வட மாகாணத் தேர்தல் எத்தனையாங் கட்டப் போர் ?
எஸ்.எம்.எம்.பஷீர்
         
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
                          (  பாரதிதாசன் )

வட மாகாண சபைத் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற ஆரூடமும் அங்கலாய்ப்பும் அலசல்களும்  முடிவுக்கு வந்த பின்னர் ; , அதிலும் வட மாகாண சபையில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின் முதலமைச்சர் வேட்பாளராக திரு விக்னேஸ்வரன் அவர்களைத் தெரிவு செய்த பின்னர் ;, அதுவரை "ஒரு கல்லைத் தன்னும் தூக்கிபோட "  அதிகாரமில்லாத மாகாண சபை  என்று பரிகசிக்கப்பட்ட மாகாண சபைக்கான தேர்தல் தமிழர் சுயாட்சிக்கான போராட்டத்தின் யுத்த களமாக மாறியுள்ளது, தேர்தலில் குதித்திருக்கும் வேட்பாளர்கள் தங்களின் தளபதி திரு விக்னேஸ்வரன் தலைமையில் அணி வகுத்து நிற்கிறார்கள். மாகாண சபைத் தேர்தல் போராட்டத்துக்கு , போராளிகள் மூன்றாம் கட்ட (ஈழ) யுத்தத்துக்கு முரசறைந்து நிற்கிறார்கள். நாளுக்கு நாள் போர் முரசம் தீவிரமாக ஒலிக்கிறது..


இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் (26-04 -2013)  இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையினால் நடத்தப்பட்ட தமிழர் தரப்பினராலும் முஸ்லிம் காங்கிரஸ் பிருகிருதிகளாலும் தந்தை ( வாப்பா! ) என அழைக்கப்படும் எஸ்.ஜே வீ செல்வநாயகம் நினைவு தின விழாவில் கலந்து  உரையாற்றிய தமிழ் தேசியப் பற்றாளர் மதிப்புக்குரிய திரு விக்னேஸ்வரன் அவர்கள் "இந்த வருடம் வட மாகாண சபைத் சபைத் தேர்தல் நடை பெறாது என்று நான்  ஆணித்தரமாக கூறுகிறேன் வெளியாருக்கு (சர்வதேசத்துக்கு ) காட்டுவதற்காகவே இந்த (தேர்தல் அறிவிப்பு ) மாயை உருவாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

மறு புறத்தில் ,  திரு. விக்னேஸ்வரனின் கருத்தைப் பொய்பிப்பது போல் வட  மாகான சபைத் தேர்தல் அறிவிப்பு ஏமாற்றோ அல்லது மாயயையோ அல்ல என்பதை "வட மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படும் என்கின்ற உறுதியினை நான் எமது மக்களுக்கே வழங்கி உள்ளேன். சர்வதேசத்துக்கு அல்ல"  என்று தனது சீசெல்ஸூக்கான விஜயத்தின் போது , அந்நாட்டில் நடை பெற்ற ராஜீய சந்திப்பின் பொழுது (சர்வதேசத்துக்கு ) இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒருவேளை சைவ சித்தாந்த மொழியில் அரசியலும் செய்பவர் என்ற வகையில் திரு விக்னேஸ்வரன் அவர்கள் மும் மலங்களான "ஆணவம் , கன்மம் , மாயை " பற்றிய தனது இறையியல் நம்பிக்கையை வரித்துக் கொண்டு ஆணவமும் கன்மமும் கொண்ட தமிழ் சமூக (தேசிய) அரசியலில் மாயையை சிங்களவர்களின் (அரசின்) பலவீனமான ஏமாற்று , அதனை நம்ப முடியாது என்று சொல்லியிருக்கலாம்.!

மீண்டும் தொடங்கும் மிடுக்கு!
எது எப்படியோ தேர்தலை வென்றாக வேண்டும் எதிரிகளை , துரோகிகளை வென்றா (கொன்றா )க வேண்டும் என்பதால் தேர்தல் பரப்புரைகள் வட்டக் கோட்டைக் தீர்மான காலத்துக்கு பின்னோக்கி சென்றிருக்கின்றன. மிக அவதானமாக அவதானித்தால் வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிதாமகர்கள் யாவரும் ஒரே மொழியில் பேசுவதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள் .  அதாவது , இராணுவத்தை மண்ணை விட்டு விரட்டும் சுயாதிபத்தியத்தை சுவீகாரம் செய்யும்  தமிழ் மக்களின் அடிமைத் தளை  அறுக்கும் , ஒற்றுமையை வலியுறுத்தும் , துரோகிகளை துவம்சம் செய்யும் தேர்தலாகும் என மேடைக்கு  மேடை முழங்குவதாகும். ஆனால் ஒரு முன்னாள் உச்ச நீதிபதி என்றாலும் தமிழ்த் தேசிய இனவாத அரசியல் அட்டகாசங்கள் , ஆர்ப்பரிப்புக்கள் , அவரையும் விட்டு வைக்க வில்லை.

திரு விக்னேஸ்வரன் அவர்கள்  " வடமாகாண தேர்தல் மூன்றாம் கட்டப் போர்! தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான்! இந்தப் போராட்டத்தில் பங்காளிகள் ஒவ்வொருவரும் போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும்  சீ.வி.விக்னேஸ்வரன் இந்த தேர்தலை ஒரு போர்க்களமாகவே சித்தரிக்கிறார். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் கொழும்பில் ஆற்றிய செல்வா நினைவுரையில் "புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழுந் தமிழ் மக்களும் போர் சிந்தனையை இனி அகற்றிக்கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்பொழுது அவர்  புலம் பெயர்ந்தோருக்கு தான் சொன்ன போர் பற்றிய சிந்தனை என்பது ஆயுதம் தாங்கிப் போராடும் போர்.  ஆனால் நான் சொல்லும் இந்தப் போர் “தேர்தல் போர் “ என்று சொல்லலாம். போர் பற்றிய சிந்தனையை ஒழிக்க போர் என்ற சொல்லையும் தவிர்க்க வேண்டுமே எனபது எமது அப்பிப்பிராயம். ஒருவேளை  அவர் ஆங்கிலத்தில் போருக்கு குறிப்பிடும் இரண்டு சொற்களின்  (war / battle) தாற்பரியங்களை கொண்டு  குறிப்பிட்டிருக்கலாம் என்று ஒரு புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால். கலிங்கத்துப் பரணியும் புறநானூறும் (தமிழனின் யுத்தப் புகழ் பாடும்) உலகுக்கு தந்தவன் தமிழன் என்றெல்லாம் மேடையில் முழங்குவது இன்னமும் சங்கடத்தையும்  , சந்தேகத்தை யும்  உண்டாக்குகிறது.

"எங்கள் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களே. " என்று சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட , மேளத்துக்கு ஒத்தூதும் வகையில் சுமந்திரன் வேறு "அரசாங்கத்திற்கு அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் எங்கள் இனத்தைக் காட்டிக் கொடுக்கிற ஒரு துரோகச் செயலாக இருக்கும் என்பதை எம்மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்." என்று தங்களின் பூர்வீக கால "இனத் துரோகி" அரசியலை ஓங்கி ஒலிக்கிறார். இவர்  ஒரு மனித உரிமை சட்டத்தரணி என அடையாளம் காணப்பட்டவர் .  தனி மனித உரிமை என்பது இனம் மதம் என்பவற்றுக்குள் கட்டி வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கும் ஒரு சுதந்திர மனிதனின் அடிப்படை அரசியல் , சிந்தனை உரிமையை மறுக்கும் இவருக்கு யார் பதிலுரைப்பது. இந்தத் தேர்தல் எந்தளவு அதனை செய்யப் போகிறது. ?

யாழ் நகர பிதா மறைந்த அல்பிரட் துரையப்பா முதன் முதலில் பிரபாகரனால் கொலை செய்யப்பட்ட அரச அதரவு அரசியல்வாதி , அவர் அரசுடன் இணைந்திருக்கிறார் என்ற பிரச்சாரமே அம்ன்று முன் வைக்கப்பட்டது . இப்பொழுதும் அதே பாணியில் ஒரு நாட்டின் ஜனநாயக மக்கள் உரிமையான யாருக்கு ஆதரவளிப்பது , யாருடன் சேர்ந்திருப்பது என்பதை மறுக்கும் அடிப்படை மனித உரிமைத் தத்துவத்தை மறுதலிக்கும் வகையில்  அரசியல் பரப்புரைகள் முன் வைக்கப்படுகின்றன .

" டக்ளஸ், தவராசா, அங்கயன் ஆகிய  மூவரும் தமிழ் பேசும் சகோதரர்கள். அவர்கள் போகும் பாதை தவறு என்பது எங்கள் கருத்து எங்கள் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால். எங்களை வைத்துக் கொண்டு எங்களை அழித்தார்கள்.” என்று குறிப்பிடும் முன்னாள் நீதியரசர் "எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள" என்று குறிப்பிடுவதன் மூலம் மறைமுகமாக " காக்கை வன்னியன்” , “எட்டப்பன்”  கதை சொல்வது தெரிகிறது. ஆனால் உலகில் என்றுமே ஒரு ஜனநாயக நாட்டியில் அனைத்து மனிதர்களும் , சமூகங்களும் மத இன மொழி அடிப்படையில் ஒன்று பட்டார்கள் என்பதற்கு சான்றே இல்லை . அது சத்தியமும் இல்லை , அப்படி நினைப்பது அல்லது கருத்துத் திணிப்பின் அடிப்படையில்  வேண்டுகோள் விடுவது எல்லாமே தனி மனித சிந்தனைச் சுதந்திரத்துக்கும் , அவனின் விருப்பு வெறுப்புக்கும்  எதிரானதாகும்.

திரு விக்னேஸ்வரன் அவர்கள் " 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரை இந்தப் பக்கம் தலைவைத்தும் பார்க்காத ஆட்கள் தெருக்களை ஏன் போட்டார்கள்? " என்று கேள்வி கேட்கிறார். புலிகள் யாரை  வடக்கிலே தலை வைத்துப்  படுக்க விட்டார்கள். இருந்த முஸ்லிம்களையும் இரவோடிரவாக விரட்டி வீட்டு தனித் தமிழர் ஆட்சி நிறுவ முயன்ற ஆட்கள் புலிகள்.

 "தலை வைத்துப் பார்க்காத ஆட்களை " எப்படி பலி சுமத்துவது. யாழ்ப்பணத்தைப் பார்ப்பதற்கு வந்த நிமல் சிறிபால தே சில்வா யாழ்ப்பாணத்திலே புலிகளின் உயிராயுதத் தாக்குதலில்  சடலங்களுக்கு மத்தியில் தப்பிப் பிழைத்த கதை தெரியுமா ?  தண்டவாளங்களையும் தகர்த்து விட்டு , வீதிகளையும் சிதைத்து விட்டு அபிவிருத்தி என்று எங்கேனும் மூச்சு விட்டால் அவனையே இல்லாமல் பண்ணி விட்ட புலிகள் பண்ணிய அட்டகாசங்களுக்கு முடிவு ஏற்பட்ட பின்னர்தான் கால் வைத்துப் படுக்க முடியவில்லை என்று  சொன்ன பரம்பரையில் வந்த ஆட்கள் தலை வைத்துப் படுக்க வருகிறார்கள் !

தமிழ் அரசுக் கட்சியின்  கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரான சட்டத்தரணி கே. வி தவராசா கொழும்பில் இருந்து கொண்டு செய்யும் தமித் தேசியப் பரப்புரையும் சாதரணமானதல்ல . அவர் மேற் சொன்ன கொழும்பில் நடைபெற்ற செல்வாவின் நினவு நிகழ்வில்   ஆற்றிய உரையில் வாக்குச் வாக்குச்சீட்டை  துப்பாக்கி ரவை என்கிறார் .
“வடக்கு மாகாண சபைத் தேர்தல் இரண்டாம் ஈழப்போர் என தனிச் சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார் அதற்காக அவருக்கு தமிழர்களாகிய நாங்கள் நன்றி கூற வேண்டும் ஒவ்வொரு வாக்குச்சீட்டும் ஒரு துப்பாக்கி ரவை என்பதனை அமைச்சர் நினைவு படுத்தியுள்ளார் எதிரிகளை காட்டிக் கொடுப்பவர்களை தமிழ் துரோகிகளை தேர்தல் என்ற போர்க் களத்தில் தோற்கடிக்க இந்த வாக்குச்சீட்டு எனும் துப்பாக்கிரவையை ஒவ்வொரு தமிழ் குடிமகனும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்”
ஆக மொத்தத்தில் வட மாகான சபை தேர்தல் ஒரு "யுத்தம் " அதில் வாக்குச் சீட்டுக்கள் "துப்பாக்கி ரவைகள்"

நல்லவேளை யுத்தத்தை நிர்ணயித்தாகிவிட்டது துப்பாக்கி ரவைகளும் உள்ளன , எதிரிகளும் துரோகிகளும் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள் . சுட வேண்டும் ஆனால் துப்பாக்கி பற்றி சட்டத்தரணி சொல்லவில்லை. அது உங்களின் ஊகங்களுக்கு உரியது. ஒரு  வேலை " ஈழத்துக்  காந்தி என்று சொல்லப்படும்  தந்தை செல்வாவின் புத்திரர்கள் "   நாமக்கல் கவிஞர்   காந்தியின் அகிம்சை போராட்டம் பற்றி "கத்தியின்றி ரத்தமின்றி " சொன்னாரே , அதுவாகவும் இருக்கலாம் ! !
 ஆனால் மொழியில் பாசிசம் தொனிக்கிறது . இதனைச் சொல்பவர்கள் சாமான்ய மனிதர்கள் அல்ல முன்னாள் புலிகளின் ஆயுதம் தாங்கி "போராட்டம் " நடத்தியவர்கள் அல்ல மாறாக , சட்டத்துறையில் மனித உரிமைகளுக்காக நீதிக்காக சட்டத்தினூடாக "சாத்வீகப் போராட்டம் " செய்தவர்கள்.

“மூன்றாங் கட்டப் (ஈழப் ) போர்”

இலங்கை இனப் போராட்ட அரசியல் பதிவுகளில் நான்காம் கட்ட (ஈழப் ) போர் வரை பின்வருமாறு  பதிவு செய்யப்படுகிறது
ஈழப் போர் I: (1983-19851987) - ஈழ இயக்கங்கள்,விடுதலைப் புலிகள் எதிர் இலங்கை இராணுவம், புலிகள் எதிர் இந்திய அமைதி காக்கும் படை
ஈழப் போர் II: (1990-1995) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற சில ஈழ இயக்கங்கள்
ஈழப் போர் III: (1995 - 1999) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம்
ஈழப் போர் IV: (2006- 2009) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற புலி எதிர்ப்பு குழுக்கள்
ஆனால் விமல் வீரவன்ச இரண்டாம் கட்டப் போர் என்று குறிப்பிடுவதாக தவராசா சொல்வதைப் பார்த்தால் விமலுக்கு புலிகளை வென்ற இறுதி யுத்தம் தான் முதலாவது யுத்தம் என்று விமல் கருதியிருகிறார் போல் தெரிகிறது. ஆனால் திரு விக்னேஸ்வரன் அவர்களும் மூன்றாம் கட்டப் போருக்கு அறைகூவல் விடுக்கிறார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வட மாகாண சபைத் தேர்தலில்  கிளிநொச்சியில் போட்டியிடும் பசுபதிப்பிள்ளையின் வீராவேச தேர்தல் பரப்புரையையில் மூன்றாம் கட்டப் போருக்கு அறைகூவல் விடுக்கிறார்.

“கொள்கை வீரனின் காலடி மண்ணிலே  நின்று கொண்டு நான் இந்த நிகழ்விலே உரையாற்றவிருக்கிறேன். முப்பது ஆண்டுகள் தந்தை செல்வாவின் தலைமையிலே சாத்வீகப் போராட்டம்  அடுத்து தலைவர் பிரபாகரன் தலைமையிலே மிக வலிமையான ஆயதங்களோடும் உயிராயுதங்களோடும் ஆரம்பிக்கப்பட்ட 30 ஆண்டுகள் உலகைக் கலக்கிய ஆயுதப் போராட்டம்   ஸ்ரீ லங்கா அரசைக்  கலக்கிய போராட்டம், இந்தியாவைக் கலக்கிய போராட்டத்தை நடத்திக் காட்டியவர் தேசியத் தலைவர் பிரபாகரன் , அவர் என்றைக்கும் என்னுடைய தலைவராக இருப்பார். மாகாண சபை தமிழர்களுக்கு ஒரு தீர்வல்ல, ஆனாலும் இத்தேர்தலில் வெல்வதன் மூலம் எம் மக்களின் விடிவுக்காக ஜனநாயக ரீதியில் 3ம் கட்டப்போரை நாம் ஆரம்பிப்போம், போராடுவோம் "
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் பசுபதிப்பிள்ளை ஒரு படி மேலே சென்று மீண்டும் புலிகள் வித்தாகிப் போனவர்கள் மரமாக எழுவார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிடுகிறார். எனவேதான் புலிகளின்  போராட்டம் மவுனித்திருக்கிறதே  ஒழிய மரணிக்கவில்லை என்பதையும்  தனது உரையிலே அவர் சுட்டிக்காட்டி உள்ளார்

மொத்தத்தில் ஐந்தாம் கட்டப் போராட்டம் பற்றி பேசாமல் மூன்றாம் கட்டப் போராட்டம் என்று பேசுவதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. அதுதான் முதலாவது (அட்டவணையைப் பார்க்க) கட்ட (ஈழ)ப் போரில் புலிகள் உட்பட இப்போது கூட்டமைப்பிலுள்ள இயக்கங்களும் (கட்சிகளும்) பங்காளிகளாக இருந்தனர். பின்னர் இரண்டு கட்டப் போர்களில் அவர்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கினர் , எனவே ஏனைய இயக்கங்களும் புலிகளும் மோதாத இரண்டு கட்ட யுத்தங்களை மட்டும் தமிழ்த் தரப்பினர் கருத்திற் கொண்டு இனிமேல் நடக் கப் போகும் அல்லது இப்பொழுது நடக்கும் "மாகாண சபை"  யுத்தம்   மூன்றாவது யுத்தம் என்று தங்களைத் தாங்களே பரிசுத்தவான்களாக்கி உள்ளனர். ஒருவேளை மன்னார் ஆயரிடம் கூட பாவ மன்னிப்பு பெற்றிருக்கலாம்.


உலகின் பல நாடுகள் பயங்கரவாதிகள் என்று பிரகடனப்படுத்திய புலிகள் இயக்கத் தலைவனை , உள்நாட்டில் பல படுகொலைகளுக்கும் முஸ்லிம் மக்களின் இனப் படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் காரணமான , தமிழ் தலைவர்களைக் கொன்றொழித்த  ஒரு பாசிச இயக்க தலைவனை புலிகளின் கவிஞன் ஒருவர் தனது "பிரபாகரன் அந்தாதி" எழுதிப் போற்றுகிறார்   

“உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! “

அந்தப் போற்றுதலுக்கும் திரு விக்னேஸ்வரன் அவர்கள் வல்வெட்டித்துறையில்  ஆற்றிய உரைக்கும் வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை.  13 பிளஸ்ஸை வலிந்து குறித்து பிரபாகரனை மாவீரனாக மஹிந்த கருதியதாகக் கூறுவது மிகவும் மலினமான கூற்று.

'வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண். அந்த மண்ணில் நின்றுகொண்டு நான் சொல்கிறேன், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மாவீரன். இதனை நான் மட்டும் கூறவில்லை. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட பிரபாகரன் ஒரு மாவீரன் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனெனில் பிரபாகரன் இருந்த போது 13 பிளஸ் என்றும், அதற்கும் மேலாகவும் தமிழ் மக்களுக்கு சில அதிகாரங்களை வழங்க சிறிலங்கா ஜனாதிபதி முன்வந்திருந்தார்."

மீண்டும் தெற்கிலே இருந்து சிங்களவர்கள் அபிவிருத்தி வேலைகளுக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்று "அங்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தது யாருக்கு? எம்மவருக்கா? தெற்கிலிருந்து வந்த சிங்கள மக்களுக்கா?" என்று குமுறும் திரு விக்னேவரன் அவர்கள் முன்னரும் பாலியல் தொழிலுக்கும் சிங்களப்  பெண்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகிறார்கள்  என்று கருத்துரைத்தவர், கண்டனதுக்குள்ளானவர் சிங்கள எதிர்ப்பு எப்படி தங்களை எல்லாம் ஆட்டுவித்து போராட வைத்தது என்பதற்கு சான்றாக திரும்பிப் பார்த்தால் அருணாச்சலம் குமாரதுரை என்பவர் தனது அனுபவங்களை தொகுத்த " எனதான வாழ்வும் மண்ணும்"  எனும் நூலில் தமிழர் அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பிரச்சாரங்கள் பற்றி எழுதும் பொழுது  

தமிழர் கூட்டணிச் செயலாளர் நாயகம் மறைந்த அமிர்தலிங்கம் அவர்களின் மனைவி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் மேடைகளில் பாடும்


“ஏற  ஏறப் பார்க்கிறான்  ஏற  ஏறப் பார்க்கிறான் எம் நாட்டில்  பண்டா குடி ஏற ஏறப் பார்க்கிறான்.
சிங்களம் நாட்டவும் , ஸ்ரீ காரை ஓட்டவும் செந்தமிழ்   பூமியில  சேரச் சேரப் பார்க்கிறான்
ஏற  ,ஏறப் பார்க்கிறான், ஏற , ஏறப் பார்க்கிறான் எம் நாட்டில் பண்டா குடி ஏறப் பார்க்கிறான்
தங்களின்  நாடு  என்று  தாளங்கள்   போட்டுக் கொண்டு ஆங்காரம் காட்டவும்  ஆத்திரம் ஊட்டவும்
ஏற  ,ஏறப் பார்க்கிறான், ஏற  ,ஏறப் பார்க்கிறான் எம் நாட்டில் பண்டா குடி ஏறப் பார்க்கிறான்”
என்ற சிங்கள் விரோத பாடலால் தாங்கள் இன ரீதியான சிந்தனைப் போக்கில் தீவிரமடைந்த நிலை பற்றி விளக்கி  பின்னர் அந்த நிலைப்பாட்டால் ஏற்பட்டுப் போன அழிவுகளில் எழுந்து நின்று பச்சாதாபத்துடன் சுய விமர்சனம் செய்யும் அனுபவங்கள் மனதில் மீண்டும் அத்தகைய சூழலைத் தோற்றுவிக்க  முயல்பவர்கள்  குறித்து அச்சத்தை எழுப்புகிறது.
08/09/2013

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...