மெல்ல தமிழ் ஊடக தர்மம் இனிச் சாகும்!

எஸ்.எம்.எம் பஷீர்

aananthi
“குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்….”
உலகநாதர்


தேனி இணையத்தளத்தில் வெளியான வாசந்தியின் பிரபாகரன் உங்களைச் சந்திக்க மாட்டாரென்று வி.பி.சி ஆனந்தி கூறியதாக தென் இந்திய எழுத்தாளர் வாசந்தி எழுதிய கட்டுரை எனது ஞாபகத்தினைக் கிளறியதால் ஏற்பட்டதன் பிரதிபலிப்பே இக்கட்டுரையாகும்.
அக்கட் டுரையில் ஸ்ரீலங்கா காவல்துறை எனக்கு யாழ்ப்பாணத்திற்குச் செல்ல அனுமதி கொடுத்தது: “அவருக்கு வழியில் ஆபத்து ஏற்பட்டால் அவரேதான் பொறுப்பு” என்கிற ஷரத்துடன். நான் தங்கியிருந்த தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அப்போது லண்டனிலிருந்து வந்திருந்த பி.பி.சியின் பணியாளர் ஆனந்தி தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு செல்ல முயன்று வந்தார். நான் தடைசெய்யப்பட்ட எல்லைக்கு அப்பால் இருக்கும் வவுனியா பகுதிக்கு ரயிலில் பயணமாவது தெரிந்து (நான் எனது பயணத்தைப் பற்றி அவரிடம் உளறி வைத்தேன்) மிக வியப்படைந்தார். மிகுந்த பரபரப்புடன் ‘எப்படி அனுமதி கிடைத்தது எப்படிப் போகப்போகிறீர்கள் மிகக் கடுமையான பயணம் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார். எதற்காகப் போகிறீர்கள் என்று துளைத்தார். பிரபாகரன் உங்களைக் காணமாட்டார் என்று தெரியாதா? கஷ்டப்பட்டுச் சென்ற பிறகு புலிகள் உங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? ஏன்று எச்சரித்தார். ஆனந்தி புலிகளுக்கு நெருக்கமானவர் என்று தெரியும். ஆனால் எனது ஆர்வம் அசைக்க முடியாததாக இருந்தது. என்று வாசந்தி குறிப்பிட்டிருந்தார்.


 ஆனந்தி சிவப்பிரகாசம் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பிரபல்யமான ஒரு அறிவிப்பாளர். தமிழோசையில் இலங்கைத்தீவின் அடையாளமாக தன்னை காட்டிக்கொண்டாலும் “தமிழீழத்தின”; குரலாகவே அவர் ஒலித்திருக்கின்றார் என்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. வாசந்தியின் வடக்கு நோக்கிய பிரயாணத்தை 1994 செப்டம்பரில் அதைரியமூட்டி மிகக்கடுமையான பயணமென்று கருத்துரைத்தவர் பயண நோக்கம் குறித்தும் கேள்விக்கணை தொடுத்தவர் 1993 ம் ஆண்டு மார்ச்  மாதத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தவர் அவர்.  குறிப்பிட்ட அதே கடினமான பயணத்தினை மேற்கொண்டவர். அதே இலங்கை இராணுவத்தின் அனுமதியுடன் கிளிநொச்சி எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டவர். அதன் பின்னர் அவர் அதுகுறித்து தனது அனுபவத்தினை விபரித்த பொழுது அப்போதைய ஜனாபதிபதியின் ஆலோசகர் பிரட்மன் வீரக்கோன் தான் போவதை அதைரியப்படுத்தியதாகவும் ஆயினும் தங்களுடைய கொழும்பு பி.பி.சி பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் செல்லமுடிந்ததாகவும் அங்கிருந்து கிளாலிக்கு இலங்கை கடற்படையினர் கடுமையாக கண்காணிக்கும் கடற்பிரதேசத்திற்குள் 20 பேருடன் படகில் சென்று அவ்வாறு செல்லும்போது கந்தஷஸ்டி கவசம் ஓதிக்கொண்டு தாயகத்தை பாதுகாப்பாய் அடைந்ததாகவும் அங்கு சென்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் வறுமையும், போசாக்கின்மையும் காரணமாக ஒரு குண்டனைக் தன்னும் ( கொழுத்த வயிறுள்ள மனிதன்) காணமுடியவில்லை என்று கூறிய அவர் பிரபாகரனையும் அவரது கொழுத்த ஆயுததாரிகளையும் காணவில்லையா?; ) யாழ்ப்பாண வைத்திய சாலையில் ஒரேயொரு அறுவைச் சிகிச்சை நிபுணர் இருந்ததாகவும் அவர் ஐக்கிய இராஜ்யத்திலுள்ள தமிழ் வைத்தியர்களை அங்கு வந்து உதவவேண்டி கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தான் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தினை குறிப்பிடுகையில் அவர் பிரபாகரனிடம் 80 ஆயிரம் நவீன ஆயுதங்களைக் கொண்ட சிங்களப் படையினருடன் மோத முடியுமா எனக் கேட்டதாகவும் அதற்கு அவர் அக்கா உங்களுக்கு தெரியாதா” அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் என்ன நடந்ததென்று, ரஸ்யர்களுக்கு என்ன நடந்தது ஆப்கானிஸ்தானிலே என்று." இந்த ஆனந்தசூரிய சிவப்பிரகாசம் தான் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனிலே சர்வதேச மன்னிப்புச்சபையின் மனித உரிமை ஆணையமும் இணைந்த நடாத்திய இலங்கை தொடாபான கருத்தரங்கில் மூதூர் முஸ்;லிம்களை சுற்றி வழைத்து புலிகள் ஆடிய உருத்திர தாண்டவத்தைப்பற்றி நான் பகிரங்கமாக ஒலிப்பதிவுடன் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த முனைந்த பொழுது நான் ஒரு கௌரவமான பிரஜையும் தொழில் வகிப்பவனும் என்பதற்கு அப்பால் ஒரு தனிமனிதனாய் எனது சமூகம் குறித்த அக்கறையினை வெளிப்படுத்திய பொழுது எனது தனிமனிதப் பேச்சு உரிமையை பொறுக்க முடியாமல் புலிகளின் விசுவாசத்தால் தான் ஒரு பெண் என்பதையும் உலகின் முன்னாள பிரபல ஊடகவியலாளர் என்பதனையும் ஒரு கணப்பொழுதில் மறந்து என் முதுகில் ஓங்கி அறைந்ததை ஒரு விழுப்புண்ணாகவே நான் கருதுகிறேன். பின்னாளில் இவர் தனது தவறினை உணர்ந்து என்னுடன் பேச எனது தொலைபேசி இலக்கத்தினைக் கேட்டிருந்தமையும் காலங்கடந்த ஞானமாகும்.

சுமார் எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன்பு இலங்கையின் உளவுப்பிரிவில் பணியாற்றி ஓற்வு பெற்ற ஒருவரை நான் லண்டனிலே சந்தித்த பொழுது அவர் குறிப்பிட்டார். தாங்கள் பல தடவை ஆனந்தி பி.பி.சியூடாக பேட்டி எடுக்கமுன்பு பேட்டி கொடுக்கும் நபருடன் தங்களது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பேட்டி அமையவேண்டுமென்பதனை கருத்தில் கொண்டு கேள்விக்கேற்ற பதில்களை அவர் கூறியவாறே அமையவேண்டுமென்பதனை உறுதிப்படுத்திக் கொள்வார். அவர் புலிகளுக்கு  சார்பான கருத்தியல்களை மக்கள் அவலங்களை மிகைப்படுத்தும் நிலைப்பாடுகளை தொலைபேசி ஒட்டுக்கேட்பதன்மூலம் தான் அறியவந்ததாக குறிப்பிட்டார்.

” தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை 1948 ம் ஆண்டு இலங்கைத் தமிழரான காலஞ்சென்ற தமிழறிஞர் சோ சிவபாதசுந்தரம் லண்டன் பி.பி.சி தமிழோசையை உருவாக்கி நனவாக்கினார். அத்தகைய புகழ்பூத்த பி.பி.சி தமிழோசையை களங்கப்படுத்திய ஆனந்தி போன்றோர் அங்கிருந்து நீங்கியபின்பு புலிகளின் ஐ.பி.சி வானொலி இன்றைய பி.பி.சி தமிழோசையை இந்திய முகவர்களாக கண்டனஞ் செய்கின்றார்கள். ஆனந்தியினால் பி.பி.சிக்கு இழப்பில்லை மாறாக பி.பி.சி தமிழோசை பெருமளவில் ஒருபக்கச்சார்பு நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டிருக்கின்றது. ஊடக தர்மம் உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டுமென்பதே எமது கனவு.

Mahavali 10/04./2009

பிற்குறிப்பு :

விழுப்புண் என்பது போரில் மார்பிலும் முகத்திலும் பட்ட புண்ணைக்  குறிக்கும் என்றாலும் இங்கு முரண் நகையாக முதுகில் ஏற்பட்ட புண்ணாக அல்லாது முதுகில் பட்ட  கோழைத்தனமான தாக்குதலைக் குறித்து பயன்படுத்தப்பட்டுள்ளது.      

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...