“யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே”




எஸ்.எம்.எம்.பஷீர்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
     நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் ( உலகநாதர்)

அண்மையில் கிழக்கு மாகாணத்துக்குரிய   உள்ளுராட்சி ஆணையாளராக தகுதி வாய்ந்த அரச ஊழியரான எம்.வை.சலீம் எனும் முஸ்லிம் ஒருவரை இலங்கை அரசாங்கம் நியமித்ததைப் பற்றி  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் தங்களின் ஆட்சேபனையை கிழக்கு மாகாண ஆளுனருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் சொல்லப்பட்ட  விடயங்களில் "தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உள்ளூராட்சி என்ற விடயம் மிக முக்கியமானது  என்பதை குறிப்பிட்டு வேறு சமூகத்தவரை (முஸ்லிம் அல்லாத ஒருவரை) நியமிப்பது அல்லது பதவியில் உள்ள உள்ளூராட்சி ஆணையாளரின் பதவியை நீடிப்பது " தங்களின் கோரிக்கையாகும் என்பதை வலியுறுத்தி இருந்தனர். 


இந்த அறிக்கை வெளியானதும் ஆளுங் கட்சியிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த கிழக்கு மாகாண முஸ்லிம் மாகாண  சபை உறுப்பினர் சிப்லி பாரூக் சீற்றமடைந்து முஸ்லிம்  மக்கள் சார்பில் காட்டமான ஒரு எதிர்ப்பு அறிக்கையினை வெளியிட்டிருந்தார். தங்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை  எதிரிக்கு சகுனம் பிழைக்கட்டும் என்று காலங்காலமாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சகுனித் தனத்தின் தாய ஆட்டம்தான் இந்தக் கோரிக்கை. இம்முறை சகுனிகள் தோற்றுப் போகினர். இப்பொழுதெல்லாம் ஆயுதப் போராட்டம் ஆகினும் சரி , அரசியல் சூதாட்டம் ஆகினும் சரி.  இந்த நவீன சகுனிகள் தோற்றே போகின்றனர்,

இந்த செய்தி முஸ்லிம் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஏற்படுத்திய எதிர்ப்பலைகளை கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த அமைச்சில் வேறு ஒரு இனத்தைச் சேர்ந்த அதிகாரி இருக்க வேண்டும் எனறே கோரினோம் என விளக்கம் வேறு அளித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல முஸ்லிம்கள் சரியாக தங்களின் கோரிக்கையை விளங்கிக் கொள்ளவில்லை என்பது போலவும் ,முஸ்லிம்களுக்கு நாங்கள் காலங்காலமாக உரிமைக் குரல் கொடுத்தவர்கள் எங்களைப் பிரித்து பார்க்காதீர்கள் என்றும் , ஒரு படி மேலே சென்று (அஞ்)ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ( வெள்ளிமலை ) எனும் கிழக்கு மாகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர் 1915ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரங்களின் பொழுது சேர் .பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார்கள் என்று  ஒரு நவீன வரலாற்றுப் பாடத்தை நடத்தி இருக்கிறார்.

இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட  ஒருவரை முஸ்லிம்களை தமிழர்கள்தான் என்று  வாதிட்ட ஒருவரை இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களை உருவாக்கிய தமிழ் தலைவர்களை (அஞ்)ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ( வெள்ளிமலை )  முஸ்லிம்களின் உரிமைக்கு குரல் கொடுத்தவர்கள் என்று சுட்டிக் காட்டி உள்ளார். (அஞ்)ஞானமுத்து  உட்பட்ட தமிழ்த் தலைவர்கள் யாரும் முஸ்லிம்களை புலிகள் இனச் சுத்திகரிப்பும் இன சம்ஹாரமும் செய்த பொழுது உரிமைக் குரல் கொடுக்கவில்லை. கிழக்கிலே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்பொழுது சமூக , காணி,  பாதுகாப்புப் பிரச்சினைகளைப் பற்றி நீதியான முறையில் குரல் கொடுக்கவில்லை. ஆனால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அவ்வப்பொழுது எங்காவது முட்டிக் கொள்ளும் பொழுது மட்டும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலில் குரல் கொடுக்கிறார்கள். அதில் இவர்கள் முஸ்லிம் தலைவர்களையும் இப்பொழுது முந்திக் கொள்கிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்குகிறது இலாபம் தானே ! 

ஒரு முஸ்லிம் அல்லாத வேறு இனத்தைச் சேர்ந்தவரை நியமியுங்கள் என்பதன் பொருள் என்ன.   முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்காமல் ஒரு சிங்களவரையோ அல்லது ஒரு தமிழரையோ நியமியுங்கள், அல்லது இப்பொழுது உள்ள முஸ்லிம்  அல்லாதவரையே அப்பதவியில் நீடிக்கச் செய்யுங்கள். உள்ளூராட்சி அமைச்சின் கீழ்  உள்ள ஒரு அதிகாரியாவது ஏனைய இனத்தவராக இருக்க வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கையாக இருக்கலாம் . ஆனால் குறிப்பிட்ட அந்தப் பதவிக்கு இனச் சமநிலையை காரணம் காட்டி பெயர் குறிப்பிட்ட தமிழர் அல்லது ஒரு சிங்களவர் சம தரத்தில் இருக்கிறார் அவரை நியமிக்கக் கூடாதா என்று கேட்பதும் வேறு; இனச் சமநிலை பேணப்பட அந்த அமைச்சின் கீழ் உள்ள ஏனைய வெற்றிடம் ஏற்படும் பதவிகளுக்கு தமிழ் சிங்கள உத்தியோகத்தர்களை நியமியுங்கள் என்று கேட்பதும் வேறு; ஆனால் ஒரு பெயர் குறிப்பிட்ட முஸ்லிம் உத்தியோகத்தர் உயர் நிர்வாக பதவியில் (நிறைவேற்று அதிகாரம் கொண்ட தரத்தில்) நியமிக்கப்படுவதனை அறிந்த உடனே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் ஒருவரை அப்பதவிக்கு நியமியுங்கள் என்று கேட்டிருந்தால் அது தமிழர்களின் அரசியல் உரிமையின் பாற்பட்டதே. ஆனால் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுகிறார் என்பதைவிட  வெளிப்படையாக ஒரு சிங்களவர் நியமிக்கப்படுவதை வரவேற்கும் விதத்தில் கோரிக்கை விடுவது அவர்களின் வக்கிரமான இனவாதம் தவிர வேறில்லை.

முன்னாள் இராணுவத் தளபதியான வட மாகாண ஆளுனரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடும் வட மாகாண சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கில் இதுவரை அப்படியான கோரிக்கையை பலமாக முன் வைக்கவில்லை. ஆனால், ஆகக் குறைந்தது முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆளுநர் மீதான தனது அதிருப்தியையாவது தெரிவித்திருந்தார்.   

வடக்கில் அவர்கள் "யாழ்ப்பான ராஜ்ஜியத்தை " நடத்துவதால் ஒருவேளை பலமான சூழலில் அப்படியான கோரிக்கையை விட்டிருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் கூட , சென்ற ஜனாதிபதித் தேர்தலில் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை ஆதரித்த கூட்டமைப்பினர் அவரை எதிரியாகக் காணவில்லை , மாறாக தமது ஆபத்பாந்தவராக கண்டனர். இந்த அரசியல் அபத்தம் எப்படி  முன்னாள் ஜே வீ யினரைப் கூட பாதித்தது என்பது சுவாரசியமானது.

ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற  சோசலிச கட்சி மற்றும் சமஉரிமை இயக்கம் ஆகியவற்றின் அரசியல் உயர்பீட உறுப்பினரும், ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினருமான குமார் குணரத்தினம் தனது நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு கூறுவதைக் கொண்டே இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.
"உதாரணமாக இறதியாக 2010ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க கூடாது என்ற நிலைப்பாட்டை நான் கட்சி உயர்பீட கூட்டத்தில் முன்வைத்தேன். 1971லும், 1988 காலப்பகுதியிலும் ஜே.வி.பி இராணுவத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்திய போது எமது தோழர்களை அழித்தவர்களில் முக்கியமானவர் சரத் பொன்சேகா, முதலாளித்துவ அரசை பாதுகாக்கும் இராணுவ தளபதியை ஆதரிக்க முடியாது, அதற்கு மேலாக ஜே.வி.பி போராளிகளை அழித்தவர், அவரை எப்படி ஆதரிக்க முடியும் என வாதிட்டேன்.

அதற்கு ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச என்னைப்பார்த்து கேட்டார், ரி.என்.ஏ ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு) முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்திருக்கிறார்கள் , அப்படி இருக்கும் போது நீ எதற்காக எதிர்ப்பு காட்டுகிறாய் என கேள்வி எழுப்பினார்.

என்னால் அதற்கு பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் கட்சி சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவெடுத்த பின் மௌனமாக இருந்து விட்டேன். இருந்த போதிலும் ஜே.வி.பியும், சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி சரத் பொன்சேகாவை ஆதரித்தது தவறான ஒரு முடிவு என்றுதான் நான் சொல்வேன்."
அந்த வகையில் ஜே வீ பியினரின் அரசியல் வங்குரோத்துத்தனமும் மிகவும் துல்லியமாகவும் வெளிப்பட்டது, எதிரியின் எதிரிதான் நண்பர் என்பார்கள் , ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , ஜே வீ பியினரும் எதிரியின் எதிரி மட்டுமல்ல தங்களின் இரு எதிரிகளில் ஒருவரை நண்பராக்கி அடுத்தவரை அடிப்பது எனும் அரசியல் அயோக்கியத்தனத்தை செய்தவர்கள்
தமிழ் தேசிய வாதத்தின் “ஜனநாயக” போராட்ட அரசியலில் முஸ்லிம்களை நசுக்கும்வதும் நாசூக்காக பாவிப்பதுமான விசச் சக்கரம்  தமிழர்களின் தேசியவாத அரசியல் என்றும் வரலாற்றில் மாறுபடவே இல்லை;  இன்று உள்ளூராட்சி ஆணையாளர் நியமனத்தில் ஆஅட்செபனை தெரிவிக்கும் நிகழ்வு என்பது ஒன்றும் ஆச்சரியமான சங்கதியே இல்லை.
ஒருவேளை நல்லாட்சிக்கான முஸ்லிம் இயக்கத்துக்கு ஆச்சரியமாக இருக்கலாம் . அவர்கள் இன்று தங்களின் அரசியல் முகவரியை தமிழ் தேசிய இனவாதிகளின் தயவினால் உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் போட்ட பிச்சையினால் தங்களை வடக்கில் வளர்த்துக் கொள்ள முயல்பவர்கள்.   
தமிழ் அரசுக் கட்சியினரின் , தமிழர் கூட்டணியினரின்  வரலாறு நெடுகிலும் மட்டுமல்ல இன்றைய முரண்பட்ட அரசியல் நிகழ்ச்சி  நிரல்களை மறைத்துக் கொண்டு பல உதிரிக் கட்சிகளை இணைத்து  அரசியல் நடாத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றிலும் இப்படியான முஸ்லிம்களுக்கு எதிராக குறும் இனவாதத்தை வெளிப்படுத்தும் சம்பவங்கள் பல. நிச்சயமாக இந்த பழைய சம்பவம் இன்றைய சம்பவத்தின் ஒரு பழைய பதிப்பு. இது பற்றி நான் முன்னர் எழுதியதை பதிவிலிடுவது அவசியமாகிறது. 
ஜனாப். மர்கூம் மக்பூல் அவர்கள் 1966/67 அளவில்தான் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் நிர்வாக சேவைக்கு தெரிவான இரண்டாவது முஸ்லிம் நபராவார். இவருக்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முதன்முதல் சிவில் சேவைக்கு தெரிவான முஸ்லிம்,  கலாநிதி ஏ. எம். ஏ அஸிஸ் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அவரின் பின்னர் மக்பூல் நிர்வாக சேவைக்கு தெரிவாகி சம்மாந்துறையில்  பிராந்திய இறைவரி உத்தியோகத்தர் (DRO-–Divisional Revenue Officer) எனும் பதவிவகித்தபோது அரசியல் செல்வாக்குமிகு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரமுகர்களின் முயற்சியால் யாழ்ப்பான நிர்வாகத்தின் கீழிருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு , மாவட்ட காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். அப்போது “தமிழ பேசும் மக்களின்” கட்சியாக தம்பட்டம் அடித்த தமிழ் அரசுக் கட்சியின்  கட்சி பத்திரிகையான “சுதந்திரன்” தனது முதற்பக்க தலைப்புச் செய்தியாக முழு முஸ்லிம் இனவாதத்தினை கக்கி ” தமிழரின் பதவி முஸ்லிமுக்கு பறிபோவதா”  என்று கேள்வி எழுப்பி இருந்தது.
                      இந்த செய்தி சுதந்திரனில் வெளியானபின்னர் நடைபெற்ற தலித் சமூகத்தினரின்  பகிரங்க கூட்டமொன்றில் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட  போது, எனக்கு அறிமுகமான யாழ் முஸ்லிம் பிரமுகர் அக்கூட்டததில் கலந்துகொண்டு மக்பூலுக்கு எதிராக தமிழரசுக் கட்சி செயற்பட்டது பற்றி பதில் தர வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விட அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக விவுரையாளரும் பின்னாளில்  இலண்டனிலுள்ள “தீபம்” தொலைக்காட்சி நிறுவனத்தின் செயதி தயாரிப்பாளராகவும்  கடமையாற்றிய நித்தி யானந்தன் முஸ்லிம்களின் உள்ளக் குமுறலை கேட்டீர்கள் , அதற்கான பதிலை  அன்றைய கூட்டணி நாயகன் “”தளபதி” அமிர்தலிங்கம் வழங்குவார்  என்று கூறினார். ஆனால் அமிர்தலிங்கம் அதனை அலட்சியம் செய்து அக்குற்றச்சாட்டு பற்றி மூச்சு விடாமல் அக் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சென்று விட்டார். இது போன்ற பல சம்பவங்கள் நடந்தேறின. (பார்க்க:            http://www.bazeerlanka.com/2011/04/13.html )

அந்த வகையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமும் தனது தலைவர் அஸ்ரப் போல் செல்வநாயகத்திடம் அரசியல் கற்றுக் கொண்டவர் என்று பெருமிதம் கொள்பவர். ஆனால் அவர்களிடம் கற்ற அரசியலோ என்னவோ, கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலிலோ கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியமைப்புக்கு ஆப்பு வைத்து தனது அரசியல் வரலாற்றில் ஒரேஒரு உருப்படியான காரியத்தை செய்தவர் ரவூப் ஹக்கீம். இந்த குறும் இனவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் குறித்து இன நல்லெண்ணத்தை கட்டி எழுப்ப விரும்பும் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடமாகும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...