Saturday, 8 November 2014

குருக்கள்மடத்துப் பையன் (4)


எஸ்.எம்.எம்.பஷீர்

சமூகத்தின் பல மட்டங்களிலும் புலிகளுக்காக விசுவாசமாக செயற்பட்ட புலி ஆதரவாளர்கள் , தகவல் சொல்லிகள் , (உளவாளிகள்) பலர்  "நாட்டுப்பற்றாளர்கள்" என்று புலிகளால் அவர்களின் மரணத்தின் பின்னர் வெளிப்படையாக பிரகடணப்படுத்தப்பட்டனர்.  அவ்வாறாக புலி விசுவாசிகளாய் , ஆதரவாளர்களாய் கொல்லப்பட்டவர்கள் , இயற்கை எய்தியவர்கள் பலரும் நாட்டுப்பற்றாளர்கள் என்று கவுரவிக்கப்பட்டனர். 


நோர்வே அனுசரணையுடன் அமுலுக்கு வந்த சமாதான கால அந்திம பகுதியில் வீதிகண்ணிவெடியில் கொல்லப்பட்ட முன்னாள் தமிழர் கூட்டமைப்பு எம்.பீ . சந்திரநேரு அரியேந்திரன் (2/8/1995) , பிரபாகரனின் மாமனார் எனப்படும் ஏரம்பு ஐயா (கந்தையா ஏரம்பு ) , பத்திரிக்கையாளர் ஐயாத்துரை நடேசன் (31.05.2004) உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த மட்டக்களப்பு அன்னை பூபதி ஆகியோர் பலருக்கும் தெரிந்த புலிகளால் அதிகம் கொண்டாடப்பட்ட சில நாட்டுப்பற்றாளர்கள் ஆகும்.


புலிகளுக்காக உளவுப் பணி புரிந்து , இறந்து போன புலிகள் சிலரை , புலிகள் திட்டமிட்டு மறைத்தனர் என்பதற்கு ஆதாரமாக , அப்படி மறைக்கப்பட்ட சிலரின் புகைப்படங்களை பிரசுரித்து , அவர்களை ஞாபகத்தில் கொண்டு வர சிலருக்கு முடியும் , அதன் மூலம் பல சந்தேக முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட ஏதுவாக  இருக்கும். அப்படியான இன்னுமொரு நாட்டுப்பற்றாளாரே வசந்தன் ஆகும். இவர் 1998ல் இறந்துள்ளார். ஆனால் இவரின் பெயரையோ புகைப்படத்தையோ புலிகள் வெளிப்படுத்தவில்லை. அந்த வகையில் " மாவீரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் " என்று  கூறி வந்த புலிகளின் தலைவர்  பிரபாகரன் இவர்களை மாவீரர்கள் என்று கருதினாரா என்பதற்கப்பால் , இவர்களை மறைப்பதில் திட்டமிட்டு செயற்பட்டுள்ளார் என்பது புலனாகிறது. தங்களுக்குள் பாதுகாத்த இவர்களின் பெயர்கள்  உட்பட்ட சகல விபரங்களும் வெளியிடப்படவில்லை.!  இவர்களில் சிலர் குறிப்பிட்ட தனிநபர் படுகொலைகளிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம்!

குருக்கள்மடத்தில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட  முஸ்லிம்களின் உடலங்களின் எச்சங்களையாவது தோண்டி எடுத்து மத அடிப்படையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதும் , புலிகளின் மிலேச்சத்தனமான படுபாதகச் செயலை ஆதாரங்களுடன் பதிவு செய்வதும் குருக்கள்மட புதை குழி தோண்டுதலின் நோக்கம் எனப்படுகிறது. அந்த வகையில்  இக் கட்டுரையாளரை  இலண்டனில் சந்தித்த , தனது குடும்பத்திலும்  சிலரை குருக்கள் மடப் படுகொலைகளில் இழந்த ஒரு காத்தான்குடி வணிகர் , இலங்கை சென்றதும் அது தொடர்பில் துரிதமாக செயற்படப் போவதாக கூறிய பொழுது. இக்கட்டுரையாளர் அது தொடர்பில் சட்ட ரீதியில் உதவ விரும்புவதைக் குறிப்பீட்டு இலங்கை வந்ததும் அவரை சந்தித்து இருவரும் அது தொடர்பில் செயற்படுவதாக தீர்மானித்தனர். அந்த வணிகருடன் இக்கட்டுரையாளச் சந்திக்க வேண்டி நேரிட்டவர்களுள் ஒருவர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபையின்  உறுப்பினரான ரஹுமான் என்பவரின் மூலம் இங்கு கல்வி கற்பதற்காக இங்கிலாந்து வந்தவர்! , மேலும் இவர் ரஹுமானின் வெளிப்படையான ஆதரவாளர் என்பதால் பொதுவான கிழக்கு முஸ்லிம் அரசியல் தொடர்பான கருத்தாடல்களில் மௌனமாக இருந்தார் , என்னைச் சந்தித்த வணிகரும் கூட ரஹுமானின்  அரசியல் சார்பு நிலைப்பாட்டை பரஸ்பர கருத்தாடல்களில் நாசூக்காக கையாண்டார்.

குருக்கள்மட புதைகுழிகள் தோண்டுவதில் ஒரு தமிழர், புதை குழி இடங்களை அந்த காத்தான்குடி வணிகருக்கு அடையாளம் காட்டி/ சொல்லி உள்ளார் என்பதனால் , இக்கட்டுரையாளர் அந்த வணிகரைச் சந்தித்து இரண்டு மாதங்களின் பின்னர் இலங்கைக்கு சென்று, அவரைச் சந்திக்க பல தடவை முயற்சித்தும் முடியவில்லை.  ஆரம்பத்தில்  இக்கட்டுரையாளரின் தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளித்தார் ;  சந்திப்பது  பற்றியும்  சிலாகிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அவருக்கு தொலை பேசி அழைப்பினை ஏற்படுத்த முடியவில்லை, இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் காட்டிய ஆர்வத்தினால் , குருக்கள்மட படுகுழிகளை தோண்டுவதில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆணைக்குழு விசாரணைகள் பற்றிய பல தகவல்களை அறிய முடிந்தது. காத்தான்குடியைச் சேர்ந்த வணிகரின் குருக்கள் மடம் பற்றிய தகவல் சிப்லி பாரூக்கின் முயற்சிக்கு மிகவும் உதவி இருக்கும் , ஆனாலும் அந்த வணிகரைச்  சந்திப்பதற்கான இக்கட்டுரையாளரின் எல்லா முயற்சிகளும் வியர்த்தமாகின , திட்டமிட்ட வகையில் சந்திப்பதை அவர் புறக்கணிக்கிறார் என்ற முடிவுக்கே வர முடிந்தது.

குருக்கள் மடத்தில் காணாமல் போன -கொல்லப்பட்ட- முஸ்லிம்கள் பற்றி ஜனாதிபதி ஆணைகுழுவில் முறையிட்டவர்கள் , மற்றும் அங்கு மனிதப்படுகுழிகள் தோண்டப்படுவதை குறித்து  போலீஸ் முறைப்பாடுகளை செய்தவர்கள் பலரின் முயற்சிகள் வியர்த்தமாகிவிடுமோ என்ற வகையில் அண்மைக் காலமாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. 

முதலில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றஊப் ஏ மஜீத் , கிழக்கு மாகான சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் மனிதப் புதை குழிகள் எங்கு அமைந்துள்ளது என்று அடையாளம் காட்டப்பட்ட இடங்கள்  குறித்து சர்ச்சை திடீரென்று இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது என்றும் , ஆனால் மீண்டும் ஷிப்லி பாரூக் நீதி மன்றத்தை அணுக நேரிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.  அதன் பயனாய் மீண்டும் மனிதப் படு குழிகளை தோண்டுவதற்கான முயற்சிகள் முனைப்பு பெற்றுள்ளன என்பதை காணக் கூடியதாக உள்ளது.  இந்த மனிதப் படுகுழிகள் தோண்டப்படல் வேண்டும் , அதிலும் குறிப்பாக கருணா , பிள்ளையான் போன்றோர் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி மாநகரசபையில் முன் மொழிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. 

ஆனால் சுவாரசியமாக இக்கட்டுரையாளரைச் சந்தித்த  காத்தான்குடி வணிகர் , அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை பற்றி , அதுவும் குருக்கள் மடத்தை சேர்ந்த ஒரு தமிழர்   மனிதப் படுகுழி உள்ள இடத்தை தனக்கு அடையாளம் காட்டியதாக கூறியவர் , இப்பொழுது இடத்தை அடையாளம் காணுவதில் குருக்கள் மட அரசியல் சதுரங்கம் தொடங்கி உள்ள வேளையில்  காணாமல் போய்விட்டார். இக்கட்டுரையாளருடன் குருக்கள்மட புதை குழி விவகாரத்தில் செயற்பட உறுதி வழங்கியவர் , குருக்கள்மட விவகாரம் தொடர்பாக -அவருடன் மீண்டும் பேச விரும்புவதாக அவருடன் சம்பந்தப்பட்டவருக்கு அறிவித்தும்- இதுவரை அவர் இக்கட்டுரையாளரை தொலைபேசியிலும் கூட தொடர்பு கொள்ளவில்லை. 

இந்த பின்னணியில் அண்மையில் , அந்த வணிகருக்கு சொந்தமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாதுறு ஓயா குடியேற்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ரெதிதென்ன எனப்படும் இடத்தில் உள்ள பண்ணையில் ஒரு விருந்துபசாரம் நடைபெற்றுள்ளது, அந்த நிகழ்வில் நல்லாட்சிக்கான  மக்கள் இயக்க பிரமுகர்கள் கலந்து கொண்டதாக ஒரு செய்தியினை காத்தான்குடி தொடர்புகள்  தெரிவிக்கின்றன, அதேவேளை சம்பந்தப்பட்ட வணிகர் குடுபத்தினர் ஒருவரும்  அவர்களின் ரெதிதென்ன கிராமத்தில் உள்ள பண்ணையில் ஒரு விருந்து  நிகழ்வு  ஒன்றினை அந்த வணிகரின் நண்பர்களுக்கு நடத்தியதாக தெரிவித்தார்.  அப்படியாயின் அவர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க ஆதரவாளராக இருக்க வேண்டும் என்பது புலனாகிறது, அவரின் தனிமனித உரிமையான அரசியல் அங்கத்துவம் அல்லது அரசியல் செயற்பாடு என்பன குறித்து  விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எனினும் முதன் முதலில் குருக்கள் மட விவகாரத்தை முன்னெடுத்தவர்கள் தாங்களே என்று கூறும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை அனுசரித்து கருணாவையும் பிள்ளையானையும் தண்டிக்க கோரியாயினும் ) படுகுழிகள் பற்றிய இடத்தை சரியாக அடையாளம் கண்ட  (ஒரு தமிழரையும் இடம் குறித்து சாட்சியமாகக்  கொண்ட ) ஒருவரை தன்னகத்தே கொண்டிருந்திருந்தால் குருக்கள் மட விவகாரத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏன் ஈடுபட வில்லை.

இந்த மாதுறு ஓயா  பகுதியில் புலிகளின் அடாவடித்தனங்களால் விவசாய நிலங்களை கால்நடைகளை இழந்து போன முஸ்லிம்கள் 1990 களின் பின்னர் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முஸ்லிம் கிராமமே ரெதிதென்ன எனப்படும் கிராமமாகும். ஒருபுறம் புலிகள் கிழக்கில் முஸ்லிம்களை  அவர்களின் வயல் நிலங்களில் இருந்து விரட்டி அடித்து துரத்தியதால் அவர்களுக்கு பிறிதொரு இடத்தில் விவசாயக் குடியிருப்புக்களை அமைக்க இலங்கை அரசு உதவியது. அது பற்றி புலிகள் தங்களின் பதிவுகளில் பின்வருமாறு எழுதி உள்ளார்கள்.இதுவே முஸ்லிம்கள் மீது புலிகள் கொண்டிருந்த எதிர் நிலைப்பாட்டை நன்கு தெளிவுபடுத்துகிறது.  
 
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கென கால்நடைப் பண் ணையபிவிருத்தி நிலத்திலிரு ந்து ஒரு பகுதி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. வளமான தமிழ்க்கிராமத்தை கூறுபோட்டு தமிழர்களை இல்லாதொழிக் கும் திட்டம் மெதுமெதுவாக நிறைவேறத் தொடங்கியது. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக மட்டுமல் லாமல் செல்வச் செழிப்பு குன்றாத தமிழ்க்கிராமமாகவும் இது விழங்கியதால் சிங்களவர் ஒருபுறமாகவும், முஸ்லீம்கள் ஒருபுறமாகவும் இக்கிராமத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். பொலநறுவை மாவட்டத்தோடு இக்கிராமத்தின் பெரும் பகு தியை இணைக்கும் முயற்சி யில் சிங்களவர் முயற்சிக்க,  முஸ்லீம்கள் வகைதொகையின் குடியேறி முஸ்லீம் கிராமமாக் கும் முயற்சி இன்னுமொரு பக்கமாக நடந்தேறியது.

500 ஏக்கர் நிலத்தை சிங்களவர் அபகரிக்க 650 முஸ்லீம் குடும்பங்கள் இன்னுமொருபக்கத்தால் குடி யேறி நிலத்தைப்பிடித்தனர். இன்று முஸ்லீம்களுக்கு அங்கு தனிமையான கிராம சேவகர் பிரிவு வேண்டுமென்று கேட்குமளவிற்கு இக்கிராமம் பறிபோய் விட்டது.”

இங்கிலாந்தில் உள்ள புலிகள் புலி சார்பு நிறுவனங்கள் , செய்தி இஸ்தாபனங்கள்   ஐ நா சபையின் மனித உரிமை-யுத்தக் குற்ற - விசாரணைகளில்  குருக்கள்மடக் குழிகளைத் தோண்டுவதன் மூலம்  அரசாங்கம் முஸ்லிம்களை  பயன்படுத்தி புலிகளுக்கு எதிராக செயற்படுகிறது என்பதாக செய்திப் பரிமாற்றங்களைச் செய்த வேளையில்,அந்த வணிகர் குருக்கள் மட படுகுளிகளை அடையாளம் காட்ட முன் வந்திருந்தால் இடம் பற்றிய அடையாள சிக்கல்களைத் தவிர்திருக்கலாம் , மனிதப் புதை குழிகள் இதுவரை தோண்டப்பட்டிருக்கலாம் ; புதைக்கப்பட்ட உண்மைகள் எப்பொழுதோ மனித எச்சங்களுடன் வெளிவந்திருக்கலாம். தனிமனித அரசியல் செல்வாக்கும் வீழ்ச்சியும் சேர்ந்து குருக்கள்மடத்தில்  புதைக்கப்பட்டிருக்கிறதோ ?

மேலும் குருக்கள்மட விவகாரத்தின் மூலம்  ஹிஸ்புல்லா (இவரும் தனது உயிருக்கு பாதுகாப்பு புலிகளிடம் உள்ளது என்று நம்பி ஒரு கால கட்டத்தில் மறைமுகமாக புலிகளுக்கு உதவும் வகையில்  செயற்பட்டவர் என்பது இன்னுமொரு விவகாரம்) குருக்கள் மடத்தை தோண்டி அரசியல் செல்வாக்கு பெற்று விடலாம் என்ற காரணத்துக்காக அவருக்கு எதிரான அரசியல் சக்திகள் செயற்படுவதாக ஒரு கருத்தும் காத்தான்குடியில் நிலவுகிறது. தமிழருடனான அரசியல் உறவுகள் அண்மைக்காலமாக காத்தான்குடியை மையமாகக் கொண்ட முஸ்லிம் அரசியல் இயக்கத்துடன் பலம் பெற்று வருகிறதும் , வடக்கு மாகாண சபை அங்கத்துவம் பெற்றுள்ள  முஸ்லிம் இயக்கத்தினர் எதிர்கால தமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவி ஒன்றினையும் பெறும் வாய்ப்பு உள்ள நிலையில் , குருக்கள்மட விவகாரம் உட்பட புலிகளால் புதைக்கப்பட்ட பல சடலங்களை மட்டுமல்ல , வரலாற்றையும் புதைக்கவே விரும்புவார்கள்.!


எது எப்படியோ , 1987 ஆண்டு காத்தான்குடியில் புலியின் முன்னோடி புலி உறுப்பினர் நசீரும், அவரைக் கொன்ற  காத்தான்குடி ஊர் காவற் படையினரும் முஸ்லிம்களே, புலிகளின் பதிவுகளில் இருந்து பார்க்கும் பொழுது புலிகள் தங்களின் தகவல்களில் மறைத்த ஒரு முஸ்லிம் புலி என நம்பப்படும் ஜமாலுடன் தொடர்வோம்!

1 comment:

  1. காத்தான்குடி புலி உறுப்பினர் நசீர் தொடர்பான தகவல்களை அறிய ஆவலாய் உள்ளேன். அவர் தொடர்பான வரலாறு தகவல்கள் உங்களிடம் இருந்தால் வரும் நாட்களில் எங்களுக்காக பதிவிட முடியுமா? அப்துல் றஊப் (www.facebook.com/abdulrauff)

    ReplyDelete

Lankan Prez has two options: Allow UNP to form Govt or go for snap parliamentary elections

Colombo, February 16 (newsin.asia): With his party and alliance, Sri Lanka Freedom Party (SLFP) and United Peoples’ Freedom Alliance (UPF...