Saturday, 5 November 2011

“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா!” (தொடர் : ஆறு)                                                                            
எஸ்.எம்.எம்.பஷீர் 

முட்டாளாக்கப்படுவதற்கு இரண்டு வழிகள் உண்டு , ஒன்று இல்லாத ஒன்றை நம்புவது , அடுத்தது இருப்பதை நம்ப மறுப்பது. “  
                                          சோரேன் கியர்கேகர்ட்

( There are two ways to be fooled: One is to believe what isn't so; the other is to refuse to believe what is so.                                                                                  Soren Kierkegaard )சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்று சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்காவை ஆதரிக்க ஸ்ரீமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை ஆதரிப்பது என்று முடிவெடுத்த பின்னர் என்ன நடந்தது .இது குறித்து எழுதும் மருதூர் பசீத் தனது "சோனக தேசம்"  நூலில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

1998
ஜனாதிபதித தேர்தலானது இதற்கான ஒரு புறச் சூழலை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் சு.க வேட்பாளராகப் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயகாவை ஆதரிப்பது என்று மு கா. வின் உயர்பீடம் முடிவெடுத்திருந்தது. எனினும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் , கட்சியின் உயர்பீட அங்கத்தினர்களுக்குக்கூட தெரியப்படுத்தாமல் ஐ. தே. க.வேட்பாளராக போட்டியிட்ட திரு. பிரேமதாசவிற்கு மு.கா வும் முஸ்லிம்களும் ஆதரவு வழங்குவதாக அஷ்ரப் அவர்கள் பத்திரிகை அறிக்கையின் மூலம் பிரகடனம் செய்தார். இந்த அறிக்கையானது கட்சியின் உயர்பீட அங்கத்தினர்களை வியப்பிற்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கியது. அஸ்ரப் அவர்களின் முடிவு குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என்பது மட்டும் உயர்பீட அங்கத்தினர்களின் அதிருப்திற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை. முக்கியமாக ஏற்கனவே கட்சியின் உயர்பீடம் எடுத்திருந்த முடிவுக்கு முற்றிலும் மாறானதாக அஸ்ரப் அவர்களின் அறிக்கை அமைந்திருந்ததும் இதற்கு காரணமாக விளங்கியது. 1990 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீமாவை ஆதரிப்பது என்று மு.கா முதலில் எடுத்த முடிவானது , வட , கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரசியல்ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. ஏனெனில் அந்த தேர்தலில் சு க தமிழ் காங்கிரசுடனும் , மு காவுடனும் இணைந்து , இனப் பிரச்சினைத தீர்விற்கான ஒரு வேலைத் திட்டத்தை முன்வைத்திருந்தது. வடக்கு கிழக்கில் தமிழ் , முஸ்லிம் , சிங்கள மக்களுக்கென தனித்தனியான அதிகார அலகுகள் உருவாக்கப்படும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாக இருந்தது. இந்த வகையில் வடக்கு , கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த அரசியல் திட்டமானது மிகுந்த முக்கியத்துவமுடையதாக விளங்கியது.. இலங்கையின் இதுவரைகால அரசியல் வரலாற்றில் , வட -கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்தையும் அரசியல் உரிமைகளையும் அங்கீகரித்த ஒரே ஒரு அரசியல் ஆவணமாக இந்தத் தேர்தல் விஞ்ஞாபணமே விளங்குகிறது . 
எனவே வரலாற்றை மறைக்கும் எழுத்துக்கள் ஒருபுறம் அதிகாரத்தோடும் பண பலத்தோடும் ஒருபுறம் எழுதப்பட உண்மைகளும் ஆங்காங்கே தாமதித்தேனும் தடங்கல்களுக்கு மத்தியிலும் எழுதப்படாமலும் இல்லை .


காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் தனக்கெதிராக  நாடாளுமன்றத் தேர்தலில் வேறு யாரும் இருக்கக் கூடாது என்று ஹிஸ்புல்லாஹ் திட்டமிட்டு உருவாக்கிய -"சிருஷ்டித்த" என்.எம்.முஹமத் மூலம் யாரும் தனக்கு இரண்டாம் இடத்தில் இருப்பதை தடுப்பதில் ஹிஸ்புல்லாஹ் அப்போது வெற்றி பெற்றிருந்தார். எனவே முதலில் ஹிஸ்புல்லாவே முஸ்லிம் காங்கிரசிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரேமதாசாவின் அரசியல் அரவணைப்பை நாடிச் சென்றதும் , அந்த இடத்தை வேறு யாரும் பிரதியீடு செய்ய முடியவில்லை , ஏனெனில் ஹிஸ்புல்லாவுக்கு ஏற்கனவே பிரதேச மட்ட அரசியல் தளம் ( காத்தான்குடியில்)  ஆதரவாகவிருந்ததும்  , தான் எம்.பியான ஆரம்ப இரு வருடங்களுக்குள் ஏனைய மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் தனக்கென ஆதரவாளர்களை வேலை வாய்ப்பு , மேலும் பல உதவிகள் மூலம் அதிகரிக்கப்பன்னியதும ஹிஸ்புல்லாவை அரசியலில் நிலை நிறுத்தியிருந்தது.


தத்தமது பிரதிநிதிகள் வரவேண்டும் என்று அழுங்குப்பிடி பிடித்தவர்கள் தங்களுக்கு அல்லது தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைத்த வேலை வாய்ப்புக்கள் , வேறு பல சலுகைகள் காரணமாக ஹிஸ்புல்லாவின் பக்கம் சாயத் தொடங்கினர். அதேவேளை காத்தான்குடியிலிருந்து  அஸ்ரபுடன் நெருக்கமாக செயற்பட்ட உமறு லெப்பை நஜீம்  அவரின் சகோதரர் மர்சூக் ( இவர்கள் இருவரும் பின்னர் சட்டத்தரனிகளானவர்கள் அதில் பின்னையவர் ஒரு தசாப்தத்திற்கு பின்னரும் ஹிஸ்புல்லாவுக் கெதிராக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர். இவர்கள் இருவரும் அந்த காலகட்டத்தில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அரசியல் செய்ய திட்டமிட்டிருந்தாலும் , ஹிஸ்புல்லாவின் அரசியல் செல்வாக்கை அசைப்பதில் அவர்களால் கற்பனை மட்டுமே பண்ண முடிந்தது. காரியத்தில் இறங்க முடியவில்லை. அதேவேளை ஹிஸ்புல்லா பிரேமதாசாவுடன் சேர்ந்து தொழிற்படத் தொடங்கியவுடன் தனது சேவைகளை அதிகரிப்பதன் மூலம் தனது தனிப்பட்ட செல்வாக்கை அதிகரிப்பதில் அக்கறை காட்டினார். ஹிஸ்புல்லா வாக்குறுதி மாறிவிட்டார், மொஹிதீன் அப்துல் காதருக்கு தனது பதவியை விட்டுக் கொடுக்க வில்லை என்பதற்காக ஏறாவூர் , ஓட்டமாவடி மக்கள் பகிரங்கமாக  அவரை முனாபிக்என்று கூறத் தொடங்கினர் . முனாபிக் என்பது நயவஞ்சகன் என்ற தமிழ் பதத்திற்கு ஈடாக பயன்படுத்தப் பட்டாலும் அதன் சரியான பொருள் இஸ்லாமிய சமய அடிப்படையிலான அர்த்தத்தை கொண்டதால் . சாதாரண நடைமுறைபாவனையோ அல்லது அம்மக்கள் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பாவித்ததோ ஒரு பிழையான பாவனையாகும். முஸ்லிம் காங்கிரஸ் இஸ்லாம் மதத்தை துணைக்கழைத்துக் கொண்டு செய்த அரசியல் முஸ்லிம் மக்களை மத ரீதியாக சிந்திக்க பண்ணியிருந்தது. வட கிழக்கு மாகான சபையை எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காக தங்களின் கட்சிக்கு வாக்களிக்க நோன்பு நோற்க சொன்னதும் , வாக்களிக்காவிட்டால் மறுமை நாளில் -இறப்பின் பின்னர் மனிதர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாளில் ( இஸ்லாமிய கிறித்தவ சமயங்களின் நம்பிக்கைப்படி) வாக்களிக்காதவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும் என்று வேறு எச்சரிக்கை / வேண்டுகோளை சேகு இஸ்ஸதீன் பகிரங்கமாகவே விடுத்திருந்தார். மதத்தோடுதான் மரமும் வளர்க்கப்பட்டது. இன்றும் அவ்வாறே முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. ஆகவே ஹிஸ்புல்லாஹ்வை முனாபிக் என்று அழைத்தது அதனை முஸ்லிம் காங்கிரசும் ஆமோதித்தது மிக மிக பிழையான அரசியல் நடை முறையாகும்.

ஹாரிஸ் தான் எம்.பீ யாக ரணில் அரசில் (ரணில் பிரதம மந்திரியாகவும் சந்திரிகா ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில்-2003ல் ) பிரேமதாசா முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு முயற்சித்தார் அதையே பிரதமரும் செய்கிறார் . யாருடைய கைகளில் கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு இன்னமும் இருக்கிறது.என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. அந்த வகையில் பிரதமர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறார்,”  என்று நாடாளுமன்றத்தில் கூறியதும் அன்று முஸ்லிம் காங்கிரசில் இருந்து ஹிஸ்புல்லாவை மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரசின் நியமன எம்.பீ யான புஹாரிதீன் ஹாஜியார் எம் பீயையும் அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக பிரேமதாசாவின் முகாமுக்குள் உத்தியோகமாக கட்சி தாவாவிடினும் நுழைந்ததை சுட்டிக்காட்டுகிறார் என ஊகிக்க முடிகிறது. ஆனால் அஸ்ரப் பிரேமதாசா தன்னை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தா அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்  அப்போது கட்சியிலில்லாத ஹாரீஸ் அது பற்றி வெறுமனே ஹிஸ்புல்லாஹ் புஹாரிதீனின் உத்தியோக பூர்வமற்ற கட்சித்தாவலை மட்டும் கொண்டு பிரேமதாசாவினை பலி சொன்னாரா அல்லது புலிகளிடம் தங்களை பலியாக்கிய பிரேமதாசாவினை , நினைவு கூர்ந்து ரணிலை சுட்டிக் காட்டி பலி கூறினாரா , அப்படிஎன்றால் தங்களை (காங்கிரசை) ஏன் குழம்பிய குட்டையாக்கி ரணிலை மீண்டும் மீன் பிடிக்க வைத்தார்கள்.

பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய கட்சி அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் தங்களுக்கு (முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக  செயற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை பற்றி ஒரு பத்திரிக்கையாளர் முஸ்லிம் காங்கிரசின் தேசிய பட்டியல் எம்.பீ யான புஹாரிதீன் ஹாஜியாரிடம் 1989  மேயில்    கருத்துக் கேட்டபோது. புஹாரிதீன் எம்.பீ " இவர்களை பற்றி நாங்கள் பயப்படத் போவதில்லை .ஜனாதிபதி பிரேமதாசா எங்கள் கட்சி மீதும் , எங்கள் மீதும் மிகவும் மரியாதை வைத்துள்ளார் " என்று அவர் குறிப்பிட்டது  வெறும் சாதரான கருத்தல்ல. புஹாரிதீன் ஹாஜியாருக்கு மட்டுமல்ல பிரேமதாசாவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே  அன்று நிலவிய அன்னியோன்யத்தை புஹாரிதீனின் இக்கூற்றிலிருந்தே புரிந்து கொள்ளலாம். அதே பேட்டியிலே புஹாரிதீன் கூறிய இன்னொமொரு விஷயம்  கூட  அந் நேர்காணலில் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த நேர்காணலில் அரசியலுக்கு முற்றிலும் புதிய நபரும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் ஏ.சீ.ஏஸ். ஹமீதின் ஊர்காரரும் நெருங்கிய நண்பருமான புஹாரிதீன் " குறைந்த  பட்சம் ௨௦ ஆசனங்களையேனும் கைப்பற்றலாமென்று நினைத்திருந்தோம் .ஆனால் எம் சமூகத்திலுள்ள எட்டப்பர்களே எமக்கு துரோகம் செய்ய முனைந்தனர் .இவர்களை மக்களும் அங்கீகரிக்கமாட்டார்கள் , "   என்று   " எட்டப்பன்" " துரோகம்"  என்ற  தமிழ் தேசிய அரசியல் பயன்படுத்தும் மாமூல் பாசிச சொற்றொடர்களை பயன்படுத்தி தங்களுக்கு எதிரான முஸ்லிம் மாற்றுக் கருத்தாளர்களை , மாற்று கட்சியினரை எச்சரித்து சில வருடங்களின் பின்னர் முஸ்லிம் காங்கிரசிலிருந்து ஹிஸ்புல்லாஹ் பிரேமதாசாவின் குகைக்குள் நுழைந்தவுடன் , அவர் வழி தொடர்ந்து சென்று இவரும் நுழைந்து விட்டார்.  ஆனால் மிக அவதானமாகப் பார்த்தால் அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கெ சென்றுவிட்டார். இங்குதான் பிரேமதாசாவின் நீண்டகால அரசியல் நகர்வுகளையும் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அரசியல் நகர்வுகளில் காணப்பட்ட குறைபாடுகளையும் அவதானிக்க முடிகிறது.   சரி , அப்படியென்றால் " எட்டப்பர் " என்றால் யாரைக் குறிக்கும் என்று சிலேடையாக  வாசகர்கள்  கேள்வி எழுப்ப வேண்டாம் ஏனெனில் இன்றைய போராளி நாளைய எட்டப்பர் , நாளைய எட்டப்பர் இன்றைய போராளி. உதராணமாக அன்றைய போராளி ஹிஸ்புல்லாஹ் , முஸ்லிம் காங்கிரசின் பாசையில் பின்னர் எட்டப்பர்ஆனவர் , சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் போரளியானவர் , மீண்டும் எட்டப்பர்  ஆனவர் -  இப்படியே  விசச் சக்கரமாக அரசியல்  விலாசங்களை மாற்றிக் கொள்பவர்கள். சேகு இஸ்ஸதீன் கூட இப்படித்தான் தலைமைப் போராளி , பின்னர்..... அவர் கருத்து முரண்பட்டபோது - கட்சி மாறிய போது-  அவரை என்னவென்று முஸ்லிம் காங்கிரஸ்  அழைத்தார்கள் என்பதும் , பின்னர் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலுடன் , மீண்டும் போராளியாக புனர் ஜென்மம் எடுத்து "பிறந்தகம்" (ஸ்ரீ. ல .மு கா ) வந்ததும் நாடறிந்த செய்திதானே.


வாக்குறுதி மீறலும் வன்முறையும்அதேவேளை காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவின் வாக்குறுதி மீறலுக்காக  அதனால் ஏற்படப் போகும் பிரதேச முரண்பாடுகளை கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரசின் முக்கிய உறுப்பினரான பீ .ஏ .மன்சூர் என்பரும் இன்மொரு விஞ்ஞான பட்டதாரியும் இன்று கல்வித்துறையில் முக்கிய பதவி நிலையில் உள்ளவருமான அன்றைய முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஒருவரும் ஹிஸ்புல்லாவின் உறவை மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரசின் தொட்ரபுகளையும் துண்டித்து கொண்டனர் என்று சொல்லப்படுகிறது அவர்கள் இருவரும் அதன் காரணமாக பல வருடங்கள் அரசியலில் இருந்தும் தங்களில் மனட்சாட்சி பிரகாரம் ஒதுங்கியிருந்ததாக இக்கட்டுரையாளரிடம் ( அவர் இது பற்றி முன்னரே அறிந்திருப்பினும் )  நேரடியாகவே  சில வருடங்களுக்கு முன்னர் கூட நினைவூட்டினர்.  ஆனால் காத்தான்குடி மக்களோ , பள்ளிவாசல் சம்மேளனமோ அல்லது சமூகத்தில் அழுத்தம் கொடுக்கக் கூடிய சிவில் சமூகமோ ஹிஸ்புல்லாவின் செயலை பகிரங்கமாக கண்டிக்கவில்லை . மேலும் ஓட்டமாவடி முஸ்லிம் மக்கள் ஹிஸ்புல்லாவின் இந்த செயலால் ஆத்திரமுற்று அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த காத்தான்குடி முஸ்லிம் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதனை ஹிஸ்புல்லாவோ அல்லது காத்தான்குடி ,மக்களோ காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை . எனது ஞாபகத்தின் படி சவூதி அரேபியா சென்று தொழில் புரிந்து நாடு திரும்பிய முன்னாள் ஆசிரியரும் சிவானந்த வித்தியாலய மாணவருமான காத்தான்குடி நண்பர் ஒருவர் ஹிஸ்புல்லாவின் இந்த செயலை கண்டித்ததுடன் தான் ஓட்டமாவடியில் நடத்தும் தனது வியாபாரத்துக்கும் கேடு விளையலாம்  என்றும வியாகூலமடைந்திருந்தார். ஆனால் ஹிஸ்புல்லாவின் மாற்றமில்லாத நிலைப்பாட்டோடு ஓட்டமாவடியில் ஹிஸ்புல்லாவுக் கெதிரான எதிர்ப்புணர்வு முழு காத்தான்குடி மக்களுக் கெதிரான எதிர்ப்புணர்வாக உக்கிரமடைந்தது. மீண்டும் பிரதேச வாதம் தலை தூக்கி ஆடியது. ஓட்டமாவடியில் வியாபாரம் செய்துவந்த காத்தான்குடி வணிகர்கள் ஓட்டமாவடி மக்களால் விரட்டி அடிக்கப்பட்டனர்

திரும்பவும் ஒரு விளம்பர இடைவேளை போல , ஒரு ப்ளாஷ் பேக்கில் பார்த்தால் ஹிஸ்புல்லாஹ் என்.எம்.முஹம்துவை கற்பனையாக சிருஷ்டித்திருந்தால் அதற்கெதிராக முஸ்லிம் காங்கிரசும் ஏனைய தமிழ் சிங்கள வேட்பாளர்களை உருவாக்கியிருந்தால் ( ஏனெனில் முன்னர் குறிப்பிட்டது போல் யாரும் அங்கு பிரசன்னாமாகியிருக்கவில்லை , கையொப்பமிடவில்லை ,  "வெளிப்படவில்லை" , அவர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது ) ஹிஸ்புல்லாவை நோக்கி சுட்டு விரலை நீட்டும்   தைரியம் அவர்களுக்கு இல்லை. அதே போல அதே ஹிஸ்புல்லாவை கொண்டு அல்லது அவரின் அறிவுடன் மீண்டும்  ஒரு கையொப்ப நாடகம் ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் அரங்கேற்றியது என்ற விடயம் நீதிமன்றம் வரை சென்றது. முன்னாள் பட்டிப்பொளை பிரதேசிய சபை தவிசாளராக விருந்த புலியின் தீவிர ஆதரவாளர் என்பதைவிட  புலி என்றே கண்டி தலதா மாளிகை குண்டு வெடிப்பு  சம்பந்தமாக கைது செய்யப்பட்டு கண்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  அகிலேஸ்வரன் ஒரு முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளராக எப்படி நியமனப் பத்திரத்தில் கையொப்பமிட்டார் என்பதுடன் ஒரு படி மேலே சென்று மலேசியாவிலே வாழும் முன்னாள் ஹிந்து கலாச்சார அமைச்சரும் , மலேசியாவின் அரச தூதுவரும் , சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட செல்லையா ராஜதுரை எப்படி முஸ்லிம் காங்கிரசின் மற்றுமொரு மட்டக்களப்பு வேட்பாளராக கையொப்பமிட்டார்.
இந்த  வழக்கில் சட்ட தொழிநுட்பம் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் தனது வழக்கறிஞர் குழாத்துடன் வெற்றி பெற்றாலும் அந்த வழக்கின் விபரங்களும்  சுவாரசியமானவையே

தொடரும்

No comments:

Post a Comment

Sri Lanka, China relations to face an exciting future, says Central Bank Chief

Colombo, Jan 16 (newsin.asia) – Sri Lanka and China, on Tuesday jointly launched a book on Sino Lanka relations titled ‘The Island of the...