எப்படித் தப்பினாய் ஜெயபாலா!
எஸ்.எம்.எம்.பஷீர்

தனக்கின்னா வித்தி விளைத்து வினை விளைப்பக்
 காண்டலிற் பித்தும் உளவோ  பிற. ( அறநெறிச் சாரம் )

முன்னாள் இலங்கைப் பிரஜையும் . தற்பொழுது நோர்வே பிரஜையுமான வ.ஐ ச. ஜெயபாலன் சினிமாவில் நடித்துப் பெற்ற விளம்பரத்தை விட அதிக விளம்பரத்தை அண்மையில் அவர் இலங்கையில் காவல் துறையினரால்  வீசா விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக;    குற்றம் சுமத்தப்பட்டு , கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது;  பெற்றுக் கொண்டார். உலகின் பிரபல செய்தி இஸ்தாபனங்கள் மூலம் இலங்கை அரசுக் கெதிரான ஒரு பிரச்சாரத்தை இலகுவாக  முன்னெடுக்க தன்னையே ஆகுதியாக்கினார்


இவர் இலங்கையிலிருந்து  நோர்வேக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார் , அவரின் இலங்கை விஜயம், நடவடிக்கைகள் ,  கைது , தன்னைக் கொல்ல பொலிசார் செய்த சதி , தோழர் அமைச்சர் பசீர் , தோழர் ரவூப் ஹக்கீம் , தோழர் எரிக் சொல்ஹைம் காட்டிய அக்கறை பற்றியெல்லாம் சொல்லி,  பெரிதாக பின்னர் சொல்லப் போவதாக போத்தலில் அடைக்கப்பட்ட பூதத்தை சற்று வெளியே தலையைக் காட்டி , முழு பூதத்தையும் வெளியே விடப் போகிறேன் என்ற பாணியில் பூச்சாண்டி காட்டி உள்ளார். 

இலங்கையில் தங்கியிருந்த விசா விதி முறைகளை மீறி ஜெயபாலன் ஊடகச் சந்திப்புகளை நடத்தியுள்ளதாக அறியப்படுகிறது. அதையும் ஜெயபாலன் மறுக்கவில்லை ஆனால் அவர் பேசிய விடயங்கள் தவறாக விளங்கப்பட்டுள்ளன என்று தன்னிலை விளக்கம் அளித்தார். ஆனால் அவர், இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் தான் சுற்றுலா விசாவில் செல்லும்போது இது போன்று உரை நிகழ்த்தியிருப்பதாகவும், அங்கெல்லாம் இதற்கான “ஜனநாயக வெளி” இருக்கிறது என்றும் ஆனால் இலங்கையில் இது அனுமதிக்கப்படுவதில்லை என்பதைத் தான் உணர்ந்திருக்கவில்லை என்றும். மேலும் இலங்கையில் தன்னை ஒரு வெளிநாட்டவராகவும் தான் கருதவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் இக்கட்டுரையாளர் சென்ற வருடம் கனடாவுக்கு சென்ற பொழுதும் , 2003 ஆம் ஆண்டில் நியூ யோர்க்கு சென்றபொழுதும் கூட என்ன நிகழ்வில் கலந்து கொள்ளப்  போகிறார் என்பது பற்றி விரிவான விசாரணையின் பின்னரே நாட்டுக்குட் பிரவேசிக்க  அனுமதிக்கப்பட்டார். இதனை இங்கு குறிப்பிட வேண்டியதற்கான காரணம் முன்னரே விசா பெற்று அல்லது பிரவேச விசா வழங்கப்படும் பொழுது அந்நாட்டின் குடிவரவு குடியகல்வு  திணைக்களம் குறிப்பிட்ட நபரை தமது நாட்டு குடிவரவு குடியகல்வு  சட்டத்தின்படி விசாரிப்பதில் என்ன தவறுண்டு. ஜெயபாலன் இலங்கையில் பிறந்தவர் , என்பதை விட அவர் வேற்று நாட்டு பிரஜையாக விசா விதி முறைகளின் படியே இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார். விசா விதி முறைகளை தெரியாது என்பதோ அல்லது தனது இந்திய ஐரோப்பிய அனுபவமோ ஒரு எதிர்வாதமாக அமையாது. சேனல் நான்கு ஆவணப்படத் தயாரிப்பாளர் கலம் மைக்ரே கூட ஒரு தடவை  பொய் சொல்லி இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார். இன்னும் பல ஊடகவியலார்கள் பிரித்தானிய டைம்ஸ் பத்திரிக்கையாளர் உட்பட இலங்கையில் இருந்து அவர்கள் விசா விதி முறைகளை மீறியதற்காக நாடு கடத்தப்படுள்ளார்கள்.   இந்திய மத அறிஞர் பீ . ஜே .என அறியப்படும் பீ ஜைனுலாப்தீன் கூட இலங்கையில் உள்ள முஸ்லிம்  அரசியவாதிகளின் ஜனநாயக மறுப்பினால் விசா மிதிகளை மீறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். 

இக்கட்டுரையாளரின் அனுபவத்தில் இரண்டு முஸ்லிம் அறிஞர்கள் அமெரிக்காவில் இருந்து தங்களின் நாட்டிற்கு திரும்பும் வழியில் இங்கிலாந்துக்குள் பிரவேசிக்க  மத நிகழ்ச்சி பங்குபற்றலில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்கள். ஒரு நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களை விடவும் அந்நாட்டின் அரசியல் பாதுகாப்பு காரணிகளை சாக்காகக் கொண்டு பல மேற்கத்தேய நாடுகள் விசா கெடுபிடிகளை செய்வதையும் விசா மறுப்பதையும் ,நாடு கடத்துவதையும் சாதாரணமாகவே பலரும் அறிவர்.

முதற் சந்திப்பு

ஜெயபாலனின் கவிதைகளை அவ்வப்பொழுது தற்செயல் நிகழ்வாக வாசிக்க நேரிட்டதும், அதையும் விட அவரின் முஸ்லிம் தமிழ் உறவு  தொடர்பான எழுத்துக்களைப் பற்றி கேள்விப்பட்டதும் , ஜெயபாலன் குறித்து என்னுள் ஒரு நல்லெண்ணம் நிலவியது. அவரின் கவிதைகளில் இழையோடியிருந்த நாட்டுப்புற சாமான்ய மக்களின் நல்லுறைவை வலியுறுத்தியதால் அவரின் அரசியலில் இருந்த தீவிரம் பெரிதாக மனதை உறுத்தவில்லை.  இலங்கையில் நான் ஜெயபாலனை சந்தித்திருக்கவில்லை , மாறாக கிழக்கு இலண்டனில் செயற்பட்ட இலண்டனில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு நடத்திய கருத்தரங்கில் ஜெயபாலன் கலந்து கொள்வதாகவும் என்னையும் அதில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டி கொண்டனர். அக்கருத்தரங்கு நடக்க முன்னரே அப்பகுதியிலுள்ள ஜெயபாலனுக்கு அறிமுகமான ஒரு முஸ்லிம் நண்பர் மற்றும் சிலருடன் ஒரு சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்பொழுது ஜெயபாலன் கிழக்கில் முஸ்லிம் தமிழ் மக்களைக் கிடையே இன உறவு ஏற்படுத்துவதற்காக தான் செய்யும் வேலைகளை விரிவாகவே கூறினார். அவரின் தகவல்களிலிருந்து அவர் தீவிரமாக தனது இன உறவுப் பணியில் ஈடுபட்டிருப்பதனை அறிந்து கொள்ள முடிந்தது. அவர் ஒரு முன்னாள் புளட் உறுப்பினர் என்பதை நான் அறிந்தபடியால்  அவரிடம் அவர் எப்படி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் செல்ல முடிகிறது எனபதை பற்றி அவருடன் உசாவினேன் , ஜெயபாலன் புலிகளின் பிரதேசங்களுக்குள் சென்று , அவர்களுடன் ஊடாடி விட்டு வருவது என்பது தனது உயிருக்கு உத்தரவாதமற்ற ஒரு இடரான செயல்தான் என்று கூறினார். ஆனால் பின்னர் அன்று மாலை நடந்த கருத்தரங்கில் அவர் புலிகளுடன் எப்படி நெருக்கமாக இருந்துள்ளார் என்பதை , அவரின் கருத்துக்கள்  வெளிப்படுத்தின , அவரின் முஸ்லிம்களை மேவிய அரசியல் கருத்துக்கள் , முஸ்லிம்களை கருவறுக்கும் புலிகளினுடனான தொடர்புகள் எனக்கு அவரின் இன உறவுக்கான நல்லெண்ணத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியது. இவர் யாரின் கைப்பொம்மையாக செயற்படுகிறார் என்ற கேள்வியையும் எழுப்பியது.


ஆனால் இவர் ஒரு முன்னாள் இயக்க உறுப்பினர்,  புலிகளின் முக்கிய பிரதேச தலைவர்கள் தொடங்கி உளவுத் துறை ஜாம்பவான் பொட்டம்மான் வரை தொடர்பு கொண்டிருந்தவர். அதிலும் பொட்டம்மானை தனது இயக்க  கொலைகாரன் டம்பிங் கந்தசாமியிடம் இருந்து காப்பாற்றியவன் தானே என்றும் அவர் , அதனை என்றும் மறக்கவில்லை என்றும் பெருமை பாராட்டிக் கொள்கிறவர். ( இலங்கையின் பல தமிழ் , முஸ்லிம்,  சிங்கள அரசியல்வாதிகள் , ஆட்சித் தலைவர்கள்  ( ராஜீவ்காந்தி உட்பட )  சமூக செயற்பாட்டாளர்கள் , மதத் தலைவர்கள் என பலரைக் கொல்ல காரணமானவர் பொட்டம்மான் ). அப்படியானால் பொட்டம்மானைக் காப்பாற்றி அவர் நூற்றுக் கணக்கான கொலைகளை செய்ய வ.ஐ ச. ஜெயபாலன் துணை புரிந்துள்ளாரா. அதையும் விட பின்னாளில் அஸ்ரப் புலிகளால்-பொட்டம்மானால்- கொல்லப்பட்டார்.

இப்பொழுதுள்ள கேள்வி என்னவென்றால் பொட்டம்மானுக்கும் , அவரின் புண்ணியத்தால் புலிகளால் கொல்லப்படாமல் பாதுகாப்பாக புலிகளுக்குள் ஊடாடி செயற்பட்ட வ ஐ ச. ஜெயபாலனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பில் உள்ள சங்கதிகள் என்ன . அவை எமது கவனத்துக்கு அவசியமானவையாகும்  

இந்த பின்னணியில் இலங்கை சென்ற ஜெயபாலன் தான் அங்கு வரப் போவதை "தோழர் ரவூப் ஹக்கீமுக்கு" அறிவித்து விட்டே சென்றார் என்றும் ஜெயபாலன் தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்தன. தனது தாயாரின் சமாதியை பார்க்கச் சென்ற அவரை தடுக்க முற்பட்டதனை அனுமதிக்க முடியாது , அது மனிதாபிமானமும் ஆகாது. ஆனால் அவரின் அரசியல் செயற்பாட்டினை இலங்கையில் அனுமதிக்க முடியாது எனும் இலங்கை அரசின் சட்ட நடவடிக்கை செயற்பாடுகள் அந்நாட்டின் இறைமையுடன் தொடர்புபட்டதொன்று. அதில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை.

அவர் சுமார்  வருடங்கள் வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் இடையே உறவைக் கட்டியமைக்க பாடுபட்டுள்ளார் என்றும் அந்த வகையில்பயங்கரவாத புலிகளுடனான அவரின் உறவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளுடனான உறவும் பற்றி முன்னரே 2009ல் இக்கட்டுரையாளர் கோடிட்டுக் காட்டி உள்ளார்.
  
சமாதான காலத்தின்போது நோர்வே அரசு இச்சமாதானத்தினை முன்னெடுக்கின்ற முயற்சியில் புலிகளினதும், புலம்பெயர் புலி ஆதரவாளர்களினதும் சுயாட்சி இலக்கைக் கொண்ட சமாதான சதுரங்கத்தில் காய்களை கவனமாக நகர்த்தியுள்ளார்கள். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை தமது வலைக்குள் ஈர்த்துக்கொள்ள அவற்றின் முக்கிய உறுப்பினர்களான சேகு தாவூத் பஸீரை நோர்வே பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சமாதானம் குறித்த பயிற்சி வகுப்பினையும் நடாத்தினார்கள். இதன் பின்னணியில் முன்னாள் புளொட் பின்னாள புலி அனுதாபியுமான வ..ச ஜெயபாலன் (கவிஞர்) இருந்துள்ளார் என்பது குறித்து செய்திகள் வெளியாகின. சேகு தாவூத் மூலமாக அஷரப் அவர்களுக்கு அறிமுகமான வ..ச ஜெயபாலன் புலிகளுக்கும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினருக்குமிடையில் குறிப்பாக சேகு தாவூத்  தாவூத பஸீர் மூலம் எத்தகைய இடைத்தரகர் பணியினைப் புரிந்தார் என்பது குறித்த ஆராயவேண்டிய தேவையும் உண்டு.
( பார்க்க: http://www.bazeerlanka.com/2011/04/4.html)

இன்னும் வரும்….

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...