சமபந்தி போஜனமும் சம்பலும் சோறும்” - குறு நாடகம்

எஸ்.எம்.எம்.பஷீர்இடம்: மஹிந்த மாமன்னரின்  அரச சபைபாத்திரங்கள்: மஹிந்த மாமன்னர் , காவலாளி , பிரதம அமைச்சர். 
காவலாளி : “ ராஜாதி ராஜ,ராஜ மார்த்தாண்ட,ராஜ கம்பீர,ராஜ குலத்திலக மாமன்னர் மஹிந்த ராஜா வருகிறார் வருகிறார் வருகிறார்” ( அரசபைக் காவலன் அரசனின் வரவை கட்டியங் கூற மந்திரி சபையில் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். மஹிந்த மா மன்னன் அனைவரையும் நோக்கி கும்பிட்டு ஆயபோவன்,வணக்கம் , அஸ்ஸலாமு அழைக்கும் என்று முகமன் கூறி அமர்கிறார். மந்திரி சபையிலிருந்து அரசருக்கு பதில் முகமனாக ஆயுபோவன் , வணக்கம் . வஅழைக்குமுஸ்ஸலாம் என்று ஒரு சேரக் கூறுவது குரல்களின் சங்கமத்தால் என்னவோபோல் எல்லாம் சேர்ந்து ஒரு புதிய சொல்லாய் , கதம்பமாய்  எதிரொலிக்கிறது. மன்னன் அனைவரையும்  அமரும்படி தலையசைக்கிறார்.மன்னர் தனது அரசவை உள்நாட்டு பிரதம அமைச்சரைப் பார்த்து , நாட்டு நடப்புகளைக் கூறுமாறு பணிக்கிறார். அமைச்சர் எழுந்து நின்று அரசனை சம்பிரதாய பூர்வமாக விளித்து

பிரதம அமைச்சர்: "மா மன்னரே இன்று பலபல சங்கதிகள் உண்டு என்றாலும்  தற்போது  சூடு பிடித்துள்ள உள்நாட்டு விவகாரமான நமது கிழக்கு நாட்டின் தேர்தல்கள் பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன். மா மன்னர் அதற்கு அனுமதியளிக்க  வேண்டும் ( மன்னரின் அனுமதியை எதிர்பார்த்து அமைச்சர் நிற்கிறார்) 


 மன்னர்:  "ஆம் நீர் சொல்வது மெத்தச் சரி , எனக்கும்  ஆவலாகத்தானிருக்கிறது. கூறும் ! கூறும் !!"
பிரதம அமைச்சர் மன்னா! ,நமது கிழக்கு நாட்டில் நமது அரச பங்காளிகள் , நமது சொந்த ஆதரவாளர்கள்  மிகத்தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நமது முன்னால் எதிர் தரப்பு கட்சியாக செயற்பட்ட , அண்மையில் எம்முடன் சேர்ந்து செயற்படும் முஸ்லிம் காங்கிரஸாரும் பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு எம்முடன் சேர்ந்தே மன்னரின் கட்சியில் (சுதந்திரக் கட்சியில் ) தேர்தலில் நிற்போம் என்று அறிவித்து விட்டார்கள் . வழக்கம் போல் தமது ஆதரவாளர்களுக்கும் அரசுடன் ஒப்பந்தம் செய்யப் போவதாக அறிவித்து விட்டார்கள். 
மன்னர் : ( குறுக்கிடுகிறார் )  அவர்கள் எம்முடன் ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லையே ! அவர்களின் பேச்சாளர் , பசீர்  கிழக்கை ஆள வேண்டும் என அரசாங்கம் விரும்பினால் நான்  கல்முனைக்கு வந்து முஸ்லிம் முதலமைச்சரை உத்தரவாதப்படுத்த வேண்டும். , அப்படி செய்யாது விட்டால்  அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும்  . எங்களுடன் சேர்ந்து கிழக்கு நாட்டு தேர்தலில்  நிற்கமாட்டோம் என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிக்கை விட்டிருந்தாரே. !

பிரதம அமைச்சர்: ” மன்னா! , ஆம் , அவர்கள் இனிமேல் தான் ஒப்பந்தம் செய்யப் போகிறார்கள் , அவர்கள் இப்படித்தான் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்து விட்டு , மக்களிடம் அது பற்றி அனுமதி கேட்கப் போவதாக கிழக்கு நாட்டிலுள்ள மூதூருக்கு  சென்று மக்களிடம் பேசினார்கள். வழக்கம் போலவே மாட்டிற்கு முன்னாள் வண்டியைக் கட்டுபவர்கள் அவர்கள். அவர்களுக்கும் அவர்களின் மறைந்த தலைவரின் பெயரை உச்சாடனம் பண்ணி அவரின் தேர்தல் மேடைப் பேச்சுக்களை , ஒளிபரப்பாக்கி வாக்கு சேகரிப்பது என்பது மிக இழுகுவான காரியம். நீங்கள் அதனை பண்டாரனயகாவிற்க்கும் செய்ய முடியாது. தமிழ் தேசியத் தலைவர்கள் செல்வநாயகத்திற்கும் கூட அப்படி செய்ய முடியாது என்கிறார்கள் . அந்த வகையில் செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி போல் முஸ்லிம் காங்கிரசாருக்கு அரசியல் வெற்றி பெற தர்மம் செய்து கொண்டிருக்கிறார் மறைந்த அஸ்ரப்.  அந்த வகையில் நீங்கள் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள்.
 மன்னர்:  " ஆம் , ஆம் , சரியாகச்  சொன்னாய்  ( மன்னர்  வாய் திறந்து சிரிக்கிறார்.). தங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று ரணிலுடன் வேறு ஒப்பந்தம் செய்தவர்கள் அல்லவா அவர்கள்! 

பிரதம அமைச்சர்: உங்களை "மன்னராட்சியிலிருந்து" கவிழ்ப்போம் , புதிய ஆட்சியை ஏற்படுத்துவோம் , உங்களின் குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்று உங்களின் பிரதான எதிரியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் கீழ் நீங்களும் உங்களின் குடும்பத்தின் அரசியல் பிரதானிகளும் விசேடமாக அணியும் சால்வையை குறியீடாகக் கொண்டு " சால்வைச் சாபம் " எனும் போராட்டம் நடத்தியவர்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீம் . நீங்களும் அதை மறந்து , அவரும் அதை மறந்து உங்களின் மாளிகைக்கு  அவரை அழைத்து வந்து விட்டீர்கள் . அரசியல் வியூகம் அமைப்பதாக ஹக்கீம் முழங்கித் திரிந்தாலும் , வியூகத்துக்குள் வியூகம் அமைப்பதில் மன்னரின் கீர்த்தியே கீர்த்தி!! ( பிரதம அமைச்சர் தனக்குள்ளே மக்களின் தலைகளில் மிளகாய் அரைப்பதில் அரசியல்வாதிகள் அசகாய சூரர்கள் என்று  மெதுவாக முனு முனுக்கிறார் )

மன்னர்: நீர் இறுதியாக சொன்னது எனக்கு விளங்க வில்லையே !
பிரதம அமைச்சர் : ஆ ! அதுவா , அது ஒன்றுமில்லை ஆர்சே அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை  நண்பருமில்லை என்று சொன்னேன். 

மன்னர்: மெத்தச் சரிமெத்தச் சரி (ஆமோதிப்பது போல் தலை அசைக்கிறார்) 
பிரதம அமைச்சர்: "இன்னுமொரு செய்தி உங்களுக்கு தெரிவது நல்லது . மன்னா!  முஸ்லிம் பாதுஷா கிழக்கு நாட்டுக்கு வேண்டும் என்பதால் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோதாவில் முஸ்லிம் கட்சித் தலைவர்களான அக்கரையூர் குறுநில மன்னர்  அதாவுல்லாவும் , வன்னி பிரதேச  குறுநில மன்னர் ரிஷாத் பதுருத்தீனும் , கிழக்கின் பாதுஷா நானே என்று சென்ற தேர்தலில் குறுநில மன்னர்கள் எல்லாம் பொதுச் சின்னத்தில் போட்டியிடக் கேட்டும் அதற்கு முடியாது என்று மறுத்து , மரத்தில் தான் நீங்களும் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி , தாங்கள் மரத்திலிருந்து இறங்க மாட்டோம் என்று  அடம்பிடித்து , இறுதியில் யானைச் சின்னத்தில் சவாரி செய்த ஹக்கீமும் இப்போது ஐக்கியமாக தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிக்கை செய்துள்ளார்கள் ".

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் நடந்த வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது நோன்பு பிடித்துக் கொண்டு தேர்தலுக்கு சென்று வாக்களிக்குமாறும் , முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் மறுமை நாளில் எழுப்பப்படும்  போது அதற்காக அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் பத்வா வழங்கிய கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ் . எனவே அந்த வகையில் இந்த தேர்தல் ஒரு புறத்தில் நோன்பு காலத்தில் நடைபெறுவது மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் கஷ்டமாக தோன்றினாலும்,  நீங்கள் நோன்பு காலத்தில் தேர்தலை நடத்தச் செய்து முஸ்லிம் கட்சிகளுக்கும் ஒரு அரிய வாய்ப்பை கொடுத்திருப்பதாக நீங்கள் மகிழ்ச்சி அடையளாம் மன்னரே! ஏனெனில் இம்முறை அந்த மத பிரச்சாரங்களுக்கும் வாய்ப்புண்டு தங்களுக்கிடையே முஸ்லிம் கட்சிகள் தவிர்த்துக் கொள்ளும் தனி நபர் அவதூறுப் பிரச்சாரமும்  உங்களின் ஆட்சியப் பொறுத்த வரைக்கும் நன்மைபயப்பதாகவே அமையும்.   இல்லாவிட்டால் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தேஹிவள  பள்ளி பிரச்சாரம் என்று ஆளை ஆள் பின்னி எடுத்து விடுவார்கள். இப்போது அந்த பிரச்சாரங்களை ஐக்கிய தேசியக் கடசியின் ஆதரவாளர்கள் மட்டுமே செய்யக் கூடியதாகவிருக்கும். . ஒருவேளை முஜீபுர் ரகுமான் கிழக்கில் சென்று தொண்டை கிழிய சத்தம் போடலாம் . நோன்பு காலம் அதிகம் சத்தம் போடவும் தொண்டையிருக்காது.( பிரதம அமைச்சர் சற்று மவுனம் சாதிக்கிறார் , மீண்டும் தொடர்ந்தும் பேசுகிறார்   )
"சரி நோன்பு மாதம் வருகிற தேர்தல்  அதில் தாங்கள் ஆளுக்கு ஆள் அவதூறு சொல்லக் கூடாது என்று சுய நிபந்தனையும் விதித்திருக்கிரார்கள் .நோன்புக்குள் தேர்தல் நடப்பதும் முஸ்லிம் கட்சிகளுக்கும் நல்லதுதான். ஏனென்றால் நோன்பு பிடித்துக் கொண்டு வாக்களிப்பது கூட ஒரு வணக்கம் தான் என்று முன்பெல்லாம் , ஒன்றாக முஸ்லிம் காங்கிரசிலிருந்த போது பத்வா வழங்கியர்கள் இந்த குறு நில மன்னர்கள். முஸ்லிம் பாதுஷாவை எதிர்பார்த்து  வாக்களிப்பது ஒரு வணக்கம் என்று இப்போது சொல்வதிலும் ஒற்றுமையுடன் செயற்படுவார்கள். ரிசாட்டையும் ஹக்கீமையும் நினைக்கும் பொழுது இன்னுமொரு சம்பவத்தை உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன்."    
மன்னர்: "ஹூம் சொல்லும் கேட்போம்"
பிரதம அமைச்சர்: : "அதுதான் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக் கெதிராக தீர்மானம் எடுக்கபப்டுவதைத் தடுக்க முஸ்லிம் நாடுகளுக்கிடையே ஆதரவு தேடும் முயற்சியில் நீங்கள் முஸ்லிம் தலைவர்களை அங்கு அனுப்பிய போது இடம்பெற்ற சம்பவந்தான் இது .நீங்கள் அதனையும் அறிய விரும்புவீர்கள் என்று நம்பிச் சொல்கிறேன். 
 மன்னர்: "ஹூம்! ஹூம் !! சொல்லும் கேட்போம்"
பிரதம அமைச்சர்:: புலம் பெயர் அரச ஆதரவாளர் ஒருவர் ஜெனீவாவில் ரவுப் ஹக்கீமிடம் வட மாகாண சபைத் தேர்தலில் ரிச்சர்ட் பதியுதீன் , டக்லஸ் தேவானந்தா போல் நீங்களும் அரசுடன் சேர்ந்து கேட்டால் நல்லது தானே என்று கேட்க , அதற்கவர் அரசு தங்களுக்கு சம பந்தி போஜனம் தருவதில்லை , இரண்டு மூன்று ஆசனம் உள்ள சின்னக் கட்சிக்காரர் ரிசார்ட் பதயுதீனுக்கு கொடுக்கின்ற இடத்தை எட்டு எம்.பீக்க்ளைக் கொண்ட எங்களுக்கு தருவதில்லை., தான் ரிசார்டின் அலுவலகத்தில் போய் , தேர்தல் கூட்டு வைக்கக் கேட்க முடியாது. என்றெல்லாம் தனது அரசு பற்றி அவருக்குள்ள திருப்தியின்மையை திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட அந்த புலம் பெயர் அரச ஆதரவாளர். " ஹக்கீம் ஐயா ! நீங்கள் இன்றைய அரசுக் கெதிராகவே கடந்த காலங்களில் தேர்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இன்றைய அரசை வீட்டுக்கு அனுப்புவேன் என்று சவால் விட்டீர்கள் , ஆனால் ரிசார்ட் பதியுதீன் மற்ற சில முஸ்லிம் கட்சித் தலைவர்கள் அரசுடன் சேர்ந்து அவர்கள் வெல்ல பாடுபட்டார்கள் , அவர்கள் சுதந்திரக் கட்சியின் கூட்டணிக் கட்சியாகவிருந்து செயற்பட்டார்கள். நீங்கள் எல்லாம் முடிந்த பிறகு இப்போது சேர்ந்திருக்கிறீர்கள் , நீங்கள் அரசுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் நிற்பதென்றால , ஏன் ரிசார்ட் பதயுதீனின் அலுவலகத்துக்குப் போக வேண்டும் சுத்திரக் கட்சி செயலாளரின் அலுவலகத்துக்குப் போய் அவருடன் தானே பேச வேண்டும். அது மட்டுமல்ல இப்போது சமபந்தி போஜனம் கேட்கிறீர்கள் , ஐயா உங்களுக்கு அவர்கள் சம்பலும் சோறும் தருவதே மேல். நீங்கள் ரிசார்ட் பதயுதீன் அதாவுல்லா போல் பிரியாணி கேட்க முடியாது. உங்களுக்கு பிடிக்கவில்லையானால்  அரசிலிருந்து விலகிப் போக வேண்டியது தானே " என்று சொல்லியிருக்கிறார்..
மன்னர் : (வியப்புடன் புருவங்களை உயர்த்திஇப்படியெல்லாம் நடந்ததா அமைச்சரே ! . அது சரி அண்மையில் ஹக்கீம் அரசு பற்றி அதிருப்தி கிழக்கிலே நிலவுகிறது என்று கூறியிருந்தாரே . சந்தர்ப்பம் பார்த்து கட்சி மாற ஹக்கீம் தயாராக இருக்கிறாரா.
பிரதம அமைச்சர் : இப்போதைக்கு மாறுவார் என்று நான் நம்பவில்லை மன்னரே ! ரிசார்டைத் தேடி அவரின் கட்சித் தவிசாளரே அவரின் வீடு தேடிச் சென்று விட்டார். ஆனால் அவர்  தனது எதிர்கால திடுதிப்பான மாற்றங்களுக்கு மக்களை மனதளவில் தயார் படுத்தி வருகிறார்..
மன்னர்: அமைச்சரே ! முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் , கருணா , தமிழர் தேசக் கூட்டமைப்பு பற்றி நீர் ஒன்றும் சொல்லவில்லையே , அவர்களும் தமிழர்தான் கிழக்கு நாட்டின் வேந்தனாக வர வேண்டும் என்று சொல்லுகிறார்களே.?
பிரதம அமைச்சர்: ஆம் மன்னரே ! சென்ற மாகாண சபைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடாவிட்டாலும் தமிழர் வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கூட்டணி மூலம் ஹக்கீமுக்கு கொடுக்க வசதி பண்ணிய கூட்டமைப்புக்கு இப்போது ஹக்கீம் காலை வாரி விட்டுவிட்டார் என்பதனை நினைத்து கூட்டமைப்பினர் பொறுமுகிறார்கள்மனோ கணேசனும் போதாக்குறைக்கு கொழும்பில் காட்டமாக கிழக்கு முஸ்லிம் அரசியல் வாதிகளின் கோபத்தை கிளறி விட்டுள்ளார். சந்திரகாந்தன் சென்ற தேர்தலில் அதிக வாக்கு பெற்றாலும் இம்முறை அவர் சொல்வதுபோல் கூட்டமைப்பை எதிர்த்து அவர்களின் தேசியவாத தமிழர் வாக்கு வங்கியை பெரிதாக அசைத்துவிட முடியாது. கருணாவும் சந்திரகாந்தனும் தங்களுக்குள்ளேயே சேர்ந்தியங்க தயாராகவில்லை. தமிழர்கள் கூட்டமைப்புக்கு முழுமையாக வாக்களித்தாலும் தமிழ் வேந்தனை பெற முடியாது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் அரசுக்கு வாக்களித்தால் கிழக்கின் சிங்கள வாக்குகளினை மேலதிகமாக கொண்டு அரசு வெற்றி பெறும் வாய்ப்பே அதிகரித்து வருகிறது. எல்லைப்புற சிங்கள மக்களுக்கு மன்னர்தான் நிம்மதியை அளித்தவர் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அரசு ஒரு தேசிய கட்சி என்ற தோரணையில் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு ஏதேனும் ஒரு நியமத்தை நிர்ணயித்து , அதன் அடிப்படையில் கிழக்கின் தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை கருத்திற் கொண்டு செயற்படும் வகையில் வேந்தனையா அல்லது பாதுஷாவையோ தீர்மானிக்கலாம். முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டாலும் தங்களின் கட்சிக்காரரே பாதுஷவாக வரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தால் உங்களுக்கும் சிக்கல்தான் மன்னரே! . ஏனென்றால் , சென்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டது . தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை ஐக்கிய தேசியக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹக்கீம்தான் பெற்றார் . அவர் பாதுஷாவாகலாம் என்ற நம்பிக்கையிலே முஸ்லிம்களும் தமிழர்களும் அவருக்கு வாக்கு அளித்தனர். தமிழ் மக்களின் மனநிலை அன்று இழப்புக்களுடனும் துரங்களுடனும் மண்டிக்கிடந்தது. அதனால்தான் ஹக்கீமும் தமிழ் மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் தேர்தல் மேடைகளில் " முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் அச்சமின்றி சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகின்றது. இதற்குக் காரணம் இத் தலைமைத்துவம் ஓர் இயக்கத்தின் தலைமைத்துவமாக இருப்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் மாகாண சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்படவேண்டும் எந்தக் கட்சியும் முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டோம் " என்று பேசியது எனக்கு இன்னமும் ஞாபகத்திலிருக்கிறது. மன்னரே. 
இப்போது கருணா எதிபார்ப்பது போல் தமிழ் மக்கள் முழுமையாக அல்லது பெரும்பான்மையாக அரசுக்கு வாக்களிப்பார்களா என்பது ஒரு கோடி ரூபாய்க் கேள்வியாகும்..  ஆனால் அதிசயமாக முஸ்லிம்களை விடவும் பெரும்பான்மைத் தமிழர்கள் அரசுக்கு வாக்களித்தாலோ அல்லது பெரும்பான்மை முஸ்லிம்கள் தமிழர்களை விடவும் அரசுக்கு அதிகமாக வாக்களித்தாலோ யார் வேந்தனாக அல்லது பாதுஷாவாக  உரிமை கோரும் தகுதி உடையவர் என்பதற்கு தீர்வு தரும் நியமமும் நிரனயிக்கப்படலாம்.  ஆனால் சிங்கள மக்களின் வாக்குகள் பற்றி மூச்சே விடாமல் பலர்  பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் வாக்குகளும் சம பலத்தை எட்டிய வாக்குகள்தான் , அவர்கள் தேசிய அரசியலை விடுத்து நாளை இன மத அடிப்படியில் தங்களும் போட்டியிடத் தொடங்கினால் கிழக்கின் கதி அதோ கதிதான்., இன சவ்ஜண்யம் கிழக்கு நாட்டின் முன்மாதிரி எல்லாமே வெறும் கற்பனை ராச்சியக் கனவுகளாகப் போய்விடும், இன்றைய முழு நாட்டினதும் இன ஐக்கியத்துக்கும் நல்லுறவுக்கும் முன் மாதிரியே கிழக்குத்தான்!!   
 மன்னர்: ஆம் நீர் சொல்வதையும் யோசிக்கத்தான் வேண்டும்.   சரி மந்திரியாரே , நீர் சொன்னீரே செத்தும் கொடை கொடுத்தான் சீதக் காதி என்று அவர் மாதிரி யாரும் நமது இனத்தில் அல்லது பௌத்த மதத்தில்  இருக்கிறார்களா ?
பிரதம மந்திரி :  சீதக் காதி செத்தபின்னர் கொடை கொடுத்தார் என்பது  சீதக்காதி என்பவரின் கொடைத்தன்மையை பற்றி புகழுரையாகும் ஆனால்  அவர் செத்தபின்னர் கொடை கொடுத்தார் என்பது மெய்யன்று. அதுபோலவே நமது ஜாதகக் கதையிலும் உள்ள தனஞ்சயா அரசனை உதாரணமாகக் கூறலாம். .
( மன்னர் சற்று மவுனமாக ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராய் இருக்கிறார். கருணா கிழக்கினை தனியாக புலிகளின் தாகத்திலிருந்து பிரித்ததையும் ; வடக்குடன் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இணைக்கப்பட்ட கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக உரிமை கோரும் மனுவை இலங்கையின் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த  இரு சிங்களவர்களான  வசந்த பியதிஸ்ஸ , ஜயந்த விஜயசேகரவையும்;  மூன்றாவதான சம்மாந்துறையை சேர்ந்த முகம்மது புஹாரியையும்   , ஜே வீ பியினரையும் வழக்கில் ஆஜரான காலஞ்சென்ற பிரபல அரசியலமைப்பு சட்டத்தரணி எச் எல்.டி சில்வா ஆகியோரையும் நினைத்து )
மன்னர் : பிரதம அமைச்சரே , சபைப் பிரதாணிகளே, நான் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கிறது.
காவலாளி ; சபை இத்துடன் கலைகிறது.
(மன்னர் எழுந்து நிற்கிறார். அனைவரும் எழுந்து நிற்கிறார்கள் , மன்னர் அரச சபையை விட்டு மெதுவாக வெளியேறிச் செல்கிறார்.)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...