ஒரு பிரியாவிடையும் பிரிக்கமுடியாத பணியும் - பீ எம். அம்சா

எஸ்.எம்.எம்.பஷீர்

 
"இரா தந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் விட மேலானது மட்டுமல்ல; எந்த நேரத்திலும்  பிழையான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் தவிர்ப்பது."
                                                                                                           போ பென்னட் 


இன்று துருக்கியின் வட மத்திய பகுதியில் அடையாளம் காணப்படும்   ஜேலா நகரின் ஆட்சியாளனான பாரனசசை , ரோம சக்கரவர்த்தி  ஜூலியஸ் சீசர் வெற்றிகொண்டபின்   ரோம் நகர செனட் சபையோருக்கு மிக மிகச் சுருக்கமாக தனது வெற்றிச் செய்தியை  "வந்தேன்! பார்த்தேன்!!  வென்றேன்!!! " ( I came : I saw ; I conquered ) என்று அறிவித்தான் என்று சொல்லப்படுகிறது. ஜுலிய சீசருக்கு ஜேலா நகர வெற்றி இராணுவ வெற்றியாக இருந்தாலும் , ஜூலியஸ் சீசரின் சொற்றொடர் இராணுவ வெற்றியின் பின்னரான ஒரு செய்தியாக மட்டுமல்ல அரசியல் இராசதந்திர ரீதியாக ஏதேனும் வெற்றிகளை (diplomatic gain) அல்லது இலக்குகளை அடையும் போதும் ராஜீய வட்டாரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு ஒப்பீட்டு நிலவர சொற்றொடராக குறிப்பிடப்படுகிறது.


 இந்த கட்டுரையிலும்  பிரித்தானியாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவராகவும் , சிறிது காலம் பதில் தூதுவராகவுமிருந்து இம்மாதம் பதினைந்தாம் திகதி ஜேர்மன் இலங்கைத் தூதுவராலயத்துக்கு துணைத் தூதுவராக இடமாற்றம் பெற்று செல்லும்  ஜனாப்.  அம்சா எனும் ஒரு சிறந்த ராஜதந்திரியின்    ராஜீய சேவையையும் அவரின் கடந்த கால சாதனைகளில் சென்னையிலும் ஐக்கிய இராச்சியத்திலும் அவர் ஆற்றிய விரகர் (ராஜீய) பணியையும் மதிப்பீடு செய்யும் போது , சென்னையிலிருந்து பிரித்தானியாவுக்கு  வந்து இங்கிருந்து வேறிடம் சென்றாலும் , அவர் பற்றி புலிகள் , அதி தீவிர தமிழ் தேசியவாத சக்திகள் செய்த பரப்புரைகளை ஊடக தர்மத்தை மீறிய அச்சுறுத்தல்களை , அவதூறுகளை சவாலாக எதிர் கொண்டு தனது பணியை செய்வனே ஆற்றி "வந்தேன் ! பார்த்தேன் !! வென்றேன்!!!" என்று செய்தியுடனே அவர் இடமாற்றலாகி செல்கிறார் என்றுதான் என்னால் எண்ணத் தோன்றுகிறது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு  இன்றைய நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி சட்ட அலுவலகத்தில் நான்  ஹக்கீமுடன் தனிப்பட்ட சம்பாஷணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் , காத்தான்குடி  பிரபலஸ்தர்கள் சிலர் ஹக்கீமை சந்திக்க வந்த வேளையில் , அவர்களுடன் அம்சா அங்கு வந்திருந்தார். அப்போதுதான் அவருடன் கூட வந்தவர்கள் அவரை அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பின்னர் அவரை சுமார் பத்து ஆண்டுக்கு முன்பு கொழும்பில் உறவினர் ஒருவரின் ஒரு திருமண வைபவத்தில் சந்தித்து உரையாட நேரிட்டது. பின்னர் இலண்டனில் அவர் துணைத் தூதுவராக பதவியேற்று  வந்த பின்னர் சில தடைவைகள் சந்திக்க நேரிட்டது , பரஸ்பரம் பலது பற்றியும் சம்பாஷிக்க நேரிட்டது. அம்சா இலண்டனுக்கு வர முன்னரே இங்குள்ள புலி தமிழ் இணையங்கள் உட்பட தமிழ் தேசிய ஊடகங்கள் (இரவு நேர இலண்டன் தமிழ் வானொலி உட்பட)  அவரின் இலண்டன் வருகையை ஒரு அரச பதவி நிலை உத்தியோகத்தர் சம்பந்தப்பட்ட ராஜீய விடயம் என்றில்லாமல் மிகக் கேவலமான விமர்சனங்களை அவர் மீது முன்வைத்தன. தமிழர்கள் அவரை விரோதியாகக் கருத வேண்டும். என்பதை வலியுறுத்தின.

அதற்கான பின்னணிக் காரணம் என்னவென்றால் "யானை  வரும் பின்னே மணியோசை வரும் முன்னே  என்பது போல் அம்சா சென்னையில் துணை தூதுவராக  தொடக்கம்   பணியாற்றிய கால கட்டத்தில் அவர் தமிழ் கூறும் நல்ல உலகத்தினதும் கெட்ட உலகத்தினதும் ஒரு கவனக் குவிவினை பெற்றார்.              

தமிழ் நாட்டில் சென்னையில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்த காலகட்டங்களில் அங்கு நிலவிய இலங்கை அரசுக் கெதிரான புலி சார்பு  தமிழ் எதிர்ப்பலைகளை ஒருபுறமும் , மறுபுறத்தில் இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்படும்/பாதிக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் மீதான அனுதாபத்துடனான ஆர்ப்பாட்டங்களை , அவ்வப்போது கிளர்ந்தெழுந்த தமிழக மீனவர் கடத்தல்கள் படுகொலைகளை அம்சா எதிர்கொள்ள நேரிட்டது. அந்நாள் வரை எந்த இலங்கை தூதுவரும் அல்லது பதில் தூதுவரும் உலகின் எந்தப் பாகத்திலும் எதிர்கொள்ளாதவகையில் இலங்கைக் கெதிரான அரச எதிர்ப்புக்களை மிகுந்த துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டிய சூழல் அவர் முன் எழுந்த போது அதனை அவர் வீரியத்துடன்  எதிர் கொண்டார். அவர் தூதுவராக இல்லாது பதில் தூதுவராக இருந்த போதும் அம்சாதான் தூதுவர் என்று  தோற்றப்பாடு எழும் விதத்தில் செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. 

அம்சா கருமமே கண்ணாக கொண்டு தனது பணியை செய்வதில் குறியாயிருந்தார். சென்னையிலுள்ள இலங்கை தூதுவராலயம்  மூன்று முறை தாக்குதலுக்கு உள்ளாகியது. பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டன தமிழர் பண்பாட்டின் வாரிசுகள் , கட்ட பொம்மனே , எட்டப்பனை தூது கொண்டு வந்ததற்காகா விட்டுவைத்த மரபு பேசும் தமிழ் அரசியல் மீசை முறுக்கிகள் , நாம் தமிழர் என்று தம்மை நாமகரணமிட்டு பண்புடைய தமிழகத் தமிழரை தள்ளிவைத்து அடாவடித்தனம் செய்யும் தமிழர் இயக்கங்கள் , புலிகளின் புகழ் பாடியே அரசியல் நடத்தும் இன வெறியர்கள் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய் பல அரசியல் வேதாளங்களை தமிழகத்தில் அசர வைத்தவர்   அம்சா . அதனால்தான் ஒரு தமிழ் பேசும் முஸ்லிமாக புலிப்பயங்கரவாத படுகொலைகளை சுமந்த கிழக்கு மாகான முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக , அந்த நினைவு வடுக்களை நெஞ்சில் சுமந்த ஒரு அரச ராஜீய சேவகன் என்பதற்கப்பால் ஒரு சமூக சேவகனாக அம்சாவால் மிகுந்த ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் தனது கடைமையை செய்ய முடிந்தது.

இவர் இந்திய துணை தூதுவராக இருந்த பொழுதே , தமிழகத்தில் புலம் பெயர்ந்து வாழ்ந்த இலங்கை அகதிகளை நட்புடன் , தமிழ் பேசும் ஒருவராய் அணுகி அவர்கள் மீது அக்கறை எடுப்பதற்கும் முடிந்தது. இந்திய தமிழ் சினிமா கலைஞர்களுடனும் மிதவாத அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் சமூக நலனோம்பும் சக்திகளுடனும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் அம்சாவின் பங்கு அளப்பரியது. ஒருதடவை இலங்கை அரசுக்கு எதிராக தந்திரோபாயமாக தமிழகத்தில் எதிர்ப்புணர்வை உண்டாக்க தமிழக மீனவர்கள் சிலரை கடத்தி புலிகள் கொன்று பலியை இலங்கை அரசை பலிக்கடாவாக்க எடுத்த முயற்சியின் போது , அதனையும் அம்சா ராஜீய ரீதியில் எதிர்கொண்டு , இலங்கை கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான உதவி, தமிழக மீனவர்களின் அத்து மீறிய இலங்கை நீர்ப்பரப்புள் பிரவேசிக்கும் விவகாரங்களை வெளிப்படுத்தி விளங்கப்படுத்திய பெருமையும் இவரைச் சார்ந்ததே. இலங்கை அகதிகளுக்கு உள்ள குடியுரிமை பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சியிலும் , தமிழகத்தில் அகதியாயுள்ள இலங்கை புலம் பெயர் சமூக பிள்ளைகளுக்கு க. பொ. த  பரீட்சைக்கு தோற்ற  ஒழுங்கு செய்து கொடுத்தமை என சில முக்கிய சம்பவங்களை  இங்கு சுட்டிக் காட்டாமலிருக்க முடியாது. ஆகவேதான் புலி சார்பு சக்திகள் அம்சா இங்கிலாந்து வருவதை அறிந்து தமது ஆத்திரத்தை அவர் மீது பொழியும் பரப்புரை பணியில் தமது கைங்கரியத்தை மேற்கொண்டனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு உயர் பதவி வகிக்கும் சிங்கள அரச உத்தியோகத்தர் ஒருவரை சந்தித்த போது அவர் அம்சா பற்றி குறிப்பட்டு தானும் அவரும் ஒன்றாக அரச பணியில் சேவையாற்றியதையும்  அம்சாவின் நல்லியல்புகள் பற்றிக் குறிப்பிட்டதையும்  அவ்வாறே இன்னுமொரு  இலண்டனில் வசிக்கும் சிங்களவர் , தான் இலங்கையில் கல்வித்திணைக்களத்தில் அம்சாவின் கீழ் பணியாற்றியதையும் , அவர் பற்றி நல்ல  அபிப்பிராயம் கொண்டிருப்பதையும் அறிந்து 'இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடல்வரிகள் எனது சிந்தையை துளைப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இலண்டன் வந்த பின்னர் இவரின் நட்புக் கரங்கள் நீண்டன என்பதால் பல தமிழ் நண்பர்களை அவர் இலங்கை தூதுவராலயத்துக்கு அழைத்து பல தேசிய சமூக பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார்அம்சா என்றால் பந்தா இல்லாத , அதிகாரப் பகட்டு போர்த்தாத ஒரு மனிதர் என்பதை பலர் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்கள்.  அவ்வாறே அவர் ராஜீய ரீதியிலும் தனது ஆளுமையை காட்டியுள்ளார். 


எனவேதான் இதுவரை காலமும் யாருக்கும் கிடைக்காத பிரியாவிடை ஹம்சாவுக்கு ராஜீய ரீதியில் கிடைத்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி உறுப்பினர்களின் குழுவிற்கு தலைமை தாங்கும் பிரபு நாஸ்பி , மாசி மாதம் ஆறாம் திகதி ஒரு பிரியாவிடை நிகழ்ச்சி ஒன்றினை பிரித்தானிய நாடாளுமன்ற அறையில் நடத்தியுள்ளார். அந்த நிகழ்சியில் பிற நாட்டு தூதுவர்கள் பலரும் இலங்கை புலம் பெயர் பிரமுகர்கள் சிலரும் இலங்கைக்கான பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி உறுப்பினர்களின் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் சரவ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபுக்கள் என சுமார் பதினைந்துக்கு மேற்பட்டோர் பிரித்தானிய நாடாளுமன்ற பிரபுக்கள் சபையை பிரதிநித்துவப்படுத்துவோராக கலந்து கொண்டுள்ளனர்.இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்த பிரபு நாஸ்பி அம்சாவின் சேவைகளை பாராட்டி பேசும் போது அம்சா , தனது இலண்டன் பதவிக்காலத்தில் , அதுவும் கடினமான காலகட்டத்தில் ,  இடையறாத தொடர்ச்சியான முயற்சிகளை  மேற்கொண்டு   இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும்  இடையே நட்புறவை மேம்படுத்தியதை குறிப்பிட்டு , ஐக்கிய இராச்சியத்திலுள்ள  புலம்பெயர் சமூகத்தின் பல பிரிவினரையும்  ஒன்று கூட்டி அவர்களுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தி இப்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மீளினக்க பணிக்கும் பங்களிப்பு செய்யும் வகையில் செயற்படுவதை சிலாகித்துப் பேசியுள்ளார்.  

வெளிநாட்டு சேவையில் சேர்ந்து கொள்ள முன்பே அம்சா இலங்கை கல்விச் சேவையில் உயர் பதவி  வகித்தவர் என்பதுடன்  1991/1992   ஆண்டுகளில் குறுகியகால கல்வி தொடர்பான விஷேட பயிற்சிநெறிகளை அடுத்தடுத்து இலண்டன் சர்வகலாசாலையிலும் , ஐக்கிய அமரிக்காவின் வேர்ஜினியா பல்கலைக்கலகத்திலும் பெற்றவர். அதிலிருந்து பிறநாட்டு சேவையில் பணியாற்றிய காலகட்டத்தில் சிங்கப்பூர், கைரோ (எகிப்து) ஆகிய நாடுகளிலும் இவர் பணியாற்றி உள்ளார். அவரின் ஆளுமையும் அனுபவமும் நட்புடன் பழகும் சுபாவமும் அவர் செல்லுமிடங்களில் அவரை தனிப்பட்ட வகையிலும் நாட்டு நலன் சார் பணியிலும் சிறக்க வைக்கும் என்பதே அவருடன் நெருங்கிப் பழகிய பலரின் நம்பிக்கை.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...