Saturday, 30 April 2011

வேதமோதும் சாத்தான்களும் வெந்துபோன சாமான்யர்களும் !


                                                                                        
எஸ்.எம்.எம்.பஷீர்

"நான் உன்னை  எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்து உன்னைமீட்டுக்கொண்ட உனது கடவுளாக  இருக்கிறேன்." ( வெளியேற்றம் 20)

“I am the LORD thy God, which have brought thee out of the land of Egypt, out of the house of bondage” (Exodus: 20) 


 தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் கூறுவது போல் அடிப்படை மனித தர்மத்தை இனத்தின் பெயரால் அழிக்க வந்த பயங்கரவாத புலிகள் அழிந்து போனபின் இலங்கை இரரணுவம் வென்றதா , அவர்கள் மனித உரிமை மீறல்கள் செய்தார்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பால் இலங்கையில் தேசிய அமைதியையும் இன சவ்ஜன்யத்தையும் அபிவிருத்தியையும் உணர்ந்துகொண்ட மக்கள் இன்று நிமமதியாக சுவாசிக்க முடிகிறதா என்ற கேள்வி எழுந்தால் அதற்கு ஒரே வரியில் பதில் "ஆம்" என்பதுதான் , அதேவேளை , அதற்கடுத்தபடியாக சுவாசம் நிறுத்தி "ஆனால்" என்று சிலர் அடுத்த கதை சொல்ல வந்தாலும் , கீதை (கண்ணன்) வழி உபதேசத்தில் தர்மம் வெல்லுமேன்றால், அது எப்படியும் அதர்மத்தை அழிக்கலாம் என்று நோக்குகின்ற போது இன்று அதர்மம் (புலிப் பயங்கரவாதம் ) அழிக்கப்பட்டிருக்கிறது , பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட  மக்கள் பக்கம் நின்று பார்த்தால் எத்தனையோ தாய்மார்களின் , தந்தையர்களின் சகோதரங்களின் சாபம் பலித்து புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள் இறுதியில் தர்மம் வென்றிருக்கிறது.  


(முல்லைக்) கொடிக்கு தேரீந்தவன் ( பாரி மன்னன் ) , பசுவுக்காக மகற்பலி செய்தவன் (மனு நீதி கண்ட சோழன்) என்று மனித அறிவும் நியாயமும் அங்கீகரிக்காத கதைகளை தமது பாரம்பரிய சமூக நியாயமாக கூறி பெருமிதம் கொள்ளும் பின்னணியுடன் யுத்த தர்மம், பத்திரிகா தர்மம், என்று தர்மங்களுக்கு நாமகரணமிட்டு தர்மங்களை மெச்சுவதாக பறை சாற்றும் ஒரு சமூக கதையாடலுடன் மீண்டும் எவ்வித சங்கோஜமுமின்றி தர்ம நியாயம் பற்றி சபையேறி குரல் கொடுக்கவும் பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக எழுதவும் மீண்டும் சாட்சாத் அதே தர்மவான்களும்  நியாயவாதிகளும் புறப்பட்டிருக்கிறார்கள். அண்மையில் வீரகேசரி ஆசிரியர் தேவராஜன் கிளப்பிய சண்டமாருதம் " வீரகேசரி பத்திரிக்கையின் வருவாயை பவுன்சிலும் ,டாலரிலும் யூரோவிலும்  அதிகரிக்க செய்யும் ஒரு உபாயமாகும்.  இந்த ஜன்மத்தில் பிறவிப் பக்குவமடையாத முது சீவியான புலிகளின் உயிரோடை தமிழ் வானொலியில்  பிரபாகரனிசம் எனும் நாசகாரிசம் கதைக்கும் தாசீசியசுடன்  வானொலியில் வந்து வருவாய்க்காக மலையக பூர்வீகம் கொண்ட  கதையளக்கும் தேவராஜன் முன்பிருந்த யாழ் மைய வாத பத்திரிக்கையாளங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார். சரி,  அது கிடக்கட்டும் அதி கூடிய கூலிக்கு மாரடிக்க பல பத்திரிகை ஜாம்பவான்கள் போட்டிபோட்டுக்கொண்டு முண்டியடிக்கும் கலியுகத்தில் பத்திரிக்கா தர்மமாவது மண்ணாங்கட்டியாவது!  

இந்த வேளையில் தான் யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிக்கை தனது  " நடுநிலை தவறா நன்னெறி காக்கும் நாளிதழ்" என்ற நீதி வாக்கியத்துடன் சென்ற வாரம் எழுதிய ஆசிரிய தலையங்கம் நடுநிலை நன்னெறி போதிக்க புறப்பட்டிருக்கிறது. அதுவும் முஸ்லிம்களின் இறை நம்பிக்கையை வேறு நினைவூட்டி தங்களுக்கு உதவிக்கு அழைத்திருக்கிறார்கள்   இந்த பத்திரிகை தர்மவான்கள் நடுநிலை தவறா நன்னெறியாளர்கள் என்று தங்களை இப்போது அடையாள படுத்துபவர்கள் அந்த அடையாளத்தை தொலைத்தே பல தசாப்தங்களாகி விட்டன. புலிகளுக்கு துதிபாடாத பேச்சுரிமை எழுத்துரிமை இழந்திருந்த அந்த இருண்ட நாட் களில்  யாழ் மாவட்டத்திலிருந்து மட்டுமல்ல வடக்கின் சகல மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் சிறுபான்மை தானே என்று பெரும்பான்மை தமிழர்களின் ஏகபோக தலைவனும் அவனது காட்டுமிராண்டி கூட்டமும் கொன்றழித்த போதும் முஸ்லிம்களை வெளியேற்றிய போதும் (வட மாகாணம் (1990) தொடக்கி  மூதூர் வரை (2006)  )   அது கூட சரியான தண்டனைதான் என்று நியாயம் கற்பிதத்தையும் தமிழர் தரப்பில் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் எப்போதாவது (தீ பீ எஸ் ஜெயராஜ் போன்றோர்)  நியாயக்குரல் எழுப்பிய போதும் அதற்கு எதிர் குரல் எழுப்பி தமது வித்துவ விலாசங்களை கல்வி விழுமியங்களை முன்வைத்து வெட்கமின்றி  ( சச்சி ஸ்ரீகாந்தா போன்றோர் ) வாதம் செய்ததையும்  வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆக மொத்தத்தில் முஸ்லிம்கள் இன்னும் உங்களின் நீலிக் கண்ணீர் கண்டு ஏமாறத் தயாரகவில்லை.   

வலம்புரி ஊதத  தொடங்கிஇருக்கும் அந்தச்  செய்தியில் ஒரு பகுதியை மட்டும் இங்கு பதிவிலிட்டு அதன் நபுஞ்சகத்தன்மையை அடையாளம் காண முயற்சிக்கிறேன்.   
" வன்னி யுத்தம் மிக உச்ச கட்டத்தில் இருந்த போது அதில் அப்பாவித் தமிழ் மக்கள் கொலை யுண்டு போன நிகழ்வுகள் என்றுமே நியாயப் படுத்த முடியாதவை. அதை நியாயப்படுத்த முடியுமென்று யாரே னும் கூறுவார்களாயின் உங்கள் மார்க்கத்தின் மொழிநடையில் அவர்கள் இறைவனுக்கு அநீதி இழைப்பவர்களாவர். எனவேதான் தமிழ் மக்கள் அனுபவித்த வேதனையில் இழப்புக்களில் முஸ்லிம் மக்கள் - அவர்கள் சார்ந்த அரசி யல் கட்சிகள் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை  - கண்டனங்களை - கையொப்பங்களை  கொடுத்துவிடக் கூடாது. இதனையே அப்பாவித் தமிழ் மக்கள் உங்களிடம் வேண்டி நிற்கின்றனர்.

அன்பார்ந்த முஸ்லிம் மக்களே! இது உங்க ளின் மனச்சாட்சி பேசுகின்ற நேரம். உங்கள் மனச்சாட்சியின் பேச்சு என்றோ ஒருநாள் வரலாற்றுப் பதிவாகும். அந்த பதிவு முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை. அவர்கள் சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் நீதியைக் கடைப்பிடித்தனர் என்பதாக இருக்கட்டும். அல்லா வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றோம். "தமக்கு தேவைஎன்றால் பாசம் பொங்கி பிரவகிக்கும் மொழியில் நாக்கு நறுந்தேன் நயவஞ்சகர்கள் முஸ்லிம் மக்களையும் நோக்கி பேரினவாதிகள் உங்களையும் அடக்கி ஆண்டார்களே என்று அல்லா ( அல்லாஹு )வின் பெயரால் அன்பார்ந்த முஸ்லிம் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள். சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன , முஸ்லிம்களுக்கு மார்க்க உபன்யாசம் வேறு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழர்களுக்குள் கருணா (கிழக்கில் ) கூட ஐக்கிய நாடுகள் சபை  அறிக்கைக்கு எதிராக எதிர்க்கருத்தும் ஆர்ப்பட்டமும் செய்யப்போவதாக குறிப்பிட்ட  செய்திகள் வந்த வேளையில் , கிழக்கில் சிவகீதா தனது மாநகர சபை மூலம் தமது எதிர்ப்பினை பதிவிலிடுகின் பின்னணியில் , பிரபாகரனின் மகளுக்கு கஜன் பொன்னம்பலத்தை திருமணம் செய்ய பிரபாகரனிடமே நேரில் சென்று அவர் வீட்டில் (மாளிகையில் ) விருந்துண்டு தரகு பார்த்த தந்தை இம்மானுவேல் இப்போது அறிக்கையில் புலிகளையும் காட்டமாக பலி கூறி அறிக்கை வந்ததும் , புலிகள் செய்த அட்டாகசாம் குறித்து இலேசாக சிலாகித்ததும் "வலம்புரி" முஸ்லிம் மக்களை அல்லாஹுவின் பெயரால் உதவிக்கு அழைப்பதும் எல்லாமே தங்களுக்கு இன்று முதல் எதிரி தங்களின் தானைத்தலைவன் , உலகின் முதன்மை பயங்கரவாதி பிரபாகரனை அழித்த  மகிந்தவை அரசியல் சாணக்கியத்தால் புலம் பெயர் ஆதரவு பலத்தால் அழிப்பதுதான் இப்போதைக்கு யாழ் மையவாதிகளின் புலன் பெயர் தீவிர தேசிய ஜனநாய பயங்கரவாதிகளின் ஒரே குறிக்கோள். பிரபாகரனின் மகளின் திருமணம் பற்றி காட்டிய அக்கறையை பிரபாகரன் தாலி அணிய வேண்டிய வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளின் கழுத்தில் சைனட் வில்லைகளை கட்டிய "மாலைகளை"  அணிவித்த பொது அதற்கு நியாயம் கற்பித்தவர்தான்  இந்த பாதிரியார் இம்மானுவேல். சர்வதேசம் தண்டனை வழங்கிவிட்டால்- தள்ளி வைத்து விட்டால- பிரபாகரன் தவறவிட்ட தமிழீழத்தை தடக்கி விழுந்தாவது பெற்றுவிடலாம் என்று பகற் கனவு காணும் முயற்சியில்  , முஸ்லிம்கள் சார்பில் எதிர்வரப்போகும் மாகாண சபைத் தேர்தலில்  முஸ்லிம் காங்கிரஸ் தமிழா தேசியக் கூட்டமைப்புக்கு  ஆதரவு அளிக்கப்போவதாக சென்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் சேகு தாவூது பசீர் எழுத்து மூல அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டார். ஆக மொத்தத்தில் கிழக்கு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை ஓரம் கட்ட திட்டங்கள் தயாராகி விட்டன. இந்த பின்னணியின் அரசியல்  காய் நகர்த்தல்கள் இப்போதே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன . இதுவே இன்று வீரகேசரி தேவராஜின் ஒப்பாரியிலும் தொக்கி நிற்கிறது. வன்னியிலே அழிந்த மக்களின் துயரத்தில் குளிர்கான இவர்கள் காத்திருந்தார்கள் , அதனால்தான் புலிகளிடம் மக்களை விடுவி என்று இந்த பெரும் கல்வி கேள்விகளில் சிறந்த கற்ற கல்லாத புலம் பெயர் புலிகள் கேட்கவில்லை , புலிகளும் செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி கதைபோல் இந்த புண்ணியவான்களின் -தர்மவான்களின்- எதிர்கால பிரச்சாரத்துக் கென (ஐக்கிய நாட்டு அறிக்கை உட்பட) மக்களை கொல்லப்பன்னி தாமும் அழிந்து உதவியிருக்கிறார்கள். ஐயா நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் , ஏன் இப்போது நாக்கில் நறுந் தேனுடன் பேசுகிறீர்கள் என்பதெல்லாம் அல்லாஹுவின் பெயரால் இந்த சுதந்திர இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு தெரியும். தந்தை இம்மானுவேல் சந்திரிக்காவின் காலத்தில் யாழ் இராணுவத்தால் கைப்பற்ற பட்ட போது     வேதாகமத்தை உதாரணம் காட்டி (எகிப்திலிருந்து வெளியேறிய யூதர்கள்   பற்றி கூறும்   Exodus ) அந்த மக்கள் வெளியேற்றம் பற்றி காட்டமாக வேதம் ஓதியவர். யாழ் முஸ்லிம் வெளியேற்றம் பற்றி வேதாகமத்தில் அதே உதாரணத்தை காணும் அளவு கண்களை மூடிக்கொண்ட கிறிஸ்தவ போதகர் அவர்.  புலிகள்  முஸ்லிம்களை வெட்டி எறிந்த போது ஏனைய தமிழர் இயக்கங்களை கொன்றழித்த போது . சிங்கள அப்பாவி பொது மக்களை கொன்றொழித்தபோது மவுனித்த வாய்களும்எழுதாத   கைகளும் இப்போது பேசவும் எழுதவும் புறப்பட்டிருக்கின்றன. ஆனால் சாத்தான்கள் வேதம் ஓதியபோது ஏசுவும் கேட்கவில்லை முஸ்லிம்களும் கேட்கமாட்டார்கள். ஏனென்றால் சாத்தான்கள் என்றால் யாரென்று இந்த இரு மதத்தினருக்கும் நன்றாக தெரியம். 

ராஜீவ் காந்தி , பிரேமதாசா லலித் அதுலத் முதலி , காமினி திசநாயக்க, ரஞ்சன் விஜெரட்டன என புலி எதிர்ப்பு ஆட்சியாளர்கள் அரசியல் வாதிகள் பலர் கொல்லப்பட்ட போதும் தர்மம் வென்றதாக -தர்மத்தின் காவலர்கள் புலிகள் வென்றதாக - பத்திரிக்கா தர்மமும் யுத்த தர்மமும் பேசியவர்கள் , புலிகள் டெலோ இயக்க இளைஞர்களை கொன்றபோதும் மகத்தயாவை கொன்றபோதும் வெருகல் ஆற்றில் கிழக்கின் முன்னாள் நூற்றுக்கணக்கான புலி இளைஞர்களை  யுவதிகளை கொன்றபோதும் எல்லைப்புற கிராமங்களில் அப்பாவி ஏழை சிங்கள விவசாயிகளை குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்ட போதும் இலங்கையின் சகல பாகங்களிலும் அப்பாவி மக்கள் இன மத பேதமற்று புலிகளின் பயங்கரவாத வக்கிரத்துக்கு பலியானபோதும் தர்மம் வென்றதாக யுத்த தர்மமும் பத்திரிகா தர்மமும் பேசியவர்கள் எழுதியவர்கள்  இன்று முஸ்லிம்களிடம்  அல்லாஹ்வின் பெயரால் ஆதரவு கேட்கிறார்கள்.
புலிகள் முஸ்லிம்களை  வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதனை தாண்டி பொலன்னறுவ எல்லை கிராமங்களிலும் வேரோடு அறுத்தெறிய அழிததொழிக்க முயன்ற ஆயிரக்கணக்கான சாட்சியங்கள் எங்களிடமுண்டு , ஆனால் செத்த புலியை அடிப்பதில் என்ன பயன் என்று நாங்கள் வாளாவிருக்கிறோம் ,ஆனால்  நீங்களும்தான் அதற்கான நேரடியான சாட்சிகள் , வெளிப்படையாக உங்கள் புலிப் பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட  அழிச்சாட்டியங்களுக்கு  நீங்கள் உங்களின் மனட்சாட்சியை கொஞ்சமாவது பேசவிடுவீர்களா , அதை கேட்கவே நாங்களும் காத்திருக்கிறோம்.

 ஆனால் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற கூறிய வள்ளலாரையும் , "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு" என்று கூறிய ஏசுவின் வாக்குக்கு மாறாக புலிப் பயங்கரவாதத்தை போஷி(தி)த்த  பாதிரியார் சீமான்பிள்ளை ஜோசப் இம்மானுவேல் போன்றோரையும் அப்போது காணமுடியவில்லை. இப்போதெல்லாம் தமிழ் தேசிய வெறியர்கள் முஸ்லிம் மக்களை நினைவுகூருவதும்  , அவர்கள் மீது அன்பு காட்டுவதும் அதிகமதிகமாகி வருகிறது. மீண்டும் முஸ்லிம்கள் இந்த தமிழ் தேசிய பிரிவினைவாதிகளின் நயவஞ்சகத்தை அடையாளம் கண்டு அதிகமதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தமது கடந்த கால அனுபவங்களை எதிர்கால அரசியல் அணுகுமுறைகளுக்கு ஆதாரமாக கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

"யார் பயங்கரவாதிகள்" By Vijaya Baskaran

--------------------------- 1983 இனக்கலவரம் நடந்தபின் ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கின.ஏதோ நமக்கு சுதந்திரம் கிடைத்த...