"இவர் போல யாரென்று" மறக்க முடியாத சில மனிதர்கள் - மேலைப்பாளையம் ஜமால் மொஹிடீன்


 
எஸ்.எம்.எம்.பஷீர்

தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - ..”   (நன்னெறி)




இலண்டனில் சுமார் மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து தான் வாழ்ந்த சமூகங்களுக்கு மத்தியில் ஆளுமை செலுத்திய தமிழ் நாடு மேலைப்பாளையத்தை சேர்ந்த மறக்கப்பட்டுப் போன ஒரு மனிதர் பற்றிய நினைவு என்னை அவர் பற்றி எழுதத் தூண்டியது.  அந்த வகையில் நான்  கேள்வியுற்ற ,   ஓரிரு தடவைகள்  1994ல்  நேரடியாக சந்திக்க கிடைத்த  ஒரு நல்ல மனிதர்தான்   ஜமால் மொஹிடீன் . 






இவர் ஒரு பிரபல வர்த்தக குடும்பத்தில் மேலைப்பாளையத்தில் பிறந்தவர். இவர் அன்றைய பர்மாவின் , இன்றைய மியன்மாரின் தலைநகரான இரங்கூனில் உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையுடன் சென்று வாழ்ந்து வந்தவர் . அங்கு நீ மின் பர்மிய ஆட்சி அதிகாரத்தை 1962ல் கைப்பற்றியவுடன் ஏற்படுத்தப்பட்ட  அயல்நாட்டு மக்களுக் கெதிரான கலவரங்கள்,  அங்கு அதிகளவில் வாழ்ந்த பர்மிய இந்திய மக்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக சுமார் மூன்று இலட்சம்  பர்மிய இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற நேரிட்டது,  

மேலும் 1964 லில்  அதிகளவில் வணிக உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியர்களின் சொத்துக்கள் யாவும் தனியார் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன. அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஒரு இந்தியர்தான் ஜமால் மொஹிடீன் குடும்பத்தினர். அங்கிருத்து மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு தமது கோடிக்கணக்கான சொத்துக்கள் யாவற்றையும் இழந்து சென்றாலும் , ஜமால் மொஹிடீன் தமிழ் நாட்டிலிருந்து 1966ல் இலண்டனுக்கு வந்து தனது வியாபார அனுபவத்தை கொண்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை செய்து கொண்டு சில ஆண்டுகள் ஆரம்பத்தில் இலண்டனில் செயற்பட்டார்.  பின்னர் தனது வியாபாரங்கள் துரதிஷ்டவசமாக நஷ்டமடைய நேரிட்டபோது  , 1985 ல்  ஒரு சமூகப் பணியாக , அதிக வியாபார ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு , இந்தியாவிலிருந்து   தமிழ் மொழிமூல இஸ்லாமிய மதம் சம்பந்தமான புத்தகங்களை தருவித்தும மேலும் ஆங்கில இஸ்லாமிய நூல்களை பிற நாடுகளிலிருந்து தருவித்தும்  மதராஸ் புத்தக நிலையம் (Islamic Bookshop -Madras House) எனும் சிறு வியாபார நிலையமொன்றை பின்ஸ்பரி  பார்க் (Finsbury Park) எனும் இடத்தில் நிறுவி வியாபாரத்துடன்  மக்களுடனான தொடர்பாடல்களையும் அதிகரித்து கொண்டார். இவரின் நூலக வியாபாரத்துக்கு இவரின் ட்ரினிடாட் நண்பரான மொஹம்மத் ஹனிப் என்பவர் காலவறையரையற்ற கடனனாக முப்பத்தி இரண்டாயிரம் பவுண்ஸ்களை ஜமால் மொஹிடீனுக்கு கடனாக  வழங்கி உதவினார் . 

ஜமால் மொஹிடீன் வாழ்ந்த  நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஜான் பட்டேன் (John Pattern) என்பவரை  ஆதரித்து  தன்னை சந்திப்போர்களிடம் ஜமால் மொஹிடீன் பிரச்சாரம் செய்தார்.  அந்தத் தேர்தலில்  ஜான் பட்டேன் தேர்தலில் வெற்றியீட்டியது மட்டுமல்ல கல்வி அமைச்சராகவும் பதவியேற்றபோது ஜமால் மொஹிடீன் பிரித்தானியாவில் முஸ்லிம் பாடசாலைகள் நிறுவப்படவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார். உண்மையில் முஸ்லிம் பாடசாலைகளை பிரித்தானியாவில் நிறுவும் சிந்தனை முகிழ்த்தவர்களில் இவரும் ஒரு  முன்னோடியாக திகழ்கிறார்.  ப்ரிக்ஸ்டன் க்ரைஸ்ட் தேவாலய மதகுரு; ரேவேரன்ட் வில்லியம் லம்ப்டே    , செயின்ட் தாமஸ் தேவாலய மதகுரு ஸ்டீபன் கோல  ;,  பின்ஷ்பரி பார்க் எவன்ஜலிகள் தேவாலய  மதகுரு ஆகியோர் இவரின் நண்பர்கள் மட்டுமல்ல இவரின் புத்தக கடைக்கு  சென்று மதங்கள்  பற்றி அடிக்கடி  ஜமால் மொஹிடீனுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்பவர்களில்  குறிப்பிடத்தக்க சிலராகும் இத்தகைய செயற்பாடுகள்  ஜமால் மொஹிடீனின் பரந்து பட்ட சமூக தொடர்பாடல்களை தொட்டுக்காட்டும் பண்பாக மிளிர்ந்தது. இவர் எப்போதும் அனாதரவானவர்களுக்கு தனது வீட்டில் ஆதரவளித்து உதவிகள் புரிவது ,  பல ஆதரவற்ற இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும்  ஆலோசனை வழங்கி தனக்கு தெரிந்தவர்களிடம் அவர்களுக்கு வேலைகளுக்கு சிபாரிசு செய்வது, தனது புத்தக நிலையத்தில் வேலை வழங்குவது என்று   தன்னால் முடிந்தளவு உதவி புரிவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.    

தனது வயோதிப காலத்தில் மீண்டும் மேலைப்பாளையத்துக்கு சென்று அவர் ஓய்வு பெற்று அங்கே சில வருப்டங்கள் வாழ்ந்த பின்னர்  காலமாகிவிட்டார் என்று தெரியவந்தபோது அவர் என்னிடம் காட்டிய அன்பும் கரிசனையும் என்னை அவரை நினைவு கூரச்செய்தது.   இலண்டனிலும் வந்து தமிழ் மூல நூல்களை  தமிழ் மட்டுமே வாசிக்க கூடிய சிலருக்கு தனது சமூகத்தை சமயத்தை கற்றுக்கொள்ள செய்த அவரின் ஞாபகம் நிச்சயம் வரும். இன்று பல வருடங்கள்  உருண்டோடி விட்டாலும் இவர் போல யாரென்று வாழ்ந்தவர்களை நினைப்பது என்பது மக்களில் வாழ்பவர்கள் யார் என்பதை நமக்கு நினைவுறுத்தும்.

பிற் குறிப்பு: ஜனாப்; ஹாஜா என்பவர் ஜமால் மொஹிடீன் மேலைப்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அல்ல  என்றும் சுட்டிக் காட்டியிருந்தார்.   நான் தவறுதலாக "மேட்டுப்பாளையம்"   என்று  குறிப்பிட்டிருக்கலாம் . அந்த வகையில் ஜனாப்  ஹாஜா எனக்கு இக்கட்டுரைக்கு பின்னூட்டமாக அனுப்பிய மின்னஞ்சலில் ஜமால் மொஹிடீன் மேலைப்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு உறவினர் என்றும் குறிப்பிட்டிருந்தார். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் சந்தித்த ஜமால் மொஹிடீன்  சொன்னதை  (இரண்டு ஊர்களினதும் வேறுபாட்டை ) நான் கவனிக்கத் தவறி மேலைப் பாளையம் என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த தவறினை இங்கு திருத்தியே இக்கட்டுரை மீள் பதிவிடப்பட்டுள்ளது . ஊர் தொடர்பில் இரண்டு ஊர்களில் தொடர்பில் காணப்பட்ட மயக்கத்தை நீக்கி தவறை திருத்த உதவிய ஜனாப். ஹாஜா அவர்களுக்கு எனது  நன்றிகள் .

2 comments:

  1. mr basser,actualy his native place is melepalayam not mettupalayam.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...