ஊர்ப்பட்ட ஊகங்களும் கிழக்கின் இரண்டாவது முதல்வர் தெரிவும்!!
எஸ்.எம்.எம்.பஷீர்

என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்  என்பதே அரசியல் "    
                                                                                  ஹரல்ட் லாஸ்வெல்
கிழக்கின் மாகான சபைத் தேர்தல் மிகுந்த பரபரப்புடன் , இலங்கையின் தேர்தல் உற்சவங்களில் நடைபெறும் களியாட்டங்களுடன் மட்டுமல்ல ஆங்காங்கே சில வன்முறைகளுடனும்  நடைபெற்று முடிந்திருக்கிறது, முடிவுகள் ஒன்றும் பிரமிப்பூட்டுவனவாக இல்லை  போட்டியிட்ட சகல தரப்பினருக்கும் தேசிய சுதந்திர  முன்னணி (NFF) தவிர தேர்தல் முடிவுகள் பொதுவாகவே சகல கட்சியினருக்கும் ஏமாற்றத்தையே  அளித்திருக்கிறது. எனினும் தேர்தலின் முடிவின் பின்னர் ஆட்சி அமைப்பதிலும் முதலமைச்சரைத் தேர்வதிலும் உள்ள அரசியல் போட்ட போட்டிகளும் , ஆதங்கங்களும் , ஊகங்களும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.  நாளுக்கு நாள், கிழக்கில் தங்களை ஆட்சி செய்யப்போகும் முதலமைச்சர் யார் என்ற  ஊகங்கள் மக்களை ஆட்சி செலுத்த  தொடங்கியுள்ளன.


இந்த ஊகங்கள் எல்லாம் இன்னும் ஓரிரு நாட்களில் முற்றுப் பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கில்  ஆட்சியமைக்க தேவையான அரசியல் கூட்டினை பெறுவதற்காக மத்தியில் ஆட்சியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்க்தை நடத்தி வருகின்ற வேளையில் , அரசுடன் மத்தியில் மந்திரிப் பதவிகளை வைத்துக் கொண்டு , அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பையும்  , பலத்தையும்  காட்ட மிகத் தீவிர அரச பௌத்த எதிர்ப்பினை (உதாரணமாக  காவியுடை தரித்த  பயங்கரவாதம் : ரவூப் ஹக்கீம் ) முன் வைத்து கிழக்கிலே தமது ஆதரவுத்தளத்தை பலப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ் இப்போது கிழக்கில் ஆட்சியமைக்க அரசுடன் சேரப் போகிறார்கள் என்று எதிர்வு  கூறப்படுகிறது . மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதைதானா ! என்ற அங்கலாய்ப்பு அக்கட்சிக்கு வாக்களித்த பலரிடம் நிலவுகிறது .

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப்போகும் அரசு சார்பு நிலைப்பாட்டை  எதிர்பார்த்து ஒரு புறம் தமிழ் தேசிய வாத சக்திகள் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு ) அவர்களுக்கு துணை போகும் ஊடகங்கள் , ஊடகவியலாளர்கள் , ஆய்வாளர்கள் அனைவரும் ஒரே தொனியில் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை , சிங்கள பேரினவாத ஆட்சிக்கெதிரான தமிழ் முஸ்லிம் மக்களின் தனித்துவ ஆட்சி என்றெல்லாம் பிதற்றத் தொடங்கியுள்ளார்கள். சம்பந்தன் பகிரங்கமாக முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த வாக்களர்களின் தத்துவ அதிகாரம் பெற்ற பிரதிநிதி போல் உபதேசம் வேறு பண்ணியுள்ளார். 

மறுபுறம் , முடியுமானால் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொன்ன அரசுடன் கிழக்கில் தேசிய அரசு அமைக்க தயார் என்றும் எதோ ஒரு விதத்தில் தாங்கள் அரசுடன் சேரலாம் என்று கட்டியம் கூறியுள்ளார். என்னதான் பினாத்திக் கொண்டாலும் இதெற்கெல்லாம் காரணம் இந்தத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு , அவர்கள் எதிர்பாத்த கணிப்பீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்  தனிப்பட்ட வகையில் பெரிய தோல்வி. மறுபுறம் மொத்தத்திலும் பெரிய தோல்வியாகவே அமைந்து விட்டது.   ஐக்கிய தேசியக் கட்சியின் படு தோல்வி , முஸ்லிம் காங்கிரசை வளைத்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில் ஏற்பட தோல்வி  (இன்னும் முடிவாகவில்லையாயினும் , தற்போதுள்ள தகவல்களின்படி ) இன்னொருபுறம் தமிழர் வாக்குகள் சந்திரகாந்தன் மூலம் சுதந்திரக் கூட்டமைப்புக்கு போகாது என்ற தமிழ் மக்கள் மீதான  தேசிய கருத்தியலுக்கு ஏற்பட்ட  தோல்வி .   கிழக்கில் உதயமான ஒரே ஒரு பதிவு செய்யப்பட்ட தமிழ் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்படும் என்ற கனவில் ஏற்பட்ட தோல்வி என்ற பல தோல்விகளுடன் தங்களோடு வலிந்தே வந்து பேச்சுவார்த்தை நடத்திய  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஓரிரு அங்கத்தவர்களைக் கொண்டு பலன் பெறலாம் என்ற நம்பிக்கையில் ஏற்பட்ட தோல்வி. 

ஏற்கனவே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சம்பந்தனுடனான பேச்சுவார்த்தை , உடன்பாடு காணப்பட்ட அம்சங்கள் குறித்து புலம் பெயர் புலிகள் தரப்பினர் பண்ணிய விளம்பரங்கள் ஒருபுறம் இருக்க நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமே , தாங்களும் ஓரிருவர் தெரிவு செய்யப்படுகின்ற பொழுது , தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முட்டுக் கொடுக்கலாம் என்று ஒருவேளை என்ற நம்பியிருந்திருக்கலாம். இப்படித்தான் வட கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக எம்.ஐ,.எம் மொஹிதீன் (முன்னாள் முஸ்லிம் மக்கள் விடுதலை முன்னனி தலைவர் ) முன்னாள் கல்வி அமைச்சரான மறைந்த பதியுதீன் மஹ்மூத் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்று புலிகளுடன் பேசி ஒப்பந்தம் செய்து முஸ்லிம் காங்கிரசை ஓரங்கட்ட முயன்ற புலிகளுக்கு அரசியல் ரீதியில் ஒத்தாசை புரிய முற்பட்டதை இங்கு தவிர்க்கவோன்னாமல் நினைவு கூரவேண்டியுள்ளது. பொது எதிரியை அடையாளப்படுத்துவது ( இலங்கையில் ஆட்சியிலுள்ள அரசை ) தாங்கள் அதனடிப்படையில் வடக்கு கிழக்கில் ஒன்றுபடுவது .) இதுதான் தமிழ் தேசியக் கட்சிகளினதும் அவர்களுடன் கூட்டுச் சேரும் முஸ்லிம் கட்சிகளினதும் தாரக மந்திரம்.
 
மறுபுறம் அரசுடன் இணைந்து போட்டியிட்ட  முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாட்டை விமர்சித்தாலும் , தங்களில் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு ஜனாதிபதியின் தயவையே எதிர்பார்த்திருக்கிறார்கள். சென்ற முறையும் அவர்களின் எதிர்பார்ப்பு வெற்றியளிக்கவில்லை . இறுதித் தீர்மானம் ஆட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாயினும் அதன் தலைமைத்துவமாக விளங்கும் ஜனாதிபதியிடம் உள்ளதால் முஸ்லிம்  கட்சிகளின் விருப்புக்கள் , முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் கோரிக்கை கெதிராக வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுகிறது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தெரிவாக அமீர் அலி ஒரு புறமும்முஸ்லிம் காங்கிரசின் தெரிவாக ஹாபீஸ் நசீர் அஹமது , ஜமீல் ஆகியோரின் பெயர்களும் சிலாகிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் ரவூப் ஹக்கீமைப் பொறுத்தவரை , தமது இன்றைய உறவினரும், கட்சியின் உப தலைவருமான  முன்னாள் எதிரியான நசீர் ஹாபீஸ் கிழக்கின் முதல்வராக வருவது ஆபத்தானது என்று கூறுகிறார்கள்ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் தளத்தில் ஹக்கீம் தலைமைத்துவப் பலமுள்ள (உப தலைவர் உட்பட) ஒருவரை முதலமைச்சர் ஆக்குவது  கிழக்கினையே தனது அரசியல் அடிநாதமாகக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தினை தொடர்ந்து தக்க வைப்பதற்கு மிகுந்த சவாலாக அமைந்து விடும் என்று ஹக்கீம் அச்சமுற்றால் நசீர் ஹபீஸ் வருவதை அவர் விரும்ப மாட்டார். தனி ஒரு கட்சியை அமைத்து ( ஜனநாயக ஐக்கிய முன்னணி)  அதில் மேல் மாகாண மட்டத்தில் ஒரு உறுப்பினரையாயினும் தெரிவு செய்யுமளவுக்கு அரசியல் அனுபவம் பெற்றவர் ஹாபீஸ் நசீர் . பண பலத்தால் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் புது முகமாக போட்டியிட்டு வென்றவர் . ஆனால் மட்டகக்களப்பு மாவட்டத்தை விட திகாமடுல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜமீல்  தெரிவு செய்யப்படின் ஹக்கீமுக்கு அந்தளவு அச்சம் இல்லை. என்றாலும் அடிபட்ட பாம்பு போல் அமைதியாக சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் நிசாம் காரியப்பரின் நண்பர் ஜமீல் என்பது அவருக்கு தலையிடியான விஷயமுமாகும்.

இந்தப் பின்னணியில்தான் இப்போது சுதந்திரக் கட்சியும் தமது கட்சியைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். கிழக்கின் தேர்தலில் வெற்றியீட்டிய கிண்ணியா பிரதிநிதி நஜீப் அப்துல் மஜீத் மட்டுமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் உறுப்பினராக வெற்றி பெற்று உள்ளவர். மேலும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சருமாகவிருந்து புலிகளால் கொலைசெய்யப்பட்ட , மறைந்த மூதூர் மஜீத்  ஒரு சுதந்திரக் கட்சியின் விசுவாசமான உறுப்பினர் . கிழக்கிலே சுதந்திரக் கட்சியை முஸ்லிம்களுக்குள் திருகோணமலை மாவட்டத்திலே வேரூன்றச் செய்தவர். அவரும் சுதந்திரக் கட்சியிலே அல்லது முஸ்லிம் காங்கிரஸ் சுதந்திரக் கட்சியுடன் தேர்தல் கூட்டு வைத்த தேர்தலிலும் முன்பு வெற்றி ஈட்டியவர்.எனவே அவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது.

எனவே அரசு போதிய வெகுமதிகளைக் கொடுத்து  முஸ்லிம் காங்கிரசினை திருப்திப் படுத்தலாம். மறுபுறம் அரசுடன் உள்ள எல்லா முஸ்லிம் கட்சிகளும்  முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதை எதிர்க்கலாம் , அப்படி வழங்கப்பட்டாலும் அவர்களும் அதிருப்தியடைவார்கள் என்றாலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளார்கள்., மறுபுறம் முஸ்லிம் காங்கிரசும் அவ்வாறே செயற்படும்.  தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக வேண்டும்,”  என்றே பரஸ்பரம் முஸ்லிம் கட்சிகள் செயற்படுகிறார்கள். அந்த வகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இவர்கள் எல்லோருக்கும் நல்ல பிள்ளை எனப்படும்   நஜீம் மஜீத் முதலமைச்சரானால் முஸ்லிம் காங்கிரசுக்கோ அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கோ , அல்லது  தேசியக் காங்கிரசுக்கோ மூக்குப் பிரச்சினையும் சகுனப் பிரச்சினையும் இல்லை என்று ஒரு அபிப்பிராயமும் உண்டு. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும்  முஸ்லிம் முதலமைச்சர் மூலம் தனது வெற்றியை எதிர்கால நலனை கிழக்கிலே உறுதி செய்ய பணியாற்ற முடியும் 

முன்பு போல் அல்லாமல் தேர்தல்களில் ( அரசியல்  வியாபாரத்தில் ) போட்டியிடுவோர் அதிகளவு பண முதலீடு செய்தே (செலவு ) தேர்தல்களை எதிர்கொள்கிறார்கள். அவ்வாறு செலவிட்ட பணத்தினை மீண்டும் பெறவோ அல்லது அதற்கு மேலாக உழைக்கவோ வெறுமனே மாகாண சபை சம்பளம் போதாது  எனவே கட்சி முடிவெடுத்தாலும்  கட்சியில் பலர் அரசுடன் கட்சி தாவி ஆட்சி அமைக்க உதவுவார்கள் என்பதும் அல்லது   தமது கட்சியையும் அரசுடன் சேருமாறு வற்புறுத்துவார்கள் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது அவ்வாறான வியாபார அரசியல் கலாச்சாரமே இப்போது அங்கு வேரூன்றியுள்ளது.

ஹக்கீம் அரசுடன் சேர்வதற்கான முடிவையே  எடுப்பார் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில்  குர் ஆணின் மீது சத்தியம் பெற்று -பையத் -(விசுவாசப் பிரமாணம்) எடுத்து தனக்கு வாக்களித்த மக்களை உள்ளூர் மட்டத்தில் சந்தித்து . கலந்துரையாடவும் அரசுடன் சேர்வது பற்றி அறிவுறுத்தவும் தனது உள்ளூர் மட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களை அவர் வேண்டியுள்ளார். மேலும் இன்றைய "தி ஐலன்ட் " பத்திரிகை செய்தியின்படி கிழக்கு மாகாண சபையில் வெற்றி பெற்ற தமது கட்சி உறுப்பினர்களையும் , அம்பாறை மாவட்ட ஜம் இயத்துல் உலமா உட்பட மௌலவிமார்கள்  பலரையும் அழைத்து ஆலோசனை நடத்திய பின்னர் , தானே (ஹக்கீம்) முடிவெடுக்கும் பொறுப்பை வரிந்து கொண்டுள்ளார். 

இம்முறை இஸ்லாமிய மத நம்பிக்கைகளும்  மிகுந்த அளவில் இங்கு கட்சி அரசியலில் செல்வாக்கு செலுத்துவதனை காணக் கூடியதாகவுள்ளது. கலீபா (நாட்டின் ஆட்சித் தலைவர் ) பையத் பெற்று ஆட்சித் தலைவராக முடிவெடுக்கும் அதிகாரம் பெறுவதுபோல் ஒரு சமய தோற்றப்பாடை முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பத்தியில் தமது அரசியல் நலன்களுக்கு அனுசரணையாக தேர்தல் காலங்களில் ஏற்படுத்தி வந்தது பெரிதும் இப்போது ஹக்கீமுக்கு உதவி செய்கிறது. முஸ்லிம் காங்கிரசுக்கு கொஞ்சமாவது வாக்களித்த , அக்கட்சியில் போட்டியிட்ட  கண்டி தேகியோவித்த  சிங்கள "போராளிகளும்"  இனவாத தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்தால் ஆதரிப்பார்களா ? அவர்களையும் ஹக்கீம் ஆலோசனை பெற வேண்டும் அல்லவா !. என்ற கேள்வி பற்றி யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை . அது பற்றிய செய்திகள் எதுவுமில்லை. அடுத்த தேர்தல் வரை "சிங்களப் போராளிகள்" தேவையில்லைஎன்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கலாம்.ஆனால் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் யாப்பின் படி உயர் பீட கூட்டத்தினை கூட்டாமலே , அவர்களின் ஆலோசனை பெறாமலே , தான் தோன்றித்தனமாக அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை தனிப்பட்ட வகையில் ஹக்கீம் தொடங்கியிருந்தார்  என்று கட்சியில் சிலர் குற்றம் சாட்டுவதாக தி சண்டே  ஐலன்ட் (The Sunday Island) குறிப்பிடுகிறது.

இந்த தலைமைச் செயலகக் கூட்டத்தின் பொழுது ஹக்கீமும்,    சேகு தாவூத் பசீரும்,  தாங்கள் அரசின் பங்காளிகளாக இருப்பதால் அரசுடன் பேரம் பேசி ஆளும் அரசுடன் சேர்த்து கிழக்கில் மாகாண சபை ஆட்சி அமைப்பதைனையே முஸ்லிம் காங்கிரஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அரசுடன் பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் சேகு தாவூத் பசீருக்கு முழு அமைச்சு பதவி வழங்குவதையும் , மேலும் துறைமுக கப்பல் துறை அமைச்சை ஹக்கீம் பெறுவதையும் மேலும் ஓரிரு பிரதி அமைச்சுப் பதவிகளைப் "பேரினவாதிகளிடமிருந்து"  பெறுவதையும்  மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பல கூட்டுத்தாபன தவிசாளர் பதவிகளில் அமர்வதையும் கிழக்கு  மாகாண அமைச்சில் சில முக்கிய மந்திரிப் பதவிகளைப் பெறுவதையும் உறுதி செய்வதில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக செய்திகள் வந்துள்ளன. ( “Hakeem, in a rather autocratic manner, had then appointed himself as the official spokesperson of the party, the lack of transparency in Hakeem’s dealings in this issue has also been criticized by the SLMC membership saying the party may have to face a string of protests from the Muslims in the East if Hakeem fails to make the correct decision. Hakeem commenced initial discussions with UPFA parliamentarian Sajin Vass Gunawardena. SLMC members were critical of this move saying the leader of the SLMC has been reduced to discussing and negotiating with a governing party parliamentarian.
The SLMC, it is learnt, is looking at getting Dawood reappointed as a Cabinet Minister and securing several deputy ministerial posts for the party in the central government.” The Sunday Island :16.09.2912)ஆனால் உள்ளரங்கமாக அரசுடன் சேரும் தீர்மானமே இப்போதைக்கு எடுக்கப் பட்டிருப்பினும் பை()த் கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்பதற்கான உபாயங்களை மேற்கொள்ளும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த முயற்சிகள் முஸ்லிம் காங்கிரசின் "போராளிகள்" கிழக்கிலே "புரட்சி அல்லது ஆர்ப்பாட்டம்  " (தயவு செய்து அரபு வசந்தம் பற்றி மறந்து விடுங்கள் -அது ஹக்கீமின் காரண காரியமாற்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு மாத்திரமே ) செய்வார்களாயின் ஹக்கீம் மாற்று முடிவு எடுக்க வேண்டி வரலாம்.

ஆனால் கிடைக்கப் போகும் இலாபங்கள் தீர்மானங்களில் முக்கிய காரணியாக அமையும் என்பதையும் மறுக்க முடியாது.

அஸ்ரப் மறைந்த பின்னர்  2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசுடன்  மத்தியில் ஆட்சியமைக்க  ஹக்கீம் பேச்ச்சுவார்த்தை நடத்திய பின்னர்  அவரைச் சந்தித்த "சண்டே  டைம்ஸ் " பத்திரிக்கையாளர் ஏன் சந்திரிக்காவுடன் உங்கள் தலைவர் முரண்பட்ட பின்னர் சேர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு ஒரு உப்புச் சப்பில்லாத பதிலை ஹக்கீம் அளித்தார். ஆயினும் அந்த பத்திரிக்கையாளர் இறுதியாக கேட்ட கேள்வி என்னவென்றால் " ஜனாதிபதியிடமிருந்து நீங்கள் என்ன பெற்றீர்கள் ? "  என்பதாகும். அதற்குப் பதிலளித்த ஹக்கீம் நாங்கள் எதைக் கேட்டோமோ அதைப் பெற்றோம். எங்களுக்கு பன்னிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் ஆகக் குறைந்தது அவர்களில் அரைவாசிப்பேர்   போதியளவு வெகுமதி  அளிக்கப்பட்டிருக்கிறார்கள். (Neelika de  Silva : What did you get from the President ?:
Rauf Hakeem : “We received what we asked for . we have 12 MPs in Parliament. At least half of them have been amply rewarded”)


எனவே "பேரினவாதிகள்" " பள்ளி உடைப்பவர்கள்" "காவியுடை தரித்த பயங்கரவாதிகள் செல்வாக்கு செலுத்தும் அரசு  வழங்கப் போகும் வேகுமதிச் செய்திகள் உண்மையாகுமா. அரை மந்திரி பதவியை இராஜினாமாச் செய்து அரசியல் ஸ்டான்ட்  அடித்த தவிசாளரின் அடுத்த முழு மந்திரிப் பதவி என்ன என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்.  அடுத்த தேர்தல் வரைக்கும் குர் ஆணுக்குகும் அரசியலில் தேவையில்லை . ஆனால் இன்றைய அரசியல் நெருக்கடியை சமாளிக்க  அஸ்ரபின் "கதமுள் குரான் " ஆரம்பித்தாகி விட்டது. ( இஸ்லாத்தில் குரானில் சத்தியம் செய்வது இல்லை என்பதும் ,மர்ஹூம் என்ற சொல் சாதாரணமாக  பயனபடுத்த முடியாது என்பதும ,மறைந்த மனிதருக்கு குரான் ஓத முடியாது என்பதும் வேறு சமாச்சாரம் ; அது பற்றியெல்லாம் உலமாக்களை (முஸ்லிம் மத அறிஞர்களை ) ஆராய விட்டு விடுவோம் , )

கூட்டு மாறினால்

எது எவ்வாறெனினும்  , மொத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் சேர்வதில் எந்த இலாபமும் இல்லை மாறாக , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரங்களுக்கும் ஆளுமைக்கும் கட்டுப்படும் ஒரு பொம்மை முதலமைச்சரை  மட்டுமே பெறலாம். குறுகிய இனவாத கருத்துக்களை , அரசுக்கு எதிரான நிலைப்பாட்டினை மேற்கொள்ளும்  முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் ஆப்பிழுத்த குரங்காக அல்லற்படுவார்.  தெற்கிலே அது முஸ்லிம்கள் குறித்த ஒரு எதிர்வினை நிலைப்பாட்டையும் உருவாக்கும்  ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் ஆட்சி அமைப்பின் கிழக்கில் தமது தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலினை , சர்வதேசத் தளத்தில் முன்னெடுப்பதுடன் , வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற பெயரில் "தமிழர் தாயகம் " தன்னாட்சி"  என்ற குறும் தமிழ் தேசிய கருத்தியல்களை சர்வதேசத் தளத்தில் புதுப்பித்துக் கொள்ளும் நீண்ட கால அரசியல் நலன்களையும் , இலக்குகளையும் அடைய தமிழ் தேசியக்  கூட்டமைப்பு முயலும் (சம்பந்தன் இதனை புலி அழிந்தவுடன் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார். மேலும் முஸ்லிம்களின் அரசியலுக்கு எதிரான அரசியல் கருத்துக்களை அண்மைக்காலமாக பகிரங்கமாக வெளியிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன் , யோகேஸ்வரன், அரியேந்திரன்  பற்றி இங்கு குறிப்பிடத் தேவையில்லை )

மேலும் மாகாணசபைக்கான சட்டவாக்க/ சட்டத் திருத்த  அதிகாரங்களுடன் சம்பந்தப்பட்ட  விடயங்களில் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை மிக நாசூக்காக  கையாளும் திறன் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்கும் முதலமைச்சரும் இணைந்து போக வேண்டி வரும். சிறுபான்மை இனங்களை பாதிக்கும் சட்டவாக்கம் என்ற கோதாவில் பல , தமது தேசிய நலன்களுக்கு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை  கிழக்கு மாகாண சபை நிராகரிக்கும் . வடக்கிலே ஒரு மாகாண சபை அமைக்கப் படும் பொழுது அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் எதிர்கால நலன்களுக்கு அவ்வாறான  செயற்பாடுகள் அபரிதமாக உதவும்.   ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி , தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை குறித்து  முன் நிபந்தனைகளை நாட்டின் ஒருமைப்பாடு கருதி முன் வைத்துள்ளது. எனவே அவர்களின் கூட்டைத் தவிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்குமாயின் கிழக்கு முஸ்லிம்களின் அதிகாரப் பலத்தை இழக்கும் மாகாணமாக கிழக்கு மாகாணம்  மாறிவிடும். ஏனென்னில் மொத்தத்தில் சகல முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் கூட்டே இல்லாமல் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றிருக்கலாம். மொத்த முஸ்லிம் வேட்பாளர்களின் கூட்டுத் தொகை இதனை கோடிட்டுக் காட்டுகிறது. சென்ற ஆண்டு மாகாண சபைத் தேர்தலின் போது  முஸ்லிம் காங்கிரசை தங்களுடன் இணைந்து பொதுச் சின்னத்தில்  போட்டியிடுமாறு பேரியல் அஸ்ரப் ( நு ஆ ) , அமீர் அலி (அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ) அதாவுல்லா (தேசிய காங்கிரஸ் ) கோரிக்கை விடுத்த பொழுது ஹக்கீம் அனைவரும் முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட முடியும் என்று கூறி நிபந்தனை விதித்து ஹக்கீம் நிராகரித்த பின்னரே ஏனைய முஸ்லிம் கட்சியினர் , அவர்கள் சேர்ந்திருந்த அரசுடன் இணைந்து போட்டியிட்டார்கள் , ஆனால் அக்கூட்டினை நிராகரித்த ஹக்கீம் யானைச் சின்னத்தில் போட்டியிட்டார் .


ஒரு வேளை அரசு மீண்டும் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அரசியலை பலப்படுத்த முதலில் சந்திரகாந்தனையே முதலமைச்சராக ( முஸ்லிம் காங்கிரசின் ஒத்துழைப்புடன்- சுழற்சி முறையிலாயினும் ) நியமித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆனால்   சுதந்திரக் கூட்டமைப்பும்  கிழக்கில் ஆட்சி செலுத்தினால் , அதுவும் தாங்கள் போட்டியிட்டு வெற்றிஈட்டியுள்ள சூழலில் , ஆட்சி அமைக்க " தமிழ் பேசும் முஸ்லிம்" மக்களுடன் கூட்டுச் சேர்வதில் வரலாற்று வாய்ப்பு  கிடைத்துள்ள சூழலில் திம்புக் கோட்பாடுகளின் வழிவந்த தமிழ் தேசியக்  கூட்டமைப்பு தனது சகல அஸ்திரங்களையும் பாவிப்பதற்கு   தயாராக உள்ளது. இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கு மாகாண ஆட்சியினை பற்றிக் கொள்வது என்பது அதன் கொள்கை ,  அரசியல் தீர்வு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்ட  ஜீவ மரணப் போராட்டமாகும் .  சந்திரகாந்தன்  என்ற தமிழரே தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு  சவால் விட்டுள்ளார்.   முஸ்லிம்கள் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டாளிகளிடம் ஏமாறாமலிருக்க வேண்டும். !!

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...