Sunday, 6 January 2013

(கமலின்) விஸ்வரூபமும் (முஸ்லிம்களின்) ஈத் பிரியாணியும்
எஸ்.எம்.எம், பஷீர்"ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிர மாண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண்
அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி,
கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்
சாதியுஞ் சாமியும் சாராயம் போல்
சந்தைக் கடையில் விற்குது காண்
சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும், 
மாறா வர்ணம் நாலும் காண்"
                                                

                             (  கவிதை :    கமல் ஹாசன் )

 
தமிகத்தின் பிரபல நடிகர் கமல் ஹாசன் எழுதி இயக்கித் தயாரித்த விஸ்வரூபம் எனும் திரைப்படம் எதிவரும் பத்தாம் திகதி திரையரங்குகளில் திரையிடப்பட சில  தினங்களுக்கு முன்னரே இந்திய தேசியத் தொலைக் காட்சிகளில் தொலைக்காட்சியிடப்படுகிறது.  ஆனால் இப்படம் வெளிவர முன்னரே இப்படத்திற்கான  விளம்பரங்களில் இப்படத்தின் பெயர் அரபு எழுத்தணி வடிவத்தில் அமைந்திருப்பதும் ட்ரைலர் , ஸ்டில் என்பன பொதுவாக அமெரிக்காவினதும் அதன் நேச அணி நாடுகளினதும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்படும் பயங்கரவாதத்திற் கெதிரான யுத்தம் பற்றியதாக அமைந்திருப்பதும் , ஆங்காங்கே ஊடகங்களில் வந்த படத்தின் கதை பற்றிய ஊகங்கள் முஸ்லிம் மக்களின் சமூக கலாச்சார விழுமியங்களை புண்படுத்துவதாக அமைந்துள்ளன என்ற கருத்தும் முஸ்லிம்களுக்குள் இப்படம்  குறித்து எதிர்பினை ஏற்படுத்திள்ளது .  


இந்தப் பின்னணியில் இலங்கை தென்னிந்திய முஸ்லிம் சமூக மத அரசியல் நிறுவனங்கள்  பல இப்படம் திரையிடப் படும் பொழுது அப்படத்திற் கெதிராக அப்படம் திரையிடப்படும் திரையரங்குகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாகவும் , சகல விதத்திலும் அப்படத்திற் கெதிராக தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டப் போவதாகவும் எச்சரித்துள்ளார்கள் . இந்த பின்னணியில் அண்மைகாலமாக தமிழ் சினிமா உலகில் முஸ்லிம்களை தேச விரோதிகளாக , பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு ஒன்று மேலெழுந்துள்ள சூழ்நிலையில் கமலின்  விஸ்வரூபம் படம் பற்றிய கதைக் கரு இந்திய நாட்டுக்கு அப்பால் அமைந்திருந்தாலும் , பொதுவாக முஸ்லிம் மக்களை ( பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் )  அவர் தம் வாழ்வியல் அம்சங்களை அமெரிக்காவிலும் ஆப்கானிஸ்தானிலும்  பயங்கரவாத எதிர்ப்பு முறியடிப்பு நடவடிக்கைகள்  இடம்பெறுவதாக பின்னப்பட்ட கதைச் சூழலில் எவ்வாறு சித்தரிக்கப் போகின்றது என்ற எதிபார்ப்பு கிளப்பிய எதிர்ப்புக்கூட இப்படத்திற்கான விளம்பரத்தை இலவசமாக செய்துள்ளது.
கமல் ஹாசன் ஓர் திரைப்பட நடிகர் என்பதற்கப்பால் , பல திரையுலக பரிசோதனைகளை மேற்கொள்பவர் , தமிழ் திரை உலகில் புதுமைகளை புகுத்துவதில் அவருக்கு நிகர் அவரே என்று சிலாகித்து பேசப்படுபவர். சினிமா என்பது அவரின் தொழிற் துறை , சுயாதீனமாக அதில் அவர் தான் விரும்பும் கருத்தை வெளிப்படுத்தும் திரைப்படங்களை தாயாரிப்பது அல்லது அதில் நடிப்பது என்பது அவரின் உரிமை என்பதில் இங்கு கேள்வி எழுப்பவேண்டிய அவசியமில்லை  . அவரின் விஸ்வரூபம் எனும் திரைப்படம் முஸ்லிம் மக்கள் குறித்து பொத்தாம் பொதுவாகவோ அல்லது குறிப்பாகவோ சொல்ல வரும் செய்தி என்ன , அந்த செய்தி முஸ்லிம் மக்களின் சமூக மத உணர்வுகளை காயப்படுத்துகிறதா என்ற கேள்விதான் இப்போது விஸ்வரூபமெடுத்திருக்கிறது. 
அவரின் அண்மையில் வெளிவந்த சொந்தத் தயாரிப்பான உன்னைப்போல் ஒருவன்”  திரைப்படத்தில் கமல் சொல்ல வந்த செய்தியிலுள்ள நியாயமும்  சட்ட ஆட்சி , ஜனநாயகம் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளைத் தகர்க்கும் கருத்துப் பிறழ்வு பிரச்சாரங்களும் , நாடளாவிய ரீதியில் இந்திய முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகள் ஹிந்துத்துவ தீவிரவாத சக்திகளின் அடாவடித்தனங்கள் , அத்துமீறல்கள் என்பன  புறந்தள்ளப்பட்டு தீவிரவாத குற்றவாளிகளாக  சந்தேகிக்கப்படும் சில  தனி நபர்களினை நீதியின் முன்னிறுத்தாமல் , தனி மனித நீதி வழங்குத லுக்கு உட்படுத்தும் பொறிமுறையும்  பற்றிய திரைப்படமே உன்னைப்போல் ஒருவன்.”
 
ஒரு தீவிரவாதியை பொலிசார் பிடித்தால் அவனை விசாரணை , தீர்ப்பு , சிறைச்சாலை என்றெல்லாம்  இழுத்துக் கொண்டிராமல் அவனைக் கொன்று விட வேண்டும் ,  என்பதை தனது உன்னைப்போல் உருவன் திரைப்படத்தில் பொலிசாருக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ள ஒரு  "பொது மகன் " (Common Man) கதாபாத்திரத்தில் தன்னை  மறைந்திருந்து அடையாளப்படுத்தி பொலிசாரின் காவலிலுள்ள தீவிரவாத /பயங்கரவாதக் கைதிகளைக் கொன்று விடுகின்ற அல்லது கொல்லப் பண்ணுகின்ற பாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். இந்தப் படத்தின் போதனைக்  கோட்பாடு என்னவென்றால் ஜனநாயக நாட்டில் அமைந்துள்ள நீதி வழங்கலின்  அடிப்படைக் கோட்பாடான ஒரு சந்தேக நபரை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் அக் குற்றம் நீருபிக்கப்படும் வரை நிரபராதியாகக் கருத வேண்டும் என்ற மனித உரிமைக் கோட்பாட்டை மீறி , சிவில் நிர்வாக அமைப்பின் ஒரு அங்கமான நீதியை ஒழுங்கை நிலை நாட்டும் காவல் துறையினரை , அதே தீவிரவாத /பயங்கரவாத நிலைப்பாட்டை  எடுத்து தமது காவலிலுள்ள தீவிரவாதிகளைக் கொன்றழித்து விட வேண்டும் என்பதே, இப்படம் ஹிந்தியிலும் ஒரு புதன்கிழமை ( A Wednesday) என்ற பெயரில் வெளியானது இப்படத்தில்  நஸ்ருதீன் ஷா எனும் ஒரு முஸ்லிம் பொலிவூட் நடிகர்  கமலின் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் இரண்டும் இரு மொழிகளில் வெளியான ஒரே பதிப்புத்தான்  , ஆயினும் சில வசனங்கள் மட்டும் ஹிந்தியில் மாற்றமாகவே அமைந்திருந்தன. இப்படத்தின் மூலம் கமல் ஹாசன் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தியிருந்தார் என்பதே பரவலான முஸ்லிம் மக்களினதும்  தமிழக முற்போக்கு சமூகத்தினதும் கருத்தாக இருந்ததுமுஸ்லிம் மக்களைப் புன்படுத்தும் விதத்தில் இப்படத்தின் வசனங்கள் ஆங்காங்கே அமைந்திருந்தன என்பதை விட இப்படத்தின்  இறுதியில் கீதையில் அர்ச்ச்னனுக்கு கண்ணன் கூறிய உபதேசம் பின்னணியில் ஒலிக்கின்றது என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது 
“A Wednesday”   படத்தில் உன்னைப்போல் ஒருவனில் உள்ள தொடக்க பாடலான  “அல்லா ஜானே அல்லா ஜானே” எனும் பல்லவி இல்லை ;  பட இறுதியில் ஒலிக்கும் கீதையின் உபதேசமும் இல்லை.   உன்னைப்போல் ஒருவன் படம் முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றியும் அவர்களுக்கு ஆயுதம் விநியோகிக்கும் ஒரு இந்து பற்றியதுமான  கதை . அப்படத்தில் தொடக்க பாடலில் முஸ்லிம் மக்கள் இறைவனை அழைக்கும் அல்லாஹ் எனும் சொல்லே இங்கே ஜானே அல்லா என்று தத்துவ விசாரணை கொண்ட பாடலுடன் தொடங்கி    காவல்துறையின் பாதுகாப்பிலுள்ள தீவிரவாதிகள் குண்டு வைத்தும் சுட்டும்  கொன்ற பின்னர்   இறுதியாக கீதாபோதேசம் ஒலிக்கிறது.
 
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய   துஷ்க்ருதாம்
தர்ம  ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே


( நல்லவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான்  யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன் )
 
இப்படத்தின் முடிவு எப்படி ஒரு இஸ்லாமிய ஆரம்பத்தை இப்படத்திற்கு ஏற்படுத்தியதோ , அதற்கு   எதிர்நிலையில் , இப்படத்தின் முடிவுக்கு ஹிந்து மத நியாயத்தை கற்பிக்கிறது.  தமிழக சினிமாவில் முஸ்லிம் கதா பாத்திரங்கள் 

முஸ்லிம்களின் தனிமனித கதா பாத்திரங்கள் அமைவதான தமிழ் திரைப்படங்களில் அப்பாத்திரங்களில் நடிக்கும் தமிழ் நடிகர்கள்   தலையிலே துருக்கித் தொப்பிகழுத்திலே தாயத்து , கட்டம் போட்ட கைலியை (சாரம் ) அணிந்தவர்களாகவே  காண்பிப்பது   என்பது தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பாத்திரப்  புனைவுகள் கொண்ட சகல தமிழ் நாட்டு திரைப்படங்களிலும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது

அதற்கு மேல் பல வேளைகளில் நான்நீ , அல்லது நாங்கள் நீங்கள் அல்லது உங்களுக்கு எனக்கு என்பதை  சொல்ல   முஸ்லிம்கள் “நம்பள்கி” “ நிம்பள்கீ என்றெலாம் கிண்டலாய் பேசுவதாகவும் அமைதிருப்பதுண்டு. 
அப் பாத்திரம் பாடுவதாக காட்சி அமைந்தால் கைகளிலே "றப்பான்"  எனப்படும்  ( அரபு நாடுகள் பலவற்றில் பரவலாகவும்   தென்னிந்தியாவில் உள்ள மிகச் சிறுபான்மையான பக்கீர் எனப்படும் ஒரு சமூகப் பிரிவினராலும் பாடல்களில் பயன்படுத்தப்படும்  )வாத்தியக் கருவியான இறப்பானில்  அறைந்து சப்தமெழுப்பி பாடுவதாக  காண்பிப்பார்கள். சிவாஜி கனேசனின் பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெறும் , முஸ்லிம்களுக்குள் இன்றுவரை பிரபல்யமான பாடலான ' எல்லோரும் கொண்டாடுவோம் ' எனும் பாடலை தி. எம். சௌந்தரராஜனும் , நாகூர் ஈ எம் ஹனிபாவும் சேர்ந்து பாடுவதாக காண்பிக்கும் காட்சியிலும் அப்பாடலுக்கு வாயசைத்து நடிக்கும் சிவாஜி கணேசனும் நாகூர் ஹனிபாவின் பாடலுக்கு வாயசைக்கும்  நடிகரும் தாயத்து  , துருக்கிச் தொப்பி , றப்பான் , கட்டம் போட்ட கைலி என தமிழக சினிமாக்காரர்களால்  அடையாள படுத்தப்பட்ட முஸ்லிம் பாத்திரங்கள் தான். உண்மையில் சினிமாவில் காட்டுகின்ற துருக்கித் தொப்பி தாயத்து என்பவற்றுக்கும் தமிழகத்து முஸ்லிம்களுக்கும் உள்ள சம்பந்தம் மிக மிக தூரமானது என்பதுடன் முக்கியத்துவமுமற்றது. தேசிய நீரோட்ட முஸ்லிம் பெரும்பான்மையினரின் சாமான்ய வாழ்வியல் உடை .பண்பாட்டு கலாச்சார அடையாளத்தை நிறுவும் குறிகாட்டிகளாக அவ்வாறான காட்சிப்படுத்தல்களை கொள்ள முடியாது.

எல்லோரும் கொண்டாடுவோம் பாடலில் வரும் தொகையறா வரிகளில் "ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" ( ஆடவராத அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையில்லை என்ற எதிரிடையான கருத்து இவ்வரிகளின் எதிர்க் கருத்தாக அமைந்து இவ்வரிகளை அர்த்தமற்றதாக்குவது  ஒருபுறம் இருக்க ) இந்த வரிகள் மொத்தத்தில் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளுக்கு முரணானது. கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அடிப்படையில் பிரித்து நிற்கும் பிரதான அம்சமே கடவுளுக்கு பிள்ளை ஏசு (ஈசா ) இல்லை என்பது தானே.  அஃறினையில் சொல்லப்பட்டாலும்  இந்த அர்த்தமற்ற , தங்களின் மத அடிப்படை கொள்கைக்கு முரணான வரிகளை மொத்த பாட்டின் பொருளில் லயித்து பொருட்படுத்த  முஸ்லிம்கள் தவறிவிட்டார்கள் என்பதால்தான் இந்தப் பாடல் முஸ்லிம்களால் இன்றுவரை " விரும்பிக்" கேட்கப்படுகிறது. நாகூர் ஹனிபா இந்தப் பாட்டை தனித்து வேறு பாடியுள்ளார் . அவரும் அந்த தொகையறாவுடன் சேர்த்தே பாடியுள்ளார். அதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் தலையில் துருக்கித் தொப்பியோ அல்லது வேறு எந்த தொப்பியோ அணியாமல் ,கைலி கட்டாமல் , இறப்பான் அடிக்காமல் நீண்ட காற்சட்டை   (Trousers) ( கழுத்திலே ஏதோ ஒரு மணி மாலை ) அணிந்து  பாடியுள்ளார்.


உதுமானிய  முஸ்லிம் கிலாபா கால கலாச்சார எச்சங்கள் ஆங்காங்கே இந்திய  சுதந்திரப் போராட்ட காலத்தில்  ஒரு வரலாற்று  நீட்சியாக காணப்பட்டன என்பதால் , மறைந்த இந்திய முஸ்லிம் லீகு தலைவர் காய்தே மில்லத் இஸ்மாயில் சாகேப்,  குஞ்சம் உள்ள துருக்கித் தொப்பியையே அணிந்திருந்தார். ஆயினும் அது பொதுவாக முஸ்லிம்கள் அணிகின்ற தொப்பியல்ல. ஒரு குறிப்பட்ட தொப்பியை அணியும் வழக்கம் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடையே காணப்பட்டிருக்கிறது.  இப்போதும் சிலரிடம் காணப்படுகிறது, மக்காவில் பிறந்து இந்தியாவில் சிறு பிராயமுதல் வாழ்ந்து இந்திய சுதந்திரத்துக்காக காந்திஜியுடன் இணைந்து போராடிய அறிஞர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கூட பல வேளைகளில் கருப்பு தொப்பி அணிந்திருப்பார். இந்த தொப்பி குஞ்சமில்லாத , சற்று பெரிய தொப்பி. பாகிஸ்தானின் சிற்பி காயிதே ஆசெம்  முகம்மதலி ஜின்னாவும், இஸ்லாமிய மத நடைமுறைகளில் ஆர்வம் காட்டாதவர் . என்றாலும் அவரும் சிறிதாக ஒரு தொப்பியை அணிந்து காணப்பட்டுள்ளார்.  அதிகம் ஏன் , முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த நேருஜியும் , அண்மையில் மறைந்த இந்தியாவின் ஏழாவது பிரதமர் வீ.பீ சிங்கும் ,(வீ பீ சிங் அணிந்த தொப்பி மௌலானா அபுல் கலாம் ஆசாத்  அணிந்த தொப்பியை ஒத்தது) நேதாதி சுபாஷ் சந்திரபோஸ் என பிரபலங்கள்  பலரும் மேலும் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் என வெள்ளைத் தொப்பி அணிவதை காங்கிரசின் கட்சி அடையாளமாகவே கொண்டிருந்தனர்.

கமல் "ஹாசனும் தமிழக முஸ்லிம்களும்ஏன் விஸ்வரூபம் கதை எனும் நாமத்தை இந்தப் படத்துக்கு கமல் சூட்டியுள்ளார் என்பது பற்றி இதுவரை எந்த முகாந்திரங்களும் தெரியப்படுத்தப் படவில்லை ஆனால் சில விமர்சகர்கள் படத்தின் கதக் நாட்டிய கலைஞன் கமலின் பெயர் விஸ்வநாதன் , அவரை அமெரிக்காவில் வாழும் உரிமை பெறும் குடியேற்ற அனுமதி பெறுவதற்காக சௌகரியத் திருமணம் செய்து கொள்ளும் இந்திய மாணவியின் பெயர் நிருபமா . "விசுவும்" "ரூபாவும்" பற்றிய கதை என்பதால் அப்படத்தின் பெயர் விஸ்வரூபம் என்று புரட்டுக் கதை வேறு உலாவவிட்ட பின்னணியில் அப்படத்தின் ட்ரைலர் காட்சிகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது , ஒன்று புலப்படுகிறது. அமெரிக்காவில் ஒளிந்து வாழும் தீவிரவாதியாக அல்லது அத தீவிரவாதிக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் பாத்திரத்தில் கமல் நடித்திருக்கலாம் அல்லது அந்த இரண்டு கதாநாயகன் வில்லன் என இரு பாத்திரத்திலும் நடித்திருக்கலாம் ஒரு தீவிரவாதி அமெரிக்காவில் வாழும் உரிமையுடன் அங்கு ஒரு கலைஞனாக வாழ்ந்து கொண்டு தனது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயாராகவிருக்கலாம் , அதனை அமெரிக்க எப் பீ ஐ முறியடிக்க முயற்சிப்பது , ஆப்கானிஸ்தானில் சிறுவர்களுக்கும் போதிக்கப்படும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு என்பன கதையின் அம்சங்களாகத் தோன்றுகின்றன. அமெரிக்காவிலும் பாகிஸ்தானிய இந்திய எல்லைக்கு அண்மையிலும் இப்படம் படமாக்கப் பட்டுள்ளது. கதை வெறுமனே விசு (நி) ரூபா கதையல்ல. என்றாலும் ஒரு அப்பாவி இளைஞனின் ( ஒரு வேளை கதக் கலைஞனின்) தீவிரவாத பின்னணியும் பலமும் அறியப்படும் பொழுது ஏற்படும் பாத்திர மாற்றமே "விஸ்வரூபம்" எனும் கீதைப் பொருளில் படத்துக்கு பெயரிடக் காரணமாக இருந்திருக்கலாம். பகவத் கீதையில் பதினொன்றாம் அத்தியாயத்தில் பகவத் கீதையின் படைப்பாளியாகிய கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ‘விஸ்வரூப தர்சன யோகம்பேசப்படுகிறதுகிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு தனது  எல்லையற்றதான பரவடிவை காண்பித்தான். எனவும் கிருஷ்ணன் காண்பித்த அந்த பெரு வடிவம் விஸ்வரூபம் எனப்படுகிறது, அதேவேளை கோகிலத்தில் கிருஷ்ணன் குழந்தையாய் இருக்கையில் தனது வளர்ப்புத் தாய் யசோதைக்கு வாய் திறந்து வாய்க்குள் காண்பித்தும் விஸ்வரூபமே எனப்படுகிறது. முரண் நகையாக விஸ்வரூபம் படத்தில் கூட 

"உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே" என்ற பாடலில் ஒ .. பின் இருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாள் அடி" என்ற பாடலில்  கிருஷ்ணனின் விஸ்வரூபத்தை உலகுண்ட பெருவாயன் , பூலோகம் என்று சொல்வதிலிருந்தும் விஸ்வரூபம் எனும் சொல்லின் பரிமாணம் கனதியாக படத்தில் வியாபித்திருக்கும் ஒரு அம்சமாகவே பார்க்கத்  தோன்றுகிறது.     

விஸ்வரூபம்'”  இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்ற ஊடகவியலாளர்களின் கேள்வி படம் பற்றிய விளம்பரங்கள்  விடப்பட்ட பொழுதே கமலை நோக்கி முன் வைக்கப்பட்டது. கமல் அக்கேள்விக்கு  "அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம். நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்," என்று குறிப்பிட்டிருந்தார்.


ஆனால்
 நாளாக நாளாக முஸ்லிம் எதிர்ப்பலையின் ஆர்ப்பரிப்பு  தமிழகத்தில்  அதிகமாகத் தொடங்கவே கமல் மீண்டும்  அதனையொத்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டி நேரிட்டது
கமல் இப்போது தனது விஸ்வரூபம் படத்தை எதிர்க்கும் முஸ்லிகளுக்கு உறவுடன் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்

தங்களை பிழையான விதத்தில் காண்பிப்பதாக  சந்தேகிக்கும் முஸ்லிம்கள் , படத்தைப் பார்த்த பின்னர் மனத்தை மாற்றிக் கொள்வார்கள் , மேலும் தங்களின் ( அபிப்பிராய பேதத்துக்கு ) பரிகாரமாக அவர்களின் சகோதரன் ஹாசனுக்கு அடுத்த வருட பெருநாளுக்கு  (பண்டிகைக்கு) அதிகமாக பிரியாணி அனுப்ப வேண்டும் , நான் அவற்றை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வேன்என்று கமல் கூறியுள்ளார்.  தனது பெயரின் முஸ்லிம் பெயரை ஒத்த ஹாசன் எனும் பாதிப் பெயரை மட்டும் குறிப்பிட்டு முஸ்லிம்களின் சகோதரன் என்று தன்னை குறிப்பிட்டு உங்களுக்கு எதிராக நான் படம் எடுக்கவில்லை , அவ்வாறான அபிப்பிராயம்  கொண்டுள்ள முஸ்லிம்கள் படத்தைப் பார்த்த பின்னர் , மனம் வருந்த வேண்டியிருக்கும் அதற்கு பரிகாரமாக எனக்கு பிரியாணி அனுப்ப வேண்டும் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

முஸ்லிம்களின் பெயர் ஹசன் என்றே உள்ளது , ஹாசன் என்று இல்லை. கமல் என்ற பகுதிப் பெயரைக் கொண்டும் ஓரிரு  முஸ்லிம் பிரபலங்கள்  பொலிவூட்டில்  இருந்திருக்கிறார்கள் /இருக்கிறார்கள் . அவர்களில் பிரபல ஹிந்தி பின்னணிப்பாடகர் கமல் கான் என்பவரும்  ஒருவர். இன்னுமொருவர் மறைந்த ஷீயா முஸ்லிமான பிரபல ஹிந்தி சினிமா இயக்குனரும் , காதாசிரியரும் கவிஞருமான கமல் அம்ரோஹி. ஆக கமல் சாதாரணமாக கமல் ஹாசன் என்றே சொல்லியிருக்கலாம் . ஹாசன் தனது படத்துக்காக முஸ்லிம்களுக்கு நெருக்கமாகக் காட்ட  கமல் என்ற தனது பெயரின் ஒரு பகுதியான கமலைத்  தவிர்த்திருக்கத் தேவையில்லை. கமல் முஸ்லிம்களுக்கு அல்வா கொடுத்து  , பிரியாணியை எதிர்பார்த்திருக்கிறார் . கமல் ஹாசன் என்ற பெயரைக் கொண்ட  தனது இந்திய கடவுச் சீட்டுடன் அவர் அமெரிக்கா சென்ற பொழுது அவரின் பெயரை  முஸ்லிம் பெயராகக் கருதி குடிவரவு உத்தியோகத்தர்கள் அவரை உருட்டோ .உருட்டென்று உருட்டி  இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் வெளிநாட்டு முஸ்லிம் ஒருவன் அமெரிக்காவிற்குள் கால் வைப்பது என்பது பற்றி கமலுக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியத்தில்லை. கமல் ஹாசன் பார்ப்பனிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் , தான் பூணூல் அணிவதில்லை என்றும் , தன்னை  ஒரு நாத்திகன் என்றும் தான் பெரியாரின் அபிமானி என்றும் சொல்லிக் கொள்பவர் . நான் மேற்கோள்  காட்டிய அவரின் கவிதையொன்றின் சில வரிகள் அவரின் பார்ப்பனியத்தினை கேள்விக்குட்படுத்தல்  ,  பெரியார் மதிப்பு , சாதி எதிர்ப்பு என்பவற்றை கோடிட்டுக் காட்டுகின்றன. என்றாலும் குறிப்பாக விஸ்வரூபம் படம் பற்றிக் குறிப்பிடும் பொழுது தான் காந்தியின் பக்தன் காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்," என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் காந்தி கிருஷ்ண பக்தன். குருசேத்திர யுத்தத்தில் அர்ச்ச்சுனனுக்கு விஸ்வரூபம் காட்டிய கிருஷ்ணன்  "கிருஷ்ணன் எதிர்தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று அர்ச்சுனனை வற்புறுத்துகிறான்"  என்பதையும்   "காந்தி கீதையை பிரச்சாரம் செய்து இந்த முதலாளித்துவ ஜனநாயக சகாப்தத்தில் கூட பார்ப்பனர் அதிகாரம் நீடித்திருக்க வழி வகுத்தார் என்று இந்திய தலித் பகுஜன் சிந்தனையாளர் பேராசிரியர் காஞ்சா அய்லையா அடையாளம் காட்டும் காந்தியும் , அவர் மீதான பக்தியும் கமலின் நடிப்புப் பாத்திரம் போல் கமலின் சுய தரிசனத்தின் மீதும் ஒரு கேள்வியை எழுப்புகிறது. முரண் ஆளுமைகளாக எப்படி சுய வாழ்வில் கமலால் இருக்க முடியும் என்பது ஒரு புறமிருக்கட்டும் . ஒரு  வேளை பெரியார் ஈ வே. ரா சொன்ன காந்தி  " இந்துக் கடவுள் , இஸ்லாம் கடவுள் ஒன்றே , நான் சதா ராம் ரஹீம் என்று பூஜித்துக் கொண்டே இருக்கிறேன் , நான்  சாகும் போதும் ராம் ரஹீம் என்று சொல்லிக் கொண்டுதான் உயிர் விடுவேன், " என்று சொன்னதாக கூறியதையும் பார்க்கும் பொழுது கமல் இந்த பெரியார் சொன்ன காந்தியின் பக்தனாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் நாத்திகர் , எனவே விஸ்வரூப படம் அமெரிக்காவின் அடாவடித்தனங்களை "எதிர்த் தரப்பினரைக் கொன்றழிக்கும்  " அதிகார ஆயுத வெறியின் விஸ்வரூப மெடுத்தும்  ஆப்கானிஸ்தானில் தீவிரவாத(தி)  விஸ்வரூபத்தால் அம்மண்ணில் தோல்வியடையப் போகிறதா  அல்லது அமெரிக்கா விஸ்வரூப மெடுத்து உலகின் தீவிரவாதத்தை அழிக்கப் போகிறதா. அல்லது அமெரிக்க மண்ணில் உட்புகுந்துள்ள  தீவிரவாதியின் (Sleeping cell) விஸ்வரூபத்தை அழித்தொழிக்கப் போகிறதா. கமல் சொல்வதுபோல் பிரியாணியை முஸ்லிம்கள் எதிர்வரும்  ஆண்டு ஈத் பண்டிகையில்  கமலுக்கு கொடுப்பார்களா அல்லது வேறு ஏதேனும் கொடுப்பார்களா என்பதை வரும் வாரத்தில் தெரிந்துகொள்ள முடியும்.


இன்னுமொன்றையும் சொல்லாமலிருக்க முடியாது. சவூதி மன்னரை குண்டு குண்டு  வைத்து கொள்ள சவூதியில் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாகவும் அதனை  அமெரிக்காவின் விஷேட பயங்கரவாத முறியடிப்பு படையினரின் எப் பீ ஐ (F.B.I)உதவியுடன் முறியடிப்பதாகவும் தி கிங்டம் (The Kingdom) எனும் ஆங்கிலப் படம் எடுக்கப்பட்டிருந்தது . சவூதியில் இடம்பெற்ற இரண்டு குண்டு  வெடிப்பு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் அங்கு பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலார்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு எப் பீ ஐ சென்று விசாரனை செய்வதாகவும் கதை சொல்லப்பட்டிருந்தது  இப்பட ஹாலிவூட் இயக்குனர் சவூதி சென்று அந்த இடங்களைப் பார்வையிடக் கூட சவூதி அரசு அனுமதி வழங்கியிருந்தது. . இப்படத்தின் பெரும்பகுதி அபு தாபி, துபாய் , எமிரேட்ஸ் பலஸ் ஹோட்டல் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இப்படம் பற்றி முஸ்லிம் உலகு பெரிய சலசப்பை ஏற்படுத்தவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

அதேவேளை
Life of Pi “ எனும் யான் மாட்டளின் நாவல் சென்ற வருட இறுதியில் திரைப்படமாக வெளி வந்துள்ளது.    இப்படத்தில் " பை"  எனும் பட்டப்பெயர் கொண்ட பட்டேல் எனும் பாண்டிச்சேரி சிறுவன் தான் வாழும் சூழலில் காணப்பட்ட மதங்களில் கடவுளைத் தேடுகின்ற கதைக் கருவை கொண்டு மத நம்பிக்கை அதற்கான தேவை , ஆபத்து சூழ் நிலைகள் ஏற்படும்  போது கடவுள் மீதான ஈர்ப்பு , போன்ற பல சர்ச்சைக்குரிய விடயங்களை  பகைப் புலனாகக் கொண்டும் அம்மானுஷ்ய நபிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும்  ஒரு தனிமனித கண்ணோட்டத்துடன் பின்னப்பட்ட  நாவல்  Life of Pi “ இந்த நாவலில் காணப்பட்ட   ஆத்மீக தேடலின் பின்னணி பற்றிய , மற்றும் பாண்டிச்சேரியில் நிலவிய இன  மத சொவ்ஜண்யம் பற்றிய பகுதிகள் முழுமையாக திரைப்படத்தில் வெளிவராத போதும். இப்படம் பற்றி இங்கு குறிப்பிடக் காரணம் இப்படத்திலும் தமிழ் மொழியில் உரையாடும் சில    இடம் பெருகின்றன , அதிலும் கூட நாவலில் உள்ளவாறே கிருஸ்ணனின் -யசோதாவின் கதை சொல்லப்படுகிறது. வாயில் மண்ணுண்டான் என்பதை கேட்டு வாய் திறக்கச் சொல்லும் தாய் யசோதாவுக்கு கிருஷ்ணன் தனது வாயை திறந்து தனக்குள் அடங்கியுள்ள விஸ்ரூபம் காட்டினான் என்ற கதையை "பை"யின் தாய் தனது மகனுக்கு சொல்வதாகக் காட்டப்பட்டுள்ளது.  “லைப் ஒப் பை படம்  இஸ்லாம் , கிறிஸ்தவ மதங்களை ஆராயப் போகின்ற அச் சிறுவனின் ஆர்வத்தை , மத  சமரசம் காண விழையும், மத நம்பிக்கைகளுக்குள் சிக்குறும்  கண்ணோட்டத்தையெல்லாம் பற்றி மிக சாவாதானமாக அணுகிச் செல்கிறது. முரண் நகையாக ஒரு கனேடிய எழுத்தாளர் யார்ன் மாட்டளின் சுட்டிக் காட்டிய விஸ்வரூபம் , சர்ச் , பள்ளிவாசல் எல்லாமே ஒரு கதை சொல்கிறது. இந்தியக் கமலின் விஸ்வரூபம் படம் காட்ட  விழையும்  விஸ்வரூபம் எதைச் சொல்லப் போகிறது என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.


மருதநாயகம் எனும் முஸ்லிமாக மாறிய யூசுப் கான் பற்றி ஆர்ப்பாட்டமாக படம் எடுத்து , அப்படத்தை பாதியில் நிறுத்திக் கொண்டவர் கமல் என்பதும் அது பற்றி நான் முன்னர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையையும் இங்கு பதிவிலிடுகிறேன். http://www.bazeerlanka.com/2011/03/kollywood-puts-on-pantomime-for-people.html மருதநாயகம்  ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற தகவல் பின்னர் அது பற்றிய விரிவான தேடலின் பொது அவர் ஹிந்து வெள்ளாளர் என்பதை அறியக் கூடியதாகவிருந்தது, எனினும் கமல் அப்படத்தை எடுக்க முடியாமல் தனக்கே ஒரு கராட்டே வீரரை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு சிலகாலம் அலைய வேண்டியிருந்தது. கமலின் துணிச்சல் இந்த மருதநாயகத்தில்  மரித்துப் போனதா என்பதும் இன்று வரை நிலுவையான கேள்வியாகும்.


கமலின் தந்தை ஸ்ரீ நிவாசன் ஒரு வழக்கறிஞர் , இந்திய தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பதற்காக சிறை சென்றவர். ஆனால்  சிறைக் காலத்தில் அவருடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டமைக்காக சிறை வைக்கப்பட்ட    ஒரு முஸ்லிம்தான் ஹசன் என்பவர் , ஹசனும்
ஸ்ரீனிவாசனும் சிறையில் நண்பர்களாயினர். இருவரினதும்  நற் பழக்கங்கள் , நேர்மை , போராட்ட உணர்வு என்பன இருவரையும் நல்ல நண்பர்களாக்கியது . அதன் விளைவுதான் சிறை மீண்டதும் தனது நல்ல நண்பரின் ஞாபகார்த்தமாக தனது மூன்று ஆண்  பிள்ளைளையும் (சாரு  ஹாசன், சந்திர ஹாசன் கமல் ஹாசன் )பரமக்குடியை சேர்ந்த ஒரு ஆச்சாரமான பார்ப்பனரான வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் தனது நண்பரின் பெயரைச் சேர்த்தே பெயரிட்டார், அழைத்தார். கமல் ஹாசனின் உண்மைப்பெயர் பார்த்தசாரதி ( கீதையின் நாயகன் கண்ணனுக்குகிருஷ்ணனுக்கு - இன்னுமொரு பெயர் பார்த்தசாரதி!) கமல் ஹாசனின் தாய் கமலை  கமல் ஹாசன் என்று ஒரு பொழுதும் அழைக்கவேயில்லை , பார்த்தசாரதி என்றே  அழைத்தார் என்று கமல் கூறியுள்ளார்.


எப்போதும் போலவே முஸ்லிம் பெயர்களை சரியாக  எழுதுவதில் ஏனைய சமூகத்தினருக்கு அல்லது மதத்தினருக்கு சற்று சிரமம் ஏற்படுவதுண்டு.  அதனால் பெயர்களில் சிறு பிழைகள் அழைப்பதிலும் எழுவதிலும் ஏற்படுவதுண்டு. அந்த வகையில்தான் ஹசன் என்பதை கமலின் தந்தை ஸ்ரீநிவாசன்,  ஹாசன் என்று குறித்துள்ளார். கமல் எனும் "பார்த்தசாரதி" ( கிருஷ்ணன் அர்ச்ச்னனுக்கு(பார்த்தன்)  குருசேத்திர  யுத்தத்தில்  தேரோட்டியதால் பார்த்தசாரதி எனப் பெயர் பெற்றான் )  விஸ்வரூபத்தில் பார்தசாரதியாகவே வந்து கீதையை உபதேசம் செய்து முஸ்லிம் மக்களை காயப்படுத்தும் விதத்தில் ஏதேனும் இந்து மதக் (கீதை) கோட்பாட்டை நிறுவப் போகிறாரா அல்லது தான் புரியாணியை எதிபார்க்கும் உங்கள் சகோதரன் ஹாசனும் கூட என்று நிரூபிக்கப் போகிறாரா . 
06/01/2013

No comments:

Post a Comment

Wheeler Dealer Muslim Politicians and Helpless and Voiceless Muslim Community By Latheef Farook

The island’s Muslim community continues to suffer from political and religious leadership crisis .Unless the civil society come forward ...