மாவிலாறும் இரணைமடுவும் - வரலாறு சொல்லும் பாடம்-வடபுலத்தான்

மாவிலாறும் இரணைமடுவும் - வரலாறு சொல்லும் பாடம்
-வடபுலத்தான்
'மாவிலாற்றை மறிச்சு சிங்கள ஆக்களுக்குப் போற தண்ணியை நிப்பாட்டினதால வந்த வினைதான் முள்ளிவாய்க்கால்ல அன்னந்தண்ணியில்லாமல் வாடி, வதங்கித் துவண்டு போகவேண்டிவந்தது'. 

'
மாவிலாற்றை மறிச்சவையின்ரை கதையும் மாவிலாற்றை மறிக்கச் சொன்னவையின்ரை கதையும் முள்ளிவாய்க்காலில முடியவேண்டி வந்ததும் தண்ணியை மறிச்ச பாவந்தான்' எண்டு சின்ராசண்ணை அடிக்கடி சொல்லிறதை மறுக்கேலாது. 

தாயைப் பழிச்சாலும் தண்ணியைப் பழிக்கப்படாது. 

பாவத்திலயே பெரிய பாவம் தண்ணியைத் தடுக்கிறது. 

இப்பிடியெல்லாம் எங்கட முன்னோர் சொல்லுவினம். 

முன்னோர் சொல்லும் முதியோர் வாக்கும் பொன் எண்டதை அனுபவப்படேக்கைதான் விளங்கிறது. 

இப்பிடித்தான் 'அரசன் அண்டறுப்பான். தெய்வம் நிண்டறுக்கும்' எண்ட வாக்கும்.

தெய்வம் இருக்கோ இல்லையோ எண்டதில்லை இங்க பிரச்சினை. 
நாங்கள் செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் இருந்தே தீரும் எண்டதுதான் நாங்கள் இதில விளங்கிக் கொள்ள வேண்டிய விசயம். 

பாருங்கோ நான் இன்னும் சில விசயங்களைப் பற்றிச் சொல்லப்போறன். 

1990
ஆம் ஆண்டு ஒக்ரோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில இருந்து முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றிச்சினம். 

இதை அப்ப யாழ்ப்பாணத்தில இருந்த தமிழாக்களோ, புலம்பெயர்நாடுகளில இருந்த தமிழ்த்தேசியவாதிகளோ எதிர்க்கேல்ல.


ஆனால், இதுக்கொரு தண்டனை எப்ப, எப்பிடிக் கிடைச்சிது எண்டு தெரியுமோ....?

1995
ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி (இதே நாளில) யாழ்ப்பாணத்தை விட்டு ஒரே நாளில அஞ்சு லட்சம் மக்களும் வெளியேற வேண்டிவந்திது.

இதைப்போல இன்னொரு விசயத்தையும் கவனியுங்கோ...!
1996
ஆம் ஆண்டு முல்லைத்தீவில இருந்த ஆமிக்காம்பைப் புலிகள் அடிச்சவையெல்லோ....!

அதில ஏறக்குறைய 400 ஆமிக்காரர் வரையில புலிகளிட்டச் சரணடைஞ்சவை.

அவ்வளவு பேரையும் வட்டுவாகல் (முள்ளிவாய்கால் எல்லை) எண்ட இடத்தில வைச்சு புலிகள் போட்டுத்தள்ளிச்சினம். 


இதுக்குப் பழியெண்டமாதிரி 2009 ஆம் ஆண்டு இதே முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் எண்ட இடத்தில வைச்சுத்தான் ராணுவத்திட்டப் புலிகள் சரணடைஞ்சவை. 

அப்பிடிச் சரணடைஞ்ச புலிகளில கனபேரைக் காணேல்ல எண்டு சொல்லிறதையும் இதில நாங்கள் கவனிக்கோணும்.

பார்த்தியளோ... எப்பிடியெல்லாம் கணக்குத் தீர்க்கப்பட்டிருக்குதெண்டு....


இதை ஏன் இப்ப நான் சொல்லிறன் எண்டால், நாங்கள் செய்யிற ஒவ்வொண்டுக்கும் எதிர்விளைவுகள் எப்பிடியோ இருந்தே தீரும் எண்டதை விளங்கிக் கொள்ள வேணும் எண்டதுக்காகத்தான். 

இப்ப இரணைமடுக்குளத்தின்ரை தண்ணியை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரக்கூடாதெண்டு கொஞ்சப்பேர் குறுக்க நிண்டு வம்பு பண்ணுகினம்.

கிளிநொச்சி விவசாயிகளின்ரை வயித்திலை அடிச்சுப்போட்டு யாழ்ப்பாணத்துக்குத் தண்ணி கொண்டு வந்தால் அது முழுப்பிழை.

ஆனால், இது வருசா வருசம் குளத்தை மேவிப் பாய்ஞ்சு, ஊர்களையும் வயல்களையும் அழிச்சுக்கொண்டு ஆனையிறவுக்கடலில போய்விழுகிற தண்ணியை மறிச்சு, குளத்தில தேக்கிப்போட்டு, பிறகு அதில இருந்து எடுக்கிற ஒரு கொஞ்சத் தண்ணியைத்தான் யாழ்ப்பாணத்துக்குக் குடிநீருக்காகக் கொண்டு வாற திட்டம். 

இப்பிடி தண்ணியைக் கொஞ்சம் கூடுதலாகத் தேக்க வேணும் எண்டால், இப்ப இருக்கிற குளத்தை இன்னும் பலப்படுத்தி, அணைக்கட்டையும் உயர்த்தோணுமாம். 

அதுக்கெண்டு 2300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கு.
அதாவது, குளக்கட்டை உயர்த்திறது, வாய்க்கால்களைத் திருத்திறது, வயலுக்குப்போற வீதிகளைப்போடுறது, விவசாயப் பகுதிகளில இருக்கிற பாலங்களைக் கட்டிறது எண்டு இந்தக் காசில கன வேலைகளும் ஒண்டாக நடக்கும். 

இப்ப அப்பிடிக் கொஞ்ச வேலைகளும் நடந்து கொண்டுமிருக்கு.

குளக்கட்டை உயர்த்திக் கட்டிற வேலையை விட, கீழ்ப்பகுதிகளில வாய்க்கால்களைத் திருத்திறது, பாலங்களைப்போடுறது எண்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கு.

ஆனால், இரணைமடுத்திட்டம் முழுசாக ஒப்பேறவேணும் எண்டால் அதுக்கு விவசாயிகளின்ரை ஒத்துழைப்பும் சம்மதமும் வேணும். 

விவசாயிகளுக்கு விசயத்தை ஒழுங்காக விளங்கப்படுத்தி, அவைக்கு நன்மை இதில இருக்கெண்டு சொல்லி, அவையின்ரை நலன்களைப் பாதுகாத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணியைக் கொண்டு வாறதை பொறுப்பான ஆக்கள் செய்யத் தவறுகினம். 

இதுக்குத் தாளம் போடுகினம் சில அரசியல்வாதிகள்.

மாவிலாத்தில விட்ட பிழைக்கு முள்ளிவாய்க்கால்ல கணக்குத்தீர்த்தமாதிரி, இரணைமடுவில விடுகிற பிழைக்கு எதிலதான் கணக்குத்தீர்க்கிறதோ....

http://www.thenee.com/html/040814-5.html


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...