"விக்கிலீக்ஸ்" அசாஞ்சேயின் ராஜீய புகலிடமும் அரசியல் தஞ்சமும் ! எஸ்.எம்.எம்.பஷீர்


“ஒன்றில் நீயும் எல்லோரும் சொல்லும் மரபுக் கோட்பாடுகளையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாய், அல்லது நீ ஏதும் உண்மையை சொல்லுகிறாய் , அது நெப்டியூன் கிரகத்திலிருந்து சொல்வது போல் தோன்றுகிறது . “     
-   நோம் சொம்ஸ்கி        ( Noam Chomsky )
சென்ற 19ம்   திகதியிலிருந்து எக்குவடோர் தூதுவராலயத்தில் இன்றுவரை தஞ்சமடைந்துள்ள விக்லீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே எதிர்நோக்கும் சவால்கள் சாதாரணமானவைகளல்ல.  மேற்குலகின் சாதாரண நிகழ்வு இன்று அவருக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது. அவரைத் தொடரும் அமெரிக்க அரசுக்கு அனுசரணையாக தொடரும் மேற்குலக சதுரங்கத்தில் தன்னை காயாக வைத்துள்ளார் அசாஞ்சே.!20  ஆகஸ்ட் 2010 இரண்டு பெண்கள் அசாஞ்சே தங்களுடன் முறைகேடாக நடந்து கொண்டார், தங்களைக் கற்பழித்தார் என்று செய்த முறைப்பாட்டின் பேரில் சுவீடன் நாட்டின்  பிரதம உத்தியோகத்தரால் செய்யப்பட்ட பூர்வாங்க விசாரணையின் பின்னர் அக்குற்றச்சாட்டுக்கள் மீது வழக்கெழு காரணங்கள் இல்லை என்று   முடிவு செய்யப்பட்டது. அதனையடுத்து முறைப்பட்டுக்காரர்கள் அம்முடிவுக் கெதிராக அரச வழக்கு தொடுனருக்கு மேன் முறையீடு செய்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஒரு முழு பூர்வாங்க விசாரணையை  மேற்கொண்டார்.
அசாஞ்சே தனது சட்டத்தரணிக்கு தனது வழக்கினை கவனிக்கும் அறிவுறுத்தல்களை விடுத்த பின்னர் சுவீடனை விட்டு வெளியேறினார்  18ம் திகதி நவம்பர் மாதம் 2010 அரசதரப்பு வழக்கு தொடுனர், அசாஞ்சே பிரசன்னமாகாத நிலையிலும் அவரை ஸ்வீடனில் தடுத்து வைக்க ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு வின்னப்ப்பித்தார். ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றம் அதற்கான ஆணையை வழங்கியது  மறுநாள் சுவீடனின் ச்வீயா மேன் முறையீட்டு நீதி மன்றில் தனது சட்டத்தரணி மூலம் அசாஞ்சே  அந்த மேன் முறையீட்டு விசாரணையின் போது  அரச வழக்குதொடுனர் தாம் ஐரோப்பிய பிடியாணைக்கு விண்ணப்பிக்க போவதாக நீதிமன்றுக்கு தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் அசாஞ்சேயின் மேன் முறையீட்டை  நேரடியான ஆள் விசாரணையின்றி (தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்  அடிப்படையில்) 2010 நவம்பர் மாதம்  24 திகதி  நிராகரித்தது
 26 திகதி நவம்பர் மாதம்   வழக்குதொடுனர் ஐரோப்பிய பிடி விறாந்தினை விடுத்தார்.  ஆயினும் ஐரோப்பிய நீதிமன்ற பிடியாணையில் குற்றம் சாட்டப்படுகின்ற குற்றத்திற்கான சாத்தியமான தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை என்று மேன் நீதிமன்றம் அந்த பிடியாணையை நிராகரித்தது. மீண்டும் அதனை பிரதியீடு செய்யும் ஒரு பிடியாணை ஒன்றை  2 ஆம்   திகதி டிசம்பர் மாதம் 2010 வழங்கியது  அதனையே மேன் முறையீட்டு நீதி மன்றம் டிசம்பர் மாதம்   6 ஆம் திகதி உறுதி செய்தது.  அப்போது மீண்டும்  சட்டப்பிரச்சினை தொடங்கியது.  அசாஞ்சே மேற்குலகின் சட்டத்தின் மூலமான பாரிய அழுத்தங்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டார். ஆயினும் அசாஞ்சே தனக்கு கிடைத்த உலக புக்தி ஜீவி சமூக , இடது சாரி சிந்தனையாளர்களின் , அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் ஆதரவுடன் தனது விக்கிலீக்சின்  மூலம் ஏற்படுத்திய பரபரப்பை முன்னெடுத்துச் சென்றார். அதற்கான சூழல் ஐக்கிய இராச்சியத்தில் அவருக்கு கிடைத்து. அது ஒரு சிறு ஆயுளைக் கொண்டதாயினும் அவரின் பணி அசுரமானது.  
அசாஞ்சே உலகின்  மேற்குலக ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளின் கூட்டணிக் கெதிராக, அவற்றினை பலப்படுத்தி வளம்படுத்திகொண்டுள்ள உலக ஊடக சக்திகளின் மையப்படுத்தலிளிருந்து புறந்தள்ளப்பட்ட  உலகின் தலைசிறந்த  சமூக சிந்தனையாளர்களை இடதுசாரி கருத்தியலாளர்களை அரசியல் மாற்று செயற்பாட்டாளர்களை, அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு யுத்த நடவடிக்கைகளுக் கெதிராக, குரல்கொடுக்கும் சக்திகளை , சர்ச்சைக்குரிய அரசியல் தலைவர்களை நேர் காணும் ஒரு முயற்சியினை இரஷ்ய தொலைக்காட்சி (RT) ஊடாக  சென்ற சித்திரை மாதம் அறிமுகப்படுத்தி உலக சமூக சிந்தனை மாற்றுத் தளத்தினை கட்டியெழுப்பும்  "நாளைய உலகு " நிகழ்ச்சி தொடரினை தொடக்கி உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில்  லெபனான் ஹிஸ்புல்லாஹா இயக்கத்தின் தலைவரரான ஹசன் நசருல்லாஹ்வை பேட்டி கண்டதன் மூலம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.  இத் தொடரில் பாகிஸ்தானில் அரசியல் மாற்றம் வேண்டி களத்தில் இறங்கியிருக்கும்  முன்னாள கிரிக்கட் வீரர் இம்ரான் கானையும், அவர் புகலிடக் கோரிக்கை விண்ணப்பித்திருக்கும் நாடான எகுவடோர் நாட்டின் பிரதமரையும்  நேர்கண்டிருந்தார்.  இரண்டு வருடங்களுக்கு முன்பே எகுவடோர் அவரை புகலிடம் தருவதாக அழைத்திருந்தது. இவரின் காணொளி நேர்காணலில்  உலகின் இடதுசாரி சிந்தனை ஜாம்பவான்களான பேராசிரியர்  நோம் சொம்ஸ்கி, தாரிக் அலி   ஆகியோரினுடனான கருத்துப்பகிர்வு உலகின் மாற்று அரசியல் சிந்தனைத் தளத்தில் மிக முக்கிய பதிவாகும் அதுபோலவே உலகின் பிரபல சமூக சிந்தனையாளர் சலவி னுடனான கருத்துப்பகிர்வு , அதற்கெதிரான மாற்று  விவாதங்கள் என்பன உலகின் அரசியல் சமூக கட்டமைப்பு மாற்றங்களை நம்பும் புதிய தலைமுறையினரை ஆகர்சிப்பனவாக அமைந்திருந்தன.
240,000 பவுண்ட்ஸ் பிணையில் பல உலக பிரபலங்களைasange 2 உத்தரவாதமளிப்போராக நிறுத்தியே அசஞ்சே விடுவிக்கப்பட்டார். அவ்வாறான பிரபலங்களில்  நோபல் பரிசு பெற்ற சேர் ஜான் சல்சடனும் ஒருவர். அசாஞ்சே  அவருக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளின் படி தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாலை பத்து மணி தொடக்கம் காலை எட்டு மணி வரை தங்கியிருக்க வேண்டும் (Night Curfew ) என்பதுடன்  தினமும் காலையில் பத்து மணிக்கு தான் தங்கியிருக்கும் எஸ்செக்ஸ் பகுதில் உள்ள குறிப்பிட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் .
அசாஞ்சேயை பிணையில் விடுவிக்க பிணைத்தொகை செலுத்தியவர்களுள் இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமிமா காணும் புரன்ட் லைன் ஊடகவியலாளர் சங்கத்தின் நடத்துனர் வோகன் ஸ்மித்தும் ஒருவர். அதிலும் வோகன் ஸ்மித் தனது எசெக்ஸ்சசிலுள்ள வீட்டிலேயே அசாஞ்சே பிணையின் நிபந்தனையின்படி தங்குவதற்கு இணங்கி அசாஞ்சே அவருடனே தங்கியிருந்தார்.
சுவீடன் அரச வழக்குதொடுனரின் ஐரோப்பிய கைதானை சட்ட  அதிகாரத்தினால் வெளியிடப்பட்டதல்ல அது நிறைவேற்று துறையினால் வெளியிடப்பட்டது என்றும் சுயேட்சையான நீதித்துறையினால் வெளியிடப்பட்டதல்ல (Judicial Authority) என்ற வாதத்தினை முன்வைத்தே பிரித்தானியாவில் ஆசஞ்சே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். நாடுகடத்தலுக்கெதிரான அசாஞ்சேயின் உச்ச நீதிமன்ற வழக்கு தீர்ப்பு தீர்ப்பு 30.06.2012 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது. அத்தீர்ப்பில் இரு வாரத்தின் பின்னர் அவரை நாடு கடத்த பணித்திருந்தது.  அதன்படி அசாஞ்சே ஸ்வீடனுக்கு ஐரோப்பிய பிடியாணையின்  (European Arrest Warrant) படி நாடு கடத்தப்பட வேண்டும் .
ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில், 5பேர் அசாஞ்சேவுக்கு எதிராகவும் இருவர் அவருக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை அடிப்படையில் அசாஞ்சேவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆயினும் உச்ச நீதி மன்ற தீர்ப்பினை அடுத்து மீண்டும் அவ்வழக்கின திறக்கும் முய்ற்சியில் அசாஞ்சேயின்  வழக்கறிஞர்கள் தோல்வியுற்றாலும் முந்திய தீர்ப்பில் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் என்ற வாசகத்தை நீக்க நீதிமன்றை பணித்ததில் , அதனை நீதிமன்று ஏற்றுக் கொண்டு அச்சொல்ல நீக்கியுள்ளது. குற்றம் சம்பந்தமாக நாடுகடத்தப்படுபவர் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் முறையான குற்றப்பத்திரிக்கை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை அதற்கெதிராக வேறு ஏதும் சட்ட பரிகாராம் காணமுடியாத நிலையில் , உயர் நீதிமன்ற வழக்கினை மீள் திறக்க வேண்டுமென்ற மனுவும் உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்ட நிலையில் , அகதிகளுக்கான சர்வதேச சட்டம் தனக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே  ராஜீய புகலிட நடைமுறைகளை பயன்படுத்தி எக்குவடோர் தூதுவராலயத்தினுள் 19 ஆம் திகதியன்று சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
இந்நிலையில் எக்குவடோர் தூதுவராலயத்தில் சரணடைந்துள்ள அசாஞ்சேயை இலண்டன்  பெல்க்ராவியா காவல் நிலையத்தில்  வெள்ளிக்கிழமை காலை 11.30    மணிக்கு வந்து  சரணடையுமாறு சென்ற வியாழக்கிழமை எக்குவடோர் தூதுவராலயத்திற்கு சென்ற போலீசார் சரணடையுமாறு கோரும் கடிதமொன்றினை கையளித்தனர். ஆனால் இன்றுவரை அவர் சரணடையவில்லை.  சனிக்கிழமை மாலை அசாஞ்சேயின் அறிக்கை ஒன்றினை அவரின் ஆதரவாளர் ஒருவர் தூதுவராலயத்திற்கு வெளியே வாசித்துள்ளார்,  ஆனால் அசாஞ்சே சரணடைவதற்கோ அல்லது சரணடையாமல் தூதுவராலயத்தை விட்டு வெளியேறியவுடனே அவரைக்  கைது செய்வதற்கோ பிரித்தானிய ராஜரீய நடவடிக்கை தொடர்பான போலீசார் தூதுவராலயத்துக்கு  வெளியே காத்துக் கிடக்கின்றனர். சிலர் தூதுவராலயக் கட்டடத்தை சுற்றியும் அதனை அண்மிய பிரதேசங்களிலும்  மாறு வேடத்திலும் அங்கு நிற்பதனை நன்கு அவதானித்தால் கண்டு கொள்ள முடிகிறது.
அவரின் தஞ்சம் கோரும் விண்ணப்பம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்பதுடன் அவருக்கு புகலிடம் வழங்குமாறு கோரிக்கைக்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல உலகெங்குமுள்ள விக்க்லீக்ஸ் நண்பர்கள் சங்கம், பிரபல ஏகாதிபத்திய எதிர்ப்பு அமரிக்க எதிர்ப்பு  சிந்தனையாளர்கள் இடதுசாரி செயற்பாட்டாளர்கள், அமெரிக்காவின் , அதன் கூட்டாளிகளின்  கபடத்தனத்தை, காவாலித்தனத்தை , கேள்விக்குட்படுத்தும்   சுதந்திர சித்னையாளர்கள் பலரும் , புதிய உலக மாற்றங்களை பற்றிய சிந்தனைகளை நம்பும் இளைஞர்கள் பலரும் என இன்று உலகளாவிய ரீதியில் அசாஞ்சேக்காக கை கோர்த்துள்ளனர்.
பிரபல  அமெரிக்க ஆக்கிரமிப்பு, அடாவடித்தனங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆவணப்படங்களை திரைப்படங்களைத் தயாரிக்கும் மைக்கல் மூர் ; பிரபல மேற்குலக அரசியல் நயவஞ்சகத்தனங்க்களை ஆதாரங்கள் மூலம் ஆவணங்களாக்கிய பிரபல எழுத்தாளர் ஜான் பில்ஜெர் போன்றோர் அசாஞ்சேயின் அரசியல் தஞ்சம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதற்கான கோரிக்கையையும் எக்குவடோர் அரசுக்கு விடுத்துள்ளனர்.
அசாஞ்சேயின் முன்னாள் விக்க்லீக்ஸ் நண்பியான செயற்பட்ட இன்று அவருக்கெதிராக கற்பழிப்பு குற்றம் சாட்டியுள்ள அட்ரின் எனும் பெண்மணியும் ஒரு சீ ஐ ஏ எனும் அமெரிக்க மத்திய புலனாய்வு ஏஜெண்டுகளின் கைக்கூலியாக மாறியே இக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் என்று அதற்கான பின்னணிச் சூழலை விவரிக்கும் சில தகவல்களும் வெளிவந்துள்ளன.
உதாரணத்துக்கு ஒரு சம்பவமாக இராக் மீது யுத்தம் தொடுக்க ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு இராக்கிய பொறியியலாளர் சதாம் ஹுசைன் நடமாடும் பேரழிவு ஆயுத உற்பத்தி நிலையங்களை வைத்துள்ளார். என்று சொன்ன முழுப் பொய்யை ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சிலில் வைத்து அமெரிக்க ராஜாங்க செயலாளர் கொல்லின் பவல் எப்படி வரைபடங்கள் மூலம் நிரூபித்தார் என்பதையும் பின்னர் அந்த பொறியியலாளர் சதாம்  ஹுசைன் தூக்கிலிடப்பட்ட பின்னர்  தான் சொன்ன பொய்யை ஊடகமொன்றின் மூலம் ஒத்துக் கொண்டதையும்   நோக்கும் போது அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை அதற்கு ஒத்து ஊதும் பிரித்தானியாவின் அசிங்கத்தையும் உலகம் பார்த்திருக்கிறது.
அந்த வகையில் உலகம் முழுவதும் அடாவடித்தனமும் ஆக்கிரமுப்பும் புரியும் அமெரிக்காவின் காடைத்தனம் தனது நலனுக்கு எதையும் செய்யும் என்பதையும் இந்த அசாஞ்சேயின் விசயத்திலும் மறுக்க முடியாது.  எவ்வாறெனினும் அவருடனும், மற்றைய பெண்ணுடனுமான பாலியல் தொடர்பு பரஸ்பர சம்மதத்துடனானது என்று அசாஞ்சே கூறுகிறார். அவ்வாறான செய்திகள் ஒரு புறமிருக்க இப்போதுள்ள மிக முக்கிய கேள்வி அவருக்கு அரசியல் புகலிடம் வழங்குவது குறித்து எக்குவடோர் தூதுவர் எக்குவடோர் ஜனாதிபதி ராபேல் கொரியாயாவை  (Rafael Correa)  நேரடியாக சந்தித்து அவ்விண்ணப்பம் தொடர்பில் முடிவெடுக்க எக்குவடோர் சென்றுள்ளார். இதுவரை அவருக்கு புகலிடம் வழங்க காணப்படும் தாமதம் கூட எக்குவடோரின் துணிச்சல் ராஜரீய சிக்கல்கள் குறித்த கேள்வியையும் எழுப்புகின்றன
அமெரிக்க இராணுவத் தளத்தை மூடிய தைரியமுள்ள எக்குவோட்ரின் ஜனாதிபதி ஐரோப்பாவிலும் எதிர்ப்பினச் சம்பாதிக்கும் வீரியம் கொண்டவரா என்பதே இன்றைய பெரிய கேள்வியுமாகும் .  அந்த முடிவு குறித்து எத்தனை ஆர்வம் காட்டினாலும் , இறுதியில் அவருக்கு புகலிடம் வழங்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து  அவர் வெளியேறமுடியாது, வெளியேறும்போது அவர் கைது செய்யப்படுவார் . அப்போது உள்நாட்டின் பிணை நிபந்தனை மீறலுக்காக அவர் தண்டிக்கப்படலாம் என்பதுடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டும்.
ஆனால் சர்வேதச அரசியல் தஞ்ச சட்டம் இவருக்கு , அதனையும் மீறி பாதுகாப்பளிக்குமா என்றால் , இன்றைய ஏகாதிபத்திய , முதலாளித்துவ அரசியல் அதிகாரங்களின் மையங்களுக்கு  சவால் விடும் நபர்கள் ஸ்தாபனங்கள்  நிச்சயமாக அந்த பாதுகாப்புக்கு உடபடுத்தப்பட மாட்டார்கள். அந்த வகையான இரகசிய முறைகேடுகள் பலரையே விக்லீக்ஸ் வெளிக் கொணர்ந்திருந்தது. எனினும் உலகம்  அதற்கான போராட்டங்களை பல தலைமுறைகளுக்கு முன்னெடுக்க வேண்டி வரலாம். அந்த வகையில் அசாஞ்சேயும் அந்தப் பணியில் தன்னை அர்ப்பணிக்கவேண்டியே நேரிடும்.
 அமெரிக்காவின் தேசிய இரகசியங்களை வெளியிட்டமைக்காக விக்லீக்ஸ் எனும் இணையம் உருவாக மூல ஊது குழலாகவிருந்த (Whistle Blower ) அமெரிக்காவின் படைவீரர் பிராட்லி மான்னிங் (Bradley Manning) எதிரிகளுக்கு இரகசியங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன, அவரின் நிலை மரண தனடனையுடன் முடிவுறும் என்ற நிலையில , அவருக்கும் அசாஞ்சேக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்கள் குறித்து வேர்ஜீனியாவின் கிரான்ட் ஜூரிகள்   பரிசீலனை செய்துகொண்டுள்ள சூழலில் , அசாஞ்சே மரணதண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று அரசியல் பிரதானிகள் முன்முடிவு எடுத்துள்ள நிலையிலே , 42135 பக்கங்களைக் கொண்ட கோவையை அசாஞ்சே தொடர்பில்  எப் பீ ஐ (FBI)  தயார் படுத்தியுள்ளது. 
  இதன் பின்னணியில்  அசாஞ்சே ஆபத்தான சூழலிலே இருக்கிறார்  என்பதயும் ஸ்வீடன் அரசு அமெரிக்காவிற்கு நாடு கடத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.   அமெரிக்கா சட்டமா அதிபர்,  தாங்கள் அசாஞ்சேயை நாடுகடத்த கோரவில்லை  என்று கோருவது நம்பக்  கூடியதல்ல என்று அசாஞ்சே சொல்வதிலும்   உண்மை இல்லாமல் இல்லை.  .பிரித்தானியா அகதிகளின் கோரிக்கையை தனது உள்நாட்டு,  சர்வதேச சட்டங்களை விட முக்கியத்துவமளிக்கும் என்று நம்புவதாக அசாஞ்சே அசட்டுத்தனமாக நம்புகிறாரா அல்லது அப்படி தான் நம்புவதாக கூறி பிரித்தானிய அரசை ராஜரீய ரீதியாக அசைக்கலாம் என்று நம்புகிறாரா ?  அமெரிக்காவின்  அயோக்கியத்தனத்துக்கு அதனோடு சேர்ந்து செயற்படும் மேற்குலக நாடுகளின் கயமைத்தனத்திற் கெதிராக யார் யாரை பாதுகாப்பது. அதுவும் அசாஞ்சே மீது உள்ள இந்த "அருமையான சந்தர்ப்பத்தை"  எந்த மேற்குலகு நாடு கைவிடும். எனவே அசாஞ்சேயின் எதிர்காலாம் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது,
(30 06.2012)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...