அடையாளத்தை பேனுவதில் ஏற்படும் அச்சம் -நாழிகை -ஜூன் 2013



எஸ்.எம்.எம்.பஷீர் 

"நான் விரைவாக மரணிக்க வேண்டும்;. எனது மரணவேதனையை நான் நீடிக்க செய்ய முடியாது ;  நான் புத்தரின் தர்மத்தைப் பரப்ப இருபத்தைந்து தடவைகள் புனர்ஜென்மம் எடுக்க வேண்டும்"                         அநாகரிக தர்மபால மரணப்படுக்கையில் கூறியது,


இலங்கையின் வரலாற்றில் இனங்களுக்கிடையிலான முறுகல் என்பது பல்வேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. மகாவம்ச கதைகள் குறிப்பிடும் மிக முக்கிய இனப்பகைமை பற்றிய கதை ; எல்லாளன் துட்டகைமுனு கதைதான்.. என்றாலும் இந்தப் பகைமையின் பின்னணியாக தென்னிந்திய சோழ ராச்சியத்தின் ஆக்கிரமிப்பு ஆட்சியாளனாகவே எல்லாளன் காணப்பட்டாலும் , தெற்கிலே சுதேசிய ஆட்சியாளனான துட்டகெமுனுவுக்கும் , சோழ ஆக்கிரமிப்பின் பிரதிநிதியான எல்லாளனுக்குமிடையிலான ஆட்புல பகை முரண்பாடு  இனவாத  கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது , மகாவம்சம் பௌத்த இனவாதக் கூறுகளை  துலாம்பரமாக்குவதற்கு பிரதான காரணியாக அமைந்ததற்கு காரணம் அந்நூலை எழுதியவர்கள் பௌத்த தேசியவாத மதகுருக்களாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது,.


இனரீதியான கூறுகளை முன்னிலைப்படுதிய ஆட்புல ஆதிக்க , ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தமாகவே துட்டகெமுணுவின் எல்லாளுடனான யுத்த வெற்றி பார்க்கப்படுகிறது, இந்த மகா வசம் கதையின் பின்னணி  இன முரண்பாட்டுக் கூர்மையடைந்த தமிழ் சிங்கள   தனிமங்களின் மனவமைப்பில் ஆழமாக ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இன்றுவரை இருந்து வருகிறது, அதனால்தான் மகாவம்ச மனநிலை என்பது தமிழ் சிங்கள இன முரண்பாடுகளுக்கு , உரைகல்லாக அமைந்துவிட்டது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பௌத்த -முஸ்லிம் உறவில் அவ்வப்போது ,ஆங்காங்கே  சிறிய அளவிலான இன முறுகல்கள் வன்முறைகள்  ஏற்பட்டிருகின்றன , என்றாலும் அவை வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமிக்குமளவு மோசமானவையாக  1915 க்கு முன்னர் இருந்திருக்கவில்லை. இலங்கையில் மன்னராட்சிக் காலத்தில் , குறிப்பாக அன்னிய காலனித்துவ ஆக்கிரமிப்புக் காலங்களில் முஸ்லிம் மக்கள் சிங்கள பௌத்த மக்களின் பெரும்  நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமான வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையில் குடியேறிய ‘கரையோரச் சோனகர் (Costal Moor) என்று  அழைக்கப்பட்ட இந்தியச் சோனகர்களின் (முஸ்லிம்களின் ) அபரிதமான பொருளாதார நடவடிக்கைகைள் மீது கொண்ட ,  காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே முதன் முதல் இலங்கையில் பேரினவாத சூறாவளி வீசிற்று.  முஸ்லிம்களுக் கெதிராக சிங்கள் இனவாதிகளால் பயன்படுத்தப்படும் "தம்பிலா" என்ற சொல்லைப்போல அநகாரிக தர்மபாலா உட்பட்ட சிங்கள பௌத்த இனவாதிகள் தங்களின் பொருளாதாரத்தை சுரண்டுபவர்களாக குடியேற்றவாசிகளான இந்தியச் சோனகர்களை "ஹம்பயாஸ்" என்று குறித்து இழித்துரைத்தனர். உள்ளரங்கமாக அன்று இந்திய பொருளாதார ஆக்கிரமிப்புக் கெதிரான பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்ட பௌத்த சிங்கள இனவாதம் இலங்கையின் காலனித்துவ ஆட்சியில், வெளியரங்கத்தில்  சிங்கள தேசியவாத பரிமாணத்தை கொண்டமைந்தது.

ஆனால் இந்த இனவாத (இந்தியச் சோனகர்) தாக்குதல் மத்திய மாகாணத்தில் கருக் கொண்டு தெற்கிலே பரவி ஆங்காங்கே பொதுவாக சுதேசிய முஸ்லிம் மக்களையும் பாதித்தது. ஆனால் இந்த கரையோர முஸ்லிம் (இந்தியச் சோனகர்) மக்களுக்கு எதிரான வன்முறைகள் பொருளாதார ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாக  மட்டுமல்லாமல் , அதனையொட்டி எழுந்த நிகழ்வுகள் யாவும் இலங்கையின் அந்நிய காலனித்துவ அடக்குமுறைக் கெதிரான  தேசிய எழுச்சி நிகழ்வாகவும் வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

பின்னாளில் 1915  கலவரத்தை தூண்டியவர் என்ற வகையில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு  , விடுதலையான  தேசியவாதியான ஏ .ஈ. குனசிங்ஹ (A. E.Gunasinghe) 1915 "பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அடுக்குமுறையில் பலியான பௌத்தர்கள் முஸ்லிம்கள்  ஆகியோரின் நினைவுக்காக ஒரு துக்கதினம் ஒன்றினை பிரேரித்தார், (பௌத்தர்களாலே அதிகமான  துன்புறுத்தலுக்கும் உயிரியிழப்பிற்கும் முஸ்லிம்கள் உள்ளாகினர் ). இதன் மூலம் ஒரு தேசிய விடுதலை முகத்தை இக்கலவரத்துக்கு வழங்க குனசிங்ஹ முற்பட்டாலும் மறுபுறத்தில் அவரின் அந்த முன்மொழிவு காலனித்துவ எதிர் தேசியவாதத்தின் பின்னரான புதுப்பிக்கப்பட்ட பௌத்த முஸ்லிம் உறவையும் கோடிட்டுக் காட்டியது.

சுதந்திரத்தின் பின்னர் முஸ்லிம் பௌத்த மக்களுக்கிடையிலான இன முறுகல்களும் , அதனையொட்டிய வன்முறைகளும் பெரும்பாலும்  இரு சமூகங்களுக்கு மிடையில் இடம்பெற்ற தனி நபர் மோதல்களின் விளைவாகவே அமைந்தன என்பதால் அந்த சம்பந்தப்பட்ட பிரதேச எல்லைக்குள் முடங்கியதாகவே சண்டை சச்சரவுகள் வன்முறைகள் இடம்பெற்றன. ஆயினும் முஸ்லிம் மக்களின் மீதான தாக்குதல்கள் பெருமளவில் மத ரீதியான சகோதரத்துவ அக்கறையினை இலங்கையின் வேறு பாகங்களில்  வாழ்ந்த முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தினனாலும் , அவர்கள் அவ்வாறான  சூழ்நிலைகளில் மிகக் கவனமாக எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர்.   மிக முக்கியமாக இன முறுகல்கள் மற்றும் வன்முறைச் சூழ்நிலைகளில் முஸ்லிம் மக்கள் பொறுமை காப்பதும் பௌத்த சிங்கள் மக்களில் பெரும்பான்மையினர் இன நல்லுறவை பேணுவதில் அக்கறை காட்டுவதும் பொதுவாக அவதானிக்கக் கூடிய ஒரு நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது,
ஒரு தொடர்ச்சியான ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்த மேலாதிக்க முஸ்லிம் எதிர்ப்பு சக்திகளின் எழுச்சிக்கு   தடையாக இவ்வாறான பொதுமையான சமூகப் பிரதிபலிப்புக்கள் இருந்திருக்கமுடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு பிரிவினைவாத ஆயுதப்  போராட்ட காலகட்டங்களில் , இரண்டாவது பிரதான இனமான முஸ்லிம் மக்கள் மீதான பௌத்த தீவிரவாத தனிமங்களின் பார்வை சற்று தாழ்ந்தே இருந்தது
.
மேற்குலகில் இடம்பெற்ற சில பயங்கரவாத சம்பவங்களை முஸ்லிம் பயங்கரவாத நடவடிக்கைகளாக உலகின் பிரபல செல்வாக்குள்ள  ஊடக பிரச்சாரம்  முன்வைத்த பொழுதும் இலங்கையில்  பௌத்த தீவிரவாத சக்திகள் முஸ்லிம்களுக் கெதிராக எவ்வித குற்றச்சாட்டையும் இப்பொழுது போல   (வஹ்ஹாபிகள் , சவூதி அரேபிய பணம் , ஹலால் சான்றிதழ் மூலம் சம்பாதிக்கபபடும் பணம்  இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் பயன்படுத்தப்படும் விதம் ) முன் வைக்கவில்லை. 

சுதந்திர இலங்கையில் குறிப்பாக கடந்த மூன்ற தசாபத்ங்களாக முஸ்லிம்களின் இஸ்லாமிய மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் , அவர்களின்  உடை நடைமுறைகள் மெதுவான சில மாற்றங்களுக்கு உட்பட்டே வந்திருக்கிறது, ஆனாலும் அவற்றையும் பௌத்த இனவாத சக்திகள் அறிந்திருந்தும் பெரிதாக பொருட் படுத்தியதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் நீறுபூத்த நெருப்பாய் முஸ்லிம்கள் மீதான ஒரு பகைமை சிங்கள பௌத்த தீவிரவாத் சக்திகளிடம் இருந்தே வந்தது , இந்த  முஸ்லிம் மத எதிர்ப்பு செய்தி  ஊடகம் கலைத்துறை (நாடகம் , சினிமா) போன்ற வெகுஜன சாதனங்கள் மூலம் அவ்வப்போது தலை காட்டி வந்திருக்கிறது. அதன் பின்னணியில் ஒரு தொடர்ச்சியான இனக் குரோதம் வெளிப்பட்டு   வந்திருக்கிறது. அவை திட்டமிட்ட வகையில் பௌத்த சிங்கள மக்களுக்குள் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையினை தோற்றுவிக்கும் மறைமுக நிகழ்ச்சி  நிரலைக் கொண்டிருந்தன. ஆனால் பரந்துபட்ட ரீதியில் சிங்கள பௌத்த மக்கள் அவ்வாறான பிரச்சாரங்களால் பெரிதும் எடுபடவில்லை. ஆயினும் பௌத்த இனவாத தனிமங்கள் இப்போது வெளிப்படையாக தங்களின் முஸ்லிம் எதிர்ப்பினை முன்னெடுக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆட்சியிலுள்ள அரசை குற்றம் சாட்டுவோரும் அது பற்றி பல சூழ்ச்சிக் கோட்பாடுகளை சிலர் முன் வைக்கின்றனர். 

எதுவாயினும் புலிகளை வெற்றி கொண்டதன் மூலமாக இன்றைய அரசு  சிங்கள தேசியவாத சக்திகளுக்கு மீண்டுமொரு  பெருமிதத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது  என்று சொல்லப்படுகிறது. மேலும் இலங்கை நாட்டின் சிங்கள பௌத்த தனித்துவங்கள் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டு இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்ற மனோபாவமும்  சிங்கள பௌத்த மக்களிடம் , பொதுவாக சிங்கள மக்களிடம் நிலவுகிறது, எனவே இன ரீதியான பெரும்பான்மை உணர்வுகள் தங்களின் அடையாளத்தை இறுக்கமாக பாதுகாப்பதில் ஏற்படும் அச்சத்தின் விளைவாகவே ஏனைய சமூக அடையாளங்கள் , அதிலும் குறிப்பாக அதிக வேறுபாடுடைய , மத சமரசம் செய்வதில் தடையாய இருக்கின்ற முஸ்லிம் மக்களின் மீது பார்வையை திருப்பியுள்ளன.

மறு புறத்தில் மத முரண்பாடுகளை தங்களுக்கிடையில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய தமிழ் சிங்கள சமூகங்களின் பார்வை சமாதான காலத்தில் முஸ்லிம்கள் மீது திரும்பியதும் உணரப்பட்டது. வெளிப்படையாகவே  பௌத்த மத குருமார் சிலர் சிங்களவரும் தமிழரும் ( நாங்களும் நீங்களும் ) சண்டையீடுக் கொண்டிருக்க முஸ்லிம்கள் இனப்பெருக்கம் செய்து கொண்டிருந்தனர் என்று  தமிழ் சிங்கள பரஸ்பர இழப்புக்கள் குறித்து கவலை கொள்வதையும் மூன்றாவதாக யுத்தத்தினால் முஸ்லிம்  சமூகம் இழப்புக்களை அனுபவிக்கவில்லை என்று சொன்னதையும் அறிய முடிந்தது. இந்தக் கருத்தை ஒத்ததாக தமிழ் தரப்பினரும் முஸ்லிம்கள் மூன்றாம் தரப்பாக தங்களை அங்கீகரிக்க கோரிய பொழுது வெளிப்படுத்தினர். நீங்கள் எங்களுடன் சேர்ந்து போராடாமல் எப்படி பங்கு கேட்க முடியும் என்ற தமிழ் அரசியல்வாதிகள் இன்றுவரை அப்படிக் கேட்பதையும் அவதானிக்க முடிகிறது.. 
 
ஆனால் இவ்வாறான  கருத்துக்களில்  மேலோட்டத்தில் உண்மை இருப்பது போல் தொன்றினாலும் , உண்மையில் முஸ்லிம்கள் இந்த யுத்தத்தினால் தொடர்ச்சியாக இன அழிப்பிற்கும்   இனச் சுத்திகரிப்பிற்கும் புலிகளினால் உள்படுத்தப்பட்டு யுத்தத்தினால் அகதியாக மாறி சுமார் இருபத்தைந்து வருடங்களாக முஸ்லிம்கள் தமது சொந்த நிலத்தில் மீள் குடியேற முடியாமல் முகாம்களிலும் , மூன்றடி அறைகளிலும் முடங்கிக் கிடந்த துயரங்களையும் அப்படியான கருத்துரைத்தோர் கண்டு கொள்ளவில்லை..
அந்த வகையில் "பலசெனா" எனப்படும் பௌத்த முஸ்லிம் எதிர்ப்பு அமைப்பின் அறிக்கைகள் தமிழர்களையும் அவர்களின் பெரும்பான்மையானோரின் இந்து மதத்தையும்  எதிர்ப்பவையாக  இல்லை. அவர்கள்  தமிழருடன் சமரசம் செய்பவர்களாகவே உள்ளனர். முஸ்லிம் மதத்தினரையே  அவர்களின் பிரதான எதிரியாக காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மதத்தை பின்பற்றும்மத அடையாளங்களைப் கண்டிப்பாகப் பேணும்  முஸ்லிம்களை  பௌத்த பலசெனா “ அடிப்படைவாத முஸ்லிம்கள் என்றும் தாங்கள் அவர்களுக் கெதிரானவர்கள் என்றும் கூறுகின்றனர். பொதுவாக இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும்  அதில் வாழும் உரிமை மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது போலவும் அவர்களின் பேச்சுக்களும் செயல்களும் அமைந்துள்ளன. இந்த அமைப்பினை ஒத்த பல அமைப்புக்கள் பல்வேறு  முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டு செயல்பட்டுவருகின்றனர். அந்த இயக்கங்கள் , அமைப்புக்கள் யாவும் சிங்கள பௌத்த தேசியவாதத்தை தீவிரமாக கடைப்பிடிப்பனவாகவும்  உள்ளன.

குறிப்பாக இலங்கையில் யுத்தம் முடிவுற்றதும் தமிழ் சிங்கள ( பௌத்த ) இன உறவு என்பது புதிய ஒரு யதார்த்த உலகுக்குள் நுழைந்து செல்வதுடன்  , இந்து மதத்தின் மீதான பௌத்த எதிர்ப்பினையோ மத அனுஷ்டான ஆட்சேபனைகளையோ சொல்லுமளவு காணமுடியவில்லை. மிருக பலி கொடுத்தல் தொடர்பாக இந்து மத சடங்குகளுக்கு தடை விதிக்கும்  விதத்தில் ஒரு பௌத்த அமைச்சரின் தலைமையில்  நடைபெற்ற  ஒரு சம்பவம் தவிர  பெரிதளவில் மதத் தலையிடலை பௌத்த சக்திகள் மேற்கொள்ளவில்லை. 

ஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் உணவுக்காக அறுக்கும்  பிராணிகள் தொடர்பில் பல கட்டுப்பாடுகளை தொடர்ச்சியாக விதிக்க அரசை கோரும் கோஷங்கள்ஆர்ப்பாட்டங்கள் என பல சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. ஆயினும் இவ்வாறான எதிர்ப்புக்கள் பெரிய மாற்றங்களை நாடாளாவிய ரீதியில் ஏற்படுத்தாத பொழுதும் நவீன உலகின் செய்தி  பரிவர்த்தனை சாதனங்கள் பிரச்சனைகளை பெருப்பித்தும் விடுகின்றன., முகம் தெரியாத மனிதர்களின் , முகவரியற்ற செய்தியாளர்களின் , எழுத்தாளர்களின் இணையத்தள  ஊடுருவல் இன முறுகல் சம்பவங்களை ஊதிப  பெருப்பித்து மத இன உணர்வுகளை இலகுவில் திரட்சியுற செய்துவிடுகின்றன.  அண்மைக்காலமாக அனுராதபுரம் தொடங்கி ஜெய்லானி வரை பல முஸ்லிம் மதத் தலங்கள் , பள்ளிவாசல்கள்  பௌத்த பேரினவாத தாக்குதலுக்கு உள்ளாகின . முஸ்லிம் மக்கள் அந்த அநீதிகளுக் கெதிராக உணர்வு ரீதியில் தூண்டப்பட்டாலும் அப்பிரச்சினைகளை சமாதானமாக தீர்க்கும் வழிபற்றி ஆராய்வதிலேயே அநேக  அரசியல்வாதிகள் ,  சமூக ஆர்வலர்கள் , கல்வியாளர்கள் மத அறிஞர்கள் என சகலரும் செயற்பட்டதையும் அவதானிக்க முடிகிறது , எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற வகையான ஆளும் அரசுக் கெதிரான முஸலிம் அரசியலும் , பௌத்த தீவிரவாத தனிமங்களும் தங்களின் நிகழ்ச்சி நிரல்களை முன்னேடுப்பதில் போட்டிபோடுவதென்பது எதிர்காலத்தில் சட்டம்  ஒழுங்கை பாரபட்சமின்றி இன்றைய அரசாங்கம் கையாளும் விதத்திலேயே தங்கியிருக்கிறது. 

முஸ்லிம் மக்கள்  மீது நடைபெறும் தாக்குதல்கள், எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் , அவமரியாதைப்படுத்தல்  என்பன அண்மைக் காலமாகவே பௌத்த மத இன தாக்குதல்கள் என்ற முகவரியுடன் நடைபெற்று வருகின்றன.
காலி  , அக்குரண , களுத்துறை பேருவளை , குருநாகல டிக்வெள்ள,  மடவள , உகுரசபிட்டிய , கலகெதர , மாவனல்லை ( மே 2001) என்பன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்ட தெற்கிலே உள்ள குறிப்பிடத்தக்க முஸ்லிம் கிராமங்ககளும்  அல்லது நகரங்ககளுமாகும் .

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள்.,இதுவரை சிறு சிறு தனிநபர் சச்சரவுகளை அல்லது வியாபாரப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டவையே  . அவற்றில் சில இறுதியில் முஸ்லிம் சிங்கள கலவரங்களாக வெடித்து அழிவுகளை உயிரப்புக்களை ஏற்படுத்தினாலும் , நாடு தழுவியதாக அல்லது வெளிப்படையாக மத தீவிரவாத சக்திகளின் தலைமையில் அவை நடைபெறவில்லை.  அவைகள் ஒரு குறிப்பிட்ட பிரதேச இன முறுகல் , வன்முறையாகவே அவை  அமைந்ததன. மேலும் மிக விரைவில் சமூக  உறவுகள்  மீள் கட்டியெழுப்பப்பட்டும் வந்தன. ஆனால் இப் பொழுது இலங்கையில் நடைபெறும்  முஸ்லிம் எதிர்ப்பு என்பது முஸ்லிம்  மக்களின் மதத்தின் மீதான , அவர்களின் மத நம்பிக்கையை ஒட்டிய பின்பற்றுதல்களை கேள்விக்குட்படுத்தும் ஒன்றாக அமைகிறது.

பௌத்த விகாரைகளை , அவ் விகாரைகளின் மத குருமாரைக்கொண்டு  வழிநடத்தப்படுவனவாக முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் மட்ட முஸ்லிம் மக்களின் வணக்கஸ்தலம் , அவர்கள் தங்களை  அடையாளப்படுத்திக் கொள்ளும் விதம் ,உணவு , உடை பற்றி கேள்வி எழுப்புதல் என்பன , இந்த தீவிர முஸ்லிம்  எதிர்ப்பு செயற்பாடுகளின் உச்ச நிலை குறித்து அச்சசைதை முஸ்லிம் மக்களுக்குள் எழுப்பியுள்ளன, அதனால்தான் அடிக்கடி இது பற்றி குரல் கொடுப்போர் அவர்கள் முஸ்லிம்களாயினும் அல்லது ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகலாயினும் 1983 தமிழ் மக்கள் மீதான வன்முறையை ஒத்த ஒன்று முஸ்லிம்கள் மீது ஏவி விடப்படும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். அவ்வாறான அச்சம் உண்மையில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு எதிர்வுகூரலாகும். இந்த பகை உணர்வினை முஸ்லிம்கள் எவ்வாறு தந்திரோபமாக எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே பௌத்த சிங்கள தீவிரவாத சக்திகளின் போக்குக்கு  கடிவாளமிட முடியும் . ஏனெனில் பௌத்த சிங்கள தீவிரவாத தனிமங்கள் எதிபார்ப்பதும் தங்களுக்கு எதிரான முஸ்லிம் தீவிரவாத சக்திகளை உருவாக்கி சண்டைக்கு  தூண்டுவதே .

சுதந்திர இலங்கையில்  இடம்பெற்ற சக வன்முறைகளிலும் காவல்துறை அல்லது அரசின் மெத்தனம் கலவரங்களைக் கட்டுப்படுத்த தவறியயென்பது  ஒரு பதிவுசெய்யப்பட்ட உண்மையாகும் . சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுதல் தொடர்பான  அதிக ஆதரவுத்தளம் எப்பொழுதும் இலங்கையின் இன சௌஜன்யத்தைப் பாதுகாக்க இன்றியமையாததாகும் .

நாழிகை -ஜூன் 2013

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...