நெல்சன் மண்டேலாவின் மறைவுடன் மறையாத மாண்புகள்
எஸ்.எம்.எம்.பஷீர்
"வாழ்வதில் பெரும்சிறப்பு ஒரு பொழுதும் விழவில்லை என்பதிலில்லை , ஒவ்வொரு  தடவையும் விழும் பொழுது எழுந்து நிற்பதில் தான்  உள்ளது”                                            
                                                                     நெல்சன் மண்டேலா


“The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall,”                                                            Nelson Mandela
இந்த புத்தாயிரமாம் ஆண்டில் காலடி எடுத்த வாய்த்த பொழுது இந்த நூற்றாண்டின் தலைவர்களில் உங்களைக் கவர்ந்த உலகத் தலைவர் யார் என்று சர்வதேசம் தழுவிய செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் பொழுது நெல்சன் மண்டேலா முன்னணியில் நின்றார். இப்பொழுது அவர் நம்மிடையே இல்லை என்பதையும் அவரின்  இருத்தலின் கனதியையும்  மிக அழுத்தமாக நம்மை சுற்றியுள்ள தொடர்பு சாதனங்கள்  உணரப்பன்னுகின்றன. 


 
படம்:  இலண்டன் மெழுகு அருங்காட்சியகத்தில் உள்ள மண்டேலாவின் மெழுகு சிலையுடன் மண்டேலா  

கட்சித் தலைமைப் பதவியை  அழுங்கு பிடியாய் பிடித்துக் கொண்டு   ஆயுட் காலத் தலைவராக தானே இருந்து தீருவேன் என்று அடம் பிடிக்கும் அரசியல் கபோதிகள் வாழும் தலைமுறையில் , மனித வாழ்வின் மிகவும் பெறுமதி வாய்ந்த பராயங்களை (27 வருடங்கள்) சிறையிலே இழந்துவிட்டு வந்த ஒரு மனிதனை;  அதிலும் வழக்கறிஞனாய் சட்டப் புத்தகங்களை  சுமந்த கைகளில் சம்மட்டி கொடுக்கப்பட்டு 13  வருடங்கள் கல்லுடைத்து கடூழிய சிறைவாசம் அனுபவித்து வெளியேறிய ஒரு மனிதனை; தான் போராடி வென்ற சுதந்திர தென்னாபிரிக்காவின் ஒரே ஒரு தடவை மட்டும் ஆட்சித் தலைவனாகவிருந்து அடுத்தவருக்கு வழி விட்டுச் சென்ற ஒரு மனிதனை நாம் நம் கண்முன்னே காணக் கிடைத்துள்ளது என்பது ஒரு மகத்தான அனுபவமாகும்.


 
இந்த மனிதனின் ஒருபக்கம் பணிவும் பண்பும் மரியாதையும் கொண்டது என்று பலர் சான்று பகிர்ந்தாலும் , மனிதர்கள் யாவரும் விமரசனதிற்குட்பட்டவர்களே என்பதால் நெல்சன் மண்டேலாவும் அவரின் ஆட்சிக் கால நிர்வாக சறுக்கல்களுக்கு உட்பட்டிருந்தாலும் அவரின் மறுபக்கத்தில் என்றும் ஒரு புரட்சிக்காரராகவே அவர் இருந்துள்ளார். நிறவெறி வெள்ளை இன ஆட்சியாளர்களுக்கு எதிராக தங்களுக்கு ஆதரவு வழங்கிய நண்பர்கள் உலக ஏகாதிபத்தியங்களின் எதிரிகள் என்றாலும் , சுதந்திர தென்னாபிரிக்காவின் சர்வதேச ரீதியில் பரந்துபட்ட  முறையில் அரசியல் ராஜீய நட்புறவு பேணும் சூழலிலும் நண்பர்களை அவர் என்று மதித்தார். சிறையிலிருந்து விடுதலையாகியதும் அவர் செய்த குறிப்பிடத்தக்க நடவடிக்களில் ஒன்று அவர் கியூபாவிற்கு விஜயம் செய்ததே அங்கு அவர் பிடல் காஸ்ட்ரோவிற்கு நன்றி தெரிவித்தார்.


நெல்சன் மண்டேலா ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர். உலகின் எல்லா முகாங்களிலும் உள்ள தலைவர்களுடன் ராஜீய உறவைப் பேணி வந்தாலும் , மிதவாத அணுகு முறைகளை கைக் கொண்டாலும் உலக சமாதானம் பற்றிய உன்னதங்கள் அவரின் அடிநாதமாக இருந்தது. இராக் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொள்ள தயாரான பொழுது அமெரிக்காவின் நடவடிக்கைகள் உலக சமாதானத்துக்கு அச்சுறுத்தலாகும் என அமெரிக்காவின் மீது கண்டனம் தெரிவித்தவர் . மேலும் அமெரிக்காவின்  ஆக்கிரமிப்பு வெளிநாட்டுக் கொள்கைக் கெதிராக அவர் அமெரிக்காவின் உலகளாவிய மனித உரிமை மீறல்களைப பற்றி " உலகில் சொல்லவொன்னாத கொடூரங்களை  இழைத்த நாடொன்று இருக்குமென்றால் அது அமெரிக்காதான்." ( If there is a country that has committed unspeakable atrocities in the world , it is the USA ) என்ற அவரின் குற்றச்சாட்டு ஒரு சமாதானப புறாவின் சாகவரம் பெற்ற  , சாசுவதம் மிக்க பதிவாக உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
1991ல் மண்டேலா அமெரிக்காவின் நிரந்தர எதிரியான பிடல் காஸ்ட்ரோவை சந்தித்த பொழுது அடிமைகளாகிய நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்ற தலைப்பில் கியூபா நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது, கியூபா புரட்சி உலகின் சகல சுதந்திரம் அவாவும் மக்களுக்கு எப்படி  உத்வேகம் அளித்தது என்பதை மண்டேலா சுட்டிக் காட்டி , புரட்சியால் பெற்ற நலன்களை ஏகாதிபத்திய சக்திகள் ஒழிப்பதற்கு  நடாத்தும் திட்டத்திற் கெதிராக   தோழர் காஸ்ட்ரோ நெடு நாள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை புரிந்தார்.

வட அயர்லாந்து
வட அயர்லாந்து ஐரிஸ் சென் பீன் கட்சியின் தலைவர் ஜெர்ரி அடம்ப்ஸ் குரல் கூட உலகின் ஜனநாயக பீ பீ சீ வானொலியில் ஒலிபரப்பத் தடை இருந்ததும் , மரபுவாதக் கட்சியின் ஆட்சியில் ஜோன் மேஜர் ஆட்சியிலிருந்த பொழுது , மண்டேலாவை சந்திக்க  ஜெர்ரி அடம்ஸ் சவுத் ஆப்ரிகா செல்கிறார் என்றதும் , அவர் மண்டேலாவை சந்திப்பதை தடுக்க தமது ராஜீய பலத்தையும்  நல்லுறவையும் ஜோன் மேஜர் பிரயோகித்தார். ஆனால் நெல்சன் மண்டேலா ஜெர்ரி அடம்ஸ் மிகவும் ஆவலுடன் சந்தித்தார். அப்பொழுது மண்டேலா ஜெர்ர்யின் கைகளைக் குலுக்கி "தோழர் ஜெர்ரி எனது கைகளை நான் ஒரு வாரத்துக்கு கழுவவே மாட்டேன் " என்று சொன்ன  வார்த்தைகள் அவரின் இங்கிலாந்து அரசுக் கெதிராக போராட்ட சக்தியாக திகழ்ந்த அடம்ஸ் மீது அவர் கொண்டிருந்த தோழமையுடனான மதிப்பைக் காட்டுகிறது
பாலஸ்தீனம்
மண்டேலா தென்னாபிரிக்க நிறவெறிக் கெதிராக தாங்கள் பெற்ற சுதந்திரம் பாலஸ்தீன மக்கள் சுதந்திரமற்று இருக்கின்ற பொழுது  முழுமையான சுதந்திரமாகாது என்று பாலத்தீன மக்களின் சுதந்திரம் குறித்து அவர் கொண்டிருந்த ஆழமான உள்ளுணர்வை மட்டுமல்ல அவரின் அது பற்றிய அக்கறையை பிரக்ஞையை வெளிப்படுத்தியது, 
 
அரபாத்தை சந்தித்த பொழுது மண்டேலா சொன்னார் நாங்கள் ஒரே அகழியில் இருந்து ஒரே எதிரிக் கெதிராகவே போராடுகிறோம்  (தென்னாபிரிக்க அன்றைய அரசையும் இஸ்ரேலிய அரசையும் சேர்த்து) இனவெறி , நிறவெறி . காலனித்துவ , நவீன காலனித்துவ அடக்குமுறைகளுக்காக போராடுவதில் ஒன்றாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

அது மாத்திரமல்ல அவர் மூன்று தடவைகள் யாசீர் அரபாத்தை சந்தித்துள்ளார் என்பதும். எகிப்தில் யாசீர் அரபாத்தும் நெல்சன் மண்டேலாவும் 1990ல் சந்தித்து வெளிப்படுத்திய கருத்துக்கள் இஸ்ரேலை எப்படி  ஆத்திரமூட்டியது. அதனால் இஸ்ரேல மண்டேலாவின் கருத்துக்களை திரித்து அவர் மீது சேறு பூச முற்பட்டது.ஆனால் மண்டேலா தனது கருத்துக்களில் மிகவும் உறுதியாக இருந்தார். 


லிபியா
நெல்சன் மண்டேலா ஆப்ரிகா என்ற வகையில் பரந்துபட்ட ஒருங்கிணைப்பை நாடி செயற்பட்டார். அந்த வகையில் அவருக்கும் மேற்குலகினால் கொல்லப்பட்ட லிபிய தலைவர் கடாபிக்கும் இடையே தங்களின் போராட்டத்திறு ஆதரவு அளித்த சக்திகள் என்ற வகையில்  ஒரு நல்லுறவு நிலவியது. லிபியாவிற் கெதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடையை நீக்க கோரிக்கை விடுத்தார் , அதற்காக முனைப்புடன் செயற்பட்டார்.எங்களின் சகோதர தலைவர் கடாபிக்கு ஆதரவு வழங்க வேண்டியது எங்களின் கடமை என்றும் விசேடமாக பொருளாதாரத் தடை என்பது கடாபியை பாதிப்பதல்ல அங்குள்ள எமது சகோதர சகோதரிகளை பாதிப்பதாகும் என்று வாதிட்டார். நெல்சனின் பேரக் குழந்தை ஒருவருக்கு கடாபி என்று பெயர் இட்டு கடாபியுடனான தனது நட்பையும் வெளிக்காட்டினார். ஆனால்  அவரின் கடாபி உடனான உறவு குறித்து கண்டனம் வெளியிட்ட மேற்குலக நாடுகள் பின்னர் கடாபியுடன் லோகேர்பீ விமான குண்டு வெடிப்பு சமாச்சாரம் குறித்தும் மீண்டும் நட்புறவு பேணும் நடவடிக்கைகள் குறித்தும் கடாபியுடன் பேச நெல்சன் மண்டேலாவையே பயன்படுத்த முடிந்தது.
தான் கொண்டுள்ள கருத்தை துணிச்சலாக கூறுவதில் நெல்சன் மண்டேலா என்றுமே  பின் வாங்கியதில்லை . "கடாபிக்கும் எனக்கும் இடையிலான நட்பு யாருக்கும் ஆத்திரமூட்டினால் அவர்கள் ஏதேனும் குளத்தில் குதிக்கட்டும் "என்று சொன்னார்.

உண்மைக்கும் மீளினக்கத்துக்கும் வழிகாட்டி

ராப்பான் தீவில் (Robben Island) சிறை வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் இரண்டாக  பிளவு படும்  நிலையில் இருந்தது. கருத்தியல் ரீதியில் தென்னாபிரிக்க சுதந்திரம் பெறுவதில் மண்டேலா கொண்டிருந்த அக்கறைக்கப்பால் சுதந்திர தென்னாபிரிக்க ஒரு கம்முனிச நாடாக மிளிர வேண்டும் என்பதில் மண்டேலவைவிடவும் , அவருடன் கூடவே சிறையில் இருந்த கட்சியின் மூத்த தலைவர் மபுகி கோவன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தார். மேலும் ஆயதப் புரட்சி  மூலம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் , சகல கைத்தொழில்களையும் தேசியமயமாக்க வேண்டும். இனவெறி ஆட்சியாளர்களை , தலைவர்களை , அவர்களின் மனித குலத்துக் கெதிரான குற்றங்களுக் கெதிராக வழக்கு தொடுக்க வேண்டும் , நுரம்பேர்க்கை ஒத்த வகையில் நீதிமன்று அமைக்கப்படல் வேண்டும் என்பன மபுகி கோவனினதும் அவரின் இடது சாரி பிரிவினரதும் நோக்கமாக இருந்தது. ஆனால் மண்டேலா அதிலிருந்து முரண்பட்டார். அதற்காக அவர் ஒரு துரோகியாகக் கூட நிறவெறி ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டவராகக் கூட  சந்தேகிக்கப்பட்டார்.ஆனால் மண்டேலாவின் வழிமுறை பின்னர் தென்னாபிரிக்காவின் தேசிய காங்கிரசால் அங்கீகரிக்கப்பட்டது.
நன்றிக்கடன்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிங்கடனும் அவரது மனைவி கிளாரி கிளிங்கடனும் தென் ஆப்ரிக்காவிற்கு விஜயம் செய்த பொழுது அவர் இரானிய ஜனாதிபதி ராப்சன் ஜானியையும் , பிடல் காஸ்ட்ரோவையும், கடாபியையும்  தனது நண்பர்கள் என்றும் அவர்களை அரவணைத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டு தமது வெளிப்படையான அரசியல் அணுகுமுறையால் நன்றிக்கடனை வெளிப்படுத்தினார்.

நாங்கள் இந்நாட்டு வரலாற்றின் இருண்ட நேரங்களில் எங்களுக்கு உதவியவர்களை கைவிட மாட்டோம் , அவர்களே நிறவெறிக் கெதிரான போராட்டத்தை  நாங்கள் முன்னெடுத்து வெற்றி கொள்ள வளங்களை வழங்கி உதவியவர்களாகும் என்ற அவரின் செஞ்சோற்றுக் கடன் உணர்வு உலகின் பலம் பொருந்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அவரை கட்டிப்போட்டிருந்தது.
மண்டேலா ஒரு கமுனிஸ்ட் அல்ல என்றாலும் அவர் கமுனிஸ்ட்கள்  பலரால் தோழர் என்றே அழைக்கப்பட்டார் , அவரும் போராட்ட வரலாறு கொண்ட தலைவர்களை "தோழர்" என்று அழைப்பதையே விரும்பினார். முரண்பட்ட முகாம்களுக்குள் தனது முரண்படாத மனித குல மேம்பாட்டிற்கான உதாரணங்களை நெல்சொன் மண்டேலா விட்டுச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...