2012 செப்ரெம்பர் 22ஆம் திகதி கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைபெற்ற ‘வாழும் மனிதம் -

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் மக்களின் பிரதான எதிரிகள்!
- கனடியக் கருத்தரங்கில் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பசீர் உரை!!
ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் தமிழீழம் என்ற தனிநாட்டை அமைக்கப் போரடிய இலங்கைத் தமிழ் சமூகம், போர் முடிவுற்ற பின்னர் உள்நாட்டிலும் சரி, புலம்பெயர் நாடுகளிளும் சரி இன்று ஒரு கோமா நிலையில் இருக்கின்றது. அதேவேளை, இலங்கையில் வாழுகின்ற முஸ்லீம் சமூகம் சிங்களப் பேரினவாதம், தமிழ்க் குறுற்தேசியவாதம் என்ற இரட்டை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தனது அடையாளத்தைப் பேண வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது”.

இவ்வாறு கூறினார் லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள்.


2012 செப்ரெம்பர் 22ஆம் திகதி கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைபெற்ற ‘வாழும் மனிதம் - 3’ நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘போருக்குப் பின்னான இலங்கைத் தேசமும் இனவாதமும்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றும் போதே பசீர் இவ்வாறு கூறினார்.

திரு.தேவன் அவர்களது முன்முயற்சியால் கடந்த 3 வருடங்களாக கனடா தமிழ் சமூகத்தில் மானிட நேயத்தை வலியுறுத்தும் முகமாக நடாத்தப்பட்டு வருகின்ற இந்த நிகழ்வில,; பசீர் அவர்கள் மேலும் பேசுகையில் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கமான தொகுப்பைக் கீழே தருகின்றோம்.

“இலங்கையில் முதன்முதலாக 1915இல் சிங்கள – முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் இன மோதல் வெடித்தது. அன்று சிங்கள ஆளும் வர்க்கத்துடன் தமிழ் ஆளும் வர்க்கமும், குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மேட்டுக்குடி வர்க்கமும் சேர்ந்து முஸ்லீம் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டது. ஆனால் அதன் பின்னர் இவ்வாறானதொரு இன மோதல் சிங்கள – முஸ்லீம் மக்களிடையே இடம்பெறவில்லை.

அதன் பின்னான காலகட்டத்தில் தென் பகுதியில், குறிப்பாக கண்டிப் பிரதேசத்தில் முஸ்லீம் சமூகம் பலமான சமூகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இது எதைக் காட்டுகிறதென்றால், முஸ்லீம் சமூகம் பெரும்பான்மை சிங்களச் சமூகத்துடன் ஓர் இணக்கம் கண்டுள்ளது என்பதையே. ஆனால் இவ்வாறானதொரு இணக்கப்பாடு கிழக்கிலங்கையில் இல்லை. முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபகரான ஜனாப் அஸ்ரப் அவர்கள் ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் பேரினவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும், பின்னர் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துக் கொண்டார்.

அஸ்ரப் பேரினவாதத்துடன் முரண்படாமல் இணக்கமாகவும், கூட்டாகவும் செயற்படுவதின் மூலம் தனது சமூகத்துக்குச் சேவையாற்ற முயன்றார். அதற்காக தனது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை ‘தேசிய ஐக்கிய முன்னணி’ (National United Alliance)  என்ற பெயரில் விரிவுபடுத்தினார். அதன் மூலம் எல்லா இனங்களையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசியலுக்குள் நுழைய முயன்றார். அவர் ஹெலிகொப்டர் விபத்தில் இறப்பதற்கு முன்னர் தெரிவித்த கடைசி வார்த்தைகளில், அனைத்து இனங்களும், மதங்களும் சமமானவை என்பதை வலியுறுத்தியதுடன், அவ்வாறானதொரு சிந்தனையே முஸ்லீம் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறிச் சென்றுள்ளார்.

ஆனால் அஸ்ரப் அவர்களுக்குப் பின்னர் முஸ்லீம் காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள், தேசிய இணக்கப்பாட்டு அரசியலைக் கைவிட்டு, மீண்டும் குறுகிய இனவாதப் பாதையில் முஸ்லீம் காங்கிரசை இட்டுச் செல்கின்றனர். அதாவது அஸ்ரப் அவர்கள் தனது அரசியல் அனுபவங்களுக்கூடாகக் கற்ற பாடங்களைக் கைவிட்டு பழைய இனவாத, மதவாத அரசியலுக்குள்ளேயே முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தள்ளாடுகின்றது.

1987இல் இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அன்றைய அரசாங்கத்தில் சிரேஸ்ட அமைச்சராக இருந்த காமினி ஜெயசூரியா, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ‘வீரவிதான’ என்ற சிங்கள இனவாதக் கட்சியை உருவாக்கினார். ஆனால் சிங்கள மக்களால் இனவாதம் ஆதரிக்கப்படாததால், அக்கட்சி சிறிது காலத்திலேயே செயலிழந்து போனது.

புலிகளும் கடந்த காலத்தில் இனவாத, மதவாத அரசியலையே முதன்மைப்படுத்திச் செயல்பட்டார்கள். அவர்கள் அனுராதபுரத்தில் பௌத்த மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிங்கள் யாத்திரீகர்களைப் படுகொலை செய்தனர். புத்த பிரானின் பல்; வைக்கப்பட்டுள்ளதாக பௌத்த மக்கள் நம்பும் பெருமதிப்புக்குரிய கண்டி தலதா மாளிகை மீது தாக்குதல் தொடுத்தனர். அரந்தலாவையில் பௌத்த பிக்குகளைத் தாக்கிக் கொலை செய்தனர். ஆனால் இவ்வாறான தாக்குதல்களை சிங்கள மக்கள் இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளவில்லை.

நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலத்தில், யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்கள் மத்தியில் நிலவிய குறுகிய இனவாத, மதவாத நையாண்டித்தனமான போக்கை அவதானித்துள்ளேன். அவர்கள் பௌத்த மத குருமாரைக் காணும் போது, அவர்களை ‘உரித்த வாழைப்பழம்’ என கேலி செய்வார்கள். முஸ்லீம்களை ‘முக்கால்’ என்றும், மலையகத் தமிழ் மக்களைத் ‘தோட்டக்காட்டான்’ என்றும், ஆனையிறவுக்கு அப்பால் வாழ்ந்த தமிழ் மக்களை ‘வன்னியான்’ என்றும் அடைமொழிகள் வைத்து அழைப்பது, யாழ்ப்பாணத்தவர்களின் பழக்கமாக இருந்தது.

அந்த வகையான இனரீதியான கேலிப் பேச்சுகளைப் புலம்பெயர் நாடுகளிலும் காண முடியும். சீனர்களை ‘சப்பட்டைகள்’ என்றும், ஆபிரிக்க மக்களை ‘கறுவல்கள்’ என்றும், வெள்ளை இனத்தவரை ‘வெள்ளைகள்’ என்றும், கரீபியன் நாடுகளைச் சேர்ந்த மக்களை ஏகத்துக்கும் ‘கயானிஸ்’ என்றும்; புலம்பெயர் தமிழர்கள் அழைத்து, தமது இனத் தூய்மைவாதத்தை நிலைநிறுத்தப் பார்க்கின்றனர்.

தமிழர்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள மக்கள் இவ்வாறான தரக்குறைவான பார்வையைக் கொண்டவர்கள் அல்லர். அவர்கள் தங்கள் மதத்தை முதன்மையானதாகக் கருதினாலும், ஏனைய மதங்களை இழிவுபடுத்துவதில்லை. தமிழர்கள் மத்தியில் பௌத்த மத எதிர்ப்பு மட்டுமல்ல, இஸ்லாம் மதத்தின் மீதான எதிர்ப்பும் வெறுப்பும் தொடர்கின்றது. காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் புலிகள் நடாத்திய மிலேச்சத்தனமான படுகொலைகள் இதற்கு உதாரணம்.

1990இல் வட மாகாணத்திலிருந்த 2 மணி நேர அவகாசத்தில் முஸ்லீம் மக்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட பின்னர், நல்லூரில் இருந்த முஸ்லீம்களின் பள்ளிவாசலும், மைய வாடியும் முற்றாக அழிக்கப்பட்டு அந்த நிலம் சுவீகரிக்கப்பட்டது. இன்று அந்த இடத்தில் அரசாங்க அதிபரின் அனுமதியுடன் ‘பிரம்ம குமாரிகள் நிலையம்’ அமைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தம்புள்ளவிலிருந்த பள்ளிவாசலுக்கு எதிராக சில பௌத்த மத குருமார்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை, முஸ்லீம் மதத் தலைவர்களாலும், அரசியல்வாதிகளாலும் மிக நிதானமாகக் கையாளப்பட்டு, இனவாத சக்திகள் தூண்டப்படாத விதத்தில் நடந்து கொண்டதால், அப்பிரச்சினை சூடு தணிந்து போய்விட்டது.

இருந்தும் அண்மையில் நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, முஸ்லீம் காங்கிரஸ் தலைமை இனவாதத்தை மீண்டும் கிளறும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. எமது பள்ளிவாசலை அழித்த மகிந்தவை ஆதரிப்பதா என்றும், இலங்கையில் முஸ்லீம்களுக்கு மத உரிமை மறுக்கப்படுகின்றது என்றும், சிறுபான்மை இனங்களுக்கு எதிராக காவி உடை தரித்த பயங்கரவாதம் செயல்படுகிறது என்றும், முஸ்லீம் காங்கிரஸ் தலைமை இனவாத, மதவாதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் அவர்களது பிரச்சாரத்துக்கு முஸ்லீம் மக்கள் எடுபடவில்லை என்பதை, அரசாங்க அணியில் போட்டியிட்ட 7 முஸ்லீம் வேட்பாளர்களை வெல்ல வைத்ததின் மூலம் மக்கள் நிரூபித்துவிட்டார்கள்.

முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்துகொண்டு இவ்வாறான இனவாத, மதவாதப் பிரச்சாரத்தில ஈடுபட்டது கபடத்தனமாகும். அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்துக்கொண்டு இவ்வாறு செயற்படுவது தேசத்துரோகச் செயலாகும். முஸ்லீம் காங்கிரஸ் தலைமை இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம், அவர்களின் அரசியல் அடித்தளம் தகர்ந்து கொண்டு போவதால்தான்.

முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு தேர்தல்களில் தமிழ் மக்களின் சில வாக்குகளாவது கிடைக்கின்றது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு முஸ்லீம் மக்களின் வாக்குகள் கிடைப்பது இல்லை. இதேபோல முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளும் உண்டு.

ஜாதிக ஹெல உறுமய கட்சியை ஸ்தாபித்தவர் எஸ்.எல்.குணசேகர. இவர் ஒரு தீவிர தமிழின எதிர்ப்பாளர். இருந்தும் அவர் ஒரு கிறிஸ்தவர் என்ற காரணத்தால் அக்கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். இலங்கை அரசியலில் ஹெல உறுமயவின் உருவாக்கம் எதிர்ப்புரட்சிகரமானதுதான்.  ஆனால் புலிப் பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகளை ஒழிப்பதற்கான நல்லெண்ணத்தின் அடையாளமாக, அன்றைய காலகட்டத்தில் ஜனநாயகத்துக்காகக் குரல் எழுப்பிய வீ.ஆனந்தசங்கரிக்கு தமது பாராளுமன்ற ஆசனங்களில் ஒன்றை வழங்குவதற்கக்கூட ஹெல உறுமய முன்வந்தது. இன்றும் கம்பளை நகரசபையில் ஹெல உறுமய சாhபில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இராசலிங்கம் என்பவர் உறுப்பினராக இருக்கின்றார்.

ஹெல உறுமய கட்சி உருவாக்கப்பட்ட பின்னர், முதன் முதலில் பௌத்த மக்களின் புனித பூமியான அனுராதபுரத்தில் போட்டியிட்ட போது பெற்ற மொத்த வாக்குகள் வெறும் 300 தான். இது எதனைக் காட்டுகிறதென்றால், சிங்கள மக்களில் பெரும்பான்மையானோh இனவாதிகள் அல்லர் என்பதைத்தான். அதனால்தான் அனுராதபுரத்தில் போட்டியிட்ட புத்த மதவாதிகளான ஹெல உறுமய கட்சியினர் தோற்றுப் போயினர்.

இன்று புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது. அதேநேரத்தில் விநோதமான விடயமென்னவெனில், புலிகள் ஒழிக்கப்படும் வரை, புலிகளை எப்படியும் ஒழிக்க வேண்டும் என மகிந்தவிடம் மன்றாடிய புலம்பெயர் அரசியல் செயல்பாட்டாளர்கள் சிலர், புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரச எதிர்ப்பு, மகிந்த எதிர்ப்பு என்ற போர்வையில், புலிகள் விட்டுச்சென்ற தமிழ் தேசியவாதத்தைத் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்திருப்பதுதான். லண்டனில் வாழும் தமிழ் - முஸ்லீம் செயல்பாட்டாளர்கள் சிலர் மத்தியில் இதைக் காண முடிகிறது.

இன்று தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிரதான எதிரி தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். இவர்கள் காலாகாலமாக பிற்போக்குவாத, பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியினது சகபாடிகளாக இருப்பதுடன், பாசிச புலிகளின் மறு வடிவமாகவும் இருக்கின்றனர். இதை உரிய முறையில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரையில், முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தான் அவர்களின் பிரதான விரோதி. முஸ்லீம் காங்கிரஸ் எப்பொழுதும் சந்தர்ப்பவாத அரசியலையே நடாத்தி வந்திருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை நண்பனாகப் பார்க்கும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிரதான விரோதியாகப் பார்க்கிறார்கள்.

உண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. அண்மையில் நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரில், 4 பேர் அரசுடன் இணைய முற்பட்ட நிலையில்தான், ரவூப் ஹக்கீம் வேறு வழியில்லாமல் கிழக்கு மாகாணசபையில் அரசுடன் இணைந்துகொள்ள வேண்டி வந்தது. கிழக்கு மாகாண தமிழ் - முஸ்லீம் மக்களின் நன்மை கருதி தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், முஸ்லீம் காங்கிரசையும் அம்மண்ணிலிருந்து முற்றாகத் துடைத்தெறிய வேண்டும்.

நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல், முக்கியமான இரண்டு விடயங்களை வெளிப்படுத்தி உள்ளது. ஒன்று, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் வீரவன்சவின் சிங்கள இனவாதக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. அடுத்த விடயம், 60 வருடப் பாரம்பரியமுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடுமையான தமிழ் இனவாதப் பிரச்சாரங்களுக்கு மத்தியில், அரசியலுக்குப் புதியவரான முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தான் 22,000இற்கும் கூடிய விருப்ப வாக்குகள் பெற்று வெற்றியடைந்து, கிழக்கில் புதிய தலைமைத்துவமொன்றை நிலைநாட்டியுள்ளார். இந்த இரண்டு வெற்றிகளும் பாரம்பரியமான சிங்கள – தமிழ் கட்சிகளுக்கு சவாலான விடயங்களாகும்.

இருப்பினும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் அரசியல் செயற்பாடுகள் போதுமானவை அல்ல. எமது செயல்பாடுகளில் வேகமும் மாற்றங்களும் வேண்டும். நாம் கதைக்கிற அளவுக்குச் செயல்படுவது இல்லை இது எமது பெரும் பலவீனமாகும்.

அத்துடன் இன்றைய காலகட்டத்தில் மக்களின் கருத்துக்களைத் தீர்மானிப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எமது கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாகவும், அகலமாகவும் எடுத்துச் செல்வதானால், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பவற்றை நாம் கூடுமானவரை பயன்படுத்த வேண்டும். மக்களுக்குக் கருத்துகளைச் சொல்லும் போது எளிமையான முறையில் சொல்ல வேண்டும். அத்துடன் செய்திகள் நல்ல முறையிலும், உண்மைகளின் அடிப்படையிலும், மக்களைக் கவரும் விதத்திலும் இருக்க வேண்டும். எமது வேலைகளுக்குத் தடையாக இருக்கும் இன்னொரு அம்சம், முத்திரை குத்துதல் ஆகும். தமிழ் பிற்போக்கு தேசியவாதிகளை நாம் விமர்ச்சித்தால், உடனடியாகவே அவர்கள் எம்மைத் ‘துரோகிகள்’, ‘அரசாங்க அடிவருடிகள்’ என இலேசாக முத்திரை குத்தி விடுகின்றனர். எப்படியிருப்பினும் மக்களுக்கான எமது பணிகளை நாம் மனம் தளராமலும், தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நாங்கள் கவனிக்கத் தவறிய இன்னொரு விடயம், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வெளியே வரும் போராளிகள் பற்றியது. அவர்கள் புலிகளால் பலவந்தமாக தமது இராணுவத்தில் இணைக்கப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ பல தியாகங்களைப் புரிந்துள்ளார்கள். அவர்களைத் தமது தேவைக்காக போர்க்களத்தில் பயன்படுத்திய தமிழ் சமூகம், இன்று அவர்களை உதாசீனப்படுத்துகிறது. உதாரணமாக இயக்கத்தில் இருந்த ஒரு போராளிக்கு மணமகனையோ மணமகளையோ கொடுக்க இந்தச் சமூகம் மறுக்கிறது. இதே சமூகம்தான், 2009 மே மாதத்துக்கு முன்னால் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடியது. அப்படியானால் அது எல்லாம் போலித்தனமான செய்கைகளா?

இந்த முன்னாள் போராளிகள் குறித்து நாம் கவனமான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், அவர்களைச் சமூகத்துடனும,; மக்கள் நலன் செயல்பாடுகளுடனும் ஒன்றிணைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
எமது சமூகம் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாததுடன், மற்றவனைத் தனது தேவைக்குப் பயன்படுத்தும் நோhக்கமும் கொண்டது. எனவே இவர்கள் மத்தியில் வேலை செய்வது கடினம்தான். எனினும் வேலை செய்ய வேண்டிய உடனடித் தேவையும், வரலாற்றுக் கடமையும் எமக்கு உள்ளது”.

‘வாழும் மனிதம் - 3’ நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எஸ்.இராஜேந்திரன் ‘ தமிழ் சமூகமும்; அடிப்படைவாதமும்’ என்ற தலைப்பில், யாழ்ப்பாண சமூகம் பற்றிய ஆழமான பார்வையையும், அந்தச் சமூகத்தில் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட பாசிசத்தின மூலக்கூறுகள் எவை என்பது பற்றியும் சிறந்ததொரு ஆய்வுரையை நிகழ்த்தினார்
முற்போக்கு அரசியல் - சமூக செயல்பாட்டாளரான தேவன் நிகழ்வை நெறிப்படுத்தினார்.

தொகுப்பு: தருமர் – பாலன்
 http://www.thenee.com/html/071012.html
மூலம்: தேனீ

பிற்குறிப்பு : எனது கனடிய உரை குறித்து வெளியான இவ்வாக்கத்தில் சில பிழைகள் இடம்பெற்றுள்ளன. அவர் பற்றி நான் மனிதம் குழுவினருக்கு ஏற்கனேவே அறிவித்துள்ளேன். அவை தவறுதலாக ஏற்பட்டுவிட்டன என அறிய முடிந்தது. அவற்றினை இங்கு அறியத் தருகிறேன், வழக்கமாகவே மிக வேகமாக உரையாற்றும் எனது உரை சில வேளைகளில் தவறுதலாகப் பதிவு செய்யப்படுவது சில வேளைகளில் இடம் பெறுவதுண்டு. அவ்வாறே இந் நிகழ்விலும் இடம்பெற்றுள்ளது . குறுகிய நேரத்துள் அதிகளவான விசயங்களைக் கதைத்து விடுகின்ற எனது போக்குப் பற்றி பல ஊடகவியலாளர்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுவதுண்டு. வாசகர்கள் பின்வரும் குறிப்புக்களை மனங்கொண்டு மேலுள்ள கட்டுரையாக்கத்தை/செய்திக் குறிப்பை வாசிக்கவும்.  

1. மட்டக்களப்பு கள்ளியங்காட்டு பள்ளிவாசல் நிமூலமாக்கப்படு , அங்கிருந்த மையவாடியின் ஒரு பகுதி கபளீகரம் செய்யப்பட்டது பற்றிக் குறிப்பிட்டது இங்கு நல்லூர் என்று மையவாடி முற்றாக அழிக்கப்பட்டதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

1. காமினி ஜசூரிய உருவாக்கியது வீர விதாரண இயக்கம் அல்ல , எஸ்.எல் குணசேகரா பங்கு கொண்டு உருவாக்கியதே வீர விதாரண இயக்கம். காமினி ஜெயசூரிய , ஜெ . ஆரின் அரசிலிருந்து இந்திய ஒப்பந்தம் காரணமாகப் பிரிந்து உருவாக்கிய கட்சி சிங்கள ஆரக்ச விதானைய ஆகும். 

2.  திருகோணமலையில் போட்டியிட்ட விமல் வீரவன்சவின் புதிய கட்சி என்று குறிப்பிட்டது , தவறுதலாக சிங்கள இனவாதக் கட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நான் விமல் வீரவன்சவை இனவாதியாக குறிப்பிடவில்லை 

3. புலிகள் தியாகம் புரிந்ததாக  கூறியது என்பது எனது கூற்றல்ல , பிறர் (புலிகளை ஆதரித்தவர்கள் அவ்வாறு கூறியதும் இப்போது அவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட புலிகளை எப்படி உதாசீனம்  செய்கிறார்கள் என்பதாகவே குறிப்பிடப்பட்டது. 

தேனீயில் வெளியான ஆக்கத்தின் தவறுகளை திருத்தி வெளியிட அனுமதித்த "வாழும் மனிதம்" குழுவின் ஏற்பாட்டாளர் தேவன் அவர்களுக்கு நன்றி. வாழும் மனிதம் புலம் பெயர் நாடுகளில் செயற்படும் ஒரு முற்போக்கான தமிழ் புத்திஜீவிகள் மற்றும் இடதுசாரிகளின் அமைப்பாகும் . சிந்தனை  ஆரோக்கியமும் மனிதமும் நிறைந்த அவர்களைச் சந்திக்க அளவளாவ கருத்துப் பகிர கிடைத்த சந்தர்ப்பம் எண்ணப் பொருத்தவரை எனது வாழ்நாளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அனுபவமாகும். வாழும் மனிதத்தின் பணிகள் புலம் பெயர் தேசங்களில் தொடர எனது வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...