அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (6)






எஸ்.எம்.எம்.பஷீர்

"பெரியண்ணா கண்காணிக்கிறார்" (Big Brother is watching) 

நான் ஒரு  துரோகியோ , அல்லது ஒரு வீரனோ அல்ல . நான் ஒரு அமெரிக்கன் “     எட்வர்ட்  ஸ்னோடென்
 “I am neither a traitor, nor a hero. I am an American”   ( Edward Snowden )
ஒரு புறம் பிராட்லி மான்னிங்கின் வழக்கு  விசாரணைகள் இராணுவ நீதிமன்றில் நடந்து கொண்டிருக்கும் வேளையில்   இன்னுமொரு பூதம் அமெரிக்காவிற்கு எதிராக கிளம்பியுள்ளது

உலகின் மிகப் பலம் பொருந்திய தனது சொந்த நாடான அமெரிக்காவில்  தனது சொகுசான , நன்கு அமைக்கப்பட்ட , சுதந்திரமான வாழ்க்கை நிலையிலிருந்து நீங்கி ஒன்றில் அமெரிக்க ஆயுள் கைதியாக அல்லது அகதியாக அவலம் நிரம்பிய சூழ்நிலையிலே தனது எஞ்சியுள்ள வாழ் நாட்களை கழிக்க வேண்டி வரும் என்ற  நிலையிலும்  முன்னாள் சி ஐ எ யின் தொழிநுட்ப உதவியாளர்  எட்வர்ட்  ஸ்னோடென் தான் இறுதியாக ஒப்பந்த முறையில் பணியாற்றிய , அமெரிக்க தேசிய பாதுகாப்பு  முகாமையகத்தின்  (National Security Agency)  இரசியங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். 
"நான் பணத்தினால் உந்தப்பெற்றிருந்தால் இந்த ஆவணங்களை பல நாடுகளுக்கு விற்று பெரும் செல்வந்தனாக மாறி இருக்க முடியும் , ஆனால் உலகத்தில் பணத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் உண்டு " 
அமெரிக்க அரசைப் பொருத்தவரை , அரச இரகசியங்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஈடுபட்ட ஒருவர் தனது உளவுப் பனியின் கடப்பாட்டை மீறி அரச இரகசியங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார் . ஆனால் எட்வர்ட்  ஸ்னோடெனைப் பொருத்தவரை இந்த வெளிப்படுத்துகை ஒரு கொள்கை சார்ந்த விடயமாகும். அரசாங்கம் தனக்களித்த  அதிகாரம்  அதற்கு (அரசாங்கத்துக்கே) உரியதல்ல  என்றும் தங்களைப் போன்றோர் அவ்வாறான  அத்துமீறிய மக்கள் அதிகாரம் அளிக்கப்படாத பணியில் ஈடுபடுவது தவறு , இரகசிய புலனாய்வு சேவை என்பது தனிமனித அந்தரங்கத்தின் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பாக மாறி வருவதனை அவதானித்தே  ஸ்னோடென்  இந்த முடிவை மேற்கொண்டார் .

ஒபாமாவின் தேர்தல்  வாக்குறுதிகள் அமெரிக்காவில் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்பி ஏமாந்த பின்னர் , மிக   மோசமான தனிமனித அந்தரங்கத்தின் மீதான அத்துமீறல்கள் , சர்வதேச கணணி உடைப்புக்கள் ஊடுருவல்கள் மூலம் தகவல்களை  நாடுகளின் " சுதேசிய செய்தி இறைமை" யை மீறும்  செயல்கள் என்பவற்றைக் கண்டு மனக் கிலேசம் கொண்டே ஸ்னோடென் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த முன் வந்தார்.
அதிலும் உலகின் நிறுவனமயப் படுத்தப்பட்ட ஊடகங்களின் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை . சுதேச்சையான நம்பிக்கைக்குரிய , கூ லிக்காக மாரடிக்காத காட்டிக் கொடுக்காத , துணிச்சல் மிகுந்த பத்திரிக்கையாளர்களை  தேடி அவர்களுடன்  தொடர்புகளை  ஏற்படுத்திக் கொண்டார்.  அதன் மூலமே  தனது இரகசியங்களை வெளிக் கொண்டு வந்தார். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்  இவரை வெளிக்  கொணர்ந்த  க்லென் க்ரீன்வல்ட் (Glenn Greenwald)  எனும் பத்திரிக்கையாளரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மிக முக்கியமாக தன்னிடமுள்ள இரகசிய தகவல்களை அனாமோதய செய்திகளாக ஸ்னோடென்  வெளியிட்டிருக்க முடியும் . ஏனெனில் அவ்வாறான தகவல்கள்  அவரையொத்த  பணியில் ஈடுபட்ட பலரின் கைக்குட்பட்டது. ஆயினும் தான் அநாமோதய செய்திகளாக வெளியிட்டால் அது தன்னுடன் கூட பணியாற்றிய பலரின் மீது சந்தேகத்தை  ஏற்படுத்தி , விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு . பல சங்கடங்களை அவர்கள்  எதிர் கொள்ள நேரிடும்  என்பதால் தானே தனது  அடையாளத்துடன் பகிரங்கமாக வெளிப்படுத்தினேன் என்று சொல்லும் ஸ்னோடென் மிக நிதானமாக , நேர்மையாக ஆனால் தீர்க்கமாக தனது முடிவை மேற்கொண்டுள்ளார் என்பதையே இது  கோடிட்டுக் காட்டுகிறது.
ஆகவேதான் , சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து தான் பணியாற்றிய ஹாவாயிலுள்ள தேசிய பாதுகாப்பு முகாமையகத்திலிருந்து (National Security agency)  வெளியேறி ஹாங்கொங் சென்று  அங்கு தனது நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர், (Glenn Greenwald)துணிச்சலான அமெரிக்க ஆவணப்பட தயாரிப்பாளர் (Poitras ) ஆகியோரின் உதவியுடன்  தன்னிடமுள்ள ஆதாரங்களை  முன்வைத்து தன்னை உலகுக்கு வெளிப்படுத்தி  உள்ளார். 

இப்பொழுது அவர் உலகம் எங்கும் அறியப்பட்ட அமெரிக்கர். பெண்டகன் (Pentagon)  இரகசியங்களை வெளிப்படுத்திய டேனியல் எல்ச்பெர்க் (Daniel Ellsberg)   , விக்லீக்சுக்கு கேபிள் செய்திகளாக அமெரிக்க ஆவணங்களை காணொளிகளை , அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஈராக் மீதான  நாட் குறிப்பேடுகளை  அம்பலப்படுத்திய பிராட்லி மன்னிங் வரிசையில் எட்வர்ட்  ஸ்னோடென்  இணைந்துள்ளார். ஆனால் இவரின் வெளிப்படுத்துகை என்பது இதுவரை வெளிவந்த அமெரிக்காவின் சகல இரகசிய வெளிப்படுத்துகைகளையும்  விட மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் , இணையத்தள தொழினுட்ப  யுகத்தில் அமெரிக்கா எப்படி தனது அரசியல் அதிகாரத்தை  துஸ்பிரயோகம் செய்கிறது என்பதையும்   ஜனநாயக மரபுகள் , ஜனநாயக நிறுவனங்கள் என்பவற்றினைப் பாதுகாக்கும் அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டங்களையும் கேள்விக்குட்படுத்தி உள்ளது . உதாரணமாக அமெரிக்க நீதித்துறையும் அதற்கு  ஒத்தூதுவதையும் காண முடிகிறது.   இலட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் தொலைபேசி உரையாடல்களை கொண்ட பதிவுகளை வேரிசான் (Verizon) எனும் அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து பலவந்தப்படுத்தி கேட்ட அமெரிக்க அரசுக்கு வழங்க வேண்டும் என்று  நீதிமன்றமே   தீர்ப்பளித்தது.
அமெரிக்காவுடன் நாடுகடத்தல (Extradition Treaty ) ஒப்பந்தம் செய்துள்ள ஹாங்கொங்கில்  காலூன்றி இருப்பினும் அந்நாடு தன்னை அமெரிக்கா வேண்டுமிடத்து  , தன்னை நாடு கடத்தாது என்று நம்பியே ஸ்னோடென்  ஹாங்கொங்கில் தங்கியுள்ளார் என்பதை விட , ஹாங்கொங்கின்  மீது இறையான்மை கொண்ட சீனா தன்னை நாடு கடத்துவதில் தலையிட்டுத் தடுக்கும் என்றும் அவர் நம்புகிறார். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சீனா மீது அமெரிக்காவின் உளவுத் தகவல் திரட்டல் நடவடிக்கை எப்படி அமைந்திருந்தது என்பது பற்றிய தகவல்களையும் ஸ்னோடென் வெளிப்படுத்தியுள்ளார் என்பது ஒருபுறமிருக்க சீனா எப்படி நடக்கப் போகிறது என்பது பற்றி நேர் , எதிர் எதிர்வுகூரல்களும் வெளிவந்தமுள்ளன. ஆனாலும் இணைய சுதந்திரத்தினை மதிக்கும் ஐஸ்லாந்தில் தான் புகலிடம் கோரப் போவதாக ஸ்னோடென்  அறிவித்திருந்தாலும் ரஷ்ய அரசும் அவருக்கு புகலிடம் வழங்க அழைப்பு விடுத்திருகிறது. அதேவேளை ஐக்கிய ராச்சியம் அவருக்கு புகலிடம் வழங்க வேண்டும்  என்றும் , அதேவேளை தான் அவரை அமெரிக்க அரசுக்கு அடிபணியாத இலத்தீன்  அமெரிக்கா நாடுகளில் அவர் புகலிடம் கோருவது நல்லது என்ற கருத்தை விக்லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே முன் வைத்துள்ளார். 
ஐக்கிய ராச்சிய உள்நாட்டு அமைச்சு முகவர் நிறுவனம் ஸ்னோடெனை ஐக்கிய ராச்சியத்துக்குள் கொண்டு வரக் கூடாது என்று  விமான பயண நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் ஸ்னோடென் இன்னுமொரு ராஜீய பிரச்சினையாக அசாஞ்சே போல் அமெரிக்காவிற்கு எதிராக வந்து விடக் கூடாது என்பதனை உறுதி செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஐக்கிய ராச்சியம் செயற்படுகிறது என்பதைக் காட்டுகிறது .

பெரியண்ணாவின்  கண்காணிப்பில்! 


ஜார்ஜ் ஓர்வெல் (George Orwell) எனும் பிரித்தானிய  எழுத்தாளர் 1949ஆம் வெளியிட்ட "தொண்ணூற்றி என்பத்தி நான்கு" (Nineteen Eighty-Four) எனும் நாவலில் உத்தியோக வஞ்சனை கொண்ட , எங்கும் வியாபித்திருக்கும்  இரகசிய கண்காணிப்பு நிறைந்த பொது சன மனங்களை கட்டுப்படுத்தும் அரசியல் முறைமை  கொண்ட யதேச்சாதிகார ஆட்சி முறையினை பற்றி சித்தரித்துள்ளார்

அந்த நாவலின் மூலமே "பெரியண்ணா" , (Big Brother) "பெரியண்ணா கண்காணிக்கிறார்" (Big Brother is watching)  என்ற சொற்றொடர்கள் முதன் முதலில்  ஜார்ஜ் ஒர்வேல்ல்லால் பொது சனத்தின் அந்தரங்கங்களை கண்காணிக்கும்  பாரிய கண்காணிப்பு  ஆட்சி முறைமை பற்றி பயன்படுத்தப்பட்டது. மக்களின் குடி உரிமை மீறல் மூலம் அரசின் அதிகார  துஸ்பிரயோகம் பற்றி அவர் எழுதியுள்ளார்.

அந்த நாவலில்  சித்தரிக்கப்படும் இரகசிய கண்காணிப்பும் பொது சனத்தின் மனங்களை கட்டுப்படுத்தும் வகையில் செய்யப்படும் பிரச்சாரங்களும் , அரசுக் கெதிரான தனித்துவங்களையும் , சுயாதீன சிந்தனைகளையும் துன்புறுத்தும் முறைமைகளையும் கதைப் புலமாகக் கொண்ட அந்த  நாவலில் பேசுபொருளாக உள்ள " பெரியண்ணாவின்" கண்காணிப்பு  ஊடுருவலை இன்றைய கணனி யுகத்தில் அமெரிக்கா பிரித்தானிய போன்ற ஜனநாயக விழுமியங்களை பேணும் நாடுகள் செய்வது என்பது ஆச்சரியத்தைத் தருகிறது. "உங்களுக்கு பயப்பட ஒன்றுமில்லை என்றால் ஏன் உங்கள அந்தரங்கம் ஊடுருவப்படுகின்றது என்று அலட்டிக் கொள்கிறீர்கள்" என்று கேட்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் (William Hague) ; "நீங்கள் நூறு விழுக்காடு பாதுகாப்பும் நூறு விழுக்காடு அந்தரங்கமும் பூஜ்ய விழுக்காடு அசவ்கரியமும்  கொண்டிருக்க முடியாது " என்று  சமன்பாடு காட்டும் ஒபாமாவும் உலகின் "மாபெரும் ஜனநாய நாடுகளின்" காவலர்கள். !!

அமெரிக்காவின் துணையுடன் பிரித்தானிய உளவுப் பிரிவினர்  பிரபல இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் தொலைபேசி இணையத்தள தகவல்களை பிரிசம் திட்டத்தின் மூலம் திரட்டினர் என்பது பிரித்தானியாவையும் மேலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களின் அந்தரங்கங்களையும் கண்காணிக்கும் செயலாக அமைந்துள்ளது என்பது பெரிய சர்ச்சையை கிளப்பினாலும் , பிரித்தானிய அரசும் ஐரோப்பாவும் அமெரிக்காவுடன் சேர்ந்து செய்த அநியாயங்களை வெளிக் கொண்டு வந்துவிடும் என்பதால் வெறும் சலசப்புடன் சமாதியாகி விடும் சமாச்சாரங்களே. உதாரணத்துக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகாமையகத்தில் பணியாற்றிய பிரான்க் கோசா என்பரால் கசியப்பட்ட  தகவல்கள் மூலம் பிரித்தானிய உளவு ஸ்தாபனத்தில் பணியாற்றிய கதரின் கன்  எப்படி இராக் மீதான யுத்தம் தொடுப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆதரவு வாக்குகளைப் பெற வேண்டும் என்பதில் தீர்க்கமான முடிவெடுப்பதில் தாமதமும் தயக்கமும் காட்டிய ஆறு பேராளர் குழுக்களின் தொலைத் தொடர்பு பரிவர்த்தனைகளை அமெரிக்கா கண்காணிப்பு செய்தது பற்றி வெளிப்படுத்தியிருந்தார்.  ஆனால் பிரித்தானிய அரசு அவருக் கெதிராக வழக்கு தொடுக்காமல் அந்த அசிங்கச் சமாச்சாரத்தை கிடப்பில் போட்டு விட்டது . அது தொடர்பான விசாரனைகள் நடைபெற்றிருந்தால் எத்தனயோ பொய்யும் புரட்டும் செய்து இராக் மீது யுத்தம் தொடுத்த இப்பொழுது அரை நிர்வாணமாக நிற்கும் , அமெரிக்காவும்  பிரித்தானியாவும் முழு அம்மணமாக நின்றிருக்கும்.!


அமெரிக்க தேசிய பாதுகாப்பு  முகாமையகம் (National Security Agency) எப்படி உலகின் பிரபல கணணி நிறுவனங்கள் மூலம் தகவல்களை  உலகின் நாலா பக்கங்களிலிருந்தும்  வலிந்து திரட்டும் ஒரு பொறிமுறையை பிரிசம் ( Prism ) திட்டம் என்ற வகையில் அமைத்துள்ளது போன்ற தகவகளை பற்றி செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன அந்த வகையில் ஸ்னோடென்   அமெரிக்காவின் முகத்திரையைக் கிழித்துள்ளார். இப்பொழுது அவருக் கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகளை தமது சர்வதேச ஊடக பலத்தைக் கொண்டு அமெரிக்க அரசு செய்து  வருகின்றது. ஏனெனில் , அமெரிக்க மக்கள் மத்தியில் டைம்ஸ்  இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு மூலம் 54 வீதத்தினர்    ஸ்னோடென்  செய்தது சரியானதே  என்றும் ,   ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் நடத்திய கருத்துக் கணிப்பில்  ஸ்னோடென்  ஒரு துரோகியல்ல மாறாக  அவர் ஒரு தேசாபிமானி  என்று  அதிகம் பேர் தேர்ந்துள்ளனர்.


அமெரிக்காவின் பழமைவாய்ந்த வேவுபார்த்தல் சட்டமும் ( Espionage Act 1917) தேசபக்தி சட்டமும் (Patriotic Act 2001)  மனித உரிமைச் சட்டங்களும் மாற்றங்களை நாடி நிற்கின்றன என்பதை இப்போது    கிளம்பியுள்ள விவாதங்கள் கூறாமல் கூறி நிற்கின்றன. மேலும் நாடுகடந்த கணனித் தொழில் நுட்ப கட்டுப்பாடுகளை வரையறை செய்யும் ராஜீய சட்டங்களையும் வகுக்க வேண்டிய தேவை இனிமேல் ஏற்படலாம் .


ஹாங்காங்கில் சிவில் உரிமை நிறுவனங்களின் , மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின்  ஆதரவுடன் ஒரு ஊர்வலம் ஸ்னோடெனுக்காக  நடத்தப்பட்டுள்ளது. உலகின் நாலா பக்கங்களிலும் தனி மனித உரிமையும் தேசிய பாதுகாப்பும் குறித்த வேறுபாட்டை வரையறை செய்ய கூக்குரல்கள எழும்புகின்றன. உலக ஏகாதிபத்தியங்களின் அயோக்கியத்தனங்களை தட்டிக் கேட்க டேனியல் மன்னிங் , ஸ்னோடென் போன்ற பல  தனி நபர்கள் கணனி யுகத்தில் வீரியம் பெற்று வேதாகமக் கதையான கோலியாத் தாவீதுக் கதையையும் நமக்கு ஞாபகமூட்டுகிறார்கள் ! (16/06/2013)
 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...