இதற்குள் எங்கே இவர்கள் !!






எஸ்.எம்.எம்.பஷீர்
“நல்லதோர் வீணை செய்தே. அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ!”
                                                                                                              பாரதியார்

வடக்கிலே முன்னர் இராணுவமும் புலிகளும் தங்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு பெயரிடுவார்கள் . புலிகளின் அஸ்தமனத்தின் பின்னர் வட  மாகாண சபைக் காண ஜனநாயகத் தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பாக விஷேட பெயரிடாவிட்டாலும் பொதுவாக "மூன்றாம் கட்டப் போராட்டம்" அல்லது “மூன்றாம் கட்டப் "போர்" என்ற நாமகரனங்களுடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைகள முன்னெடுத்து வருகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனம் தெற்கிலே சர்ச்சைகளை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. "பிறக்கும் பொழுது முடமாம் பேய்க்குப் பார்த்து தீருமா" என்ற கதையாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சி எதற்காக உருவாக்கப் பட்டதோ , ஆயுதப் போராட்டம் எதற்காக நடத்தப்பட்டதோ,  அடிப்படையில்  அதே கோரிக்கைகளை மீண்டும் வைத்தே இம் மாகாண  சபைத் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் விஞ்ஞாபனம் கூறுகிறது. ஆனால் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிட்ட பொழுது இவ்வாறான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினை த .தே. கூ முன்வைக்கவில்லை.
முதன்முதலில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு இரண்டாவது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்புக்கள் வந்தவுடன் தமிழ்த் தேசிய அதீத உணர்வாளர் கலாநிதி. இராயப்பு ஜோசப்,மன்னார் கத்தோலிக்கப் பேராயர் , சிவில் சமூகம் என்ற பெயரில் தனது தலைமையில் தன்னை ஒத்த தமிழ்த் தேசிய தீவிர உணர்வாளர்ககளை  ஒன்று திரட்டிதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகத்தின் வேண்டுகோள் என்ற பெயரில் அறிக்கையினை வெளியிட்டார்.
மாகாண சபையில் போட்டியிடக் கூடாது ,  அவ்வாறு  போட்டியிட்டால் அது அரசியல்  முள்ளிவாய்க்காலாக அமையும் என்று எச்சரித்திருந்தார். அந்த அறிக்கையில்
“எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வு தொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஓரு பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை .தே.கூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும். அத்தகைய நிகழ்வு ஈற்றில் முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்துவிடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக்கடமை .தே.கூ. விடமே இன்று உள்ளது.” 

ஆனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்    போட்டியிடப்  போவதாக தமிழ்க் கூட்டமைப்பு அறிவிப்பு செய்தவுடனே தமிழ் சிவில் சமூகம் இராயப்பு ஜோசப் தலைமையில் மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் விஞ்ஞாபனத்தில் எவை எவற்றை சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
“ எது எவ்வாறாக இருப்பினும் தேர்தல்களில் நேரடியாகப் பங்குபற்றுவது என்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது என்ற கடினமான யதார்த்தத்தை கருத்தில் கொண்டு .தே.கூ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் சில பரிந்துரைகளைச் செய்ய விழைகின்றோம்.
தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பும் அதன் கீழான மாகாண சபை முறைமையும் நிராகரிக்கப்பட வேண்டும. 13ஆவது திருத்தமானது அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்கப்பட முடியாதது.
வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமாகும். எந்தவொரு அரசியல் தீர்வும் இணைந்த வடக்குக் கிழக்கை ஓர் அலகாக அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். இவ்விடயம் தொடர்பில் குறிப்பாக முஸ்லிம் மக்களது நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வது முக்கியமானதாகும்.” 

இரண்டாவது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைகளின் பொழுது சம்பந்தன் துறைநீலாவனைக்  கோவிலிலே சென்று வழிபட்டு விட்டு 
"கிழக்கு மாகாணத் தேர்தலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதை மஹிந்த ராஜபக்ஷ கூட எதிர்பார்க்கவில்லை. இது கடவுளுடைய செயல். நீண்ட காலமாக நாம் துன்பங்களையும், துயரங்களையும் எதிர்நோக்கி வருகின்றோம். இறைவன் எமக்கொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான். " என்று மாகாண சபையை மஹிந்த கலைத்ததையும் , தேர்தலை  அறிவித்ததையும்  கடவுளின் செயலாக கூறி கிழக்கிலே முஸ்லிம் காங்கிரசும் தனித்துக் கேட்பதால் , தம்மோடும்  பேசுவதால் தமது ஆட்சி கிழக்கிலே வரும் என்று நம்பினார். ஆனால் இறுதியில் கடவுள் அவரைக் கைவிட்டு விட்டார். வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதாக கூறுவது மஹிந்தரின் மாயை என்று விக்னேஸ்வரன்  வட மகான சபைத் தேர்தல் அறிவிப்புக் குறித்து கூறினார். அதிலும் அவரும் தோற்றுப்போனார்

கிழக்கு மாகாணத் தேர்தலில் மதம் ஆட்சி செய்ததது . கடவுள் எங்கும் எவருக்கும் அரசியல் துணையாகத் தேவைப்பட்டார். , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்ட    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கூட தனது பங்கிற்கு "அல்லாஹ் கிழக்கு முஸ்லிம்களுக்கு (கிழக்கு மாகான சபைத் தேர்தலை ) ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். அதனை நாம் அலட்சியப்படுத்தி விட்டு பின்னா; கைசேதப்படும் சமூகமாக இருந்து விடக்கூடாது." என்ற  அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி முஸ்லிம்களுக்கு  கோரிக்கை விடுத்திருந்தனர். சம்பந்தனும் மக்கள் நல்லாட்சி இயக்கமும் கடவுளின் சந்தர்ப்பத்தை அடையாளம் காட்டினர். ஒரு வேளை கடவுள் ஏற்படுத்தித்தந்த  சந்தர்ப்பத்தை தமிழர்களும்  (ஹிந்துக்களும்) முஸ்லிம்களும் முறையாக பயன்படுத்தத் தவறி விட்டனர் போலும்!  இவர்களுக்கு எதிராக வாக்களித்தவர்கள் உண்மையான ஹிந்துக்களா முஸ்லிம்களா என்று கேட்டால் யானறியேன் பராபரனே

கிழக்கிலே தாங்கள் அங்கீகரிக்க மறுத்த புலியின் அச்சத்தினால் போட்டியிட மறுத்த  மாகாண சபைத் தேர்தல் கலைக்கப்பட்ட பொழுது புலிகள் போனபின் சம்பந்தன் தேர்தல் அறிவிப்பை கடவுளின் அருளாகக் காணக் கூறிய காரணம் சர்வதேசம் தமிழ் மக்களின் பிரச்சினையை கையாள்கிறது எனும் அவரின் நிலைப்பாடாகும். கடவுளைக் கூட ஏகாதிபத்திய கைக்கூலியாக்கிவிட்டார்  சம்பந்தர். !
பிரபாகரன் தனது உரையில் அடிக்கடி குறிப்பிடும் " போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை" என்ற வார்க்தைகளை எம்.பீ. சுமந்திரன்  இப்பொழுது நாசூக்காக குறிப்பிடுகிறார் .  65 ஆண்டுகளாக நாம் செய்த தியாகங்கள் வீண்போகக் கூடாது. எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக் கூடாது. இத் தேர்தல் எமது அரசியல் போராட்ட வடிவங்களின் ஒரு திருப்புமுனை என்பதை மக்கள் உணர வேண்டும்.

அது போலவே முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரனும் , “போராட்டங்கள் காலத்துக்குக் காலம் வடிவங்கள் மாறுபடலாம். இது நியதி. நாம் இப்போது சர்வதேசத்தை இணைத்துக் நாம் தொடுத்திருக்கும் ஜனநாயகப் போரிலே நாம் வெல்வது உறுதி”

என்று வெற்றியை உறுதி செய்கிறார்.  வட மாகாண தேர்தல்  வெற்றி மூலம்  தமிழர் தாயக இணைப்பு , சுயநிர்ணய உரிமை சுயாட்சி என்ற பரந்துபட்ட தமிழர் கனவுகளில் மக்களை மிதக்க பரப்புரை செய்கிறார். சர்வதேசம் தங்களுக்கு உதவும் என்கிறார்கள். அதற்கு முஸ்லிம்களின் உறவும் தேவை அதனையே சம்பந்தன் கிழக்கு மகான சபைத் தேர்தலிலும் காத்திருந்தார்.

வட மாகாணசபைத் தேர்தல்  முஸ்லிம் மக்களின் அரசியல் தொடர்பிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் தரப்பில் எப்பொழுதுமில்லாதவாறு தமிழ் வேட்பாளர்கள் தென்னிலங்கை கட்சிகளில் அல்லது தேசியக் கட்சிகளில் எவ்வித அச்சமுமில்லாமல் போட்டியிட முன் வந்துள்ளார்கள்.

இதற்குள் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிட்ட கிழக்கைத்  தளமாகக் கொண்டு செயற்பட்ட நல்லாட்சிக்கான முஸ்லிம் இயக்கமும் ஜமா அதே இஸ்லாமிய உறுப்பினர்களும் (இன்னுமொரு இயக்கமாக ) கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிட முன் வந்துள்ளனர். பாசிச பாசையில் போராட்ட அறை கூவல் விடும்; யுத்த முரசம் கொட்டும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபைத் தேர்தலுக்குள் இன்னமும் பிரபாகரனே எனது தலைவன் என்று கூறும் வேட்பாளர்களைக் கொண்டிருக்கும் ,; தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசியமாகும் தமிழர்களுக்கு மட்டுமே வடக்கு கிழக்கில் சுயாட்சியும் சுயநிர்ணய உரிமையும் இருக்கென்று தம்பட்டம் அடிக்கும் .; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நல்லாட்சிக்கான  மக்கள்  இயக்கம் நுழைந்துள்ளது. ஜமா அதே இஸ்லாமி இயக்கம் இந்த அரசியல் கூட்டினால் அவஸ்தையுற்றதென்றும் தமது இயக்கத்தின் உறுப்பினர்களான மன்னாரில் போட்டியிடும் அஸ்மின் என்பவரையும் மற்றும் இந்த அரசியல் கூட்டில் செயற்பட்ட  நஜா என்பவரையும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கி உள்ளதாக ஒரு செய்தியும் கசிந்துள்ளது. ஜமா அதே இஸ்லாமியின் அனுமதி பெறாமல் இவர்கள் தேர்தலில் அல்லது இந்த உறுப்புரிமை நீக்கத்தின் சூட்சுமம்  என்னவென்று தெரியவில்லை.  

எது எப்படி இருப்பினும் இவர்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சேர்க்கை  இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்த கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீண்டகால இன மீளினக்கத்துக்கு உதவுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க  , இப்படியான ஒப்பந்தம் மூலம் வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தமிழரின் ஒப்புதலாகவும் , மேலும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை பொருத்தவரை  தமிழரின் அதிக பட்ச ஆணையைப் பெறுகின்ற கட்சி என்ற வகையில் தமிழ்த்  தரப்பினரைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த ஆவணமாகவும் இருக்கிறது  என்பதும்  பிரபா -ஹக்கீம் ஒப்பந்தம் போலன்றி ஒப்பந்த கடப்பாடுகள்  கனதியானவை என்பதும்  சரியானதா ? என்பதை விரிவாகப் பார்க்க முன்னர் மன்னார் தேர்தல் மாவட்டத்தில் உள்ள கல நிலவரங்களைப் பார்த்தல் அவசியமாகிறது,  

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட விரும்பவில்லை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அங்கு போட்டியிடாமல் மன்னாரில் போட்டியிட விரும்பினார் என்பதை அலசிப் பார்த்தால் அதற்கான காரணம் தெளிவாகிறது . யாழ்ப்பான மாவட்டத்தில் பிரதான தேசியக் கட்சிகளில் அரசியலில் பிரபலமான முஸ்லிம்கள் சிலர் போட்டியிடுகின்றனர். மேலும் ஆதரவாகவும் பின்னின்று செயற்படுகின்றனர்.  (உதாரணமாக சட்டத்தரணி ரமீஸ் , சுபியான் மௌலவி ,  சிராஸ் போன்றோர். 

மேலும் அங்குள்ள மீள் குடியேறிய முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு என்பதுடன் வாக்களிக்கும்  உரிமை பெற்றவர்கள் மிகவும் குறைவு என்பதும் தனித்து முஸ்லிம் வாக்குகளைக் கொண்டு மாவட்ட அடிப்படையில் ஒரு பிரதிநிதி தெரிவாவதே மிக மிகக் கடினமானது. 

புலிகளின் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரும் மீண்டும் முஸ்லிம்கள் வடக்கில் மீள் குடியேறுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் , குறிப்பாக புலிகளால் மன்னாரில் இருந்து பலவந்தமாக இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்ககளின் மீள் குடியேற்றம் என்பது கூட்டிக் கழித்துப பார்த்தால் சுமார் 10 தொடக்கம் 15 வீதம்தான் இதுவரை இடம் பெற்றுள்ளது.  ஒருபுறம் , குடியேற விரும்பும் அதிகளவிலான மக்கள் தமது வறுமை நிலை , மீண்டும் குடியேறி தொழில் செய்யும் வாய்ப்பின்மை , குடியேறுவோர் மீது மேற்கொள்ளப்படும் பாரபட்சம்  காரணமாக மன்னாரில் இன்னமும் கணிசமாக முஸ்லிம் மக்கள் மீள் குடியேறவில்லை.

பொதுவாக மன்னாரில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களைப் பொருத்தவரை ஆளும் அரசுடன் சேர்ந்து போட்டியிடும் ரிஷாத் பதியுதீனின் அரசியல்  செல்வாக்கு ஏனைய முஸ்லிம் கட்சிகள் தனி நபர்களை விட தற்போது  மேலோங்கி உள்ளது என்று சொல்லப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ் மறைந்த முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பீ . மசூரின் ஊரான எருக்கலம்பிட்டி வாக்குகளை நம்பியே உள்ளது, அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மன்னார்  தாராபுரத்தை சேர்ந்த ரிசாத் பதியுதீன் எருக்கலம்பிட்டி  முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவான பிரதேசம் என்பதால் அப்பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒர வஞ்சனையுடன் நடந்து கொண்டுள்ளார்  குற்றச்சாட்டாகும் .  இத்தகைய குற்றச்சாட்டு முன்னரும் ரிசாத்தின் மீஎது முன் வைக்கப்பட்டது. புத்தளம்  முஸ்லிம் அகதிகள் விடயத்தில் ரிஷாத் யாழ்ப்பான முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினார் என்று புத்தளத்தில் அகதியாய் இருந்த யாழ்ப்பான முஸ்லிம்கள் குற்றம் சாட்டினர்.

ஆனாலும் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மசூரின் மறைவுக்குப் பின்னர்  அவரின் இடத்தை  நிரப்பிய சட்டத்தரணி பாரூக் முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கை அங்கு தக்க வைக்கும் நிலையில் இல்லை.  அங்குள்ள மக்கள் ரவூப் ஹக்கீமின் கையாலாகத அரசியல் ஆளுமையின் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள் குறிப்பாக மன்னார் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் ரவூப் ஹக்கீமோ  அல்லது அவரின் மன்னார் எம்,பியோ உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதால் ஒப்பீட்டளவில் அதிகம் வாக்காளர்கள் பயன்பெறக் கூடிய முஸ்லிம் அரசியல்வாதியாக ரிசாத்தை இப்பொழுது மன்னார் முஸ்லிம்கள் காண்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
மறுபுறத்தில் மன்னார் ஆயரின் ஆசியுடன் கூடிய முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்  கெதிரான  நடவடிக்கைள் , அதனை எதிர்க்கும் ரிஷாத் பதியுதீனின் உணர்வு மயப்படுத்தப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் என இரண்டுக்கும் மத்தியில்  சாமான்ய ஏழை மன்னார்  முஸ்லிம்கள் அல்லாடுகின்றனர்

எனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  ஜமாத்தே இஸ்லாமி எனப்படும் இஸ்லாமிய மத அமைப்பின் அங்கத்தவரான அஸ்மின் என்பவர் மக்களுக்கான நல்லாட்சிக்கான அமைப்பின் சார்பில் தமிழ் தேசக் கூட்டமைப்பில் இம்முறை வட மாகான சபைத் தேர்தலில் மன்னாரில் போட்டியிடுகிறார்.
தற்பொழுது  வடக்கில் முஸ்லிம்கள் அதிகம் வாக்குரிமையுடன்  வாழும் பகுதிகளைக் கொண்ட மாவட்டம் மன்னார் மாவட்டமேயாகும் , அங்கு காணப்படும் அரசியல் போட்டிகள் தமிழ்த் தேசிய கூட்மைப்பின் ஆதரவாளரான ஆயர் -ரிசாத் முரண்பாட்டை  தமிழ் தரப்பில் சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பும், செல்வாக்கிழந்து செல்லும் முஸ்லிம் காங்கிரசின் வாக்குகளை கவரும் வாய்ப்பும் கானப்படுவதே  அஸ்மின் போட்டியிடக் காரணம் என்று  சொல்லப்படுகிறது.

 ஆனால்  மன்னாரில் ரிசாத்தின் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தது இருவர் தெரிவாக வாய்ப்புள்ளது என்றும் ஏனெனில் ஓரளவு  தமிழ் வாக்களர்களின் வாக்குகளையும் ரிஷாத் நியமித்த வேட்பாளர்களை பெற்றுக் கொள்ளும் அளவு தமிழ் செல்வாக்கும் ரிசாத்  பதியுதீனுக்கு உண்டு என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் அஸ்மின் அதிகம் முஸ்லிம் வாக்குகளைப் பெறமுடியாது என்று அங்கிருந்து  கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. 
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நல்லாட்சி இயக்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வின்படி ஒரே தங்களின் கட்சியில் போட்டியிடும் அஸ்மின் " கணிசமான வாக்குகளைப் பெற்றும் தெரிவுசெய்யப்படாதவிடத்து நியமனமுறை மூலம் அவரது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் பற்றி சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும்." என்று சொல்வதன் மூலம் அவர் கணிசமான வாக்குகளைப்  பெற வேண்டும் என எதிபார்க்கப்படுகிறார். அவ்வாறு பெற்றும் தெரிவு செய்யப்பட வில்லை என்றால் மாத்திரமே நியமன அங்கத்துவம் பற்றி பரிசீலிக்கப்படும் என்று ஒப்பந்தம் சொல்கிறது. "கணிசமான வாக்குகள்" என்றால் என்பது பற்றிய நழுவல்கள் ஒரு புறம் இருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர் சர்வதேசத்துக்குக் காட்ட ஏதேனும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டும் என்பதற்காக அவரை நியமன அங்கத்தவராக நியமிக்க வேண்டும் என்று கருத்துரைக்கிறார்கள்  என்று அறிய முடிகிறது. புலிகள் இமாமுக்கு எம்.பீ பதவி தவிர்க்க முடியாமல் கொடுக்க வேண்டி நேரிட்டதனை முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பால சுந்தரம்பிள்ளை  யாழ்ப்பான  முஸ்லிம்களை வெளியேற்றியமைக்கு புலிகள் செய்த சமப்படுத்தலாகும் என்று குறிப்பிட்டார். !! . அந்த வகையில்  இப்பொழுதும் யாழைச் சேர்ந்த அஸ்மினுக்கு புலிகளை நினைவில் கொண்டு தங்களின் சர்வதேச சமையலுக்கு கருவேப்பிலையாக அஸ்மினைப்  பயன்படுத்த நியமனம் வழங்கலாம். கணிசமான  வாக்குகள் எடுக்காவிட்டாலும்  தமிழ்த் தேசிய அரசியல் அதன் மூலம் கணிசமான நன்மைகளைப் பெறலாம்!

அதனை எதிர்பார்த்தே அவரும் மிகத் தீவிரமாக தமிழ்த் தேசியத்தை ஒத்த அரசியலை செய்வதில் அக்கறை காட்டி வருகிறார். அண்மையில் அவர் வீரகேசரிப் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் வடக்கில் நேர்மையான வாக்கெடுப்பு நடைபெறாது என தனது  ஐயத்தை வெளிப்படுத்துவதுடன் வடக்கில் நடைபெறும் அபிவிருத்தி குறித்தும் சொல்லும் கருத்துக்கள் மக்களின் கணக்கெடுப்பையும் கேலிக்குள்ளாக்குகின்றன. அந்த நேர்காணலில்  வாக்குச்சீட்டினை "துப்பாக்கி ரவை"  என்று சொல்லாமல் மாறாக "ஆயதம்" என்று குறிப்பிடுகிறார்.
“சிங்களப் பேரினவாத அமைப்புகள் எமது நடவடிக்கைகளால் திருப்திப்படுத்த முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை, அவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகள், அவர்களை இந்த தேசத்தில் இருந்து நாடு கடத்தவேண்டும்
வாக்கு என்பது தற்போது தங்களிடம் தரப்பட்டுள்ள ஆயுதம், தமிழர் உரிமைப்போராட்டத்தில் முக்கியமானதொரு கட்டத்தில் நாம் எல்லோரு இருக்கின்றோம், மக்கள் தங்களது வாக்குரிமையினை எவ்வாறு பாவிக்கப்போகின்றார்கள் என்பதிலேயே குறித்த போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கின்றது. “

இப்பொழுதே மிகத் துரிதமாக சேர்ந்தோரின் பாசையை கற்றுக் கொண்டு விட்டார். பிழைத்துக் கொள்வார் !. ஆனால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிழைத்துக் கொள்ளுமா என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.!


வட மாகான சபைத் தேர்தல் தொடர்பாக  ஆகஸ்து மாதம் வட மாகான  மக்களுக்குள் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் நடத்திய (Centre For Policy Alternaive )  கணக்கெடுப்பில் புலப்பட்ட அம்சங்கள் இந்த தேர்தலினை பற்றிய அந்த கணக்கெடுப்பு   யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் சமூக முக்கியத்துவங்களை பற்றியதுமான ஒரு சுயாதீன பார்வையினைத்  தருகிறது. 

வேலை வைப்புக்கள் , கல்வி முன்னேற்றம் , வீட்டு வசதி மற்றும் வீதி போக்குவரத்து அபிவிருத்திகள்,  மக்களினது முக்கிய பிரச்சினையாக இருந்துள்ளதையும்  இக்கணக்கெடுப்பில்  கலந்து கொண்டோரில் பெரும்பான்மையானோர் (63.7%) வட மாகாணத்தில் அபிவிருத்தி எதோ ஒரு வகையில்  முன்னேறியிருக்கிறது  என்று நம்புகிறார்கள் அதில் 26.1 வீதத்தினர் பெரியளவில் அபிவிருத்தி இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் பாதுகாப்பு குறித்து 41.3 வீதமானோர் எதோ ஒரு விதத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் 21.6 வீதமானோர் மாற்றமே  இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள் . மேலும் 40 வீதமானோர் தங்களின் ஜீவனோபாயம் எதோ ஒரு விதத்தில் முன்னேற்றம் கண்டுள்ள தென்று  குறிப்பிட 33.9 வீதமானோர் தங்களின் ஜீவனோபாயத்தில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

வட மாகான சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நடக்கும் என்று  34.2 வீதத்தினர் திட்டவட்டமாகக் குறிப்பிட 24 வீதத்தினர் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும்  நடக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். 34 வீதத்தினர் தேர்தல்களில் .தே.கூ வெல்லும் என்று நம்ப 21.7 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெல்லும் என்று நம்புகிறார்கள்.  
இக் கணக்கெடுப்பில் மிக முக்கிய அம்சம் என்னவெனில் இக்கணக்கெடுப்பு சுயாதீனமாக நடத்தப்பட்டது என்பதும் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி . பாக்கியசோதி சரவணமுத்து என்பதும் இவர் ஜெனீவா மனித உரிமை மாநாடுகளில் இலங்கை அரசுக் கெதிராக மனித உரிமை அறிக்கைகள் சமர்ப்பித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பலவந்த வெளியேற்றம் ! பாதகர்கள் யார் ?

வட மாகாணத்தில் இருந்து அங்கு பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பாக  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்துகொண்ட  புரிந்துணர்வு உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும்  அதற்கு முன்னரே நல்லாட்சிக்கான வேட்பாளர் "வடக்கில் 1990களில் நிகழ்ந்த பலவந்த வெளியேற்றம் என்னும் துன்பியல் நிகழ்வினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் வடக்கில் குடியேறவேண்டும் அவர்களது இருப்பு, மீள்குடியேற்றம், ஏனைய சமூகங்களுடனான நல்லிணக்கம் குறித்த விடயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்  எனவேதான்  அத்தகைய முயற்சிகளுக்கு அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயலபடவேண்டிய தேவை இருக்கின்றது என்று வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் தனது  அறிமுக நிகழ்விலே குறிப்பிட்டிருந்தார்

1995 மேயில் நடந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொன்ட அன்றய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம்இன்றைய  அரசியல் சூழ்நிலையில்  நான் யாழ் போவது முடியாதுதான் , ஆனால் அப்படி செல்வதென்றால் முதலில் அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் அங்கு சென்று குடியமர வேன்டும்என்று குறிப்பிட்டு முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களை வானதிர கரகோசமிட செய்து மகிழ்வித்தவர். ஆனாலும் பளுத்த தனது அரசியல் சட்டத்துறை அனுபவ அஸ்திரத்தை கொன்டு நாசூக்காக முஸ்லிம்களை  பலவந்தமாக பிடுங்கி எரியப்பட்டதை சொல்லால் மறைத்து ஏதோ முஸ்லிம்கள் தாங்களாக வெளியேறியது போல்வெளியேறிய முஸ்லிம்கள்என்று குறிப்பிட்டதை அங்கிருந்த இன உணர்வலையில் திழைத்திருந்த முஸ்லிம் பெருமக்களும் தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை. அப்பொழுதெல்லாம் புலிகள் இருந்தார்கள் , இவர்களும் , அவர்கள் இருக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். (http://www.bazeerlanka.com/2011/03/blog-post_702.html)

புலி அழிவுக்கு பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இவர்களின் உடன்படிக்கை பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்  என்று தமிழர் தரப்பை சொல்ல வைத்திருக்கிறது. இப்படியான பதப் பிரயோகத்தை கூட பயன்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முடிகிறது,  இதற்கு முன்பாகவே சம்பந்தன் சென்ற மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தனது அனுபவமிக்க சொல்லாடல் மூலம் முஸ்லிம்களை காத்தான்குடியில் கொன்ற புலிகளை நொந்ததையும், வடக்கு கிழக்கு இணைவது முஸ்லிம்கள் இல்லாமல் முடியாது என்றும் முஸ்லிம்களுக்கு புலிகள் இழைத்த அநியாயங்களை அங்கீகரித்தே  நல்லுறவை பேண வேண்டும் என்றும் சுமந்திரன் போன்றோர் பகிரங்கமாக குறிப்பிடுவதும் அண்மைக் காலங்களில் இடம் பெற்றுள்ளது

ஆனாலும் பழுத்த தமிழ்த் தேசிய அரசியல் ஜாம்பவான்களுடன் அரசியல் நேர் கோட்டில் பயணிக்க அவதானமும் அனுபமும் தேவை என்பதை இந்த ஒப்பந்தத்திலும் கவனிக்க வேண்டும் ஏனெனில் இந்த உடன்படிக்கைக்கு  அப்பால் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பற்றி பேசப்படுகிறது .

“1990 ஆம் ஆண்டிற்கு முன்னர், வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுpகளில் பாரம்பரிய குடிகளாக இருந்துள்ளனர். அவர்கள் தமது சொத்துக்களைக் கைவிட்டு, நாட்டின் ஏனைய பாகங்களுக்குச் சென்று சொல்லொனாத் துன்பங்கள் அனுபவிக்க நிர்பந்திக்கப்பட்டமை வருந்தத் தக்கதாகும்.
வட மாகாணத்திலிருந்து வெளியேறிய அனைத்து முஸ்லிம்களும் இயன்றவரை விரைவாக தத்தமது பகுதிகளுக்கு திரும்பிச் சென்று தமது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் நாம் பற்றுறுதி கொண்டுள்ளோம். அவர்கள் திரும்பிச் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதோடு, தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்கு வழங்கும்.” 

ஆனால் அதில் வெளியேற்றப்பட்ட என்ற சொல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதை அவர்கள் செய்வார்கள் என்பது தமிழ்த் தேசிய இனவாதிகளின் அரிச்சுவடி தெரிந்த அனைவருக்கும் தெரியும். கட்சியின் விஞ்ஞாபனம் சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் பெறும் ஆவணம் எப்படி முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும் என்பதை கச்சிதமாக "கனவான்கள்" செய்துள்ளார்கள்.  
 
உள்ளூர் அரசியல் மட்டத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அதுவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் கூட்டமைப்பினருடன் அரசியலில் கூட்டு வைத்து  நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த பின்னர் "வண்டிக்குப் பின் கட்டிய குதிரையைப் போல் "  ஒப்பந்தத்தை பின்னரே கைச்சாத்திட்டனர். அதில் வெளியேற்றப்பட்டது யாரால் என்றில்லாவிட்டாலும் , வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மாகாண சபைக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அஸ்ரப் கேட்ட பொழுது விடாப்பிடியாக மறுத்த , அஸ்ரப் அதற்காக "என் இனிய தமிழ் நெஞ்சங்களே" என்று பகிரங்க மடல் எழுதிக் கோரிய , நாடாளுமன்றத்திலே சந்திரிக்காவின் ஆட்சியில் அரசியல் திருத்தம் கொண்டு வந்து கோரிய,   முஸ்லிம் அதிகார அலகினை இப்பொழுது மீண்டும் கிழக்கு முஸ்லிம்களை குழப்புவதற்காக  விஞ்ஞாபனம் வெளியிட்டு  தெற்கிலே தீவிரப் போக்குள்ள சிங்களவர்களை சினமூட்டுகிறார்கள்.

இதில் முஸ்லிம்கள் தெற்கிலே ஏற்கனவே சிங்கள மத தீவிரவாத தனிமங்களின் நெருக்குவாரங்களுக்கு உட்பட்டிருக்கும் நிலையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து அவர்களுக்கு மட்டும் உள்ளதென்று சொல்லும் விஷேட உரிமைக்காக அவர்கள் சொல்லும் அவர்களின் சுய சுயராஜ்ய கோரிக்கையை வலுப்படுத்த செய்யும் யாகத்தில் முஸ்லிம் ஆகுதியாகலாமோ !
14/08/13

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...