”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்?


»
                   எஸ்.எம்.எம். பஷீர்


“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்!! “ 
                                                                                                  -பாரதி- 


கலாநிதி .இராஜசிங்கம்  நரேந்திரன் அண்மையில் ஆங்கிலத்தில் எழுதிய ” ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றங்கள் பர்தா அணிந்து காபரே நடனமாடுவது போலுள்ளது” என்ற கட்டுரை ஆங்கிலத்தில் முதலில்  வெளியான பின்னர் (( CONSTITUTIONAL CHANGES IN SRI LANKA: CABARET DANCE BY BURQA- CLAD! By: Dr.Rajasingham Narendran Wednesday, 1 September 2010 ) இக்கட்டுரை தமிழிலும் குமார் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு தேனீயில் வெளிவந்தபின்னர்  இக்கட்டுரை தலைப்பு குறித்து  எனது விமர்சனத்தை முன்வைக்க விரும்புவதால் இக்கருத்தாக்கத்தினை முன்வைக்கிறேன். எந்த விதத்திலும்  இது கட்டுரையின் உள்ளடக்கம் பற்றிய  விமர்சனம்  அல்ல.  இக்கட்டுரையின் தலைப்பு மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் ஒரு கைங்கரியமாகவே தோன்றுகிறது.

 இக்கட்டுரையில் கலாநிதி நரேந்திரன் அவர்கள்
"ஸ்ரீலங்காவில் செயலாக்க எண்ணியுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் முக்கியமற்றவையாக இருந்தாலும் நாம் அதில் ஒரு கண் வைத்திருந்தோம். ஆயினும் வெளியானவைகள் எமக்கு கிஞ்சித்தும் தேவையற்றவை. அது ஒரு விகாரமான பர்தா அணிந்த காபரே நடனக்காரி ஆண் ரசிகர்கள் பார்க்க விரும்பும் ரசமான எதையும் வெளிப்படுத்தாமல் நடனமாடத் தீர்மானித்ததைப் போலுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்

காபரே என்றால் என்ன என்று பிரித்தானிய அறிவுக்களஞ்சிய சுருக்க நூல் பின்வருமாறு கூறுகிறது “மதுபானம் பரிமாறி மெல்லிசை கேளிக்கை வழங்கும் (நடத்தும்) உண்டிச்சாலை” காபரே (( “Restaurant that serves liquor and offers light musical entertainment” ( Britannica Concise Encyclopedia.) அதேவேளை   “பர்தா” புர்காவுக்கு நேரிடையான மொழியாக்கம் அல்ல; (அது அக்கட்டுரையினை மொழியாக்கம் செய்த எம். குமார் பற்றியது-கட்டுரையாளர் பற்றியது அல்ல)   புர்கா அல்லது பர்தா எனபதும் அவ்வாறான ஆடையை கூட குறிப்பதாலும் அவ்வாறான ஆடைகள்  என்பது சமயம் சார்ந்த  ஆடையாக (இஸ்லாம் சமயம் ) மட்டுமல்லாது சில நூறு யூத பெண்களும் தற்போது அணிவதாக அறியப்பட்டுள்ளது

பெண்கள் அறைகுறை ஆடை அணிந்து  தமது உடலழகை காட்டி ஆடும் காபரே நிகழ்வில் கலந்து கொள்ளப்போன ஆண் ரசிகர்கள் பார்க்க விரும்பிய ” ரசமான” எதையும் காட்டாமல் போன நிகழ்வாக ” ரசமான” அரசியலமைப்பு மாற்றங்களை எதிபார்த்து ஏமாந்த போன நிலையை சொல்ல வந்த கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் அந்நிகழ்வில் எதிபார்ததற்கு மாறாக பர்தா அணிந்த காபரே நடனக்காரி,  அதுவும் “விகாரமான பர்தா”  அணிந்த காபரே நடனக்காரி நடனமாட தீர்மானித்ததை போலுள்ளது என்று ஆண்களுக்கு தமது அழகை காட்டாது ( திரு நரேந்திரன்  குறிப்பிட்டது போல் ” ரசமான எதையும்” காட்டாது ) ஒரு மதத்தினை பின்பற்றுகின்ற தமது உடலழகை மறைத்து அணிகின்ற பெண்களின் ஆடையை (பர்தாவை- புர்காவை) அணிந்து நடனம் ஆட தீர்மானித்ததாக கூறுகின்ற உதராணம் அங்கங்களை காட்டும் அரைகுறை ஆடைக்கும் முழுமையாக மூடிய ஆடைக்குமான  எதிர் நிலையை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்ட  உதாரனமாயினும் ஒரு அந்தத்தில் உல்லாசமான குடியும் கேளிக்கையும் நிறைந்த பெண்களின் உடலழகை காட்டுகின்ற ஒரு நிகழ்வினையும் மறு அந்தத்தில்   நாட்டியத்துக்கும் குடிக்கும் சம்பந்தமில்லாத ஒரு சமுக மதப் பெண்களின் உடையை அணிந்துகொண்டு காபரே நடனக்காரி நடனமாட தீர்மானித்ததாக கூறுவது என்பது மிகவும் அபத்தமான உதாரணமாகும்.

திரு நரேந்திரன் அவர்களின் கட்டுரையில் சொல்ல வந்த மிக முக்கியமான ஒரு வரலாற்று காலகட்ட நிகழ்வாக எதிர்பாக்கப்படும் அரசியல் அமைப்பு மாற்றங்கள் எவ்வாறு காபறேக்கும் ” பர்தா ஆடையணிந்த காபறே ஆட்டத்துக்கும்” இடையில் ஒத்திசைவான உதாரணமாகும். பெண்களை போதைபோருளாக பார்க்கும் ஆண்களின் முன் காபரே நடனக்காரி ஏன் பர்தா அணிகிறாள் அல்லது ஏன் பர்தா அணிந்து காபரேக்கு வந்து ஆடப்போகிறாள்.  ஒரு சிருங்கார சிந்தனையை ஒப்பீடு காட்டும் ஒரு அற்ப விஷயமாக ஆணாத்திக்க சிந்தையின் சில்மிஷ வெளிப்பாடாக காபரே நிகழ்விற்கு சென்று காம உணர்வுடன் காத்திருக்கும் ஆணின் சல்லாப உணர்வுக்கும் அது கிடைக்காமல் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் கற்பனை நிகழ்வாக அரசியல் அமைப்பு மாற்றங்கள் மலினப்படுத்தப்படுகிறது.

ஒரு மத கலாச்சார ஆடையினை விகாரமாக விவரித்து  அவ்வுடையினை அணிந்த காபரே நடனக்காரி கற்பனையில் ஆடுவதாக ஒரு நிலையை கண்முன் கொண்டுவர முயற்சிக்கின்ற உதாரணம் ஒரு தவறான உதாரணமாகும்.  ஒரு மத சமூகத்தை அவர்களின் கலாச்சாரத்தை நேர் எதிர் மேனாட்டு கலாச்சார அம்சத்துடன் கலந்து ஒப்பீடு செய்தமை மூலம் ஒரு மத சமூக ஆடையினை அணிகின்ற பெண்கள் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அழகை மறைப்பதற்காக தனது கணவன் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும்  போது தவிர வெளியில் செல்லும் போது  அணிகின்ற ஆடையை அணிந்து கொண்டு காபரே நடனக்காரி ஆடினால் என்ற எடுகோள்  அபத்தமானதாகும்.

திரு நரேந்திரன் அவர்களின் கட்டுரையின் உள்ளடக்கத்துக்கும் தலைப்புக்கும் இடையே காணப்படும் ஒத்திசைவின்மையே அவரின் கட்டுரைத்தலைப்பின் இரு முரண் நிலை உதாரணங்களுக்கு  இடையிலும் காணப்படுகிறது. மேலும் அதிகளவில் இன்று முஸ்லிம் நாடுகளல்லாத பல நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை தடுக்கும் சட்டங்கள்  குறிப்பாக  “புர்கா”  எனப்படும் உடலின் கண்ணைத்தவிர எந்தப்பாகத்தையும் தெரியாமல் மறைத்து உடுத்தும் ஆடையினை அணிவதை சட்டமூலம் தடுக்கும் நிலை உருவாகிவரும் நிலையில் ஐரோப்பாவில் கண் தொடர்பாடல் ((Eye Contact) இல்லை என்று ஜாக் ஸ்ட்ரோ (Jack Straw) எனும்  முன்னாள் தொழில் கட்சி அமைச்சர் ஆட்சேபனை தெரிவித்த பின்னணியில் இன்றைய மரபுவாத கட்சி (Conservative party) புர்காவை தடைசெய்வதற்கு ஆதரவாக  65% விழுக்காடு மக்கள் அபிப்பிராயம்  தெரிவித்திருப்பினும்  அது அணிகின்ற பெண்களின் அடிப்படை உரிமை அதுவென்றும் அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ள பின்னணியில் திரு நரேந்திரன் அவர்கள் அந்த அடிப்படை உரிமைக்குரிய ஆடையை விகாரமாக எவ்வாறு காணலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக திரு நரேந்திரன் சுமார் மூன்று தசாப்தங்களாக சவூதி அரேபியாவிலுள்ள கிங் பைசல் சர்வகலாசாலையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தினமும் காண்பது புர்கா அணிந்த பெண்களைத்தான் . வேறு எந்த நாட்டையும் போலல்லாது சவூதியில் பெண்கள் புர்கா தவிர வேறு எந்த ஆடையும் அணிய முடியாது என்று சட்டமுள்ள ஒரு நாடு.  இன்று இலங்கையிலும் புர்கா அதிகளவில் அணியப்படுகின்ற  சூழலில் எவ்வாறு இவ்வாறான உதாரணத்தை தலைப்பாக்கியிருப்பார்  என்றால் தான் வாழும் நாட்டில் மூன்று தசாப்தமாக காணும் பர்தா மாதர் இலகுவாக அவரது சிந்தனையில் பட்டிருக்க வேண்டும். காபரே நடனக்காரி அணிவதனால் அல்லது அணிந்ததனால் புர்கா விகாரமாகிவிடுமா ? ஆனால் தலைப்பும் சரி அவரின் கட்டுரையும் சரி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போல் இல்லையா.?

அது மட்டுமல்ல கிறிஸ்தவர்களும், யூதர்களும் கூட ஒரு காலகட்டத்தில் புர்காவை அல்லது அதை ஒத்த ஆடையை தமது உடலழகை மறைப்பதற்காக அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் பைபிளில் “ஒரு மனிதன் ஒரு பெண்ணை காமத்துடன் பார்த்தால் அவன் ஏற்கனவே தனது இருதயத்தில்  விபச்சாரம் புரிந்து விட்டான். உமது வலது கண் அப்பாவத்தை விளைவித்தால் உமது கண்ணை பிடுங்கி எறிந்துவிடும்.  உமது உடம்பின் ஒரு பகுதியை இழப்பது  உமது முழு உடம்பும் நரகில் எறியப்படுவதை விட குறைந்த இழப்பையே தரும்’ மத்தியு 5:28-29 (If a man looks at a woman lustfully , he has already committed adultery with her in his heart .If your right eye should cause  you to sin , tear it out and throw it away ; for it will do you less harm to lose one part of you than to have your whole body thrown into hell –Mathew 5:28-29 )   என்று சொல்லப்படுகின்றது என்பதும் உண்மையில் முக்காடு அணியாத ஒரு பெண் அவளது முடியை வெட்டி விட வேண்டும்.  ஒரு பெண் தனது முடியை வெட்டுவதை அல்லது முழுதாக மழித்து விடுவதை செய்ய அவள் வெட்கமுற்றால் அவள் முக்காடு அணிய வேண்டும்”  ( கோரின்தியன்ஸ் 11.6) என்றும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது ( In fact , a woman who will not wear a veil ought to have her hair cut off . If a woman is ashamed to have her hair cut off or shaved, she ought to wear a veil”  ( Corinthians 11.6) (   ஒரு மத பார்வையுடன் இக்கட்டுரை எழுதப்படவில்லை ஆனால் இஸ்ரேலிலுள்ள பைட் செர்மேஷ் நகரில் உள்ள தீவிர சமய பற்றுக்கொண்ட யூத பெண்கள் சிலர் புர்கா அணிவதை ஆரம்பித்து இப்போது அது வேறு சில பகுதிகளிலும் இஸ்ரேலில் சில நூறு யூதப் பெண்களால் அணியப்படுகிறது.


இது பற்றி இஸ்ரேலிய மத குருமார்களிடம் மதத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டுதல்கள் விடப்பட்டுள்ளன. ஒரு கணவன் தனது மனைவியை புர்கா அணிவதிலிருந்தும் கட்டுப்படுத்த முடியாது இதற்காக விவாகரத்து செய்யலாம் என்று ராபை ((Rabbi) எனப்படும் யூத மதகுரு சென்ற மாதம் தீர்ப்பு வழகியுள்ளார். பர்தா புர்காவை ஒத்ததான உடையானாலும் வெறுமனே பர்தா  உடையை மட்டும் குறிக்கும் சொல்லல்ல எனவே அது நேரடியான மொழிபெயர்ப்பல்ல ஆனால் மரபுவாத ஹிந்து சமூகப்பென்கள் கணவன் குடும்பத்தினர் அல்லாத ஆண்களிடமிருந்து விலத்தியிருப்பது கூட பர்தா என்றுதான் சொல்லப்படுகிறது இந்தியாவில் மரபுவாத ஹிந்து சமூகத்திலும் பர்தா ஒரு சமூக ஒழுங்கு முறையாக  அதிகம் பெண்கள் தன்னை மறைத்துக்கொள்ளும் (முக்காடிடுவது உட்பட) ஆடையினை அணிகின்றதற்கும் உள்ள அம்சமாக அறியப்பட்டுள்ளது. எனவே இந்த புர்கா அலது பர்தா உதாரணம்  “விகாரமானதாகும்”.

இதையெல்லாம் எழுத நான் மத போதகர் அல்ல  அந்த நோக்கத்திலும் இக்கட்டுரையை நான் எழுத விழையவில்லை. மாறாக ஒரு மதத்தினரும் வேறு சில சமூகத்தினரும் தங்கள் அழகை மறைப்பதற்காக அணியும் புர்கா ஆடையுடன் காபரே நடனக்காரி வந்து ஆட்டம் போட்டால் எப்படி இருக்கும் என்ற முரண்பாடான உதாரணம் ஏற்றுக்கொள்ள கூடியதாகவில்லை என்பதுடன் ஒரு சமுகத்தை இழிவாக “விகாரமான” புர்கா என்று மறுபுறம் அழகை மறைத்து அவர்களை விகாரமாக்கிவிடுகிறதாக கருதும் மனநிலை உறுத்தலாகவுள்ளது. ஏனெனில் புர்கா அணிய ஆரம்பித்துள்ள சில யூதப்பெண்களின் கணவர்கள் தமது மனைவியர் அணிந்ததை விகாரமாகவே காண்கிறார்கள் என்பதை அவர்களது மத குருக்களிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் காட்டுகின்றன.


இந்தப்பின்னணியில் இலங்கையின் பேரினவாத பௌத்த மதவாத கட்சி என்று எடுத்ததற்கெல்லாம் சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டப்படும்  ஹெல உறுமயவின் அமைச்சரும் அக்கட்சியின் சட்ட ஆலோசகருமான  உதய கம்மன்பில     அண்மையில்  பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பது இஸ்லாம் உதயமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்தது  என்றும் பர்தாவிலிருந்து புர்கா வரை பல்வேறு முஸ்லிம் ஆடைகள் முக்காலத்துக்கும் பொருத்தமானதாக பார்க்கப்படுகின்றது என்பதாகவும் கூறி மேலும் “ஆண்கள் தம் உடலை காட்சிப் படுத்த பெண்களுக்கு முழு உடலையும் முடிவிடுவதற்கு ஒரு நாட்டின் சட்டம் மூலம் வற்புறுத்தபடுமாயின் அது பெரும் தவறாகும் அதே போன்று பெண் ஒருவர் தனது உடலை முற்றாக மறைபதற்கு விரும்பினால் அதற்கு சட்டம் மூலம் தடைபோடுவது பாரிய குற்றமாகும் பிரான்ஸ் ஒரு பாரதுரமான குற்றத்தை இழைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ள பின்னணியில் அதனை நரேந்திரன் விகாரமாக கண்டமையை என்னவென்று சொல்வது! ஒருவேளை அவர் ரசிக்க வருபவனின் மனப்பாங்கை வெளியே நின்று விவரிக்க முற்பட்டார் என்று சொன்னாலும் அரசியல் அமைப்பு மாற்றத்தை அவரும் தானே எதிர்பார்த்திருந்தார். !!


குறிப்பு: இக்கட்டுரையில் வழக்கம்போல் ஆங்கில மொழியிலுள்ள வேதாகம எடுத்துக்காட்டுக்களை (Bibilical quotations) முடிந்தளவு தமிழில் மொழிபெயர்த்துளேன் குறிப்பாக வேதாகம மொழிபெயர்ப்பு சற்று மாறுபட்ட மொழிநடையில் அமைந்திருந்தால் தவறை சுட்டிக்காட்டவும்.

thenee, lankamuslims, mahavali (10/09/2010)

1 comment:

  1. dear Bazeer,

    can I post your articles in my blog? pl let me know.

    i like ur articles always, May Allah the Almighty bless U.

    regards,,,
    Abu Areej

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...