இன்று அன்னையர் தினம் என்று
சொல்லப்படுகிறது. மேற்குலகின் நுகர்வுக் கலாச்சாரம் பரந்து
விரிந்து உலகை ஆக்கிரமித்து வருகிறது. இயந்திர வாழ்வும்
நுகர்வுக் கலாச்சார விஸ்தரிப்பும் மனித உறவுகளைக் கொண்டாட நினைவு கூற அது பற்றிய பிரக்ஞையினை
ஏற்படுத்த நாட்கள் ஒதுக்கப்படும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன. .
அந்த எண்ணக் கருவுக்கும் பிரகடனத்துக்கும் உடன்படாவிட்டாலும் அன்னையர்
நாள் என்ற சொற்றொடர் 2009 தை மாதம் 12 மறைந்து
போன எனது தாயின் ஞாபகத்தினை
மெலிதாக தூண்டிவிட்டது . எனதும்
எனது உடன் சகோதரனினதும் "தாய் " பற்றி நாங்கள் பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதையை இங்கு பிரசுரிக்கிறோம்

என் இனிய தாயே
உனது சொப்பனங்களின்
பிரகாசங்களை
தொலைவிலுள்ள
தாரகைகள் கூட
கடன் வாங்கிக் கொண்டன
மின்னுவதற்காக
எனது நினைவுகளுக்காய்
உனது கனவுகளையே
அடகு வைத்த
உன் பாதாரவிந்தங்களில்தான்
சொர்க்கம் தனது
வாயிலையே வைத்திருக்கின்றது.
தூசுப் புயலில்
எனது விழிகள் துடித்த போது
உனது விழிகள்
சோகம் சுமந்து
நகர்த்திய நதிகள்
பனி மலையாய்
என்னிதயம் நிறைந்து
இறுகிப் போயிற்று.
உன் இதயம் நெகிழ்ந்து
திருவாய் நழுவி
என்னில் சொரிந்த
புகழ்ச்சிப் புஸ்பங்கள்:
விண்ணைச் சாடிய
மனிதச் சுவட்டின்
வெற்றிக் களிப்பாய்
என்னை ஆழ்த்திய
இனிய ஷனங்கள்..
அவ்வப்பொது
உனது உதடுகள்
உற்பவித்த சாபங்கள்:
நீ துப்பிய வெற்றிலைக் குருதிபோல்
ஒப்புக்காக உனது வாயில்
சிவந்த வார்த்தைகள்
விபத்துக்களை விலக்கிய
“சிக்னல்| விளக்குகள்.
என் இனிய தாயே
என்னைச் சரித்திரமாக்க
சரிந்த உன் சரிதையை
எனது குருத்துக்களும்
நெஞ்சில் சுமக்கும்.
(எஸ்.எம்.எம்.பஷீர் )
சுவனத்து நுழைவுச் சீட்டு
தாயே
விடுதலையென்றதும்
வீரிட்டு அலறுவது வேறெந்தச் சிறை வாசத்தில்
தாய்மையின் சிறையில் மட்டுமா
உந்தன் உதிரத்தை
உறிஞ்சிக் கொண்டிருந்தேன்
விடுதலைக்குப்பின்
வீட்டுக் காவலிலும்
உந்தன் உதிரம்தானே
என்னை உப்பவைத்தது .
நான் விழியால் பேசியபோதெல்லாம்
மொழியால் வியாக்கியானம் செய்தாயே
அதையெங்கே கற்றுக் கொண்டாய் ?
நான்
திக்கிப் பேசியதையே
கன்னல் மொழியென்றாய்
தத்தி நடந்ததைப் பார்த்தே
ராஜநடை யென்றாய்
எந்தன் பொய்ப்பற்களைத்தானே
மெய்யான முத்தென்றாய்
தாயே உண்மையில் நீ
வித்தியாசமாகவே
ரசித்திருக்கின்றாய்
நான் சிரித்தபோது சிரித்தாய்
அழுதபோது துடித்தாய்
என்றும் நீ
எனக்காகவே வாழ்ந்தாய்
தாயே
இன்று நான்
உனக்காக வாழக்கூடாதா
இல்லையில்லை
அதுவும் எனக்காகத்தான்
ஆம்
உந்தன் திருப்திதானே
எந்தன்
சுவனத்து நுழைவுச் சீட்டு.
(எஸ்.எம்.எம்.நசீர் )
தாயே
விடுதலையென்றதும்
வீரிட்டு அலறுவது வேறெந்தச் சிறை வாசத்தில்
தாய்மையின் சிறையில் மட்டுமா
உந்தன் உதிரத்தை
உறிஞ்சிக் கொண்டிருந்தேன்
விடுதலைக்குப்பின்
வீட்டுக் காவலிலும்
உந்தன் உதிரம்தானே
என்னை உப்பவைத்தது .
நான் விழியால் பேசியபோதெல்லாம்
மொழியால் வியாக்கியானம் செய்தாயே
அதையெங்கே கற்றுக் கொண்டாய் ?
நான்
திக்கிப் பேசியதையே
கன்னல் மொழியென்றாய்
தத்தி நடந்ததைப் பார்த்தே
ராஜநடை யென்றாய்
எந்தன் பொய்ப்பற்களைத்தானே
மெய்யான முத்தென்றாய்
தாயே உண்மையில் நீ
வித்தியாசமாகவே
ரசித்திருக்கின்றாய்
நான் சிரித்தபோது சிரித்தாய்
அழுதபோது துடித்தாய்
என்றும் நீ
எனக்காகவே வாழ்ந்தாய்
தாயே
இன்று நான்
உனக்காக வாழக்கூடாதா
இல்லையில்லை
அதுவும் எனக்காகத்தான்
ஆம்
உந்தன் திருப்திதானே
எந்தன்
சுவனத்து நுழைவுச் சீட்டு.
(எஸ்.எம்.எம்.நசீர் )
very nice
ReplyDelete