அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (5)
எஸ்.எம்.எம்.பஷீர்


உண்மை  அமெரிக்காவின்  தேச விரோதி!

யார் எவர் என்ற  வேறுபாடில்லாமல்  மக்கள் உண்மையைக் காண வேண்டும் , ஏனெனில் தகவல்கள் இன்றி  பொதுமக்கள் விபரமறிந்த முடிவுகளை மேற்கொள்ள முடியாது

                                                         பிராட்லி எட்வர்ட் மான்னிங்  (Bradley Edward Manning)

அமெரிக்காவின்  அந்தரங்கங்களை  அகிலத்துக்கு எடுத்துக்காட்டி  உலகம் தழுவிய ஒரு பொது விவாதத்  தளத்தை , கலந்துரையாடலை ஏற்படுத்தப் போவதாக  நம்பியே கேபிள் (கம்பி வடம்) செய்திகளை  வெளிக் கொண்டு வந்தார் பிராட்லி மான்னிங் . அமரிக்காவின் இராணுவ பிரிவில்   ஒரு பனி ஆணையற்ற இராணுவ புலனாய்வு தொகுப்பாளராக கணனித் தகவற்  தொழிநுட்ப பகுதியில் இராக்கில்  பணியாற்றிய பொழுது  பிராட்லி மான்னிங்  அமெரிக்காவின் ஜனநாயகம் , மனிதத்துவம் பற்றிய பொய் முகத்தினை , தனது கைகளையும் கண்களையும் தாண்டிச் செல்லும் செய்திகளை   கண்டு மன உளைச்சலுக்கு மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்டார்.உண்மைகளை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்; உண்மைகள் என்பவை அமெரிக்காவும் வெளியுலக பிரபல சர்வதேச ஊடகங்களும் சொல்லும் செய்திகள் அல்ல , அவ்வூடகச் செய்திகளால் மக்கள் மனதில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைகள் , பதியப்பட்ட  கருத்தோட்டங்கள் என்பவற்றின்  அடிப்படையில் அவர்களால்    எடுக்கப்படும் முடிவுகள்  அல்ல என்பதை  ஜூலியன் அசாஞ்சே நடத்தும்  விக்லீக்கிசில் வெளியான கேபிள் செய்திகள் உணரப் பண்ணின. இன்றைய தொழிநுட்ப யுகத்தில் பாரிய சென்றடைவினைக் கொண்ட இணையத்தினூடாக உலகின் பல அரசுகளின் அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வந்தது விகிலீக்ஸ் .

விக்லீக்சில்   வெளியான அமெரிக்காவின் வகைப்படுத்தப்பட்ட கேபிள்  செய்திகளை வெளிப்படுத்தியவர் மன்னிங்தான் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்க பாதுகாப்பு த்கவல்களை அதிகாரமளிக்கப்படாத  மூலங்களுக்கு வழங்கி  எதிரிகளுக்கு துணை புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இராக்கில் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில்  அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு  அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருந்தார் பிராட்லி .

பிராட்லிமான்னிங் அனுப்பியதாக சொல்லபப்டும் அமெரிக்க இராணுவ  உலங்கு வானூர்தி இராக்கில் ஊடகவியலாளர்கள்  குழந்தைகள் மீது நடத்திய தாக்குதல் பற்றிய காணொளியை விக்லீக்கிசில் வெளியிட்டதும் , அதுவரை மேற்குலக் நாடுகளின் அரசியல் ராஜீய , இராணுவ நடைமுறைகளை பற்றி விவாதங்களை அநாமோதய கட்டுரைகள் மூலம் பல இந்நாட்டு இரகசியங்களை வெளிக் கொண்டுவந்த விக்லீக்ஸ், உலகின் கவனத்தை ஈர்த்தது . அமெரிக்கா ராஜீய  கேபிள் தகவல் பரிமாற்றங்கள் , குவாண்டனாமோ தடுப்புக் காவல் பற்றிய செய்திகள் ஆப்கான் , இராக் பற்றிய அமெரிக்க நாட்குறிப்பேடுகள் என்பன உலகில் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை அலச வைத்தது. மான்னிங்கின் துனீஷிய  ஜனாதிபதியின் , அவருடனான அமெரிக்க அரசின் அந்தரங்க தொடர்புகள் பற்றிய கேபிள்  செய்திகளைக் கொண்டே " அரபு வசந்தம்"  (Arab spring) கால்கொண்டது என்பதும் இங்கு அரசியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகவும் உள்ளது.

இப்பொழுது பிராட்லி மான்னிங் மீதான குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.  தகவல் தொழிநுட்ப யுகத்தின் ஊடாக உலக ஏகாதிபத்தியங்களின் மீது ஒரு புதிய பரிமாணத்தில் யுத்தம் ஒன்று தொடுக்கப்பட்டு வருகிறதுஇந்த தகவல் தொழிற் நுட்பம்   அமெரிக்காவிற்கு எந்தளவு உதவியதோ , அந்தளவு  இப்போது அதற்கு உபத்திரங்களை வழங்க ஆரம்பித்துள்ளது. ஆயினும் வல்லாதிக்க சக்திகளின் வக்கிரங்களை வெளிக் கொணர்ந்ததில் மான்னிங்சின் மனப்போக்குத்தான் காரணமாக அமைந்தது . அதற்கான விலையை மான்னிங் உணர்ந்திருந்தார். தன்னுடன் நட்புறவாடிய நபரே தனக்கு எதிரியாக மாறுவார்  என்று பிராட்லி நம்பியிருக்கவில்லை என்றாலும் அவரிடம் தனக்கு கிடைப்பது தூக்குத் தண்டனையாக இருக்கலாம் என்று தெரிந்தே தனது தகவலகளை வெளியிடத் துணிந்ததாக குறிப்பிட்டிருந்தார். இப்படித்தான் விக்லீக்ஸ்  இணையத்தில் அவருடன் சேர்ந்து செயற்பட்ட அசாஞ்ஜேயின்  நண்பிகள் இருவர்  அசாஞ்சே மீது கற்பழிப்பு குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் பலர் அசாஞ்சேயைக் கைவிட்டு தலை மறைவாகினர். நிச்சயமாக அமெரிக்க அரசின் பணத்துக்கும் வசதி வாய்ப்புக்களுக்குமாக ஒன்றாக வேலை செய்த பலர் தமது ஒத்துழைப்புக் கொள்கையைக் கைவிட்டனர், துரோகமிழைத்தனர்.
அந்த வகையில் கொள்கை உறுதியும் பணத்தினால் பதவியினால் வாங்கப்படாத தாம் கொண்ட கருத்துக்களில் உறுதியானவர்களாக உலகில் மனிதர்களைக் காண்பது அரிதாகி வரும் ஒரு கால கட்டத்தில் மான்னிங் , ஆசாஞ்சே ஆகியோர் எமது கவனத்துக்கும் மதிப்புக்கும் உரியவர்களாகிறார்கள்.  உண்மையை வெளிக்கொணர உறுதியுடன் செயற்பட்ட மான்னிங்கும்  அசாஞ்சேயும்   செலுத்தும்  விலை மிகவும் அதிகமானது. நெஞ்சுறுதியுடன் விளைவுகளை    துச்சமாக மதித்த அவர்களின் அமெரிக்க அடக்குமுறைக் கெதிரான துணிச்சல் எதிர்கால தலைமுறையின் ஆன்மாக்களை ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை. வியட்நாம் யுத்தத்தின் பொது பண்டகொன் ஆவணங்களை 1971ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைகளுக்கு வழங்கி அமெரிக்க அரசின் அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்திய டேனியல் எல்ச்பெர்க் (Daniel Ellsberg) என்பவர் தான் அனுபவித்த சிறைவாசமும் துன்பங்களும் மன்னிங் அனுபவிக்கும் துயரத்துடன்  ஒப்பிடுகையில் மிக மிகக் குறைந்ததே என்று குறிப்படுகிறார். ஆக மொத்தத்தில் 25 வயது இளைஞனான மான்னிங் மிகப் பெரிய இடரை அறிந்தே கேபிள் இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அவர் தேசத்தின் எதிரிகளுக்கு (அல் கைதா ) தகவல்கள் வழங்கி உதவி புரிந்துள்ளார் என்று அமெரிக்க இராணுவ நீதிமன்றம் இரகசிய வழக்கு விசாரணையை ஆரம்பித்துள்ளது. சுமார் மூன்று மாதங்கள் நீடிக்கப் போகும் இந்த வழக்கில் இதுவரை வழங்கப்பட்ட சாட்சிகள் ,ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பொழுது கைப்பற்றிய கணனியில் உள்ள தகவல்கள் என்பன முன்வைக்கப்பட்ட நிலையிலும் , ஒசாமா பின் லாடனைக்  கொன்றவரின் சான்றளிக்கப்படும்  நிலையிலும் இந்த வழக்கில் தேச விரோதிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை குற்றவியல் சட்ட கோட்பாடுகளுக்கு அமைவாக நிரூபிப்பது என்பது சாத்தியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அவர் ஏற்றுக் கொண்ட குற்றச்சாட்டுக்களில் விக்லீக்சுக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அமைந்த குற்றங்களுக்காக சுமார் இருபது வருடங்கள் நன்னம்பிக்கையில்  வெளிச் சென்று திரும்பும் சந்தர்ப்பம் இன்றி  (Parole)  தண்டனை பெரும் வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.  எதுவாயினும் மான்னிங் வரலாற்றில் உலகமெங்கும் உண்மையைத்  தேடும் சிறுபான்மை மக்களின் மனங்களில் நிச்சயம் நினைவு கொள்ளப்படுவார்.    
  
அமெரிக்காவின் (அ) நீதி 

இராக்கிய உலங்கு ஊர்தித் தாக்குதல் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை அடையாளப்படுத்தும் ஒரு வரலாற்றுப் பதிவாகும். அந்த கொலைகள் தொடர்பில் மேற்கொள்ள விசாரனையின் முடிவில் தரையிலே காணப்பட்டவர்கள் ஆயுதம்  தூக்கிய எதிரிகள் , அவர்களை யாரென்று வேறுபடுத்திக் காண வாய்ப்பில்லை என்ற அடிப்படையில் , அக்கொலைகளில்   ஈடுபட்ட அமெரிக்க சிப்பாய்கள்  நிரபராதிகள் ஆக  காணப்பட்டனர். எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் கூட  அவர்கள் மீது எடுக்கப்படவில்லை. அந்த கொலைகளில்  இறந்து போன ரொய்ட்டர்  ஊடகவியலார்கள் சார்பில் சுதந்திர தகவல் சட்டத்தின்படி  (Freedom of Information Act )  அந்த காணொளிப பிரதியைத்  தருமாறு   கேட்டபொழுதும் அதனை  அமெரிக்க தகவல் சட்டம்  ரொய்ட்டரின்  தகவல் சுதந்திரத்தை மறுத்தது. ஒரு உலகப் புகழ்பெற்ற ரொய்ட்டர்  ஊடககத்துக்கே இந்தக் கதி என்றால் அமரிக்காவில் சட்ட ஆட்சி எப்படி இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு இராணுவ ஆட்சி மக்கள் ஜனநாயகத்தின் பெயரில் அரங்கேறி  வருகிறது. போலும் . அந்த வகையில் தான் குவாண்டனாமோ கைதிகள் விசாரனையற்று  பல வருடங்களாக சித்திரவதை  செய்யப்பட்டு வருகிறார்கள். அண்மையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பொழுது , அவர்களுக்கு உணவை மூக்கு வழியாத குழாய் மூலம் செலுத்தியுள்ளார்கள் என்பதும் ஜெனீவா மரபுகளுக்கு முரணானது என்றும் கூக்குரல்கள் கிளம்பி உள்ளன. ஆளில்லா விமானத் தாக்குதல்(Drone) மூலம் சுமார் ஐயாயிரம் பேர் அமெரிக்காவினால் பிற தேச ஆட்புல அதிகாரத்தினை மீறி கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்றும் கொல்லப்படுகிறார்கள். சொந்த நாட்டு மக்களையே அமெரிக்காவின்  காசுக்காக சுதேசிய ஜூடாஸ்கள் பலியிட்டு வருகிறார்கள் . 

ஆனால ஒரு கறுப்பின ஜனாதிபதியை வைத்து அமெரிக்கா நிர்வாக  அதிகார ஆலோசன  இயந்திரம் மிகக் கேவலமாகவே தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. ஒபாமா அந்த நிர்வாககத்தின் கைதியாக தலையாட்டும் பொம்மையாகவே செயற்படுகிறார். இதனையே புஷ்ஷும் செய்தார். ஆக புதிய முகங்கள் எதுவும் அமெரிக்காவில் ஐரோப்பாவில் மாற்றங்களைக்  கொண்டு வந்துவிடப் போவதில்லை. வெறும் முகமூடி மாற்றங்களைத்  தவிர.
  
மான்னிங் மட்டும் அந்த காணொளியை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் அமெரிக்காவின்  அடாவடித்தனம் , அப்பாவி உயிர்களை வேடிக்கையாக காவு கொள்ளும் அயோக்கியத்தனம் உலகுக்கு தெரிந்திருக்காது. ஆப்கானில் அமெரிக்கா அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட  மக்களில் பற்றிய காணொளி , அசாஞ்சேயிடமிருந்து  , அவரின் முன்னாள் நண்பரால் எடுத்தச் செல்லப்பட்டு விட்டாலும் , அது அமெரிக்காவின் மீது யுத்தக் குற்றம் சுமத்தப் போதுமானது என்கிறார் அசாஞ்ஜேயும் மான்னிங்கும் நேரில் பரஸ்பரமாக அறிமுகமானவர்கள் அல்லர். கணனித் தொழிநுட்ப உலகின் இணையத்தள கருத்து பரிமாற்ற யுகத்தில்  கருத்து உடன்பாடு கண்டு  ஓரணியில்  செயற்பட்டவர்கள். 

அசாஞ்சே அமெரிக்காவிற்கு  கைது செய்யப்பட்டு சுவீடனுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார் என்று திட்டவட்டமாக நம்பியதால் ஐக்கிய இராச்சியத்திலுள்ள எக்குவடோர் தூதுவராலயத்தில் அரசியல் தஞ்சம் புகுந்து அங்கு அகதி அந்தஸ்து பெற்று  ஒரு வீட்டுக்காவல் கைதிபோல் வாழ்கிறார் . இந்த நிலையில் அவரை கொண்டு வந்து விசாரணை செய்யலாம் என்ற கனவில் அமெரிக்காவிற்கு அசாஞ்சேயின் தற்போதைய நிலை வாய்ப்பபளிக்கப் போவதில்லை  எனவேதான்  மான்னிங்கின் வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்திருக்கிறார்கள் .

இந்த வழக்கு பற்றி  பத்தி எழுத்தாளர் கரி யாங் " மான்னிங் தேசத்தின் விரோதியானால் , உண்மையும் கூட தேசத்தின் விரோதியாகும் "என்று குறிப்பிடுவதே  உண்மைக்கும் அமெரிக்க தேசத்துக்கும் இடையிலான ஒரு எதிர் நிலை போக்கினை கோடிட்டுக் காட்டுவதாகும். .

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...