Saturday, 22 October 2011

“சொல்லவா, கதை சொல்லவா, நடந்த கதை சொல்லவா! “எஸ்.எம்.எம்.பஷீர் 
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க -
                                              நன்னெறி

அண்மையில் தேனீயில் மறுபிரசுரம் செய்யப்பட்ட   மப்ரூக் என்ற ஆரசியல் பத்தி எழுத்தாளர்  எழுதிய “கல்முனை மேயர் பதவி மாயக் கரங்களால் அடித்து விளையாடப்பட்ட பந்து என்ற கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது . அக்கட்டுரையின் இறுதிப பகுதியை வாசித்த போது, அச்சம்பவம் தொடர்பில்  நான் அறிந்தவற்றை இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் சொல்ல வேண்டிய தேவையொன்றினை ஏற்படுத்தியதால் இக்கட்டுரையை எழுத வேண்டி நேரிட்டது. அதிலும் அச்சம்பவத்தை கோடிட்டு காட்டி நடந்து முடிந்த கல்முனை மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்குள் எழுந்த நகர பிதா -மேயர்- நியமன  சர்ச்சையில் எடுக்கப்பட்ட முடிவும் அத்தகைய ஒரு ஞாபகத்தையூட்டுவதாக சூட்சுமமாக தெரிவித்திருந்தார்.   
           

மு.கா வின் ஸ்தாபகத் தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் மட்டக்கப்ப்பு மாவட்டத்திலே இப்படித்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எல்.ஏ .எம் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ஒட்டாமாவடியைச் சேர்ந்த முஹிதீன் அப்துல் காதருக்கு பங்கு வைக்கப்பட்டது. அதாவது , குறிப்பிட்டதொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் முதல் அரைவாசி காலப் பகுதியை ஹிஸ்புல்லா வகிப்பார் எனவும் , மிகுதிக் காலத்துக்கு முகைதீன் அப்துல் காதர் நியமிக்கப்படுவார் எனவும் அஸ்ரப் அவர்கள் அறிவித்தார். ஹிஸ்புல்லாஹ்வும் அவ்வாறே நடந்து கொள்வதாகப் பள்ளியியில் சத்தியம் செய்து பதவியினை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் பரிதாபம் ! கடைசிவரை ஹிஸ்புல்லாஹ் தனது வாக்குறுதியைக் காப்பாற்றவேயில்லை ! இந்த
கதை  இங்கு எதற்கு என்கிறீர்களா ? சும்மா என்று வைத்து கொள்ளுங்கள் .” என்று குறிப்பீட்டிருந்தார்.

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப்  என்பத்தொன்பதாம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது ஓட்டமாவடி , காத்தான்குடி , ஏறாவூர் என்ற மட்டக்களப்பு தேர்தல்  மாவட்ட  மூன்று ஊர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகைளில் முறையே இரண்டிரண்டு வருடங்களுக்கு அவ்வவ்  ஊர் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் பாராளுமன்ற அங்கத்தவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். ஏற்கனவே தத்தம் பிரதேச அங்கத்தவர்களே தங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும் காத்தான்குடியை பொறுத்தவரை ஓரளவு மட்டக்களப்பு நகரை சேர்ந்த முதலியார் சின்னலெப்பை ,அவரின் மகன் லத்தீப் சின்னலெப்பை என்ற வகையில் காலங்காலமாக பிரதிநித்துவம் வகித்து வந்ததை  முதலியார் சின்ன லெப்பையின் தந்தை சின்னலெப்பை மரைக்கார் மட்டக்களப்பு நகரில் வாழ்ந்தவர்  காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்டவர் என்ற அடிப்படையில்  ; காத்தான்குடி மக்கள் எதோ ஒரு விதத்தில் , சின்ன லெப்பை குடும்ப எம் .பீக்களை தங்களின் ஊர் எம் பீ யாகவே கருதினார்கள்.


ஆனால் இந்த குடும்ப எம்.பீ முறைமை ஏறாவூரில் இருக்கவில்லை . ஏறாவூரை சேர்ந்த பரீத் மீராலேப்பை 1977  நாடாளுமன்ற தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு , ஏறாவூரின் முஸ்லிம் வாக்குகளில் கணிசமான வாக்குகளாலும்  , தனது பரம்பரை செல்வாக்கு மூலம் பெற்ற தமிழ் வாக்குகளாலும் சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட  முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களை தோற்கடித்து முதல் ஏறாவூர் எம்.பீ யாக தெரிவு செய்யப்பட்டார். கல்குடா தொகுதியாகவிருந்து பின்னர் எழுபத்தெட்டில் (1978)  மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துள் உள்வாங்கப்பட்ட  வாழைச்சேனை ஓட்டமாவடி மீராவோடை முஸ்லிம் மக்கள் காலங்காலமாக ஐக்கிய தேசிய கட்சியையும் தேவநாயகம் அவர்களையும் ஆதரித்து வந்துள்ளனர். முதன் முதலில் விகிதாசார பிரதிநித்துவ முறையில் புதிய மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட எல்லைகள் , வாக்காளர் எண்ணிக்கைகள் மாற்றமடைய 1989  ஆண்டு தேர்தல் நடைபெற்றது. ஆகவே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் மாகான சபை மூலம் மூன்று பிரதேசத்துக்கும் தனித்தனி உறுப்பினர்களை போட்டியிடச் செய்தது , அதன் மூலம் ஒரு முஸ்லிம் வாக்காளர் இணைப்பினை இன அடிப்படையில் ஏற்படுத்தியிருந்தது. இந்த பின்னணியில் தான் ஓட்டமாவடி மக்கள் தங்களின் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம் எம்.பீ யாக வர வேண்டும் என்ற அவாவினால் அதற்கான முனைப்புகளை முஸ்லிம் காங்கிரசின் ஊடாக முன்னேடுத்தனர்.   முஸ்லிம் காங்கிரசிற்கும் நிதி உதவி செய்வதிலும் ஓட்டமாவடி பிரதேச மாகான சபை தேர்தலில் வேற்றிஈட்டியவர்  கட்சியின் ஆரம்ப அங்கத்தவரும் அரசியல் செயற்குழு உறுப்பினருமான முஹிதீன் எம்.பீ யாக வருவது , புதிதாக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் விகிதாசார தேர்தல் முறையில் சாலச் சிறந்தது என ஒரு அபிப்பிராயம் பரவலாக ஓட்டமாவடியிலும் மேலோங்கி இருந்தது என்பதுடன் அது கட்சியின் உயர் மட்டத்திலும் நிலவியது. ஆனால் மூன்று ஊர்களிலும் உள்ள முஸ்லிம்கள்  ஒன்றாக வாக்களித்தால் மாத்திரமே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு எம்.பீயை பெற முடியும் என்பதால் மேலும் மூன்று ஊர்களிலும் வேறு தேசிய கட்சிகளில்  போட்டியிடும் வேட்பாளர்களை புறந்தள்ளி முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளை கட்சிக்கு பெற்றுக்கொள்ளவும் ஏற்கனவே விரும்பியோ விரும்பாமலோ ஊர் அடிப்படையில் கட்டமைத்துள்ள சமூக அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்ற ஒரு தேர்தல் சட்டப்படி செல்லாததாயினும் பரஸ்பர நம்பிக்கை கட்சித் தலைமைக்கு , கட்சிக்கு கட்டுப்படுதல் , ஊர் சமூக கட்டுப்பாடு என்ற கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு கனவான் ஒப்பந்தம் எழுத்தில் கைச்சாத்திடப்பட்டது. (கணவான் ஒப்பந்தம் என்பது சட்டபூர்வமாக கட்டுப்படுத்துவதைவிட  இரண்டு அல்லது எல்லா தரப்பினருக்குமிடையிலான நம்பிக்கையின் அடிப்படையிலான ஒரு ஏற்பாடு அல்லது புரிந்துணர்வு ஆகும் என்றே ஆச்போர்ட் அகராதி அர்த்தப்படுத்துகிறது. an arrangement or understanding which is based upon the trust of both or all parties, rather than being legally bindingJ


அந்த ஒப்பந்தம் முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் சித்திரா லேன் வீட்டில் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் கைச்சாத்திடப்பட்டபோது ஒரே நேரத்தில் மட்டக்களப்பில் போட்டியிடும் மூன்று முக்கிய பிரதிநிகளின் கையொப்பம் கட்சியின் தவிசாளர்சட்டத்தரணி  சேகு இஸ்ஸதீன் , கட்சியின் பொதுச் செயலாளர் , மறைந்த எம்.ஜே ஏ.   ஷஹீத் , பிரதி பொதுச் செயலாளர் சட்டத்தரணி  அபுல் கலாம் ஆகியோர் முன்னிலையில் அந்த சுழற்சி முறையில் பதவிய கைமாறிக்கொள்ளும் கணவான்  ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டு அதன் ஒரே ஒரு மூலப் பிரதியினை சகல ஒப்பந்ததாரிகளுக்கும் முன்பாக  பாதுகாப்பாக வைக்கப்படுவதாக அபுல் கலாமும் சேகு இஸ்ஸதீனும் பகிரங்கமாக கூறி அவ்வொப்பந்தத்தினை ஒரு பீரோவுக்குள் வைத்து மூடினர் , அதன் பிறகு அந்த ஒப்பந்தம் என்றுமே இன்றுவரை வெளியே காண்பிக்கப்படவில்லை ,அதற்கு என்ன நடந்தது என்பதும் இதுவரையும் யாருக்கும் தெரியாது. இது சம்பந்தமாக கதை வந்த போதெல்லாம் இருவரும் அவ்வாறான கதைகளை தவிர்த்தனர். இது பற்றி தனக்கு என்ன நடந்தது என்று தெரியாவிட்டாலும் மனட்சாட்சியும் நேர்மையுமுள்ள மனிதரான பொதுச் செயலாளர் சஹீத் ஹிஸ்புல்லாவின் செயல் பற்றி  விசனம்  கொண்டிருந்தார்.  
 
தேர்தலின் பின்பு ஹிஸ்புல்லா  அந்த வாக்குறுதியை மீண்டும் பகிரங்கமாக சொல்லவோ அல்லது அவ்வாறு சொல்லுமாறு கட்சியினாலோ பணிக்கப்படவில்லை. சரியான தருணம் வரும்போது அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று குரான் ஹதீஸ் தங்கள் கட்சியின் யாப்பு என்று பிரகடனப்படுததிய கட்சியும்  , அதன் தலைவர்களும் , ( ஹிஸ்புல்லாஹ் உட்பட ) செய்வார்கள் என்று ஒட்டமவாடி வாழைச்சேனை மக்களும் ஏறாவூர் மக்களும் நம்பினார்கள். எனவே ஹிஸ்புல்லா பள்ளிவாசலில் வாக்குறுதி அளித்தார்  என்பது நான் அறிந்தவரையில் நடைபெறவில்லை. மாறாக பகிரங்க மேடைகளில் அஸ்ரப் மக்களுக்கு  வாக்குறுதி   அளித்தார் என்பதுதான் உண்மையில் நடந்தது. ஆனால் அவாறான மேடைகளில் ஹிஸ்புல்லாஹ் அமர்ந்திருந்தார். அவ்வாறான வாக்குறுதியை ஹிஸ்புல்லாஹ் கட்சியின் வாக்குறுதியாக கணவான் ஒப்பந்த எழுத்து வாக்குறுதியாக ஏற்றுக்கொண்டவர் என்பது தவிர நான் அறிந்தவரை ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாசலில் சத்தியம் பண்ணினாரா என்பது எனக்கு தெரியவில்லை. 
மறுபுறம் தனது இரண்டு வருட காலம் முடிவடைந்ததும் இராண்டாவது இடத்தில் இருந்த ஓட்டமாவடி மொஹிதீன் அப்துல் காதர் சுழற்சி மூலம் தனது கால பதவியை நாடிய போது பிரச்சினை எழுந்தது. அந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் நடந்து கொண்ட விதம் , அவர் நீதிமன்றில் அவ்வாறான ஒப்பந்தமே இல்லை என்று அறுதியிட்டு  சொல்லிய அவரின் சத்தியக் கடதாசி என்பன உண்மைக்கு புறம்பான அசத்தியமாகும். எனவே அந்த கணவான் ஒப்பந்தம் செல்லாது என்பது ஒருபுறமிருக்க அந்த ஒப்பந்தம் நடைபெறக்கூடாது என்ற சதி ஏதேனும் இருந்ததா என்பது பற்றியும் அலச வேண்டி உள்ளது. அதற்கு முன்னர்  , முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியின் அரசியல்  குழு தீர்மானத்தின்படி குறிப்பிட்ட இரண்டுவருட காலம் முடிவடைந்து விட்டதால் பதவி விலகுமாறு ஹிஸ்புல்லாவை கடிதம் மூலம் தவிர்க்க முடியாமல் கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஓட்டமாவடி மக்களினதும் , மொஹிதீனினதும்   தொடர்ச்சியான கனதியான அழுத்தங்களால் ஏற்பட்டது.  அவ்வாறான  கடிதம் கிடைத்ததும் ஹிஸ்புல்லாஹ் நீதிமன்றம் ஏறினார். 
தன்னை கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை கட்டுப்படுத்துவதையும் தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைகளில் தலையிடுவதை கட்டுப்படுத்தும் இடைக்கால கட்டளை யொன்றினையும் , கட்டளையிடும் உத்தரவொன்றினையும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கட்சிக் குழுவினதும் அதன் தலைவர்கள் மீதும் பிறப்பிக்க கோரி கொழும்பு  மாவட்ட நீதிமன்றில் ஹிஸ்புல்லா மனுவொன்றினை 1991ம் ஆண்டு முற்பகுதியில் தாக்கல் செய்தார். அந்த மனு ஏப்ரல் மாதம் விசாரணைக்கென  திகதி குறிக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தில் ஹிஸ்புல்லா தனது அரசியல் பின்னணி பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் , அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எல்.செனிவிரட்ன பின்வருமாறு ஹிஸ்புல்லாவின் விண்ணப்பம் பற்றி குறிப்பிட்டார்  " மனுதாரர் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் . அவர் தனது பொது வாழ்க்கையை  1980 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1982   ஆம்   ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரை அவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளராக இருந்தார். அவர் 1989 ஆம் ஆண்டு மாசி மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்  ஒரு வேட்பாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார் . அவர்  15,832  தேர்வு வாக்குகளை பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அப்துல் காதரும் , பஷீரும் முறையே பெற்ற வாக்குகள் 15, 135: , 4822 ,     ஆகும். அவர்கள் முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் இருந்தனர்.  மேலும் மனுதாரர் (ஹிஸ்புல்லாஹ்) கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெற்றால் (வெற்றியீட்டினால்)  தேர்தல் புரிந்துணர்வும உத்திரவாதமுமளிக்கப்பட்டவாறு சுழற்சி முறையில் அப்பதவி வகிக்கப்பட வேண்டும் என்பதற்கிணங்க , அந்த இரண்டு வருட காலம் முடிவுக்கு வந்து விட்டதென்றும் , ஆகவே அவர் எழு நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிடும்  2-3-91  திகதியிடப்பட்ட  கடிதமொன்றினை ஹிஸ்புல்லா பெற்றுள்ளார். அக்கடிதத்திற்கு மனுதாரர் அவ்வாறான எவ்வித தேர்தல் உத்தரவாதமோ அல்லது புரிந்துணர்வோ இருக்கவில்லை என்றும், தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாதென்றும் பதிலளித்துள்ளார்

தொடரும்.

No comments:

Post a Comment

இலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை அறுவடை செய்த நரேந்திர மோடி! அடுத்த இலக்கு என்ன?-வானவில் தலைப்புக்கு கட்டுரை

இ லங்கையில் இவ்வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், நடசத்திர விடுதிகள் மீதும் இஸ்லாமிய ப...