அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (3)
எஸ்,எம்.எம். பஷீர்

இருக்கிறதோ இல்லையோ பிரச்சினைகளை தேடிப்பிடித்து அதனைத தவறாக  அறிகுறி கண்டு , பிழையான நிவாரணத்தைப் பிரயோகிப்பதே அரசியல் கலையாகும்                                                                                        -ஏர்நெஸ்ட் பெண்   

(Politics is the art of looking for trouble, finding it whether it exists or not, diagnosing it incorrectly, and applying the wrong remedy.  ~Ernest Benn)
 
இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு சூழ்நிலையில்  பௌத்த மத தீவிர சிறுபான்மை தனிமங்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் ஒரு அரசியல் மிக வேகமாக (பலத்துடன்) இருபுறமும்  செயற்பட்டு வருகிறது என்பதை அவதானிக்க முடிகிறது.  ஆசாத் சாலியின்  முஸ்லிம் சமூக அடக்குமுறைகளுக் கெதிரான ஆவேச பிரதிபலிப்பும் , உணர்வு மயப்படுத்தப்பட்ட  உரைகளும் , அதனைத் தொடர்ந்த அவரின் கைதும் , முஸ்லிம்களுக்குள் இன மத குரோத உணர்வுகளுக்கு உரமூட்டுவதையும்  பௌத்த தீவிரவாத சக்திகளை உஷார் படுத்துவதையும்  இன்று காணமுடிகிறது.  இந்தப் பின்னணியில்  முஸ்லிம் சமூக , மத  அரசியல் தலைமைத்துவங்களை , அவற்றின் ஆளுமைகளை,  முஸ்லிம்களே  கேள்விக்குட்படுத்துவதையும் காணாமலிருக்க  முடியவில்லை. "அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று காத்திருந்த சின்ன சின்ன அரசியல் கட்சிகளும்  , இயக்கங்களும் இதை விட்டால் பெரிய முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்களை உள்ளூர்த் மட்டத் தலைவர்களை உண்டு இல்லை என்று பண்ண சந்தர்ப்பம் வராது என்று தமது இன உணர்வினை வெளிப்படுத்தும் விதத்தில் தாங்களே உண்மையில் சமூக அக்கறைகள் கொண்டவர்கள் என்று வெகு வேகமாக செயற்பட்டு வருகின்றனர்.


அண்மையில் இலங்கை தேசிய ஐக்கிய முன்னணிக் கட்சி​யின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான எம்.ஆசாத் சாலி. சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கில்  கலந்து கொண்ட பின்னர் , ஜூனியர் விகடன் எனும் வார இதழுக்கு வழங்கிய பேட்டி அமைதியை விரும்பும்; , கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் புலிகள் நடத்திய இனச் சுத்திகரிப்பு  , இனப் படுகொலை உட்பட்ட  சகல மிலேச்சத்தனமான புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைளின் போதும் அமைதி காத்த முஸ்லிம் சமூகத்தை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 


"முஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்!"

ஆசாத் சாலி   ஜூனியர் விகடன் எனும் வார இதழுக்கு வழங்கிய பேட்டியில் 
எங்களைத் தள்ளிக்கொண்டே போனால், ஒரு கட்டத்தில் நாங்களும் திரும்ப வேண்டியிருக்கும்.

அப்போது ஆயுதங்களைத் தூக்குவதைத் தவிர வேறுவழி இல்லை. இதைச் சொன்னதற்காக என்னைக் கைது செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா என்னும் பௌத்த அமைப்பு கூறியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஜூனியர் விகடன் பேட் டிக்கு முன்னரே இவர் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது இதிலிருந்து புலனாகிறது அதனால்தான்  "இதைச் சொன்னதற்காக என்னைக் கைது செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா என்னும் பௌத்த அமைப்பு கூறியிருக்கிறது " என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் செயற்பாடுகளுக்காக கைது செய்யப்படுவது நிச்சயம் நடக்கும் என்று தெரிந்தே அவர் செயற்பட்டிருக்கிறார்அந்நிலையிலிருந்து தன்னை பாதுகாக்கவும்  தனது நடவடிக்கைகள் கைது செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று நம்பியே அவர்  இந்தியாவிற்கு போக முன்னரே நீதிமன்றில்  முன் ஜாமீன் எடுத்திருக்கிறார். 

 புலி முஸ்லிம் உறவு 

ஜூனியர் விகடனின்  தமிழர்கள்  முஸ்லிம்கள் உறவு இப்போது எப்படி உள்ளது என்ற கேள்விக்கு ஆஸாத் சாலி
 
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து முன்பு முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். அதில் இருந்து முஸ்லிம் அமைப்புக்கள் வேறுபட ஆரம்பித்தன .புலிகள் அப்படிச் செய்திருக்கக் கூடாது. முஸ்லிம்களை அவர்கள் அரவனைத்து  இருந்தால் நிலைமை வேறு மாதிரியாகி இருக்கும். சில வாய்ப்புக்களை அவர் தவறவிட்டுவிட்டார். அது ராஜபக்ச குடும்பத்திற்குத்தான் வாய்ப்பளித்தது,” என்று குறிப்பிட்டுள்ளார். 
ஆக மொத்தத்தில் வடக்கு வெளியேற்றத்துக்கு முன்னரே புலிகள் கிழக்கிலே முஸ்லிம்களை    காத்தான்குடி, அளிஞ்சி பொத்தானை , ஏறாவூர் , அக்கரைப்பற்று. ஓட்டமாவடி என்று கொன்றழித்ததைப் பற்றி  ஒன்றும் கூறாமல் , வடக்கை ஒத்த மூதூர் வெளியேற்றம் பற்றி ஒன்றும் கூறாமல் , வடக்கிலும் முஸ்லிம்களைக் கடத்திக் கொன்றதை பற்றி ஒன்றும் கூறாமல் உலகின் மிகப் பெரும் பயங்கரவாத இயக்கமொன்றின் தலைவனை , இலங்கை நாட்டின் இறைமைக்கு சவால் விட்ட பயங்கரவாதிகளை  முஸ்லிம்களை அரவணைக்கத் தவறி விட்டார் பிரபாகரன் என்று கூறி பச்சாதாபப்படும் ஆசாத்  சாலியை முஸ்லிம்களின் தலைவர் என்று யார் சொல்வது.. இலங்கையின் ஜனநாயயக மக்கள் அரசின் கண்ணுக்குள் விரல் விட்டு மூன்று தசாப்தங்களாக அசைத்த , சிங்கள் அப்பாவி மக்களை அரசியல் வாதிகளை , ஆட்சித் தலைவர்களை அழித்த பிரபாகரன் முஸ்லிம்களை அரவனைத்திருந்தால் என்ன  ஏற்பட்டிருக்க்கும்.!


அந்த இருண்ட மூன்று  தசாப்த  காலகட்டங்களில் ஆசாத் சாலி என்ற ஒருவரை இலங்கை முஸ்லிம்கள் ,  குறிப்பாக   வடக்கு கிழக்கு  முஸ்லிம்கள் பரவலாக் அறிந்திருக்கவில்லை. அதன் பின்னர் மூதூர் முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய போதும் கிழக்கிலே பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்கிய போதும் ஆசாத்  சாலியின் குரல் கேட்டதாக தெரியவில்லை. ஆயுதம் தரித்து முஸ்லிம்களைத் துன்புறுத்திய  தமிழ் இயக்கத்தினர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்கள் தங்களின் உயிரினைக்  கையிலே பிடித்துக் கொண்டே வாழவேண்டி இருந்தது   என்பதும் ஆசாத் சாலிக்கு கொழும்பிலே நன்கு தெரிந்திருக்காது. 
அக்குரஸ்ஸ   பள்ளியில் தனது மாமனான பௌசியைக் கூட கொல்ல குண்டு வெடிப்பில் ஈடுபட்ட புலிகளின் கைவரிசையை கூட ஆசாத் சாலி கண்டிக்கவில்லை. ஆனால் இதற்காகவெல்லாம் இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பௌத்த பல சேனையின் அல்லது அதை ஒத்த பௌத்த தீவிரவாத தனிமங்களின் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்களை கண்டிக்க கூடாதென்பதில்லை.

புலிகள் முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தையே வடக்கு கிழக்கில் ஒழிக்க முற்பட்ட பொழுது முஸ்லிம்களுக்கு தனியான படையணி வேண்டும் என்று அஸ்ரபும்  , முஸ்லிம்  பாதுகாப்பு முன்னணி என்று ஒன்றை உருவாக்க வேண்டும் என்று எம்.எச் முகம்மதுவும் , முஸ்லிம்கள் போலீசில் அதிகம் சேர ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்த ஹக்கீமும் , ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் ஒரு இராணுவ முகாம் தேவை என்று அமீர் அலியும் , இன்னும் பலரும் முஸ்லிம்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறை கொண்டிருந்த பொழுதெல்லாம் ஆசாத் சாலி ஒருவேளை சிறு குழந்தையாக இருந்திருக்கலாம் !!. ஏனெனில் அப்பொழுது ஆசாத் சாலி யாரென்று வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு தெரியாது. ஒரு ஆயதப் புரட்சிக்காரனை சமூகம் ஒருவேளை அடையாளம் காணத் தவறி இருக்கலாம்.! அதற்கான காலம் இப்போது கணிந்திருக்கலாம் ! இப்போது ஆசாத் சாலிக்கு உண்மையான  எதிரிகளைக்  அடையாளம் காணக் கிடைத்துள்ளதும்கிழக்கில் ஆர்ப்பாட்டத்திகு கடையடைப்பு செய்ததுபோல் கிழக்கு தேர்தலில் தான் கிழக்கின் தலைவராக வர கனவு கண்டதற்கு மாகான சபைத் தோல்வியின் பின்னர் இப்போது சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம்!  


படம்: கவுன்சிலர்   மஹ்ரூப் ஆசாத் சாலி மாநகர சபை உட்சண்டையின் போது . சிங்கள உறுப்பினர்கள் இருவரையும் விலக்கி விடுகிறார்கள்.

பௌத்த மத தீவிர சக்திகளின்  அடக்குமுறைகளுக்கு எதிராக இப்போது நாடளாவிய ரீதியில் முஸ்லிம் தலைமைத்துவ வெற்றிடம் இருப்பதாக சில அரசியல் அதிமேதாவிகள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த இடத்தினை நிரப்பும் தகுதி  ஆசாத் சாலிக்கே உண்டு என்று சமகால அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தமது கோட்பாட்டினை நிறுவுகின்றனர்.

முன்னொரு காலத்தில் , புலிகளுக்கு எதிராகவும்  யுத்தம் பண்ண வடக்கிலும் கிழக்கிலும் ஒரு முஸ்லிம் ஆயுதப்  போராட்டத்திற்கு தேவை இருந்தது , ஒரு தலைமைத்துவ வெற்றிடமும் இருந்தது. அப்பொழுது ஆசாத் சாலியைக் காணவில்லை. சரி அதுதான் போகட்டும் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரசை உருவாக்கி இருக்கா விட்டால் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயதப் படைகளில் சேர்ந்திருப்பார்கள் , அவ்வாறான  நிலைமை ஏற்படாமல் பாதுகாத்தவர் அஸ்ரபே  என்று அஸ்ரபின் நண்பரும் முன்னாள் எம்.பீயும் . சட்டத்தரணியுமான சுஹைர் தனது எழுத்தாக்கம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கிழக்கில் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஜனநாயக வழிமுறையை செயல்படுத்திய அஸ்ரபை , அவர் மெச்சுகிறார்.  


 பல்டி அடிக்கும் தலைமைகள் 

இந்தியாவிற்குச் சென்று தன்னுணர்வு மறந்து "முஸ்லிம்கள் ஆயுதம் எடுப்பார்கள் " என்று இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த அல்லது ஏதோ சிலரின் கருத்தாகக் கூட கூறும் உரிமையை யார் ஆசாத்  சாலிக்கு வழங்கினார்கள் எனபது தெரியவில்லை . அவராகவே தான்தோறித்தனமாக முஸ்லிம்களின் அனுமதி இல்லாமல் சாதாரண ஒரு மாநகர சபையிலும் தற்போது அங்கத்தவராக இல்லாத ஒருவர் பத்து லட்சம் முஸ்லிம்களுக்காக அப்படியான ஒரு எச்சரிக்கை விடுக்க அனுமதி அளித்தது யார். ?.

இப்போது இலங்கையில் ஆசாத் சாலியின்  ஜூனியர் விகடன் பேட்டியை. அவ்விதழ்  திரிவுபடுத்தி வெளியிட்டு  விட்டது என்று ஒரு புதுக் கதை உலவ வரத தொடங்கி உள்ளது. ஏனெனினில் நெஞ்சு நிமிர்த்தி கருத்துச் சொன்ன ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதம் ஜூனியர் விகடனில் பிரசுரமாக உள்ளது,


"அத்தகைய சூழல் உருவாகிவிடக்  கூடாது !"

ஏதோ ஆசாத் சாலி திருக்குறள் போல்  இலக்கிய இலக்கண பொழிப்புரை தேவைப்படும் ஒரு கூற்றை சொல்லியதுபோல் தனது பேட்டிக்கு  விளக்கவுரை ஒன்றினை ஜூனியர் விகடனுக்கு அளித்திருக்கிறார் 

“ 24-04-2013 ஜூ .வி இதழில் இலங்கையைச் சேர்ந்த தேசிய ஐக்கிய முன்னணிப் பொதுச் செயலாளர் ஆசாத் சாலின் பேட்டி வெளியானது. அந்தப் பேட்டி தொடர்பாக அவர் இப்போது நமக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  "அந்தப் பேட்டியில் இலங்கையில் முஸ்லிம்கள் நிலையை சொல்லியிருந்த நான் " எங்களை  ஒரு விதமான நெருக்கடிக்குள் தள்ளினால் அப்போது முஸ்லிம்கள் ஆயத்தங்களைத் தூக்கவேண்டிய துரதிஷ்டமான நிலையை அரசாங்கம் ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. " என்ற அர்த்தத்தில்தான் நான் பேட்டி அளித்திருந்தேன் .அத்தகைய சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய எண்ணம். என்று தெரிவித்திருக்கிறார் .

அதில் அவர் திரிவு படுத்தி எழுதியதாக சொல்ல முடியவில்லை ஏனென்னில்  அப்பேட்டியை எடுத்தவர் , ஆசாத்தின் கைதுக்கு வருத்தம் தெரிவிக்கிறார் ஆனால் திரிவுபடுத்தப்பட்ட செய்தி என்ற குற்றச்சாட்டை  அவர் பின்வருமாறு மறுக்கிறார். 
ஆசாத் சாலியின் பேட்டியை ஜூனியர் விகடன் திரிவுபடுத்தி வெளியிட வேண்டிய அவசியமில்லை ஆசாத் சாலி என்ன கூறினார் என்பது அவருக்கே விளங்கும் .அதே நேரத்தில் ஆசாத் சாலியின் கைதும் கண்டிக்கத்தக்கதே -ஆசாத் சாலியை நேர்முகம் கண்டவர் செசா ( சொ ,பாலசுப்ரமணியன்-24/4/13)

ஹக்கீம்  காவிஉடை தரித்த பயங்கரவாதிகள் என்று பௌத்தத் குருமாரை ஏகத்துக்கு ஏசியதை வாபஸ் வாங்கிக் கொண்டார். தலைவன் நிதானமாகப் பேச வேண்டும். இதயத்தை பேச விடுபவன் அல்ல தலைவன் என்பதை இது நிரூபிக்கிறது. உணர்வுகளைத் தூண்டுவது வாயக்கு வந்ததை உளறுவது  முஷ்டியை முடக்குவது அல்ல தலைவனின் தகுதி . ஆசாத் சாலி இதில் எந்த ரகம் என்பது அவரின் கடந்த கால அரசியல்  நடவடிக்கைகளை  கொண்டும் உரசிப் பார்க்கப்படல் வேண்டும். 

ஆட்சி மாற்றம் வேண்டி நிற்கின்ற சில அரசில் கட்சிகளும் ஆசாத் சாலியுடன்  கூட்டமைத்திருக்கிறார்கள் . அதிலும் புலிகளின் மாவீர (மா படுகொலைகளைச் செய்தவர்கள்) நாளில் இலண்டனில் கலந்து கொண்டு , புலம் பெயர் நிதியினை  நாடி நிற்கும் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன. ஸ்ரீ ரணதுங்க , சுமந்திரன் , மனோ கணேஷன் ஆகியோரையும் அவர்களின் உறவையும் முஸ்லிம்களுக்கு நன்மை பயப்பதற்கு பதிலாக எவ்வித பிரயோசனத்தையும் தராது என்பதை ஹக்கீமிடம் கேட்டே தெரிந்து கொள்ளலாம் . இப்படி உதிரிக் கூட்டணி அமைத்து முஸ்லிம் சமூகம் அடைந்த லாபம் ஒன்றுமில்லை . இடதுசாரி ஸ்ரீ ரணதுங்க இலண்டனில் சு ப தமிழ் செல்வன் , தன்னிடம் தமிழ் ஈழத்தை சிங்கப்பூராக மாற்றப்போவதாக கூறினார் என்று கூறியவர் , அதற்கான ஒரு விவாதப் புள்ளியை எனக்கு ஏற்படுத்தியவர்.

ஆசாத் தடுப்புக் காவலில் உண்ணாவிரதம் இருக்கிறார் , இப்போது தமிழ் அரசியலில் பாடம் கற்றுக் கொள்ளும் ஆசாத்தைப்  பார்த்தால் பழைய ஞாபகங்கள் வருகின்றன. தனது உண்ணாவிர உபாயம் பலிக் கவில்லை என்பதற்காக தமிழ் இளைஞர்களை ஆயுதம்  தூக்க ஆட்காட்டி விரல் நீட்டி ஆணையிட்ட எஸ்.ஜே வி செல்வநாயகமும் , அவரின் ஆணையைத்    தலைமேற்க்  கொண்டு ஆயுதம் தூக்கிய பிரபாகரன் வகையறாக்களும் ஒரு சேர ஆசாத் சாலியின் போராட்டத்தில் இப்பொழுது புனர்ஜென்மம் எடுக்கிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில் ஒருபுறம்.  ஆசாத் சாலி ஆயுதம் தூக்கிப் போராட ஒரு எச்சரிக்கை விடுகிறார் மறுபுறம் , உண்ணா விரதமும் இருக்கிறார்.  அவர் குறை கண்டு கண்டித்த ஜம்மியத்துல் உலமாவும் , அவரால் மிக கேவலமாக இழித்துரைக்கப்பட்ட பொன்சேகா கூட இப்போது அவருக்கு அனுதாபக் குரல் கொடுக்கிறார்கள். ஆம் நிச்சயமாக ஆசாத் சாலியின் கைதுக்  கெதிராக சட்டத்தின் மூலம் சவால் விட வேண்டும் , அவரைப்போல் எவரேனும் அத்தகைய  குற்றமிழைத்தாக சந்தேகிக்கப்ப்படுமிடத்து , அவர்களும்  கைது செய்யப்பட்டு பாரபட்சமற்ற முறையில் சட்டத்தின்முன்  சகலரும் சமன் என்ற அடிப்படையில் சட்டம் தனது கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுதான் ஒரு நியாயமான கருத்தாக இருக்கும். . 

சற்றுச்  சடுதியாய்  பின்னோக்கி 
  
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆசாத் விலக்கப்பட்டதும் " சிறுபான்மை மக்களின் அறுபது வீதமான வாக்குகள் மஹிந்த ராஜபக்சவிற்கே உண்டு என்றும் மேலும் முஸ்லிம்களுக் கெதிரான சக்திகளான ஐக்கிய அமெரிக்கா பிரித்தானியா நோர்வே  ஆகியன சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவளிக்கின்றனர். சரத் பொன்சேக்கா ஜனாதிபதியானால் சிறுபான்மையினர் நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்றும் , கபடத்தனமான  முன்னெடுப்புக்களை செய்து  அமெரிக்காஐரோப்பிய யூனியன்  பிரித்தானியா நோர்வே போன்ற நாடுகள் ஜனாதிபதி மகிந்தவை வெளியேற்ற முயற்சிக்கின்றனர் என்றும்   ரணில் விக்ரமசிங்க சர்வதேச சமூகத்தினால்  (அதாவது இப்போது ஆசாத் சாலியின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் நாடுகள்) கட்டுப்படுத்தப் படுகிறார். அவர் ஒரு முடிவை எடுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதுவர்களை ஆலோசிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.அவையே    இவருக்கு ஆணை யிடுகின்றன . அவர் ஒரு வெளிநாட்டு தூதுவர்களால் வழங்கப்படும் கயிற்றை விழுங்கும் ஒரு சர்வதேச சமூகத்தின் மடி நாய் " என்றும் குறிப்பிட்டிருந்தார் . 

இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு தொலைக்காட்சியில் பகிரங்கமாக தனது கட்சி தலைமத்தும் மீது இழிவுக் குற்றச்சாட்டை மேற்கொண்டதற்காக ரணிலால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். ரணில் ஆசாத்துக்கு எழுதிய கடிதத்தில்  கட்சியின் அதியுயர் குழுவின் முடிவுகளை தொலைக்காட்சி அலைவரிசையில் விமர்சனம் செய்ததற்காக ஆசாத் சாலிக்கு மன்னிப்பே வழங்கப்படாது என்று குறிப்பிட்டிருந்தார்.

தனது  கொழும்பு மாநகரசபைப் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு , ரவூப் ஹக்கீம் , அதாவுல்லா ரிச்சர்ட் பதியுதீன் போல் சுயேட்சையாக கிழக்கு மாகான சபைத் தேர்தலில் நான்காவது சக்தியாக போட்டியிடப போவதாக தமிழ் பேசும் மக்களின் சுயாதீன ஒன்றியமாக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக  ஆசாத் சாலி தெரிவித்துதனிச் சக்திகாக செயற்பட முடியாமல் பின்னர் முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து போட்டியிட்டவர். விரைவாக தலைவராக பல முயற்சிகள் செய்தவர். கொழும்பு மாநகர சபையில்  சக உறுப்பினர் மக்ரூபுடன் முஸ்டி முறுக்கியவர் என்று செய்திகள் வந்தன., முஸ்லிம் காங்கிரசில் சென்ற கிழக்கு மாகான சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதும் முஸ்லிம் காங்கிரசின் தலைவரை , கட்சியை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியவர் , , அப்போது ஆஹோ ஓஹோ என்று புகழ்த்த மஹிந்தையை
இப்போது மிகக் கேவலமாக தனது விகடன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தத்தில் ஆசாத் சாலி தனது தந்தை சாலி பின்பற்றிய இஸ்லாமிய சோஷலிச  முன்னணிக் கொள்கையிலுமில்லை , எந்தவித அரசியல் கொள்கையிலும் நிலையாக நிற்பவராகவும் தெரியவில்லை. ஆயினும்  சிறை மீண்ட செம்மலாக ஒரு வரவேற்பு நிச்சயம் உண்டு!!

:அவர் ஏதோ ஒரு சக்தியின் முகவராகச் செயற்படுகிறார் , அந்த சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவரது கருத்துக்கள் வெளிப்படுகின்றன என்பதை நான் உணர்கிறோம் என்று முஸ்லிம்  காங்கிரசின் மாகான சபை உறுப்பினர் ஜமீல் இவர் பற்றி சொன்ன கருத்தையும் கண்டு கொள்வது (முசல்மான் முசல்மானை பற்றி சொல்லும் கருத்தாக இருக்குமல்லவா!)  
இந்த வேலையின் ஒரு ஞாபக மூட்டலுக்காக   அஸ்ரப் இந்திய பத்திரிக்கையான விடி வெள்ளிக்கு  தான் மரணிக்க ஒரு வாரத்திற்கு முன்னர்  வழங்கிய பேட்டியினையும் இங்கு ஒப்பீடுசெய்தால் ஆசாத் சாலி எங்கு நிற்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்   

அஸ்ரப் அந்த பேட்டியில்  குறிப்பட்ட விசயங்கள் குறிப்பாக புலிகள் சம்பந்தமாகக் தமிழ் அரசியல் தலைமைகள் சம்பந்தமாக குறிப்பிட்டவை நோக்கற்பாலது.
புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் கிழக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம் வரலாற்று ரீதியிலானதா அல்லது தற்செயலாக நிகழ்ந்த சம்பவமா?”

"இதற்கு புலிகளின் இனச்சுத்திகரிப்புதான் காரணம். இலங்கை முஸ்லிம்களுக்கு 110 வருட அரசியல் பாரம்பரியம் இருக்கிறது. ஆனால் எங்களைப் பார்த்து இஸ்லாமியத் தமிழர்கள் என்று கூறி எமது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலும் இப்படியாகவே முஸ்லிம்களைப் புறக்கணித்தனர்.

உரிமையை பொதுமைப்படுத்தினார்கள். நாங்கள் இதனாலேயே அதிகம் பாதிக்கப்பட்டோம். இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ நாங்கள் இணையக் கூடியவர்களாக இல்லை. எங்களது இறை நம்பிக்கை ஊடாக தனித்துவம் உடையவர்களாக இருந்ததுதான் அவர்களுக்கு உள்ள பிரச்சினை. இதனால்தான் கிழக்கில் முஸ்லிம்களை தொழுகையில் ஸஜ்தாவிலும் ருகூவிலும் சுட்டுப் படுகொலை செய்தனர். வடக்கில் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றினார்கள். இதனை எதிர்த்துத்தான் புரட்சி செய்தோம்.""

ஆனால், ஒரு விசயத்தைச்   சொல்ல விரும்புகிறோம். தமிழ்த் தலைவர்கள் எப்பொழுதுமே வெறும் வாய்ப்ச்  பேச்சுக்களாக  வெறுமனே சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, ஆக்கபூர்வ  நடவடிக்கைகளுக்கு வர மாட்டார்கள் என்பதே உண்மை நிலை."

எது எப்படியாயினும் ஆசாத் சாலியின்  கைது இன்று சர்வதேச விவகாரமாகி விட்டது, சட்டப்படியான உரித்து இலங்கைப் பிரஜை என்ற வகையில் அவருக்கு  வழங்கப்படல் வேண்டும் , அவரும் விடாப்பிடியாக உண்ணாவிரதம் இருப்பதை நிறுத்தி தனது விடுதலைக்காக  முதலில் போராட வேண்டும் அவருக்கான சட்ட வல்லுனர்கள் அவரை விடுதலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் . வெறுமனே அரசத் தலைவருக்கு கடிதமும் எழுதுவதும் வேண்டுகொள் விடுவதையும்  விட   அடிப்படை மனித உரிமைச் சட்ட நிவாரணங்களினை நீதிமன்றில்  நாட வேண்டும்."


05/05/2013

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...