மரபுவாத முஸ்லிம் மன்றமும் மறைந்துபோன முஸ்லிம்களின் துயரமும்



எஸ்.எம்.எம்.பஷீர்  


"நீ ஒரு தாராளவாதி இல்லாத இளைஞனானால் , உமக்கு இதயம் இல்லை , நீ ஒரு மரபுவாதி இல்லாத முதியவனானால் உனக்கு மூளை இல்லை"

வின்ஸ்டன் சர்ச்சில்  (முன்னாள் பிரித்தானிய மரபுவாத பிரதம மந்திரி )

இலங்கையில் முஸ்லிம்கள் மீது பௌத்த பல சேனாவின் தூண்டுதலால்  கட்டவிழ்த்து விடப்பட்ட வெருவலை அளுத்தகம இன வன்முறைகள் காரணமாக புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்  மக்கள்  தாங்கள் வாழும் நாடுகளில் தங்களின் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தனர் என்பது பரவலான செய்தி.  .


இந்த பின்னணியில் ஐக்கிய இராச்சியத்தில் இன்று ஆட்சியில் உள்ள  மரபுவாதக கட்சியின் முஸ்லிம் மன்றத்தின் (Conservative Muslim Forum) அனுசரணையுடன் இலங்கையில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு என்ற தலைப்பில்  ஒரு கருத்தாடல் நிகழ்வு சென்ற புதன்கிழமை (30/07/2014) அன்று மாலையில் பிரித்தானிய  பிரபுக்கள் சாபில் உள்ள  அறை மூன்றில் இடம் பெற்றது. பிரபு ஷேய்க் இந்நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி நடத்தினார்.

அமல் அபேவர்தன , டாக்டர் . சுனில் காரியகரவண .அஜந்தா தென்னகோன் , இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டாக்டர் க்றிஸ் நோரிஸ் ஆகியோர் இந் நிகழ்வில் உரையாற்ற அழைக்கப் ப்பட்டிருந்தனர்.


இந்த நிகழ்ச்சியினை நடத்த பிரபு ஷேய்க்கினை (Lord Sheikh ) அணுகியவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட  அஜந்தா தென்னக்கோன் எனும் இளம் பெண் சட்டத்தரணியாவார். இவர் மரபுவாதக் கட்சியின் உறுப்பினர் என்பதும் இவருடன் ஒரு சில சிங்கள முஸ்லிம் தமிழ் மரபுவாத கட்சியின் உறுப்பினர்களும் பின்னணியில் நின்று இந் நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைத்துள்ளார்கள்.   ஆனாலும் இந்த வகையான ஒரு நிகழ்வு பெரிதும் மரபுவாத கட்சியின் அரசியல் இலாபத்துக்காக நடத்தப்பட்டது என்பதும் அந் நிகழ்வின் பொழுது தெரியக்கூடியதாகவிருந்தது. பிரித்தானிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அடுத்த  ஆண்டு நடைபெறப் போகும் பின்னணியில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம்களை ஈர்த்துக் கொள்ளும் ஒரு செயற்பாடாகவே இந் நிகழ்ச்சியினை பிரபு ஷேய்க் நடத்த முன்னின்றுள்ளார் என்பது துலாம்பரமாக தெரிந்தது.

இந்நிகழ்ச்சியின் அழைப்பிதழில் காணப்படாத ஓரிருவரும் உரையாற்றினார். அவர்களில் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக ஒருவரும் பிரித்தானிய பௌத்த சமாஜத்தின் தலைவர் டாக்டர்  டேஸ்மாந்த் பிடுல்ப்பும் உரையாற்றினார். ( Dr. Desmond Biddulph, ) . இவர்கள் யாவரினது உரையின் பின்னர் சபையினரின் கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும் இடமளிக்கப்பட்டது. சபையோரில் காஸ்மோஸ் எனப்படும் முஸ்லிம் நிறுவனத்தின் பிரதிநிதி உட்பட பலர் காட்டமாக கருத்துரைத்தனர்.

ஆனாலும் அங்கு  இலங்கைத் தூதுவர் இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னால் உள்ள தீவிரவாத சக்திகளின் பெயர் குறிப்பிடாது ,பொதுவாக முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே நிலவும் நல்லுறவு வரலாறு பற்றியும், அந்த வகையில் இலங்கையில் அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை அண்மைக்காலமாக இங்கிலாந்தில் நடைபெறும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுடன்  சமரசம் செய்யும் தொனியில்  அவர் சம்பவங்களை தொகுத்து வழங்கியது அவரின் தூதுவர் என்ற வகி பாகத்தை அவர் செய்வதில் முனைப்பாக இருப்பதை வெளிப்படுத்தியது. பலரின் உரையிலும் நிகழ்ச்சியின் தலப்பு காணாமல் போய் விட்டது.  ஆனாலும் பொதுவாக “நாங்கள் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம்” என்ற பொதுவான இன உறவு பற்றி எப்பொழுதும் போல் பலரும் சமரசம் செய்வதில் நியாயமான அக்கறை காட்டினர். ஆனால் அந் நிகழ்ச்சியில் நான் ஒன்றை மட்டும் உறுதிபட சொல்ல வேண்டி நேரிட்டது. இலங்கை அரசு பௌத்த தீவிரவாத பொது பல சேனாவுக்கு பயந்தது ஏன் ? அரசு சட்டம் பின்பற்றப்படுகிறது என்பதை செயலில் காட்ட வேண்டும். எனது ஒரு சிங்கள நண்பர் அநகாரிக தர்மபாலாவுக்கு ஞானசேர தேரரை ஒப்பிட்டது போல் , அநகாரிக தர்மபால முஸ்லிம்களுக் கெதிரான வன்முறைக்கு தூபமிட்டவர் , அவரை ஒத்தவர் ஞான சேர தேரர் மேலும் அவரின் இன வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அவரை ஒரு ஹிட்லரை ஒத்தவர் என்பதையே உறுதி செய்கிறது. இனவாத பேச்சுக்கள், இனவாத நோக்கம் கொண்ட செயற்பாடுகள் அனைத்துக்கும் எதிராக சட்டம் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும் , ஒரு இலங்கையன் என்ற வகையில் அவ்வித சட்டம் எவ்வித இன மத வேறுபாடுமின்றி மீறுபவர்கள் அனைவரையும் தண்டிப்பதை காண்பதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

ஆனால் மொத்தத்தில் இந்நிகழ்வு மரபுவாதக் கட்சிக்கும் இலங்கை அரசுக்கும் பயன் தந்திருக்கலாம் பாதிக்கபட்ட வெருவலை அளுத்கம முஸ்லிம்களுக்கு இது ஒரு செய்தியாகத் தன்னும் அறியப்படாத சங்கதியே!  இவ்வாறான அரசியல் சித்து விளையாட்டுக்களால் வேறு என்ன சாதித்து விட முடியும்!
Bazeerlanka.com

02/08/14

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...