அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (7)




எஸ்.எம்.எம்.பஷீர்

சிறிய தற்காலிக பாதுகாப்பினை பெறுவதற்காய் யார் அடிப்படையான சுதந்திரங்களை  கைவிடுகிறார்களோ , அவர்கள் சுதந்திரத்திற்கோ  பாதுகாப்பிற்கோ  அருகதையற்றவர்கள்” 

                                                                                       பெஞ்சமின் பிராங்ளின் 

( “They that can give up essential liberties to obtain a little temporary safety deserve neither liberty nor safety”- Benjamin Franklin)

நிஜம், !  நிழல்!!, நிதர்சனம் !!!

ஸ்னோடென் மொஸ்கோவிலுள்ள விமான நிலையத்தில் இருப்பதனை ரஸ்சிய அரசு உறுதி செய்திருந்தது. இதுவரை அவரின் அகதி விண்ணப்பத்தை எக்குவடோர் அரசு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது , அமெரிக்க உப ஜனாதிபதி எக்குவடோர் ஜனாதிபதியிடம் ஸ்னோடெனுக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார். அமெரிக்க அரசியல் மனித உரிமை, சர்வதேச சட்டங்கள் ராஜீய உறவுகள் மீறல் தொடர்பான அயோக்கியத்தனம் பற்றிய செய்திகள் வெளிவர வெளிவர , அமெரிக்க அரசு  மறு புறத்தில் ரஷ்யா சீனா என்று தனது கடுப்பினைக் காட்டி வருகிறது , ராஜீய உறவு குறித்து அச்சுறுத்தல்களையும் மேற் கொண்டு வருகிறது. விமான நிலைய வாழிட நாடற்ற மனிதனாக அமெரிக்கா தனது கடவுச் சீட்டையும் இரத்துச் செய்தவுடன் ஸ்னோடென் எத்தனை காலம் அசாஞ்சே இலண்டன் எக்குவடோர் தூதுவராலயத்தில் வாழ்வதுபோல் வாழப்போகிறார் என்கின்ற போது. முதன் முதல் பிரான்சில் விமான நிலையத்தில் வாழ்ந்த   மெஹ்ரன் கரிமி  நஸ்சரி கதை ஞாபகத்துக்கு வருகிறது.




நிஜம்!

இரானிய மன்னர் ஷா விற்  கெதிரான மக்கள் போராட்டம்  1977 அக்டோபரில் முதன் முதலில் பாரியளவில் ஏற்பட்டது , அதுவே பின்னர் இராணியப் புரட்சிக்கும் மன்னராட்சிக் கவிழ்ப்பிற்கும் தொடக்கப் புள்ளியாக கருதப்பட்டது. 
அந்த புரட்சியில் சம்பந்தப்பட்டிருந்தவர்களில் ஒருவரான இரானிய பிரஜையான  மெஹ்ரன் கரிமி  நஸ்சரி என்பவர் 1977 ல் ஷா வினால் நாட்டைவிட்டு வெளியேற  நிர்ப்பந்திக்கப்பட்டார். அவரின் இரானிய கடவுச் சீட்டினை இரானிய அரசு இரத்து செய்தது .  அதனால் அவர் இரானிலிருந்து வெளியேற , தன்னைப் பாதுகாக்க அகதி விண்ணப்பத்தினை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளருக்கு விண்ணப்பித்தார்.

அதன் மூலம் பெல்ஜிய அரசு அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கியது . அவர் பெல்ஜியத்தில் சில வருடங்கள் வாழ்ந்த பின்னர் , ஐக்கிய ராச்சியத்தில் குடியேறவே விரும்பினார். அதற்கான காரணம் தாதியான அவரின் தாய் ஒரு ஸ்காட்லாந்து பெண்மணி. அவரின் தாய் வைத்தியரான தனது தகப்பனுடன் ஈரானில் வாழ்ந்தவர். பின்னர் தனது கணவனையும் குழந்தையையும் விட்டு விட்டு பிரித்தானியாவிற்கு சென்று விட்டார். அவரின் தாயாரின் நாடான பிரித்தானியாவிற்கு சென்று , அங்கு தன்னை கைவிட்டுச் சென்றுவிட்ட தனது தாயைத் தேட விரும்பினார் நஸ்சரி. அவர் பெல்ஜியத்திலிருந்து பாரிஸில் வந்திறங்கி அங்கிருந்து பிரான்சில் உள்ள சார்லஸ் தே குள்ளே ( Charles de Gaualle Airport )  விமான நிலையத்தின்  ஊடாக இலண்டன் சென்ற பொழுது இலண்டனில் உள்ள குடிவரவு அதிகாரிகளிடம் காண்பிக்க அவரிடம் கடவுச் சீட்டு இருக்கவில்லை , அதற்கான காரணம் அவரின்  பயண தஸ்தாவேஜுகள் மற்றும் சில தனிப்பட்ட ஆவணங்கள் அடங்கிய கைப்பெட்டி பாரிசில்  களவாடப்பட்டுவிட்டது. 

ஆனாலும் அவர் பிரான்சினுள் பிரவேசித்த பொழுது அவரிடம் சட்டபூர்வமான பெல்ஜிய பயண ஆவணம் இருந்தது என்பதும் சார்லஸ் தே குள்ளே விமான நிலையத்தினூடாக இலண்டன் சென்ற பொழுது , அங்கு பிரஞ்ச் குடிவரவு உத்தியோகத்தர்களிடம் ஏதோ  தன்னிடமுள்ள பயணச் சீட்ட்டினை காண்பித்து அவர் இலண்டனுக்கு பிரயாணம் செய்திருந்தாலும்  ஐக்கிய இராச்சிய குடிவரவு அதிகாரிகள் , அவரிடம் கடவுச் சீட்டு இல்லை என்று கூறி அவரை திரும்பவும் பிரான்சுக்கு அனுபிவிட்டனர். அங்கு வந்த நஸ்சரியை அவர் பிரான்சுக்குள் சரியான ஆவணத்துடன் முன்னர் பிரவேசித்திருந்தாலும் நாட்டுக்குள் தற்போது விடுவதற்கு முறையான ஆவணம் இன்மையால் , அவருக்கு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. பெல்ஜிய அரசு அவர் அங்கு நேரில் வந்தால் மாத்திரமே அவருக்கான பிரயாண ஆவணம் வழங்கப்படும் என்ற நிலையில் , வேறு  எங்கும் அவர் செல்ல முடியாத நிலையில் சார்லஸ் தே குள்ளே விமான நிலையத்தினுள் சுமார் 17 வருடங்கள் (25/08/1988- 07/2006) வாழ வேண்டி நேரிட்டது என்பது விமான நிலையத்தில் வாழ்ந்த ஒரு நாடற்ற மனிதனின் நிஜமாக நடந்த உண்மைச் சம்பவம் .

 

படம் :  மெஹ்ரன் கரிமி  நஸ்சரி


நிழல்!!

ஒரு விமான நிலயத்தில் ஒரு நாட்டின் கடவுச் சீட்டு செல்லுபடியற்றதாகும் நிலையில் வந்திறங்கும் ஒரு பயணியின் நிலை என்ன என்ற வகையில் ஹொலிவூட்டில் தயாரிக்கப்பட்ட டெர்மினல் (The Terminal) எனும் திரைப்படம் முண்டியடித்துக் கொண்டு ஞாபகத்துக்கு வருகிறது.ஏனெனில் உண்மையில் இந்தத் திரைப்படத்தின்  மூலக் கதையானது மேற் சொன்ன உண்மை நிகழ்சியை அடிப்படையாகக் கொண்டது. அப்படத்துக்காக மெஹ்ரன் கரிமி  நஸ்சரிமிருந்து அவரின் சுய சரிதையை படமாக்கும் உரிமையை பிரபல ஹொலிவூட் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்டீபன்   ஸ்பில்பேர்க் (Steven  Spielberg ) வாங்கியிருந்தார். அப்படத்தில் ஒஸ்கார் விருதுபெற்ற பிரபல ஹொலிவுட்  நடிகர் டோம் ஹான்க்ஸ் (Tom Hanks) அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் ஒரு பயணியாக (விக்டராக ) நடித்திருந்தார்    
அத திரைப்படக் கதையின் நாயகன் ஒரு உளவு உத்தியோகத்தரோ அல்லது தனது நாட்டினால் தேடப்படும் ஒரு "குற்றவாளியோ" அல்ல. 

தி டெர்மினல் எனும் திரைப்படத்தில் விக்டர் நவோர்ஷ்கி என்பவர்  ( Viktor Navorski) கரகோஷியா ( ஒரு கற்பனை நாடு) எனும் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் ஒரு பயணி; அவர் பிரயாணம் செய்த விமானம்   நியூ யோர்க் ஜான் எப் கென்னடி  சர்வதேச விமான நிலையத்தில் (John F Kennedy International Airport) வந்திறங்கிய பொழுதிலேயே அவரது நாட்டுக் கடவுச்சீட்டு அந்த நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக  செல்லுபடியற்றதாகி விடுகிறது. அமெரிக்க அரசு கரகோஷியாவினை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்க மறுக்கிறது. அதனால் அந் நாட்டின் கடவுச் சீட்டை அங்கீகரித்து விக்டரை  விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்குள் செல்வதனையோ  அல்லது தனது சொந்த நாடான கரகோஷியாவிற்கு  திரும்பிச் செல்வதனையோ  அமெரிக்க குடிவரவு  உத்தியோகத்தர்கள் மறுக்கிறார்கள் . இந்த இரண்டும் கெட்டான் நிலையில் விக்டருக்கு விமான நிலையத்தினுள் தங்குவதைத்  தவிர வேறு வழியில்லை. அதேவேளை , அமெரிக்க குடிவரவு  உத்தியோகத்தர்களுக்கு அவர் தங்குவதை  தடுக்கவும் முடியாது என்ற நிலை ஏற்படுகிறது,
ஆனால் இங்கு சுவாரசியமாக கவனிக்க வேண்டிய விடயம் கரகோஷியா  எனும்  கற்பனை நாட்டைப பற்றிய தான கதையாக இருந்தாலும் , விக்டர் அமெரிக்க விமான சுங்க அதிகாரிகளிடம் காண்பிக்கும் கடவுச் சீட்டு  சோவியத் இரஸ்யாவின் கடவுச் சீட்டினை  ஒத்ததாகவே இருந்தது.! 


நிதர்சனம் !!!

ஹாங்காங்கிலிருந்து ஸ்னோடென்சென்ற 23ம் திகதி ரஷியா பயணிகள் விமானத்தில் மொஸ்கோ சென்றுவிட்டார் என்பதிலிருந்து, அதிலும் குறிப்பாக அவர்  ரஷியாவின் மொஸ்கோவிலுள்ள   ஷெரிமெட்யெவோ (Sheremetyevo) செல்லும் விமானத்திலேயே பிரயாணம் செய்தார் என்றும், அங்கு சென்றது முதல் அந்த விமான நிலையத்திலேயே தங்கி உள்ளார் என்றே இதுவரை வருகின்ற செய்திகள் கூறுகின்றன. அதனை ரஷியா  அரசு உறுதி செய்தாலும் , புடின் ரஷியாவில் அவர் ஏந்த குற்றமும் இழைக்கவில்லை , அவர் ஒரு சுதந்திர மனிதன் என்று கூறி இருந்த பொழுதும்   இதுவரை யாரும் அவரை  ஷெரிமெட்யெவோ விமான நிலையத்திலோ , அல்லது அங்கிருந்து அவர் மறுநாள்   ஹாவாய் ஊடாக கியூபா  செல்லப்போகிறார் என்று சொல்லப்பட்ட விமானத்திலோ யாரும்  காணவில்லைஆனால் திட்டவட்டமாகவே ஹாங்காங் நிர்வாகம் ஸ்னோடென் 23ம் திகதி மொஸ்கோ -ஷெரிமெட்யெவோவுக்கு சென்றுவிட்டார் , ஏனெனெனில் அவரை தடுத்து நிறுத்த எவ்வித சட்ட ரீதியான முகாந்திரமும் தங்களுக்கிருக்கவில்லை என்று  ஹாங்காங்  சொல்லுகிறது, ஆனால் அமேரிக்கா ஸ்னோடெனை கைது செய்து அமெரிக்காவிற்கு நாடுகடத்த கோரும் வெர்ஜினியாவின் கிழக்கு மாவட்ட நீதிபதி ஜான்  அன்டர்சனின் 14 /06/13 திகதியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கட்டளையை ஹாங்காங் நிர்வாகத்துக்கு அனுபியிருந்த போதும் அது பற்றிய மேலதிக தகவல்களை தெளிவுபடுத்தக் கோரி தாங்கள் அனுப்பிய வேண்டுதலுக்கு இதுவரையும் அமெரிக்காவிடமிருந்து பதில் வரவில்லை என்று  ஹாங்காங் கூறுகிறது.
சரியான நேரத்தில் முறையாக அறிவித்த போதும்   ஹாங்காங் நாடுகடத்தல் கட்டளையை மீறி விட்டது , சீனாவும் இந்த விவகாரத்தில் தனது ராஜீய கடப்பாட்டை மீறி இருக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்காவின் எப். பீ ஐ (F.B.I ) சார்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அமெரிக்கா குற்றவியல் சட்ட மற்றும் வேவுபார்த்தல் சட்டத்தின் (Espionage Act ) அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தது, ஆனாலும் முதல குற்றச்சாட்டு அரச சொத்துக்களை / ஆதனங்களைத் திருடியது (18 USC 641 ) என்பது , இது ஒரு பரந்துபட்ட சட்ட வியாக்கியானங்களைக்  கொண்டது  அமெரிக்கா அரச இரகசியங்களை  திருடுதல் என்பது இன்றைய நவீன தொழிநுட்ப யுக பரிமானங்களின் அடிப்படையிலான ஆதனங்களை திருடுதல் என்ற பரந்த பொருளில் , அவற்றை வெளிப்படுத்துதல் என்பற்றையும் உள்ளடக்குகிறது. மேலும்  அமெரிக்க அரசியல் யாப்பின் முதற் திருத்தம்  (First amendment) இக் குற்றத்திற்கு   மனித உரிமை விழுமியங்களான (பேச்சுரிமை , எழுத்துரிமை  போன்ற உரிமைகளை  ) வியாக்கியானங்களை நீதிமன்றம் மூலமாக  பெறுவதற்கு பல நீதிமன்ற வழக்குகள் காரணமாகி உள்ளன. அதில் முதலில் கூறப்பட்ட குற்றம் அரசியலுக்கு அப்பால் ஒரு குற்றவியல் சட்ட அடிப்படையில் ஹாங்காங் நிர்வாகத்தை  நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் நாடு கடத்தும் நிர்ப்பந்தத்தையும்  ஏற்படுத்துகிறது.

ஆனால் தாங்கள் அனுப்பிய விளக்கம் கோரல் பற்றிய பதில் அமெரிக்காவிடமிருந்து வர வில்லை எனவே தங்களை குறை கூற முடியாது என்ற விதமாக  ஹாங்காங் ஆரம்பத்தில் கூறினாலும் இப்போது அமெரிக்க சட்ட கட்டளையை சவாலுக்கு அழைக்கும் சடுகுடு விளையாடும் தகவல் கசிந்துள்ளது. ஹாங்காங் விமான நிலையப் பதிவுகள் ஸ்னோடெனின் இடைப் பெயரை ஜோசப் Edward Joseph Snowden என்று பதிவு செய்துள்ளனர். அதேவேளை அமெரிக்கா நீதிமன்றக் கட்டளையிலும் இடைப்பெயர் (Middle name) "ஜே" என்று மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது ஆனால அதனோடு இணைக்கப்பட்ட சில ஆவணங்களில் இடைப்பெயரை "ஜேம்ஸ்" (James) என்றும் குறிப்பிட்டிருந்தனர் ஆகவே சட்டப்படி குறிப்பட்ட நபர் பற்றி அடையாள உறுதிப்பாடின்றி ஸ்னோடெனை நாடுகடத்தமுடியவில்ல என்று ஹாங்காங் சட்ட வாதத்தினை முன் வைக்கிறது. ஆனால் சீனாவே ஸ்னோடெனை வெளியேற அனுமதிக்குமாறு  ஹாங்காங்கிற்கு  ஆலோசனை வழங்கியது என்றும் தெரிய வருகிறது.

அதேவேளை அவரின் கடவுச் சீட்டு அமெரிக்காவால் இரத்துச் செய்யப்பட்டதை தங்களுக்கு அறிவித்திருக்கவில்லை, அப்படி தங்களுக்கு அறிவித்திருந்தால் தாங்கள் வேறுவிதமாக நடந்திருப்போம் என்று ரஷியாவும் சட்ட சடுகுடு விளையாட்டை   அமெரிக்காவுடன் விளையாட ஆரம்பித்துள்ளது. அமெரிக்க மக்களும் புத்திஜீவிகளும் இப்பொழுது ஒபாமா அரசை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். தேசபக்தி சட்டத்தை (Patriotic Act 2001) எழுதியவர்களுள் முதன்மை வகித்த சட்ட விற்பன்னர் ஜிம் சென்சென்பிரன்னர் (Jim Sensenbrenner) அச்சட்டத்தையே மாற்றவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். அச்சட்ட மூலத்தை தான் ஆக்கியதை நினைத்து பச்சாதாபப்படுகிறார்.மேலும் அமெரிக்க பிரபல கல்விமான்கள் சிலர் வெளிப்படையாக தேசிய பாதுகாப்பு முகாமையகம் (National Security Agency)   ஒரு குற்றவாளி என்று பகிரங்க விவாதத்துக்கு வழி சமைத்துள்ளார்கள். ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் தங்களை உளவு பார்த்ததுக்கு விளக்கம் கோரி அமெரிக்காவிற்கு ஆட்காட்டி விரல் நீட்டி உள்ளார்கள். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகாமையகம்  உதா பாலைவனத்தில் (Utah Desert) அமைக்கும் மிகப் பெரும் கணனிக் கண்காணிப்பகம் இவ்வருட செப்டெம்பரில் மிகக் குறைந்த மனித வலுவில் மிகுந்த இயந்திர  வலுவுடன் இயங்கப் போகிற தருவாயில் இந்த அமர்க்களங்கள்  என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன.? 
 
30/06/2013


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...