தமிழக முஸ்லிம் அரசியலும் இலங்கை விவகாரங்களும்;

எஸ்.எம்.எம்.பஷீர்

“தலைவன் ஆங்கு பிறர்கையில் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி உண்டோ? “ சுப்ரமணிய பாரதி


இம்மாதம் 16 ந் திகதி தமிழக தேர்தல்கள் இடம்பெறுகின்றன. புpரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. இலங்கைத் தமிழரின் அரசியல் அதிலும் குறிப்பாக புலிசார்பு அரசியல் இன்றைய முல்லைத்தீவு மக்களின் துயரக முகத்துடன் தமிழகத்தின் அமைதிச்சூழலை ஆக்கிரமித்திருக்கிறது. தமிழ் நாட்டு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் அடையாளத்தினை பாகிஸ்தான் பிரிந்து முகமதலி ஜின்னா அவர்கள் இடம்பெயர்ந்தபின்னர் சுதந்திர இந்தியாவின் அகில இந்திய முஸ்லிம்லீக் கட்சியினை (அ.இ.மு.லீ.) சுமந்துகொண்டவர். மறைந்த காயிதே மில்லத் இஸ்மாயில் தாஹிப் அவரது தி.மு.காவுடனான அரசியல்கூட்டு அவரது மறைவிற்குப் பின்னரும் தொடர்ந்து வருகின்றது. இடைக்காலத்தில் அ.ஸ.அப்துல் சமத் அவர்கள் காங்கிரசுடன் தனிக்கூட்டுவைத்ததை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அ.இ.மு.லீ என்றுமே தி.மு.காவின் பக்கம் இருந்து வருகின்றது. பெயரில் அகில இந்தியக் கட்சியாக இருப்பினும் அவ்வாறு செயற்பட முடியாமல் இன்று கேரளா, தமிழக மானிலக் கட்சியாக அ.இ.மு.லீ சுருங்கியுள்ளது மறுபுறம் டில்லி ஜாமாபள்ளி தலைமை இமாம் வுஹாரி அவர்கள் தேர்தல் காலங்களில் தனது ஆளுமையை பேரம்பேசும் சக்தியாக பிரயோகித்து அரசியல் ஈடுபாடின்றி முஸ்லிம் மக்களின் நலன்சார்ந்து செயற்பட்டு வருகின்றார்.

1995 ல் அரசியல், சமூக சமய தளங்களை தேர்தலை இலக்காகக்கொண்ட அரசியல் வரையறைக்குள் மட்டும் அடக்காமல் சுயேச்சையான சிவில் கட்டமைப்புடன் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) தொடங்கப்பட்டதுடன் இதன் தொற்றுவாய்க்கான காரணங்களில் பிரதானமானவை அ.இ.மு.லீக் முஸ்லிம்களின் நலன்சார்ந்து செயற்படவில்லை என்றும் தனிநபர் நலன்களை மையப்படுத்தி செயற்பட்டதன் விளைவாக அரசியல் கட்சியாக தாங்கள் உருவாவதற்கு எதிராக ஒரு பலமுள்ள அரசியல், சமய, சமூக இயக்கமாக த.மு.மு.க உருவாக்கப்பட்டது. இதன் ஸ்தாபகத்திற்கு முக்கிய பங்களித்தவர்களில் மௌலவி பி ஜெயினுலாப்தீன், குன்னங்குடி ஆர்.எம் ஹனிபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எனினும் கடந்த 17 வருடங்களின் பின்னர் இன்று த.மு.மு.க ஒரு அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சியென பதிவு செய்யப்படடு முதன்முதலில் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். ம.நே.ம கட்சி தி.மு.காவுடனும், அ.இ.அ.தி.முகாவுடனும் கூட்டமைக்க பேரம்பேசி இறுதியில் சிறு, சிறு கட்சிகளுடன் கூட்டுவைத்தும் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறார்கள். ம.நே.ம.க முன்னர் த.மு.மு கழகமாக இருந்தபோது குன்னங்குடி ஆர்.எம் ஹனிபா கோவைக் குண்டுவெடிப்பு சந்தேகத்தில் கைதாகி எவ்வித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாமல் கடந்த 11 வருடங்களாக சிறையில் வாடுகிறார். எனினும் அண்மையில் தொடர்ச்சியாக யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான உண்ணாவிரதங்களின்போது தனது பாட்டுக்கு அவரும் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் அனுஸ்டித்தார். இவர் குன்னங்குடி மஸ்தானுக்குப் பிறகு சமயரீதியான ஈடுபாட்டுடன் அறியப்பட்டவர்.; ம.நே.ம கட்சி இன்று பேராசிரியர் ஜவாஹிறுல்லா என்பவரின் தலைமையில் இலங்கை விவகாரத்தில் வைகோ பாணியில் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். ஆதில் “இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்துவரும் ராஜபக்ஸாமீது சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவருக்கு தண்டனை கிடைப்பதற்கான நடவடிக்கையை மனிதநேயம் உள்ளவர்களுடன் சேர்ந்து செயற்பட்டு வருகிறோம்.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் எல்லாம் த.மு.மு.காவிருந்து ம.நே.ம.க ஆனபின்பும் 1990 களில் புலிகளின் முஸ்லிம்கள்மீதான இனச்சுத்திகரிப்பு இனப்படுகொலைகளைக் கண்டிக்கவில்லை என்று விட்டுவிட்டால்கூட 2000ம் ஆண்டு மூதூரில் புலிகளின் அதையொத்த செயற்பாடுகளுக்காக பிரபாகரனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு மனிதநேயமுள்ளவர்களாக அவரும் அவரது சகாக்களும் இருக்கவில்லை. குன்னங்குடி ஆர்.எம் ஹனிபாகூட சிறையிலே அந்நிகழ்வுகளுக்காக ஆட்சேபனை தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதற்கு தயாராக இருக்கவில்லை. வைகோ, நெடுமாறன் போன்ற வகையறாக்கள் புலிகளுக்குப் போதும,; எனினும் இலங்கைத் தமிழர்களுக்காக மனிதாபிமான அவலங்களுக்காக ஏன் உலகில் எந்த மூலையிலும் துயருறும், துன்புறும் மக்களுக்காக குரல் கொடுப்பது தார்மீகமானதுதான். ஆனால் சொந்த மக்களுக்காக குரல் கொடுக்காமல் கொடுமைக்காரர்களை இனங்கண்டு தீர்க்கமாக கண்டிக்காமல் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமது அரசியல் நலன்களுக்காக பாவிக்கின்ற வேளையில் இலங்கையில் அமைதியாக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை அரசியல் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ளாமல் அறிக்கைகளையும், கருத்துக்களையும் ம.நே ம க முன்வைத்து வருகிறது. இந்த தமிழக முஸ்லிம் வரலாற்றுப் பின்னணியில் அண்மைக்காலமாக அ.இ.மு.லீ தலைவா காதர் முகைதீனும் பட்டவர்த்தனமாக புலிகளின் ஆதரவுக் கட்சிகள்மீதான தமது எதிர்ப்பினை குறிப்பாக ராமதாஸ்மீது முன்வைத்துள்ளபோதும் ம.நே ம.க தனது கன்னி அரசியற்; கட்சியின் பயணத்தினை இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருப்பினும் இதன் கருத்துக்கள் இலங்கைத் தமிழர்களின் இன்றைய போர்த்துயரங்களுக்கு அப்பால் புலிசார்பு கட்சிகளின் கருத்துக்களை ஜீரணித்துக்கொண்டு இலங்கைபற்றிய தப்பான பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருப்பது விசனத்திற்குரியது.
இக்கட்சி தனது துவக்கவிழா நிகழ்வில் ”இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா முயற்சிக்கவேண்டும். இப்பிரச்சினையில் மத்திய அரசு இதுவரை காட்டிவந்த மெத்தனத்தினை இம்மகாநாடு கண்டிக்கின்றது” என்று காலத்திற்கேற்ற தமிழக அரசியல் சூழ்சியலை தம் வசமாக்கும் கைங்கரியத்துடன் செயற்படும் கட்சிகளுடன் இனங்காணப்படுபவர்கள். மறுபுறம் முஸ்லிம் மக்களுக்கு என்ன நடக்குது என்று அறியாமல் “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடாத்தி ஆயிரக்கணக்கில் அவர்களின் வாழ்வுரிமையை நசுக்கிவரும் சிங்கள இராணுவம் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளையும் இம்மகாநாடு கண்டிக்கின்றது” என்ற அறிக்கையை எந்தக் கிரகத்திலிருந்து வந்து வெளியிடுகிறார் என்பதுடன் முஸ்லிம்களுக்கு உபகாரம் செய்வதற்குப் பதிலாக, அபகாரம் செய்கின்ற வேலையை யாருக்காக செய்கின்றார் என்ற ஐயம் ஏற்படுகின்றது. கடந்த காலத்தில் முஸ்லிம்கள்மீது புலிகள் கட்டவிழ்த்துவிட்ட அடாவடித்தனங்களை கண்டுகொள்ளாமல் ஒழிந்திருந்த பேராசிரியர் இத்தேர்தலில் சப்பைக் கட்டு கட்டுகிறார். இவருக்கு எனது எண்ணப்பாட்டினை மின்னஞ்சல்மூலம் தெரியப்படுத்தியும் பதிலைக்காணோம.; இவரைவிட புலிகளின் ஐ.பி.சி வானொலியின் இந்தியக் கண்ணோட்ட ஆய்வாளர் அப்துல் ஜபார் பரவாயில்லை எனத் தோன்றுகின்றது. அப்துல் ஜபார் அவர்கள் பிரபாகரனின் வாழ்க்கைச் சரித நூலுக்கு முன்னுரை எழுதிய தமிழக முஸ்லிம் ஊடகவியலாளர். அவர் தனது நிலைப்பாடு குறித்து எனது மின்னஞ்சலுக்கு பதிலளித்திருந்தார்.
ஒருபடி மேலேசென்று இந்திய அரசு இலங்கைமீது வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கொள்கை விளக்கம் விடுகின்றார். அதேவேளை முரண்நகையாக இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இரத்தச்செய்யவேண்டுமென அறைகூவல் விடுகின்றார். இலங்கை இறையாண்மையுள்ள சுதந்திர நாடு. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் இது இந்தியாவின் காலனியல்ல என்பதனை அவர் அடக்கி வாசிப்பது நன்று. சிறிலங்கா.முஸ்லிம் .காங்கிரஸின் தலைவர் அஷரப் அவர்கள் மரணிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய பத்திரிகையான “விடிவெள்ளி”க்கு அளித்த பேட்டியில் ஏன் நீங்கள் தமிழர் போராட்டத்திற்கு தமிழக தமிழர்கள் பலமான தமிழர்கள் பலமான ஆதரவு வழங்குவதுபோல தமிழக முஸ்லிம்களும் உங்களை ஆதரிக்கக்கூடாது என்னும் கேள்விக்கு அவர் வழங்கிய பதில் குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் அதுபற்றி யோசித்து வருகிறோம் என்றும் தன்னைப் பொறுத்தவரை எவ்வித வெளிநாட்டு உதவியும் இல்லாமல் நான் இறைவனை நம்பியிருக்கின்றேன் என்று குறிப்பிட்டு இந்திய முஸ்லிம்கள் ஆதரவு தளத்தினை அவசியமற்றது என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். 1990 ம் ஆண்டுவரைக்குமான காலகட்டங்களில் தென் இந்தியாவில் முஸ்லிம்கள் “தமிழா”; என்ற கோதாவில் இலங்கைத் தமிழர் போராட்டத்திற்கான ஆதரவினை காட்டி வந்திருக்கின்றனர். இதில் சில அபத்தங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
ஏம்.ஜி ஆர் ஆட்சியின்போது சாஜகான் என்னும் முஸ்லிம சென்னையில் தீக்குழித்து இறந்தபோது தறகொலையைக் உயிர்கொடையாகக் கருதும் பிரபாகரன் இம்மூடக் தற்கொலைதாரியின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்திருந்தார்.; தமிழக முஸ்லிம்கள்பற்றி மறைந்த சிவராம் (தராகி) தனது சொந்த அனுபவத்தினை கோடிட்டுக் காட்டுவதாய் தமிழ்நாட்டுக் கரையோர முஸ்லிம்கள் தெற்கு, தென்கிழக்கு தமிழ் குழக்களுடன் நல்லுறவைப் பேணியதாகவும் தமிழ் நாடு தமிழக பொலிஸார் கடத்தல் செயற்பாடுகளை முழமையாக தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது தங்களது தென்னந்தோப்புகளை புலிகள் உட்பட எல்லா இயக்கங்களுக்கும் பயன்படுத்த உதவினார்கள் என்று குறிப்பிடுகின்றார் அண்மையில் 2002 ம் ஆண்டிற்குப் பின்னர் அரசு –புலி போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டபோது இன்னுமொரு முஸ்லிம் தீக்குழிக்க முற்பட்டார். பொதுவாக புலிகள் முஸ்லிம்களை முதன்மையான எதிரிகளாக கருதி செயற்பட்ட மிலேச்சத்தனமான செயற்பாடுகளை அரசியல் இலாபங்களுக்காக இன உணர்வலைகளுக்காக முஸ்லிம கவிஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற சிவில் சமூக பிரதிநிதிகளால் கண்டும் காணாமல் விடப்பட்டதுடன் புலிகளை நியாயப்படுததி; திராவிட வீரத்தின் சின்;னங்களாக புலிகளை சித்தரிக்கும் படைப்பிலக்கியங்களை புனைந்துள்ளனர். கவிஞர் மு.மேதா, கவிஞர் இன்குலாப் போன்றோர் புலிகளின் தென்னிந்திய ஆஸ்தானக் கவிஞர்கள் என்று குறிப்பிடுமளவிற்கு புலிப்பரணி பாடியிருக்கிறார்கள்.
இன்றைய தமிழக முஸ்லிம் அரசியல் சமய அமைப்பாக செயற்படும் தௌஹீத் ஜமாத்தீன் அரசியல் செயற்பாடு வேறு விதமாக அமைந்துள்ளது. த.மு.மு கானாவிலிருந்து விலகி தௌஹீத் ; ஜமாத்தீனை; நிறுவிய பி.ஜே ஜெயினுலாப்தீன் ம.நே.ம கட்சிக்க எதிராக சமூக நலனுக்காக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பில் அதிக பங்குகேட்டு தி.மு.காவுடன் உடன்பாடு செய்து ஆதரித்து நிற்கிறார்கள். வைகோ, ஜெயலலிதா மற்றும் ராமதாஸ் ஆகியோரின புலி ஆதரவிற்கு எதிராகவும் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இலங்கையின் இன்றைய இராணுவ நடவடிக்கைகளை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாகவும் ஆதரித்து வருகின்றார் மேலும் ஒரு சமூதாயத்தின் நலன் முஸ்லிம் என்ற இனவாதத்திற்கு அப்பால் நோக்கப்படவேண்டுமென்பதனையும் தான் ஏன் ம.நே.ம கட்சியினை ஆதரிக்கவில்லை என்பதற்கு அவர் சொல்லுகின்ற கருத்து ”முஸ்லிம் வேட்பாளரை ஆதரிப்பதென்பது உணர்வுபூர்வமாக பார்க்கையில் சரியானதாக தோன்றலாம் ஆனால் முஸ்லிம் வேட்பாளர் என்பதனை மட்டும் பார்க்காமல் சமூதாயத்தின் நன்மையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம் வேட்பாளராயிருக்கும் ஒருவர் வெற்றிபெற்றபின் முஸ்லிம் சமூதாயத்திற்கே அச்சுறுத்தலாக அமைவாரென்றால் அப்போது வேட்பாளரைவிட சமூதாயத்தின் நலனைத்தான் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு முஸ்லிம் வேட்பாளருக்காக ஒட்டுமொத்த சமூதாயத்தின் நலனை பின்தள்ளிவிடக்கூடாது.” நடைபெறவுள்ள தமிழகத் ;தேர்தலகள் இக்கருத்து மோதல்களுக்கான பதிலை தீர்மானிக்கும் நாள் தூரத்திலில்லை.;

thenee, Mahavali: 08/05/2009


No comments:

Post a Comment

தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா-– இணைப்பேராசிரியர் சோம்தீப் சென் (Somdeep Sen)

Home கண்ணோட்டம் தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா அக்டோபர் 1, 2022 இ ந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் ...