”கனவு மெய்ப்படல் வேண்டும்: (கிளிநொச்சி )கைவசமாவது விரைவில் வேண்டும்.”

- எஸ். எம். எம்.பஸீர்

2009 ம் ஆண்டு இலங்கையின் அரசியல், போரியல் வரலாற்றில் கனவு குறித்து சிலாகிக்கப்படும் ஒரு வருடமாக புலப்படுகின்றது. கிழக்கின் முதல்வர் திரு சந்திரகாந்தன் அவர்கள் ”கனவு மெய்ப்படவேண்டும்” என தனது புதுவருட வாழ்த்தில் குறிப்பிட்டதும் இலங்கை ஜனாதிபதியின் கிளிநொச்சி ”கைவசமாவது விரைவில் வேண்டும” என்ற பாரதியின் மீதிக் கனவும் பகற் கனவல்ல என்பதும் மறுபுறம் பிரபாகரனின் கிளிநொச்சி கைநழுவாது என்ற கனவுதான் பகற்கனவாகியுள்ளதா? என்ற கேள்வி இன்று பரவலாக எழுப்பப்பட்டுள்ளது.



சென்ற வருட நடுப்பகுதியில் சுவிஸில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பொங்கியெழுந்த கஜேந்திரன் எம்.பி ”எங்களுக்கு தலைவர் ஒருவர் இருந்தால் போதும் எங்களுடைய போராட்டத்தினை அழித்துவிடமுடியாது. அவன் (இலங்கை இராணுவம்) கிளிநொச்சியை நெருங்கிவிட்டோம் அல்லது புலிகளின் இறுதியை முடிப்பதற்கு நாங்கள் நெருங்கிவிட்டோம் என்று சொன்னால் நீங்கள் மாறி நினைக்கவேண்டும். எங்களுடைய தலைவர் அவனுக்கு கொடுக்கின்ற காலம் (இலங்கை ராணுவத்திற்கு) நெருங்கி வருகின்றது. என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவன் எங்களை நெருங்க, நெருங்க அவனுக்குரிய இறுதிக்காலம் நெருங்கி வருகிறதுதான் உண்மை. சிங்களவனிடம் கையேந்திப் பெறுகின்ற ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாரில்லை. எங்களுடைய தமிழீழத் தனியரசு நிறுவப்படும் எங்களுடைய தமிழீழக் கொடி ஐக்கிய நாடுகள் சiயிலும் பட்டொளிவீசி பறக்கும். நீங்கள் தலைவர் பிரபாகரனை நம்புங்கள் அவர் இருக்கும்வரை எங்களுடைய போராட்டத்தினை எவரும் எதுவும் செய்துவிட முடியாது”. இவ்வீர உரை வழக்கம்போல புலி ஆதரவாளர்களின் விசில்(Whistle) ஆர்ப்பரிப்பைப் பெறத் தவறவில்லை. கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னர் கஜேந்திரன் எவ்வித வெட்கமுமின்றி  " தமிழ் மக்கள் உணர்வோடும், உரிமையோடும் ஊட்டி வளர்த்த எங்களுடைய விடுதலைப் போராட்டம் நாளும், பொழுதும் எங்களுடைய நிலங்கள் மீட்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த மக்களுக்கு இந்த கிளிநொச்சி எங்களுடைய கையை விட்டுப் போய்விட்டது என்ற கவலை நியாயமானது”. நல்லவேளை இந்த பின்னோக்கிய நகர்வினை பகிரங்கக் கூடட்த்தில் கஜேந்திரன் கூறவேண்டி ஏற்படவில்லை.

பங்காள தேசம் தனிநாடாக பரிணமித்தபோது மு.மேத்தா அவர்கள் எழுதிய கவிதை வரிகள் மனதில் இன்று மெலிதாய் ஞாபகத்திற்கு வருகின்றது.

”முக்திவாகினி தோழர்களே!
”உங்கள் ஞானக் கனவுக்கு
மோன உருத்தந்த
மூத்த சகோதரன் முஜீப் நலமா”

என்பதுபோல் தமிழீழ தனிநாட்டுப்  பரிணமிப்பின்போது புலித் தோழர்களை விழித்துப் பாட காத்திருந்த தமிழகக் கவிஞர்கள் தங்கள் கனவு கலைந்து போயிருக்கிறார்கள். கவிஞர் கனிமொழி ”நடக்காது என்பார் நடந்துவிடும்”, வைரமுத்த ”தலையில் இடி விழுந்து விட்டது” என்றும் புலம்புவதும் இதனை புலப்படுத்துகிறது.

ஆயினும் இன்னும் இறுதி வெற்றி எங்களுக்கே என்ற குரலும். ஆங்காங்கே ஆரவாரமற்று கேட்பதும். புலிகள் முற்றாக தோற்றால்தான் என்ன எங்கள் போராட்டம் தொடருமென்ற செய்திகளும் சுட்டிக் காட்டுகின்ற போராட்டமும், மறுபுறம் தமிழர் சிறு ஜனநாயக சக்திகள், மற்றும் சிறுபான்மையின கட்சிகள் ஒன்றுபட்டு அரசியல் தீர்வினை முன்னெடுப்பதாக கூறும் போராட்டமும் மீண்டும் தொடக்கப் புள்ளிக்கே செல்லும் போராட்டங்களே தவிர வேறு எதுவுமில்லை. புலிகளின் பிதாமகர்களில் ஒருவரான பேராசிரியர் க. சிவத்தம்பி கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்னர் அடக்கி வாசிக்கின்றார் என்பதனை ”கிளிநொச்சியின் பின்புலம்” என்ற கட்டுரையில் காணாமல் இருக்கவும் முடியவில்லை. ”இந்தச் சம்பவத்தை காய்தல் உவத்தலின்றி ஒரு யுத்த நிகழ்ச்சித்தொகுதியாக நோக்கும் பொழுது அரசாங்கத்தின் நிலப்பாட்டில் நியாயமுள்ளது. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தின் இறைமைக்கும், அதற்கான அதிகாரத்திற்கும் சவால் விட்டுக்கொண்டிருந்த ஒரு எதிர் குழுமம் அந்த நிலையிலிருந்து பின்நகர்ந்துள்ளமையை வேறு விதமாக எடுத்துக் கூறுவது சிரமமாக இருக்கும்.”

இந்த பகைப்புலத்தில்தான் தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு ஆபத்த வந்துள்ளதாக, தன்னாட்சி உரிமைக்கு குரல் கொடுக்க இலங்கை ராணுவத் தளபதியையும், இலங்கை அரசினையும் மலினப்படுத்துகின்ற கருத்துக்களை அள்ளிவீசி தமிழ் மக்களின் தலைமைத்துவக் குரலாக ஒலிக்க முற்படும் ரவூப் ஹக்கீம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சவால்களும், சாதனைகளும்

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் வெற்றியீட்டியமை குறித்து புலிகளின் வானொலி அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் க.வே பாலகுமாரன் அங்கத தொனியில் குறிப்பிட்ட ஆரூடம் என்னவாகப் போகிறது என்ற கேள்வி கிளிநொச்சியை, ஆனையிறவைத் தாண்டி முல்லைத்தீவை எட்டி நிற்கின்றது. ”மஹிந்தவின் வெற்றி –பிரபாகரனின் வெற்றியின் தொடக்கம.; அதாவது பிரபாகரன் அவர்கள் உருவாவதற்கு பண்டா அவர்கள் காரணமாக இருந்தது உண்மை. அதுபோலவே மஹிந்தரின் வெற்றியானது பிரபாகரனின் வெற்றிக்கான வாய்ப்பாக அயைப்போகின்றது. தொடங்கப்பட்டது அந்த பண்டாவால் முடிக்கப்படவுள்ளது இந்த மஹிந்த பண்டாவால்” (நவம்பர் 2005 புலிகளின் வானொலி அரசியல் அரங்க நிகழ்ச்சி)

இந்த (மஹிந்த பண்டாவிற்கு வெற்றியா –பிரபாகரனுக்கு வெற்றியா என்பதை நிர்ணயிக்கும் தருணம் தூரத்தில் இல்லை என்பதனை கிளிநொச்சி தாண்டிப் புறப்படும் (இ.போ.ச) பஸ்ஸில் (அண்ணே றயிற் சொல்லி) யாழ்ப்பாணத்திலிருந்து பஸ் புறப்பட்டு விட்டது என்ற செய்திகள் கூறுகின்றன. இனிமேல்தான் இலங்கைவாழ் தமிழ்மக்களினதும், புலம்பெயர்வாழ் தமிழ் மக்களினதும் கனவுகள் வெவ் வேறானவையா அல்லது ஒன்றானவையா என்று புரிந்து கொள்ளமுடியும். 

நன்றி:  மகாவலி இணையம் 13 ஜனவரி 2009 

 (http://webcache.googleusercontent.com/search?q=cache:9hA0OLYUvz0J:www.mahaveli.com/%3Fp%3D12+&cd=1&hl=en&ct=clnk&gl=uk&client=firefox-a)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...