அரசியல் கயிறிழுப்பில் அல்லாஹ் யாரின் பக்கம் ?


 எஸ்.எம்.எம்.பஷீர்

'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! திருக்குர்ஆன் -அல் இம்ரான் 3:103)

சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த மரச் சின்ன அடையாளத்துடன் போட்டியிட்ட வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மீண்டும்  தனித்து பிரிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்  மரச் சின்னத்தில் மீண்டும் முதன் முறையாகப் போட்டியிடுகிறது . இம்முறை நடைபெறும் கிழக்கு மாகான சபைத் தேர்தலில்  இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசியலை செய்பவர்கள் நாங்களே என்று பிதுரார்ஜித உரிமை கோரும் மத முனைப்புப் பெற்ற அரசியல் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சூழல் முன்னைய தேர்தல்களை விட இப்போது அதிகமாகக் காணப்படுகிறது.  

 முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசியல்  கருத்தோட்டங்கள் மீண்டும் புதிய மெருகுடன் இன்றைய மொத்த தேசிய அரசியல் சூழலை கருத்திற்கொண்டு வீரியம் பெற்றிருப்பதனைக் காணக் கூடியதாகவுள்ளது.வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் மறுமை நாளில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று பயமுறுத்தாட்டப்பட்டது. நோன்பு பிடித்துக் கொண்டு வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்ற வேண்டு கோளின் மூலம் தேர்தல் வாக்களிப்பு மத அனுஷ்டானமாக முன்வைக்கப்பட்டது. 

அல்லாஹ்வின் கயிறும் அரசியல் கயிறிழுப்பும்

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள் என்று குர் ஆனில் சொல்லப்பட்ட வசனம் அல்லாஹ்வின் கயிறு என்பது குர் ஆணும் அதன் விளக்க உரையான நபி மொழிகளுமாகும் என்பதாக கற்றறிந்த இஸ்லாமிய மத அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும் குரானின் எல்லா தமிழ் ஆங்கில பெயர்ப்புக்கள் பின்வருமாறு கூறுகின்றன . 'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! திருக்குர்ஆன் -அல் இம்ரான் 3:103)  

இந்த பொருள்படவே வாக்கியங்கள் பிரபல ஆங்கில குரான் மொழி பெயர்ப்புக்களில் பினவருமாறு காணப்படுகிறது .
“And hold firmly to the rope of Allah all together and do not become divided.” ( சர்வதேச மொழிபெயர்ப்பு)
“And hold fast, all together, by the rope which Allah (stretches out for you), and be not divided among yourselves; “( யூசுப்  அலி)
“And hold fast, all of you together, to the cable of Allah, and do not separate. “ ( மொஹம்டு  பிக்தால் )

ஆனால் முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால மேடைகளில் , " ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்" என்று மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. அல்லாஹ்வின்  கயிறு என்பதில் உள்ள முதல் சொல்லான "அல்லாஹ்வின்  கயிறு " என்ற வசனத்திலுள்ள "அல்லாஹ்வின் " என்ற சொல் மேடைகளில் சொல்லப்படவில்லை அதற்குப் பதிலாக ஒற்றுமை என்றே சொல்லே பயன்படுத்தப்பட்டது. (இத்தனைக்கும் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸ்ரப் , யூசுப் அலியின் ஆங்கில குரான் மொழி பெயர்ப்பினை அடிக்கடி வாசிப்பவர்)   எனவே முஸ்லிம்களே ஒன்று படுங்கள் முஸ்லிம் காங்கிரசை ஆதரியுங்கள் என்பதற்காக முடுக்கி விடப்பட்ட  பிரச்சாரங்கள் முஸ்லிம் மக்களுக்குள் குரானிய போதனையாக முன் வைக்கப்பட்டது.   

இலங்கை அரசியல் வரலாற்றில் குர் ஆனிய மேற்கோளை தமது சொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்தும் வகையில் மேற் சொன்ன வாறெல்லாம் பாவித்தவர்கள் முஸ்லிம் காங்கிரசினரே. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள் என்பதை தவிர்த்து ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றி பிடியுங்கள்என்று கூறுவதன் மூலம் அரசியல் செய்வதில் ஒற்றுமை காண்பது இலகுவாக இருக்கலாம் .  அப்துர் ரவூப் மௌலவியையும் , பயில்வான்  சீடர்களையும்,  சீயாக்களையும் அஹமதிக்காரர்களையும்  சூபிகளையும் (சேகு இஸ்ஸதீன்,  பசீர் உட்பட )  இன்னும் பல குழுவினரையும் இணைப்பதில் முஸ்லிம் காங்கிரசுக்கு சிக்கல் ஏதும் ஏற்பட வாப்பில்லை. அதுவும் முஸ்லிம் காங்கிரசுக்கு அரசியல் வெற்றிக்கு வழிவகுக்கலாம்

தேர்தல்களில் அல்லாஹ் எந்தப் பக்கம் நிற்கிறான் என்று யாருக்கும் தெரியாது , ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் பலர் அஸ்ரப் , ஹக்கீம் , பசீர் போன்றோர் தாங்கள் தேர்தல்களில் வெற்றியீட்டிய வேளைகளில் அல்லாஹ் தங்களின் பக்கமே நிற்கிறான் என்று சொல்லி வந்திருக்கிறார்கள் , ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர்  பசீர் , தான் தோற்ற வேளைகளில் அல்லாஹ் தன்னை தோற்கடித்தான் , தன்னுடன் தேர்தல்களில் எதிராகப் போட்டியிட்ட  மாற்று கட்சி போட்டியாளனை அல்லது தமது அரசியல் எதிரியை (உட் கட்சியிலும்  அரசியல் போட்டி உண்டு என்பதனையும் கவனத்தில் கொண்டு)  அல்லாஹ் வெற்றியடையச் செய்தான் என்று சொல்லி தங்களின் தோல்விக்கு மத நியாயம் கற்பிக்க விரும்பவில்லை.  அந்த தோல்விகளை இறைவனின் நாட்டமே என்று அங்கீகரிக்கவுமில்லை. அதாவது அல்லாஹ் எனது /எங்களது பக்கம் இருக்கவில்லை என்று சகஜமாகவேனும் சிலாகிக்கவுமில்லை.

கடந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித்  தேர்தலில் சேகு தாவூத் பசீர் எதிர்கொண்ட பாரிய சவால் அலி ஸாகிர் மௌலானாவின்  ஏறாவூர் உள்ளூராட்சித் தேர்தல் பிரவேசமாகும் அத் தேர்தல் வெற்றி மூலம்  தனது அரசியல் இருப்பை மௌலானா தக்க வைத்துக் கொண்டால் தனது சொந்த அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றியீட்டிய சந்தர்ப்பம் எதிர்காலத்தில் மீண்டும் கை நழுவிப் போய்விடும் என்று பசீர் பயந்தார். மௌலானாவை எப்படியும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதை கைவிடுமாறும தானே முன்னின்று  அவரை கிழக்கு மாகாண சபை அமைச்சராக்கிக் காட்டுவேன் என்று பசீர் வாக்குறுதி வழங்கினர்.  போயும் போயும் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , அரசியலில்  பிரபலமானவர் ஒரு சாதாரன மூன்றாம் வரிசை அதிகார உறுப்பினராக அபிவிருத்தி சபைக் கூட்டங்களில் அமர்வதா  என்றெல்லாம் பரிதாபப்பட்டும் , பல அரசியல் தகிடுதத்தங்கள் செய்தும் மௌலானா அசையவில்லை.  பசீரின் வலையில் மௌலானா சிக்கவில்லை. 

அந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏறாவூர் பிரதேசத்தில் போட்டியிட்ட  அலி சாகிர் மௌலானாவிற்கெதிராக வெளியிட்ட பிரசுரங்களில்  முஸ்லிம் காங்கிரஸ்  அல்லாஹ்வுக்கு (இறைவனுக்கு ) மிக நெருக்கமான  கட்சி  என்ற தோற்றப் பட்டை ஏற்படுத்தும் வகையில் மக்களிடம் இலகுவாக சென்றடைய முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை பயன்படுத்தும் உத்திகளைக் கையாண்டனர் . அந்த தேர்தலில் தேர்தல் நடக்கும் தினத்துக்கு முந்திய இரவில்  சேகு தாவூதின் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவர் அலி சாகிர் மௌலானாவை தாக்கிவிட்டார் என்று சொல்லப்பட்டது.  அலி சாகிர் மௌலானாவைத் தாக்குவது என்பது  அவரின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண சம்பவம் அல்ல. அந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்  இரவோடிரவாக மௌலானா நாடகமாடுகிறார் , சதிகளின் அரங்கேற்றமே மௌலாவின் தாக்குதல் நாடகம் என்றெல்லாம் துண்டுப் பிரசுரங்களை  வேகமாக கணனிகளின் மூலம் தயாரித்து ஊர் முழுவதும் பகிரச் செய்தது.  அந்த துண்டுப் பிரசுரங்களில் காணப்பட்ட இஸ்லாமிய மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட பகுதிகள் பசீரின் கட்சியினரை -தாக்குதல் மேற்கொண்டதாக சொல்லப்படுவோரை  -நிரபராதிகள் என்று வாதிடும் வகையில்  இறைவனையே துனைக் கழைத்து  தமது தரப்பின் நியாயத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்தது.   

அது மட்டுமல்ல அந்த துண்டுப் பிரசுரம் மௌலானாவை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காகக் கொண்டு சென்ற தனது அரசியல் எதிரிகளை " உடனடியாக அங்கு விரைந்தோடிவந்த சதிகாரக் கூட்டத்தின் சாத்தான்களான    அமீர்அலி , ஹிஸ்புல்லாஹ் ,சுபைர் ஹாஜியார் போன்றவர்கள் மொலானாவை எடுத்துக் கொண்டு  மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குப் போனார்கள் ... " என்று  பசீரின் அரசியல் எதிரிகளை எல்லாம் சாத்தான்களாக,  சதிகாரர்களாக சாடியிருந்தது.   மேலும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தான் சொல்வதே உண்மை உண்மையைத்தவிர வேறில்லை என்ற நீதிமன்ற கோதாவில் , இறைவனே மறைவானவற்றை அறிவான் , ஆகவே அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று இறுதிப்பகுதியில் சொல்லப்பட்டிருந்தது. 

இதுதான் உண்மை இதுதான் ஹக்கு !
அல்லாஹ் உண்மையாளர்களுடன் இருக்கிறான்
உடனிருந்து உதவுவான்
மறைவான றப்பின்
மகத்துவம் வெளிப்படும்
அல்ஹம்துலில்லாஹ்

மேலும் இன்னுமொரு அத்தகைய கடுகதிப் பிரசுரத்தில் "கடந்த ஆறு வருட காலம் தேர்தல்களின் போது அமைதியாக இருந்த இந்த ஊர் மீண்டும் சதிகளுக்கு ஆட்பட்டிருக்கின்றது . ஒரு சாதாரண தேர்தலுக்காக மேடைகளிலும் , சொல்கின்ற நடிக்கின்ற அத்தனை பொய்களையும் மறைவானவற்றையும் அறியும் ரப்பில் ஆலமீன் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கிறான் .நாளை சரியான தீர்ப்பை அல்லாஹ் வழங்குவான்.  அல்லாஹ் போதுமானவன் , அல்ஹம்துலில்லாஹ்என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது.. 
இன்னுமொரு துண்டுப் பிரசுரத்தில் 

" இரகசியமானவற்றையும்பரகசியமானவற்றையும் ;, உண்மையையும் பொய்யையும் ;, நடப்பையும் நடிப்பையும் உள்ளமையையும்  இல்லாமையையும் நன்குணர்ந்தவன் றப்பில் ஆலமீன் .அல்லாஹ் !.
அல்லாஹ் பார்த்துக்  கொண்டிருக்கிறான்!
அல்லாஹ் நாளை மிகச் சரியான தீர்ப்பு வழங்குவான் ! அவன் பொருட்டே நாங்கள் பாரஞ் சாட்டுகிறோம்!
ஆகிறத்தில் சாட்சியாளர்களாக இருப்போம்" 
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் போதுமானவன்
அல்லாஹு அக்பர்.

அவரே எல்லா துண்டுப் பிரசுரங்களினதும் மூலகர்த்தாவயினும்  குறிப்பாக இந்த பிரசுரத்தில் அவர் கையெழுத்திட்டிருந்தார்.

ஒரு சாதாரண தேர்தலுக்காக மேடைகளிலும் , சொல்கின்ற நடிக்கின்ற அத்தனை பொய்களையும் அல்லாஹ் அறிவான்.   அல்லாஹ்தான் நாளை நல்ல தீர்ப்பை வழங்குவான் என்று பசீர் சேகு தாவூத் சொல்லி அடுத்த நாள் மௌலானா வெற்றியீட்டி விட்டார். இப்போது அந்தத் தீர்ப்பு எதை சொல்லுகிறது என்று நீங்கள் யாரும் மௌலானாவின் ஆத்மார்த்த ஆதரவாளர்களிடம் கேட்டால் , மௌலானாவின் புகழ் பாடியே ,  கேட்போரை அசத்தி  விடுவார்கள் . எப்படியாயினும் மௌலானா வெற்றி பெற்றதன் பின்னர் ஒரு சாதாரண தேர்தலுக்காக பொய்  சொன்னவர்கள் நடித்தவர்கள் யார் என்று எதிரிடையான  பொருளைக் கொள்ளலாமா?

அது மட்டுமல்ல , உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்தவாறு கிடைக்காமையால் மௌலானா தோல்வியைத் தழுவிய பொழுது , பசீர் சேகு தாவூத் முதன் முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபொழுது அவரின் இறை நம்பிக்கை அப்போது பின்வருமாறு வெளிப்பட்டது. 
"வேட்பு மனுவைத் தாக்கல் செய்தேன் அல்லாஹு அக்பர். வல்லோன் அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளில்  அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த நான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.   சகோதரர் அலி ஸாகிர் மௌலானா வெற்றிபெற முடியவில்லை "

ஆகவே பசீர் முன்னைய தேர்தல்களில் அல்லாஹ் மீது தவக்கல் (தவக்குல்/தவக்கல் என்பதன் பொருள் அல்லாஹ்வைத் தன் பொறுப்பாளன் ஆக்கிக் கொள்வதும், அவன் மீது முழு நம்பிக்கை வைப்பதும் ஆகும். நன்றி : தகவல் அப்துர் ரஸாக், துபாய் )  வைத்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை , அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளவில்லை  , அதனால்தான் அவர் தோற்றார் என்று பசீர் சொல்லாமல் சொல்வதாக அவரின் கூற்றை அர்த்தப்படுத்த முடியுமா? . மௌலானா , ஹிஸ்புல்லாஹ் போன்றோர் அதற்கு முன்னைய நாடளுமன்றத்  தேர்தல்களில் (2004 முன்பு) முஸ்லிம் காங்கிரஸ் கெதிராக   போட்டியிட்ட பொழுதெல்லாம் மௌலானாவும் ஹிஸ்புல்லாஹ்வும்  இவரை விடவும் தவக்கல் வைத்ததனால் அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளில்  அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததனால் வெற்றி பெற்றார்கள் என்று பொருள் கொள்ளலாமா? .   ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸில் உள்ள இறைவன் மீது தவக்கல் கொண்ட  உண்மை முஸ்லிம் வேட்பாளர்களை  எதிர்த்துப் "பேரினவாதிகளின் " கட்சிகளில் போட்டியிடும்   "பேரினவாதத்தின் நண்பர்கள்என்று குற்றம்  சாட்டப்படுவோர்   (உதாரணமாக மடக்களப்பு மாவட்டத்தில்  மௌலானா ஹிஸ்புல்லா போன்றோர் ) தேர்தலில் வெற்றியீட்டினால்  , அவர்களின் இறை நம்பிக்கை இவர்களை விட உசத்தி என்று சொல்லலாமா? .

இன்று முஸ்லிம் காங்கிரஸில்  பையத் எடுத்தல்  , கிலாபா எனப்படும் உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி அமைத்தல் என்றெல்லாம் நாளுக்கு நாள் பல அரசியல் அதிசயங்கள் நடந்தேறுகின்றன. இந்த சமாச்சாரங்கள் ஒன்றும் புதியதல்ல என்பதும் , அது பற்றிய கருத்தாடல்கள் அரசியல் தமாசாக்கள் அல்ல என்பதை புரியும் நிலையில் கட்சியின் தலைவர்களோ அவர்களின் தொண்டர்களோ இல்லை என்பதும . அடிப்படை இஸ்லாமிய கோட்பாடுகள் எப்படி முஸ்லிம் காங்கிரசினால் காலத்துக்குக் காலம் மீறப்பட்டன என்பதும ஒரு பாரிய ஆய்வுக்குரிய விஷயம். ( தொடரும் கட்டுரைகளில் பார்ப்போம்)  பையத் என்பது அரபு மொழியில் ஒப்பந்தம் அல்லது உறுதிமொழி என்ற பொருளைக் கொண்டது . ஆனால் பையத் என்ற மத உறுதிமொழியையும் "அரசியல் வியாபாரத்துக்கான"  கட்சி  உறுதி மொழியையும் ஒன்றாக காட்டுகின்றதான முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அபத்தம் முஸ்லிம்களை பிழையான வழிநடத்தலுக்கு தங்களின் கட்சியிலுள்ள மத அறிஞர்களின் உதவியுடன் இட்டுச் செல்கிறது. பையத் எனும் உறுதிமொழி செயற்பாட்டை  சிங்கள போராளிகளுக்கு எப்படிச் செய்யப் போகிறார்கள்.


இது பற்றி இலங்கையில் முஸ்லிம் ஒரு சில மத அறிஞர்கள் மெதுவாக ஆங்கங்கே முனுமுனுப்பது கேட்கிறது ஆனாலும்  அவை பகிரங்கமாக வரவில்லை. அந்த வகையில் எனக்கு ஞாபகத்துக்கு வரும் விசயத்தையும் இங்கு சொல்லிவிட்டால் நல்லது என்று நினைக்கிறன். புலிகள் அரசின் இறுதிச்   சமாதான காலத்தில் , கருணா புலிகளிலிருந்து விலகிய பின்னர்  முஸ்லிம் மக்களை கிழக்கிலே அரவணைக்க வேண்டிய தேவையும் தங்களின் வட மாகான அரசியல் சமூக ஆயுத அதிகாரத்தை நிலைநிறுத்தும் தேவையும் புலிகளுக்கு ஏற்பட்டது . அந்த வகையில்  கவசல்யனின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள மட்டக்களப்புக்கு புலிகளின் தலைவர் எஸ்..பீ. தமிழ் செல்வன் வந்த பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர்கள் , சமூக பிரமுகர்கள் என தமிழ் செல்வனை கொக்கொட்டிச் சோலையில் (14.02.2005) சந்தித்தத் பொழுது மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமா அல் குர்ஆனில் இருந்து ஜிஹாத் எனும் புனித மத அடக்கு முறைக்கு எதிராக குர் அணில் சொல்லப்பட்ட வாசகங்களை ஓதிக் காட்டி ( உண்மையையும் , நன்நெறியையும் நீதியையும் பிரதான கொள்கையாகக் கொண்ட உங்களின் சுதந்திரப் போராட்டம் இறுதியாக வெல்லும் ( that Truth, Righteousness and Justice ultimately wins and therefore the Tamil Freedom struggle based on those three cardinal principles, would eventually win.) என்று தமது சமூகத்தை கொன்றழித்தவர்களின் , வடக்கில் விரட்டி அடித்தவர்களின் தலைவர்களில் ஒருவரிடம் பிழையாக குரானிய மேற்கோள் காட்டிய உலமாக்களை என்னவென்று சொல்வது! இந்த செய்தியைக் கண்டதும் நான் உடனடியாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரை (ரஹ்மானை) தொலைபேசியில் தொடர்பு கொண்டு . இப்படி அபத்தமாக பேசிய உலமாக்கள் அல்லது முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளன பிரமுகர்களை பற்றிய செய்தி உண்மையா என வினவ , அவர் அவர்களின் சந்திப்பு உண்மை , அங்கு நடந்த நிகழ்வுகள் பற்றி  தான் அறியவில்ல என்றும் விசாரிப்பதாகவும் கூறிய பின்னர் , மீண்டும் அவரைத் தொடபு கொண்ட பொழுது , ஆம் அப்படி நடந்ததே என்பதை உறுதி செய்தார். அதன் பின்னர் அது பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையையும் நான் எழுதியிருந்தேன். (http://www.bazeerlanka.com/2011/03/statue-of-terrorism-vs-statute-of-anti.html )எனவே முஸ்லிம்களின் அரசியலில் மத அறிஞர்கள் ஒருபுறம் எப்படி அபத்தமான கருத்துக்களை ஒரு புறம் சொல்லிய பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸின் மதம் சம்பந்தப்பட்ட  பையத் கிலாபா அபத்தங்கள் குறித்தும் வாளாவிருக்க முடியவில்லை.

எப்படியோ முஸ்லிம்களின் அரசியல் மேடைகளில் இப்போதெல்லாம் அவர்களின் மத நம்பிக்கைகளினை ஆதார சுருதியாகக் கொண்ட கருத்துக்கள் உச்சஸ்தாயியில் உலா வருகின்றன.  தேர்தலுக்கு நாள் நெருங்க நெருங்க இன்னும் என்னனென்ன புதினங்களை கேட்கப் போகிறோமோ !.!
bazeerlanka  ( 02 .09.2012)

3 comments:

 1. பஷீர் அவர்களுக்கு நன்றிகள். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அப்துல் றஹ்மான் எனக்குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஆனால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு தலைவர் என்று தனிமனித வழிபாடு அங்கு கிடையாது. மாறாக, அங்கு சூறா என்கின்ற கூட்டுத்தலைமைத்துவ ஒழுங்குதான் காணப்படுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, முடிந்தால் உங்களுடைய கட்டுரையில் விடப்பட அந்த வசனத்தை திருத்தம் செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies


  1. Is there anyone out there , who rasied his objection that Abdur Rahuman is not the leader ?

   Muslims must move away from communal politics - – Abdur Rahman

   The National Front for Good Governance (NFGG) recognizes itself as an alternative party, based in the Muslim community but working towards good governance for all. NFGG Leader, Abdur Rahman, in an interview with Ceylon Today said, it was time for Muslims in the country to look at the bigger picture and to move away from communal politics.
   Thus, at this juncture of change, when the country too is looking for a better political culture, the question is whether Sri Lankan Muslims too would change for the better? Will Muslim politics thrive with no communal fires to feed it?
   http://www.ceylontoday.lk/89-83339-news-detail-muslims-must-move-away-from-communal-politics-abdur-rahman.html
   ReplyDelete

   .


   Delete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...