சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா



ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி ​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சில சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இவை அனைத்திற்கும் பின்னால், அரசின் திரைமறைவு கரம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அரசோ இவை ஒரு குறிப்பிட்ட இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றும், அதன் காரணமாகவே இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுவதாகவும் பதலளிக்கிறது. இதில் எவர் சரி என்பதற்கு அப்பால், தமிழர் தரப்பு உற்று நோக்கவேண்டிய விடயங்களோ வேறு.

இலங்கையில் இடம்பெற்ற முப்பது வருட கால யுத்தம் சிங்கள – தமிழ் மக்களை முற்றிலுமாக பிரித்தாண்டிருக்கிறது. யுத்த காலத்தில் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் நிகழ்ந்த போதிலும், மக்களின் புரிதலில் சிங்கள – தமிழ் மக்களுக்கு இடையிலான யுத்தமாகவே இது விளங்கிக்கொள்ளப்பட்டது. இதற்கு யுத்தத்தின்போது சிவிலியன்கள் இலக்கு வைக்கப்பட்டதே முக்கிய காரணமாகும். யுத்தத்தில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சிங்கள மக்கள் யுத்தத்தின் வெற்றியை கொண்டாடினர். தமிழர்களோ தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம்வெதும்பினர். ஆணையிறவை புலிகள் வெற்றிகொண்ட போது, ஆணையிறவு விழுந்திட்டுதாம் தந்தனத்தானே என்று வன்னியில் உள்ளவர்கள் நடனமாடினர். அந்த காலத்தில் புலிகள் அது குறித்து ஒரு பாடலையும் கூட வெளியிட்டிருந்தனர். இதனை அப்படியே முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தெற்கிற்கு பிரதியீடு செய்யலாம். புலிகள் முற்றிலுமாக வெற்றிகொள்ளப்பட்டார்கள் என்னும் செய்தி தெற்கில் கொண்டாட்டமாக மாறியது. அந்த வெற்றிக்குச் சொந்தமான ஜனாதிபதி ராஜபக்‌ஷ கதாநாயக நிலைக்கு உயர்ந்தார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யுத்த வெற்றி எந்தளவு தூரம் பரஸ்பரம் விரும்பப்பட்டிருந்திருக்கிறது என்பதுதான். அந்தளவிற்கு சிங்கள – தமிழ் மக்களை யுத்தம் பிரித்தாண்டிருக்கிறது. இவ்வாறு பிரித்தாளப்பட்ட சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றித்தான் இப்போது பேசப்படுகிறது. அவ்வாறு பேசப்படும்போது, அதிலுள்ள பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு புறம் யுத்த வெற்றியால் சிங்களை மக்களை ஆகர்சித்திருக்கிற ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசு, இன்னொரு புறம் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்னும் மனநிலையுடன் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் அமைப்புக்கள். இவ்வாறானதொரு பின்னனியில்தான், யுத்த வெற்றிக்கு சொந்தமான அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையின் முப்படைகளின் தளபதி ஜனாதிபதியாவார். எனவே, குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளுவதற்கு ஜனாதிபதி இராணுவத்திலும், இராணுவம் ஜனாதிபதியிலும் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தற்போது இருவரும் ஒன்றே. இந்த இடத்தில் கேட்கவேண்டிய கேள்வி – சிங்கள மக்கள் மத்தியில் இது எவ்வாறு நோக்கப்படும்?

தற்போது இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற சர்வதேச அழுத்தங்களை உற்று நோக்கும் ஒரு சாதாரண சிங்கள குடிமகன், இது புலம்பெயர் நாடுகளில் வாழும் புலிகளின் ஆதரவாளர்களின் செயற்பாடாகவே நோக்குவான். அவ்வாறுதான் அரசியல்வாதிகளும் சொல்லுவர். புலிகள் தோற்கடிக்கப்பட்ட கோபத்தில் எங்களின் ஜனாதிபதியை பழிவாங்க முற்படுகின்றனர் என்பதே அவர்களது புரிதலாக இருக்கும். ஆனால், யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்களின் உண்மை முகத்தை எவரேனும் சொன்னாலும், அது சாதாரணர்களின் மூளையில் அவ்வளவு இலகுவாக ஏறிவிடப் போவதில்லை. சாதாரண வாக்காளர்களுக்கு மட்டும் உண்மை விளங்கிவிட்டால் பலரால் அரசியல் செய்ய இயலாது போய்விடும். தமிழ்ச் சூழலிலும் இதுதான் நிலைமை. எனவே, சிங்கள மக்களை பொறுத்தவரையில், அரசிற்கு முக்கியமாக ஜனாதிபதிக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும் என்றவாறே சிந்திப்பர். தமிழ் மக்கள், என்னதான் பிரச்சனைகள் இருப்பினும், தேர்தல் என்று வந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதுபோன்றதுதான் இதுவும். இது புரிந்துகொள்ள கடினமானதொரு விடயமுமல்ல. அரசியல் இனமாக பார்க்கப்படும் சூழலில் இப்படியான நிலைமைதான் தோன்றும். இந்தப் பின்புலத்தில்தான் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை சிங்கள மக்களுக்கு எதிரான ஒன்றாக இலகுவாக காட்டக்​கூடிய சூழல் உருவாகிவிடுகிறது. அதற்கு ஆதரவாக செயற்படுகின்ற அனைவரும் அவர்கள் சிவில் சமூக அமைப்புக்களாக இருக்கலாம், அரசியல்வாதிகளாக இருக்கலாம் மற்றும் மத நிறுவனங்களாக இருக்கலாம், அவர்கள் எவராக இருப்பினும் பெரும்பான்மையான சிங்கள மக்களை பொறுத்தவரையில், அவர்கள் இந்த நாட்டிற்கு எதிரானவர்களே! இந்த விடயத்தைத்தான் அரசு மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அரசு அவ்வாறு சிந்திப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒவ்வொரு அரசும் நெருக்கடிகளிலிருந்து தப்பத்தானே யோசிக்கும்!

இந்த இடத்தில், நான் மேலே குறிப்பிட்ட தமிழர் தரப்பு, குறிப்பாக தமிழ் மக்களின் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உற்றுநோக்க வேண்டிய விடயம் என்ன? கூட்டமைப்பு தனிநாடு கோரும் ஒரு அமைப்பு இல்லை. ஜக்கிய இலங்கைக்குள் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுதான் கூட்டமைப்பின் அதிகூடிய அரசியல் இலக்கு. சமீபத்தில் கூட்டமைப்பின் சின்னத்துக்குரிய முதன்மை கட்சியான தமிழரசு கட்சி, அதன் யாப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், தாம் தனி நாட்டை கோரவில்லை என்பதை எழுத்து மூலம் உறுதிப்படுத்தியிருந்தது. எனவே, இவ்வாறானதொரு சூழலில், சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் சமூக பதற்றங்கள் தோன்றாதவாறு நிலைமைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பும் தமிழர் தலைமையே சாருகிறது. கூட்டமைப்பு இதில் காத்திரமான தலையீடுகளை செய்யாத பட்சத்தில் பல்வேறு சக்திகள், தமிழ் மக்களை தங்களின் நிகழ்சி நிரல்களுக்கு ஏற்ப, வழிபடுத்தக் கூடிய நிலை தோன்றலாம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு நல்ல உதாரணம் ஆகும். கொழும்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான கூட்டமொன்று இடம்பெற்றதாகவும், அதனை பௌத்த பிக்குகள் குழப்பினர் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு எதிரானதென்று சம்பந்தப்பட்டவர்களும், அவ்வாறில்லை இங்கிருந்து ஜ.நா. விசாரணைக்குத் தகவல்களை திரட்டும் முயற்சி இடம்பெற்றதாக குழப்பம் ஏற்படுத்தியவர்களும், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகின்றனர்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், தெற்கில் இயங்கும் பல்வேறு பௌத்த மத அமைப்புக்கள் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை எதிர்க்கின்றன. அவர்களது புரிதலில் இது அரசு பெற்ற வெற்றியை தட்டிப்பறிக்கின்ற ஒரு செயல் ஆகும். எனவே, நிலைமை இவ்வாறிருக்க, இது போன்றதொரு நிகழ்வை தேவாலயமொன்றில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இது தேவையற்ற மத முரண்பாடுகளுக்கு வழிசமைத்துவிடக் கூடியதல்லவா! கத்தோலிக்க மத பீடம் இது போன்ற விடயங்களை வெறும் பிரார்த்தனை நிகழ்வுகள் போன்று செய்துவிட முடியுமா? கத்தோலிக்க மதகுருக்கள் முக்கியமாக தமிழ் கத்தோலிக்க மத குருக்கள், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிற்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாகவே வெளிப்படுத்தி வருபவர்கள். ஒரு ஆட்சி மாற்றத்திற்கான விருப்பே, அவர்களை வழிநடத்துகிறது. குறிப்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு இதில் முக்கியமானவர். ஆனால், இது போன்ற விடயங்கள் கொழும்பில் வாழும் இந்து மக்களையும் பாதித்துவிடக் கூடியது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்குண்டு. அவர்களுக்கில்லாவிடினும் கூட, கூட்டமைப்பு இந்த விடயங்களில் அக்கறை செலுத்தாமல் இருக்க முடியாது.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அதனை அடியொற்றி சமூக முரண்பாடுகள் தோற்றுவதற்கான வாய்ப்புக்களை இலகுவில் தட்டிக்கழிக்க முடியாது. தேவாலங்களை அரசிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும்போது பௌத்த பிக்குகளில் தலையீட்டிற்கு ஒரு நியாயம் கிடைத்துவிடும் என்பதையும் தமிழ் கத்தோலிக்க மதபீடம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப்போது தமிழ் மக்கள் ஒரு பலவீனமான இனம் என்றுசொல்வதுண்டு. அந்த பலவீனமான இனம் கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தால் நொந்து நூலாய் போய்கிடக்கிறது. இனிமேலும் அதனால் பாரம் எதனையும் சுமக்க இயலாது என்பதை கவனத்தில் இருத்தியே, தமிழ் மக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் திட்டமிட வேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாது நாளைய நலன்சார் உறவுகளால் நெகிழக் கூடிய அல்லது ஒருவேளை நிரந்தரமாகவே இல்லாமல் போய்விடக் கூடிய விடயங்களை முன்வைத்து செயலாற்றும்போது, அது தமிழ் மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இந்த விடயங்களுக்கு முன்னுரிமையளித்து செயலாற்ற வேண்டிய சமூக பொறுப்பை எவருமே தட்டிக்கழித்துவிட முடியாது. ஏனெனில், இன்று இலங்கை விவகாரத்தில் மனித உரிமைக் கண்கொண்டு தலையீடு செய்யும் சர்வதேச அரசுகள் எவையும் இலங்கையின் நிரந்தரமான நண்பர்களும் இல்லை. அதேவேளை, நிரந்தரமான எதிரிகளும் இல்லை. அவர்களது அணுகுமுறை நாளையே மாறலாம். ஆனால், நிரந்தரமாக இந்த நாட்டில் வாழப்போவது, இந்த நாட்டில் வாழும் மக்கள் மட்டுமே! எனவே, அரசியல் அபிலாஷைகளை நோக்கிய முனைப்புக்கள், ஏலவே யுத்தத்தால் பிளவுபடுத்தப்பட்ட தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் சமூக பதற்றங்களுக்கும், அதனை அடியொற்றிய மோதல்களுக்கும் வழிவகுத்துவிடக் கூடாது. அவ்வாறு நிகழுமாயின் மீண்டும் மிக மோசமாக பாதிக்கப்படப்போவது கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களே, குறிப்பாக இந்து தமிழ் மக்களேயன்றிவேறல்லர்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை

 தேனீ :20/08/14

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...