Tuesday, 17 July 2012

குருகுல சம்பந்தமும் சம்பந்தனாரும் - எஸ்.எம்.எம்.பஷீர்
"கறுவாக்காட்டாங்களின்ற தலைமையிலே தமிழர்கட்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இந்தப் பணங்காட்டான்ற தலைமையிலே ஏதாவது கிடைக்குதா என்று பார்ப்போம் "
                                                                  
                                                                     தோழர் கார்த்திகேசு மாஸ்டர்

இலங்கையின் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை இம்முறை நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் , சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.  புலிகள் முற்று முழுதாக துடைத்தழிக்கப் பட முன்னரே புலிகளிலிருந்து பிரிந்து புலிகளின் ஆயுத பலத்துக்கும் பிரதேச பலத்துக்கும் சவாலாக அமைந்த முன்னாள் கிழக்கு புலி உறுப்பினர்களின் ஜனநாயக தேர்தல் பிரவேசத்துடன் முதல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஆரம்பித்து வைக்கப்படது.  தேர்தல் முடிவுகளின் பின்னர் கிழக்கு மாகாணத்துக்கான தனி மாகாண சபை  இயங்கத் தொடங்கியது. இணைந்த வட கிழக்கு மாகாணங்களின் அரசியல் நிறைவேற்று , நிர்வாக , நீதி அதிகாரங்களை கூறுபோட்டு கடந்த நான்காண்டுகளாக இந்த மாகாண சபையால் என்ன பயன் என்ற விமர்சனங்களையும் தாண்டி கிழக்கு மாகாணசபை தனது முதல் ஆட்சிக்காலத்தை காலத்தை முடித்திருக்கிறது , அல்லது அதன் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது.  இப்போது  நடைபெறப் போகும்    இரண்டாவது மாகாண சபைத் தேர்தலில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதுதான் சென்ற தேர்தலை விட இந்த தேர்தலை வேறுபடுத்தி கவனத்தை குவிய வைக்கிறது.


முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் புலிகளின் பயத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் பங்கு கொள்ளவில்லை என்பது ஒரு சாமான்ய அறிவுக்குற்பட்ட சமாச்சாரம். ஆனால் அப்போது ரவூப்  ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை , வட மாகாண எதிர்கால இணைப்பை , தமிழரின் உரிமைப் போராட்டத்தை நெஞ்சில் நிறுத்தி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமாறு கெஞ்சிக் கூத்தாடியும் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதற்கான நெஞ்சுரம் கூட்டமைப்புக்கு அன்று இருக்கவில்லை. அதற்கான பிரதான காரணம்  , அவர்களின் அன்றைய கூற்றுவன் பிரபாகரன் இவர்களுக்கு பாசக் கயிறு வீசலாம் என்ற பயப்பீதி, இரண்டாம் பட்சமான காரணம் , வடக்கிலிருந்து பிரிக்கப்பட்ட தமிழர் தாயகக் கிழக்கில்  தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கிழக்கின் பிரிப்பினை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதாக ஆகிவிடும் என்ற தார்மீக உறுத்தலும் , சடுதியாக  ஏற்பட்ட  கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு மக்களை தயார்படுத்துவதில்,  தமது தாயகக்  கொள்கைகளை சமரசம் செய்கின்றதான தேர்தல் நிலைமைகளை வலியுறுத்துவதில்  உள்ள சாத்தியமற்ற சூல்நிலைகளுமாகும்.

ஆனால் நிலைமைகள் மிக வேகமாக மாற்றமடைந்து  வந்துள்ளன. கிழக்கில் தமிழ் முதலமைச்சர் , புலிகளின் அழிவு , பொன்சேகாவின் மீது கட்டிய பந்தயத் தோல்வி , முஸ்லிம் காங்கிரசின் கட்சித் தாவல் , புலிகளால் தாயும் தந்தையும் குரூரமாக படுகொலை செய்யப்பட்ட  முன்னாள் எம்.பீ சாம் தம்பிமுத்துவின்  தனயன் அருண் தம்பிமுத்து , கருணாவின் அபிவிருத்திப் பணிகள் , முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் அரசியல் நடவடிக்கைகள் ,   கூட்டமைப்பின் திகாமடுல்ல எம்.பீ பியசெனாவின் அரச இணைவு , அரசுடன் சேர்ந்தியங்கும் முஸ்லிம் கட்சிகளின் மூலம் இழக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் கோச அரசியல் இழப்பு என பல  முனைகளில் சவால்களை கூட்டமைப்பு எதிர்கொள்ளும் வேளையில் . முஸ்லிம் காங்கிரஸ் தங்களுக்கு உதவலாம் என்ற நப்பாசை கூட்டமைப்புக்கு இருந்தது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் அரசுடன் சேர முன்னரும் பின்னரும் கூட கூட்டமைப்புடன் ஒரு சிறுபான்மை இனம் , சமூகம் என்ற அடிப்படைக் கருத்தியல் ரீதியான  பரஸ்பர நட்புறவினை பேணுகின்ற வகையில் , குறிப்பாக சிங்களவர்கள் காணிகளை கபளீகரம் செய்கிறார்கள் , தமிழ் முஸ்லிம் மக்கள் சிங்கள இராணுவ பிரசன்னத்தால் அரச பௌத்த மத மேம்பாட்டு நடவடிக்கைகளால்  தங்களின் மத கலாச்சார விழுமியங்களை இழக்கச் செய்யப்படுகிறார்கள், பேரினவாதிகள் சிறுபான்மை மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துகிறார்கள். அவற்றுக்கு எதிராக தங்களைத் தாங்களே ஆளுகின்ற -சுயாட்சி- அரசியல் தீர்வு ஒன்று வேண்டும்  என்ற வகையில் அவ்வப்போது உடன்பாடு தோன்றும் விதத்தில் தங்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியது புலிகள் முற்றாக அழிந்த பல மாதங்கள் கழிந்த பின்னர்தான் சம்பந்தன் புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகள்  பற்றி  மிகக் கவனமாக சொற்களைத் தேர்ந்து  "கண்ணீர் மல்கினார்" ( தயவு செய்து மாணிக்க வாசக நாயனாரின் திருவாசகத்தினை ஞாபகத்தில் கொள்ளாதீர்கள். அவர் நரியை பரியாக்கினார் சம்பந்தர் கூட்டம் யாராலும் பரியாக்க முடியாத …..!

ஆனால் சம்பந்தருக்கு  கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் செல்வாக்குப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு முக்கியம் , அந்த ஆதரவு மூலம் தான் கிழக்கினை பாதுகாத்து தமது வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டை -தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்- முன்னெடுத்து செல்லலாம் . அந்த வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் கூட்டமைப்பும் , முஸ்லிம் காங்கிரசும்  இன்று உலகுக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம்களையும் மொழி வழி தமிழர்கள்தான் என்று சர்வதேசத்தில் முன்னேடுக்கபப்டும் பிரச்சாரத்தின் ஊடே கிழக்கின் மாகாண சபை வெற்றியைக் காட்டி இன்றைய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கு சாமரை வீச தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்த முயற்சிகளில் ஒன்றுதான் ஜம்மியத்துல் உலமா எனப்படும் முஸ்லிம் மத மதவறிஞர்கள் ஸ்தாபனத்துக்கு சம்பந்தன் தமிழ் பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளுகளும் கிழக்கு மாகாண சபை தேர்தலும் என்ற தலைப்பிட்டு  எழுதிய கடிதம்.

இக்கடிதத்தில் சம்பந்தன் தமிழ் பேசும் மக்கள் என்று பொதுவாக குறிப்பிடாமல் ஒரு படி மேலே சென்று சாமார்த்தியமாக தமிழ் பேசும் தமிழ் மக்கள்   மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள்  என்று குறித்து இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்கள். அக்கடிதத்தில் சம்பந்தன் " கிழக்கு மாகாணத்தில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கும் தமிழ் பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நியாயபூர்­வ­மான அபிலாஷைகளும் அரசியல், பொரு­ளாதார, சமூக, கலாசார உரிமைகளும் காப்­பாற்றப்பட வேண்டும் ௭ன்பதும், அவர்கள் தங்­கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதே­சங்களில் கௌரவமாகவும், பாதுகா­ப்பாகவும் வாழ்வதற்கு உறுதி செய்யப்பட வேண்­டும் ௭ன்பதிலும் இவற்றை அடை­வதற்கு ஒருமித்த இலங்கைக்குள் நியாய­மான நிதானமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் ௭ன்பதிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருப்பதும் இன்றைய கால கட்டத்தில் மிகவும் புனி­தமான முக்கியமான கடமை ௭ன்றே நாம் கருது­கின்றோம்."


இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் , முன்னைய தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தமிழீழக் கோரிக்கைக்கு உடன்பட்டு எம்.எச்.எம்.அஸ்ரப் , ப்ரொக்டர் ஏ .எம்.சம்சுதீன் , உதுமாலெப்பை ஆகியோர் தாங்கள் ஸ்தாபித்த முஸ்லிம் ஐக்கிய முன்னணி கட்சி மூலம் " தந்தை செல்வா"வின் வழியில் , தனி நாட்டுக்கான வட்டக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து  1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இறங்கிய போது " அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் அடையா விட்டாலும் தம்பி நான் அடைவேன்  " என்று சபதம் எடுத்தவர்தான்   எம்.எச்.எம்.அஸ்ரப் என்பது வரலாறு. ( http://www.bazeerlanka.com/2011/04/14.html ) அதனை நினைவூட்டியே இப்போது சம்பந்தன்  "மர்ஹூம் அஷ்ரஃப் தந்தை செல்வாவை குருவாக ஏற்று அவரின் பாசறையில் வளர்ந்த மாமனிதர் அவர் உயிரோடு இருந்திருந்தால் அவரின் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறானதொரு முடிவை ௭டுத்திருக்காது." என்று கிழக்கிலே  ஹக்கீமின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் நடைபெறப் போகும் மாகாண சபைத் தேர்தலிலே அரசுடன் சேர்ந்து போட்டியிடுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் குற்றம் சொல்ல முடியாது , ஏனென்றால் ஹக்கீம் சென்ற மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களில் " சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமையாகி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவோ , மலினப் படுத்தவோ முஸ்லிம் காங்கிரஸ் முயலாது . உண்மையில் தமிழ் தேசியம் பலப்படுத்தப்படுவதோடு அதன் உரிமைகள் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றும். அந்த காலகட்டத்துக்கு சற்று முன்பாக ஒரு நிகழ்வொன்றில் ரவூப் ஹக்கீம் "  56 இல் சிங்களம் மட்டும் சட்டத்தை அமுலாக்கும் முடிவில் சிங்களப் பெரினவாதத்துக்குள்   முஸ்லிம் சமூகம் அள்ளுண்டு போனதை தமிழ்ச் சமூகம் வெறுப்புடன் நோக்கியது. இது இன்றும் கூட தமிழ் மக்களின் மனங்களில் அழியாத வடுவாக புரையோடிப் போயுள்ளது . இதன் மூலமாக நமது சமூகம் தவறாக எடை போடப்படுகின்றது " என்றவாறு பேசி தமிழ் தேசியவாதக் காதுகளை குளிரச் செய்திருந்தார் ஹக்கீம். , மேலும்  ஹக்கீம் அன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பசில் ராஜபக்ச கிழக்கு மாகாணசபைத் தேர்தல்  வடக்கு கிழக்கு பிரிவினைக்காண சர்வஜன வாக்கெடுப்பு என்று பிரகடனப் படுத்திய பொழுது ஹக்கீம் தமிழ் மக்களை நோக்கி தமக்கு வாக்களித்து அரசைத் தோற்கடித்து வடக்கு கிழக்கு பிரிவினைக் கெதிராக தமது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகொள் விடுத்திருந்தார் து மாத்திரமல்ல சிறு பான்மை மக்களுக்கெதிராக அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசை நீடிக்க விட மாட்டோம் என்றும் ரவூப் ஹக்கீம் சூளுரைத்திருந்தார்.


உண்மையில் சம்பந்தன்  , தமிழர் விடுதலைக் கூட்டணி அஸ்ரபுக்கு செய்த அநியாயத்தை வசதியாக மறைத்துவிட்டு , அவரை மாமனிதராக்கி முஸ்லிம் மக்களின் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத  தலைவர் மறைந்த அஸ்ரபின் அபிமானிகளின் அனுதாபத்தை  ஈர்க்கும் வண்ணம்  தமது மனக்குறையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவர் பிரபாகரனின் மொழிப் பாவனையில் " மாமனிதர் " என்றும் குறிப்பீட்டு  பிரபாகரன் கொலை செய்த அஸ்ரபுக்கு மாமனிதர் பட்டத்தை சம்பந்தன் சூட்டயுள்ளார். இந்த சம்பந்தன் தனது தமிழர் விடுதலைக்  கூட்டணியின் மறைந்த தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை மாமனிதர் என்று சொல்லி புலிகள் இருக்கும் வரை புகழாரம் சூட்டவில்லை , இப்போதாயினும் அவ்வாறு  அழைத்ததாக கூடத் தெரியவில்லை . 

சரி அது போகட்டும் இந்த சம்பந்தன் முஸ்லிம்களைத் தமிழ் பேசும் மக்கள் என்று சம்பந்தப்படுத்தி பேசுவதனை ஆட்சேபித்து மறைந்த அமைச்சர் சட்டத்தரணி அன்வர் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் சராமாரியாக கேள்விக்கணைகளால் துளைத்த்டுத்த சம்பவத்தினை சம்பந்தன் இன்னமும் நினைவில் கொண்டிருப்பார். ஏனெனில் இஸ்மாயில் சம்பந்தனை 'அன்புக்குரிய சம்பந்தன் " என்று விளித்தே உரையாற்றியிருந்தார். அவ்வுரை நிகழ்த்தி  சில வாரங்களின் பின்னர் அன்வர் இஸ்மாயிலும் மரணித்து விட்டார். அன்வர் இஸ்மாயில் அந்த உரையிலே" 
தமிழர்களுக்கான விடுதலை என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை விடவும் மறைந்த தலைவர் அஸ்ரப் மிக ஆக்ரோஷமாக  ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்றுத் தராவிடில் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான் என்று முழங்கியபோது , அந்த முழக்கத்தைக் கேட்டு உணர்ச்சி பொங்கிய ஒருதமிழ் மகன்  தனது கையை பிளேட்டால் வெட்டி அஸ்ரபின் நெற்றியில் வீரத் திலகமிட்டதை மறைக்கவோ மறுக்கவோ முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அன்வர் இஸ்மாயீலின் அன்றைய உரையின் முக்கிய பகுதிகளை எனது கட்டுரையில் பதிவு செய்துள்ளேன் (பார்க்க : http://www.bazeerlanka.com/2011/03/blog-post_702.html )

அன்று சம்பந்தனும் அவரின் கூட்டமும் -கூட்டமைப்பும்- எப்படி அஸ்ரபை , அவர் சார்ந்த முஸ்லிம் சமூகத்தை புறக்கணித்தார்கள் என்று பார்ப்போம் அவ்வாறு திரும்பிப் பார்க்கும் போதுதான்  அஸ்ரப் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று சொல்லும் சம்பந்தனுக்கு என்ன நிலை ஏற்பட வேண்டும் என்பதை முஸ்லிம் மக்களே தீர்மானிக்கலாம்.   அஸ்ரப்  ,  சம்பந்தன் வகையறாக்களுடன் தன்னை இணைத்து தானே தமிழீழம் பெற்றுத் தருவேன் என்று சம்பந்தம் பேசி , அவர்களின் பிரகடனத்தை தமதாக வரித்துக் கொண்டு  இரத்தத் திலகம் சுமந்தவர் .  பொதுத்  தேர்தல் நடந்து நாலாண்டின் பின்னர்  1981 ஆம் ஆண்டில் நடந்த மாவட்ட சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை தமிழர் கூட்டணி வேட்பாளராக நியமிக்கும் படி சம்பந்தனின்  கட்சியை  அவர்களில் ஒருவனாக அஸ்ரப் உரிமையுடன் கோரியபோது  கூட்டணியினர் அக்கோரிக்கையை புறந்தள்ளி ஆ. வேல்முருகு ஆசிரியரை வேட்பாளராக நியமித்து அஸ்ரபின் கோரிக்கையை நிராகரித்து "நாங்கள் தமிழர்கள் நீங்கள் முஸ்லிம்கள் " என்று அஸ்ரபை மட்டுமல்ல அன்று அவர்களுடன் சேர்ந்திருந்த அணைத்து  முஸ்லிம்  மக்களையும் வேறுபடுத்தி அவர்களின் சுய வர்ணத்தை புலப்படுத்தியவர்கள் சம்பந்தன் அணியினர். இந்நடவடிக்கையே முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி கிழக்கிலே தோன்ற மூல காரணமாகும் என்பதை சம்பந்தர்  மறந்திருக்க மாட்டார் ஆனால் மறைக்கப் பார்க்கிறார்.

குரு- சிஷ்யன் பாரம்பரியம்

சம்பந்தர் இப்போது "அஸ்ரப் தந்தை செல்வாவின் பாசறையில் வளந்த மாமனிதர்"  என்று குறிப்பிடுவதன மூலம் அஸ்ரபுக்கும் செல்வாவுக்கும் இடையே ஒரு குரு சிஷ்ய உறவு இருப்பதாக சொல்கிறார். உண்மையில் அஸ்ரப் தந்தை செல்வா பற்றி மிக நெகிழ்வூட்டும்  கவிதை ஒன்றை எழுதியுள்ளார் . அக்கவிதையில் செல்வாவின் மீது தனக்குள்ள அபிமானத்தை மிக உருக்கமாக உணர்வுபூர்வமாக வடித்துள்ளார். அதன் மூலம் அஸ்ரபின் அரசியல் தூண்டல் எழுச்சியினை அடையாளம் கண்டு கொள்ளலாம். இதையெல்லாம் வைத்துக் கொண்டு சம்பந்தன் சொல்வது போல் அஸ்ரபுக்கு அரசியல் குரு செல்வா என்று ஒரு வாதத்துக்கு வைத்தக் கொண்டால், செல்வாவின் சிஷ்யன் அஸ்ரப் , அவரின் சிஷ்யன் ஹக்கீம் என்று சொவதும் பொருத்தமானதே.  ஹக்கீம் எந்த நூலும் இதுவரை எழுதவில்லை ஆனால் "தந்தை செல்வா" பற்றி  அவர் ஆற்றிய உரையை நூலக வெளியிட்டுள்ளார் ..  அந்த நூலில் அஸ்ரபும் "தந்தை செல்வாவின்" பாசறையில் வளர்ந்தவர் என்பதை  கோடிட்டு காட்டியுள்ளார்.  தனக்கு "தந்தை செல்வா" மீதுள்ள பெரு மதிப்பை , வியப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பிரிவினைவாதத்தை வளர்த்து , சிங்கள பௌத்த விரோதத்தை வைத்தே தனது அரசியல் கட்டுமானத்தை உருவாக்கி , அதனூடாகவே தமிழர் உரிமைகளை வென்றெடுக்க முயற்சி செய்த தமிழர் தலைவர் எஸ்.ஜி வீ .செல்வநாயகத்தை , முஸ்லிம் தலைவர்களான அஸ்ரபும் , ஹக்கீமும்   தந்தை முறை தலைவராக, தூரதிருஷ்டியும் தீர்க்க தரிசனமுமிக்க  தலைவராக   அரசியலில் காண்கின்றனர் என்பதனை அவ்விருவரின் கவிதையும் பேச்சும் பறை சாற்றுகின்றன !. அகிம்சா வழி போராட்டம் வெற்றியத்  தராது என்பதனால்தான் "தந்தை செல்வா"  வட்டுக்கோட்டை  தீர்மானத்தினை மேற்கொண்டார். "சுதந்திரத் தமிழீழம்"  அமைக்கப் பாடுபடுவது என உறுதி எடுக்கப்பட்டது, அந்தத் தீர்மானம் குறித்து தந்தை செல்வா பாராளுமன்றத்தில் .

தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்க நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி கேட்டோம். அதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியம் இல்லை என்பதை பட்டறிவு மூலம் உணர்ந்தோம். எனவே நாங்கள பிரிந்து வாழ்வது தான் வழி என்ற முடிவுக்கு வந்து விட்டோம். இதை நாம் செய்யாவிடில் தமிழனம் இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்க முடியாது. கூட்டாட்சிக் கோரிக்கையை அடியோடு கைவிட்டு விட்டோம்’"  என்று குறிப்பிட்டார் . 

வட்டுக் கோட்டைத் தீர்மானம் தான் ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு அங்கீகாரம் வழங்கிய போராட்டமாகும் . தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறி ஆயுளை முடித்துக் கொண்ட செல்வாவின் இறுதி முடிவினால்தான் . தமிழ் இளைஞர்கள் அழிக்கும் "ஆய்தக் கடவுளர்களாக" அவதாரம் எடுத்தார்கள் . இரத்தத் திலகங்கள் இட்டவர்கள் இலங்கையின் இரத்த ஆறு ஓட  ஆய்தம் தூக்கி தமது சொந்த சகோதரர்களினை , அன்னியோன்னியமாக ஒரு மொழி பேசி அண்மித்து வாழ்ந்த சக சமூகத்தினை , ஏனைய சமூக அப்பாவி மனிதர்களை பதம் பார்த்தனர். இலங்கையின் வளத்தையும் நலத்தையும் நாசம் செய்தனர். வட்டக்கோட்டையில் அகிம்சா மூர்த்தி என்றும் இலங்கை காந்தி என்றும்   அழைக்கப்பட்ட தந்தை செல்வா வன்முறைக் கலாச்சாரத்துக்கு வழிகாட்டிவிட்டு மறைந்து போனாரா , அவர் காட்டிய வழியும் அவரின் தூரதிருஷ்டியும்  இப்போது முள்ளிவாய்க்காலாக முடங்கிப் போய் நிற்கிறது. !

அண்மையில் "தந்தை செல்வா"வுக்கும் ஆயுதம் தூக்கி "போராடிய " தமிழ் இளைஞர்களுக்கும் ( அவர் புலிகளையே குறிப்பிடுகிறார் என்பதை வாசகர்கள் கவனிக்கவும் ) உள்ள கொள்கை உறவை பாராளுமன்ற உறுப்பினர்  பா.அரியநேத்திரன்  ."தந்தை செல்வா எவ்வாறு மதிக்கப்படுகிறாரோ அவரின் கொள்கைக்காக உயிர்த் தியாகம் செய்த இளைஞர்களும் மதிக்கப்பட வேண்டும்.அவரின் கொள்கைக்காகவும் அவரின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகவும் உருவான போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாக சிலபேர் கூறுகிறார்கள் அது உண்மையல்ல.முள்ளிவாய்க்கால் விடுதலைப் போராட்டத்தின் முடிவல்ல. அது ஒரு இடைத்தங்கல் முகாம். எமது அகிம்சைப் போராட்டமோ அல்லது அறிவு போராட்டமோ இன்னும் ஓய்ந்துவிடவில்லை விடுதலை கிடைக்கும்வரை தந்தை செல்வா அவர்களின் பாதையில் போராட்டம் தொடரும். "  (26.04.2012 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 35ஆவது நினைவுதின நிகழ்வு) என்று குறிப்பிட்டு   .முள்ளிவாய்க்கால் போராட்டம் தந்தை செல்வாவின் கொள்கைகளுக்காக புலிகள் செய்த போராட்டம் என்கிறார் . புலிகள் கிழக்கில் முஸ்லிம்களை கொன்றழித்தது வட புலத்தில் முஸ்லிம்களை இன சுத்திகரிப்ப்பு செய்தது , சிங்கள அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றது. பயங்கரவாத செயல்களைப் புரிந்தது என்று எல்லாமே தந்தை செல்வாவின் கொள்கை பின்பற்றலா ? . அப்படியான செல்வாவின் கொள்கைக்காக யார் அவரைக் குருவாகக் கொண்டிருப்பார்  யார் அவரின் பாசறையில் வளர்ந்திருப்பார் , யார் செல்வாவின் கொள்கைகளை மீண்டும் முன் எடுக்கப் போகிறார்கள்  என்பது  எமது மனதில் கிளைவிடும் கேள்விகளாகும் . இந்த கையாலாகாத அரியேந்திரன்தான் சந்திரிக்கா அரசில் பொதுக் கட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் புலிகளுடன் பங்காளிகளாக முஸ்லிம்கள் கோரிக்கைவிட முடியாது, நாங்களே புலிகளின் அனுமதியின்றி அதில் கலந்து கொள்ளமுடியாது என்று கூறி புலியின் மேலாதிக்கத்தை , புலிகளுடனான தமது  அடிமைச் சாசனத்தை பகிரங்கமாக பாடசாலை நிகழ்சி ஒன்றில் கூறியவர்.

அது மட்டுமல்ல  முஸ்லிம்கள் மீதான  கூட்டமைப்பின் "காதல்" தொடர்பாக நூற்றுக்கணக்கான சம்பவக் கோர்வைகள் உண்டு . அதில் உதரணத்துக்கு ஒன்று என்னவென்றால் , காலஞ்சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பீ , என்.ரவிராஜ்   2003 ஆம் ஆண்டு ரூபவாகினி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்    " முஸ்லிம்கள் சிங்களப் பகுதிகளில் எவ்வித அதிகாரங்களையும்  கோராமல் வாழ்வது போல் வட கிழக்கு பகுதிகளில் புலிகளின் அதிகாரத்தின் கீழ் ஏன் அவர்களால் வாழ முடியாது"  என்று கேள்வி எழுப்பியதையும் நினைத்துப் பார்க்காமலிருக்க  முடியவில்லை. 

இவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிட வேண்டும் என்று சம்பந்தன் ஆயதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இன்றைய நிலையின் நலன்களைப் பற்றி கவனத்தில் கொள்ளாமலும் இல்லை , ஆனாலும் தந்தை செல்வா பாசறையில் வளர்ந்த பாசம் நெஞ்சில் இன்னமும் நெருடலாகவே இருக்கிறது. புலிகளால் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டபோது , அடித்து விரட்டப்பட்ட போது சர்வதேசத்துக்கு கூறாமல் மவுனித்திருந்துவிட்டு அல்லது அதனை புலிகள் செய்யவில்லை என்று கூறி பொய்யுரைத்து விட்டு சர்வதேச அனுசரணைக்கு முஸ்லிம் காங்கிரசை துணைக்கழைக்கிறார் 

"
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இன்று சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழ் பேசும் மக்களுக்கான சிறந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆகவே இந்நிலையைப் பலப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வன்முறையை ௭வரும் விரும்பவில்லை. தமிழ் பேசும் மக்களுக்கான நிலையானதும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான நல்ல அரசியல் தீர்வைவொன்றையே நாம் கோரி நிற்கின்றோம். இதனை சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுள்ளது." என்று ஜம்மியத்துல் உலமாவுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்."

இக்கடிதத்துக்கு சம்பந்தனுக்கு பதில்  இதுவரை அனுப்பப் படவில்லை. இப்போது கிழக்கு தமிழர்களே கட்சியமைத்து தமிழர் கூட்டமைப்புக்கு  எதிராக நிற்கிறார்கள் , கிழக்கிலே கடந்த மூன்று தசாபதங்களாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் தேசிய அரசியல் கட்சிகளுடன் கூட்டமைத்து பல நலன்களை தமது மக்களுக்கு பிரதேசத்துக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் .  தொடர்ச்சியான உயிரும் உடமையும் இழந்து தமது வாழ்வை வளத்தை மீண்டும் கட்டியெழுப்ப விரும்பும் தமிழ் சமூகம் தந்தை செல்வா வழியில் மீண்டும் பயணிக்க தயாராக இருக்கிறதா என்பதை தமது பட்டறிவு மூலம் பா. அரியநேத்திரனுக்கு அறிய வைக்க முயல்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது

சென்ற வருடம் மார்கழி மாதத்தில் வட மாகாண தேர்தல்கள் நடைபெறப் போவது பற்றி அரசு தனது உத்தியோகபூர்வமற்ற அறிவித்தலை வெளிப்படுத்தியவுடனே ,மன்னார் கத்தோலிக்கப் பேராயர் கலாநிதி. இராயப்பு ஜோசப் மற்றும் தமிழ் தேசியவாதிகள் பலர் சேர்ந்து தமிழ் சிவில் சமூகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் , அதிகூட அவர்கள் முஸ்லிம்கள் என்று ஒரு வார்த்தைப் பிரயோகத்தை மறந்தும் சொல்லவில்லை. ஆனால் தந்தை செல்வாவின் கனவை முன்னெடுக்கவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சுட்டிக் காட்டியிருந்தனர்.  அண்மையில் இந்த இராயப்பு யோசெப் ஆயர்தான்  மன்னாரில் முஸ்லிம்களுக்கு காணி விற்கக் கூடாதென்று கூறி , அதன் தொடர்ச்சி முறுகலில் ரிஸார்ட் பதுருதீனை சபித்ததாக செய்திகள் வந்தன.

அந்த அறிக்கையில் அவர்கள் 
" 13ஆம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் மக்களிடமிருந்து ஆணை பெற்ற த.தே.கூ வை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து அத்தேர்தலில் அது வெற்றி பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல. மாகாண சபை முறைமையினை தழிழர்கள் ஓரு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதற்காகவே அரசாங்கம் இதனை முயற்சிக்கின்றது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வு தொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஓரு பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை த.தே.கூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும். அத்தகைய நிகழ்வு ஈற்றில் முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்துவிடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக்கடமை த.தே.கூ. விடமே இன்று உள்ளது." 
என்று மாகாண சபைத் தேர்தல்களில் பங்குபற்றுவது அரசியல் முள்ளிவாய்க்காலாகவும்  அமைந்துவிடும் என்று கூறி அச்சுறுத்தியிருந்தனர். அந்த வகையில் இம்முறை கிழக்கில் நடைபெறப் போகும் மாகாண சபைத் தேர்தல் முள்ளி வாய்க்காலுக்கு போக முன்னர் , மாவிலாற்றில் மரணித்துவிடுமா என்பதையும் கிழக்கு தமிழர்கள் தீர்மானிப்பார்களா என்ற ஐயத்துக்கு  ஆயரும் அவரின் தமிழ்த் தேசியத்தை விட்டுக் கொடுக்காத புத்தி சீவிகளும் இதுவரை தமிழர் கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடவில்லை என்பதும் மர்மமாகவே இருக்கிறது. ஒரு வேளை இப்போதுதான் அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.!

இந்த நடப்புகள் ஒருபுறமிருக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களை தனித்தனியாக அரச தலைவர்களுடன் உறவுகளை பேணி வருகிறார்கள் அந்த வகையில் ஜனாதிபதியுடன் ரவூப் ஹக்கீம் உறவைப் பேண , பசீர் சேகு தாவூத் ஜனாதிபதியின் சகோதரர் பாசில் ராஜபக்சவுடன் நெருக்கமான உறவினைப் பேனுகிறார். மேலும் முஸ்லிம் காங்கிரசின் சார்பில் முதலமைச்சர் தெரிவுக்கென எதிர்பார்க்கப்படும் நிசாம் காரியப்பர் ( உள் குத்துவேட்டுக்களைத் தாண்டி )  கோத்தபாயா ராஜபக்சவுடன் அரசியல் நலனற்ற தொடர்பினை பேணுவதாக அறியப்படுகிறது. எந்த விதத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனேயே சேர்ந்து போட்டியிடும் என்பதனை முன்னரே சேகு தாவூத் பசீர் சென்ற உள்ளூராட்சி தேர்தலின் போது. ,  பொது மக்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டார் .  அந்த உள்ளூர் மட்ட அரசியலில் வெளியிடப்பட்ட  பிரசுரத்தில் அவர் சூசகமாக  " கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிட்டால் ! இன்ஷா அல்லாஹ்
முதலமைச்சரைத் தீர்மானிப்பது முஸ்லிம் காங்கிரஸ் ,
முஸ்லிம் அமைச்சர்களைத் தீர்மானிப்பது முஸ்லிம் காங்கிரஸ் ,
முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகமானோரைத் தீர்மானிப்பது முஸ்லிம் காங்கிரஸ் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தமது கட்சியின் எதிர்கால நலன்களை பட்டியலிட்டு தாங்கள் அரசுடன் இணைந்து போட்டியிடப் போவதை சொல்லாமல் சொல்லியிருந்தார். எனவே முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடப் போவது என்பது ஆச்சரியமானதொன்றல்ல. அதிகாரக் கதிரைகளை இலகுவில் தியாகம் செய்ய முடியாது என்ற எதார்த்தம் ஒருபுறமிருக்க அதற்கான அவசியமும் இப்போதைக்கு முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டுமல்ல ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்குமில்லை. 

அடிக் குறிப்பு:
கறுவாக்காட்டானின் தலைமை என்பது எஸ்.ஜே.வீ .  செல்வநாயகத்தையும்  , பணங்காட்டான் என்பது அவரின் பின்னர் தமிழர் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற  பண்ணாகத்தை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் கார்த்திகேசு ஆசிரியர் குறிப்பிட்டு கூறியது.  

இன்ஷா அல்லா : இறைவன் நாடினால்


சம்பந்தனார் என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரரை குறிப்பிடுவார்கள் இங்கு தமிழர் கூட்டமைப்பு தலைவர் திரு . சம்பந்தனை குறித்து மட்டுமே நான் பாவித்துள்ளேன். மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்கில் அல்லNo comments:

Post a Comment

"யார் பயங்கரவாதிகள்" By Vijaya Baskaran

--------------------------- 1983 இனக்கலவரம் நடந்தபின் ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கின.ஏதோ நமக்கு சுதந்திரம் கிடைத்த...