990 இல் சென்னையில் நடந்த ஈ.பீ ஆர் எல்ப் எப்  தலைவர் பத்மநாபாவுக்கான  அஞ்சலிக் கூட்டத்தில் புலிகளை   காரசாரமாக கண்டித்தவர்  ஜெயகாந்தன் ." அவர்களை (புலிகளை) போராளிகள் என்றோ புரட்சிக்கார்கள் என்றோ .உலகம் ஒப்பாது , அவர்கள் (புலிகள்) வன்முறையை வழிபடுகின்ற பாசிஸ்டுகள் "  என்று தமிழகத்தில்  புலிகளை சுடு சொற்களால்  யாரும் இதுவரை தமிழகத்தில்  கண்டிக்கவே இல்லை. அவரின் கண்டனக் குரல் கணீரென்று  இன்றுவரை காதில் ஒலிக்கிறது. புலிகளின் அழிவு பற்றி  கட்டியம் கூறியவர் அவர், அதையும்  அவரின் மரணத்தின் முன்னரே கண்டு கொண்டவர். அந்த துணிச்சல் , அந்த தார்மீக குரல் அவர் கொண்டிருந்த மனித குல அக்கறையின் மீதான அழுத்தமான பதிவு .           

" ஈஸ்வர அல்லா தேரோ நாம்"  


காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஜெயகாந்தன்  , காந்தியின் தினமும்  பிரார்த்தனைப்  பாடலான    "ரகுபதி ராகவ ராஜாராம்

பதித பாவன சீதாராம் ( தர்மத்திலிருந்து பிறழ்ந்தவர்களை பாவனமாக்குபவர் ராம பிரான்)

ஈஸ்வர அல்லா தேரோ நாம் (அவரை ஈஸ்வர் எனவும் அல்லாஹ் எனவும் போற்றுகின்றனர்)

ஸப்கோ ஸன்மதி தே பக்வான் (எல்லோருக்கும் நன்மதியைக் கொடுப்பாய் இறைவா)" 

அடிப்படையில் காந்தியின்  அதீத ராம பக்தியுடன்  " இராமனை" கடவுளாக்கி அத்துடன் ஈஸ்வரனையும் , அல்லாஹ்வையும் ராமரின்  மறுபெயர்கொண்ட கடவுளர்களாக , அல்லது அக்கடவுளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யாவரும் ராமரே என்று பொருள் கொள்ளப்படும் வகையில் காந்தியின் "ரகுபதி ராகவ ராஜாராம்" பிரார்த்தனைப் பாடல் அமைந்திருக்கிறது.

காந்தியின் பிரார்த்தனைப் பாடல் வரிகளில் உள்ள  " ஈஸ்வர அல்லா தேரோ நாம்" என்ற தலைப்பின் ஒரு நாவலை 1982ல் ஜெயகாந்தன் எழுதினார். 1982 அளவில் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் பல தலித்கள் முஸ்லிமாக மதம் மாறியதைக் கண்ட பின்னர்  ஜெயகாந்தான் எழுதிய நாவல் இது. அவரது அந்த  நாவலைப்  பற்றி   " ஜெயகாந்தன் சொல்ல வந்தது தெளிவாக இல்லை. ஹிந்துவும் முஸ்லிமும் ஏன் மணம் செய்து கொள்ளக் கூடாது என்று அவர் பெரிதாக விவரிக்கவில்லை. சமூகம் பொதுவாக ஆட்சேபிக்கும் என்பதே போதும் என்கிற மாதிரி எழுதி இருக்கிறார் என்ற  விமர்சனம் மூலம் ஜெயகாந்தனை அதுவரை தெரிந்து வைத்திருந்த தடயத்தில் காண முடியவில்லை என்ற  விமர்சகர்களின் ஆதங்கத்தை சுட்டிக் காட்டியது

எப்பொழுதும் எதிர்கால செயல் குறித்து  நண்பர்களுக்கிடையில்  பேசுகின்ற பொழுது ஜெயகாந்தன் "  இன்ஷா அல்லாஹ் " ("அல்லாஹ் -இறைவன் நாடினால்" ) என்று  கூறுவதை  தான் பின்பற்றுவதாக ஜெயகாந்தன் ஒருதடவை எழுதி இருந்தார்.  எதிர்காலம் குறித்த செயல்கள் யாவும் இறைவனின் நாடினால மட்டுமே நடக்கும் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கை குறித்து தான் கவரப்பட்டதால் அப்படிக்  கூறுவதாக கூறியதுடன் ;  குணங்குடி மஸ்தான் சாகிபு (முஸ்லிம் சூபி--சித்தர்) பாடல்களை  பாராயணம் செய்து  மேற்கோள் காட்டிய  ஜெயகாந்தன்  "ஈஸ்வர அல்லா தேரோ நாம்" என்ற கோட்பாடு முஸ்லிம்களுக்கு உடன்பாடற்றது  என்பதை  புரியுமளவு இஸ்லாமிய அடிப்படைகளை  .புரிந்திருக்கவில்லை. காந்தியே அறியாத பொழுது இது ஒன்றும் வியப்பானதல்ல என்று வெளிப்படையாக தோன்றினாலும் , அதிக  வாசிப்பும்  தேடலும் கொண்ட ஜெயகாந்தன் அறியாமல் விட்டது ஆச்சரியமானதே!

மறுபுறத்தில் இங்கு ஏதோ ஒரு விதத்தில்  இன்னுமொரு சம்பவம் எனது ஞாபகச்  சரட்டில்  இழைந்துள்ளதால் அது பற்றியும்   குறிப்பிட வேண்டியுள்ளது . காந்தீயை ஒரு கூட்டத்தில் முகமதலி ஜின்னா "மஹாத்மா" காந்தி என்று  விளிக்காமல் "மிஸ்டர் காந்தி"  என்று விளித்ததற்காக நையப்புடைக்கப்பட்டார். அக்கூட்டத்தில் அவர் பேசாது தடுக்கப்பட்டார். ஆனால் ஜின்னா  "மஹாத்மா" என்று சொல்ல மறுத்ததைப் பற்றியும் , காந்தியின்   "  ஈஸ்வர அல்லா தேரோ நாம்"  பற்றியும் திராவிடக் கழக முன்னணி பிரமுகர்  அறிவுக்கரசு சொல்வார் "  இவன் (ஜின்னா) ஆத்மா நம்பிக்கை இல்லாத ஒரு மதத்துக்காரன் , அவரெப்படி!  .... காந்தி  "ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்" என்று  பித்தலாட்டம் பண்ணலாம் , ஈஸ்வரனும் , அல்லாஹ்வும் ஒன்றா ? ஈஸ்வரனுக்கு பெண்டாட்டி  இருக்கு .......இருக்கு , அவன் உருவமே  இல்லேன்கிறான் , அப்படிப்பட்ட இரண்டு,  எப்படி ஒன்னா இருக்கும் !  "

மத நல்லிணக்கம் என்பது  "இன்ஷா அல்லாஹ் " என்று சொல்வதையோ  ,  "ஈஸ்வர அல்லா தேரோ நாம்"  என்பதையோ  கதைக்கருவாக  கொள்வதையோ ஒருபுறம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் , காந்தீய அபிமானியான பெரியார் எதிர்ப்பாளரான ஜெயகாந்தனின் பிற்கால கதைகள் , உரைநடைகள் உரைகள் என யாவும்  அவரின் சித்தாந்தக் குழப்பங்களின் சிதைவுகளையும் வெளிப்படுத்த தவறவில்லை.!

18/04/2015

No comments:

Post a Comment

நாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை !

எ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...