மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம் -4)

எஸ்.எம்.எம் பஷீர்


இலங்கையில் பண்டாரநாயக்காவின் படுகொலைக்குப் பின்னர் ஜே.வி.பியினரின் ஆயதக் கிளர்ச்சிக் காலகட்டங்களிலும், மறுபுறம் தமிழர்களின் ஆயதப் போராட்டம் தொடங்கியதிலிருந்தும் அரசியல்வாதிகள் மக்கனிள் பாதுகாப்பை உறுதி செய்வதனைவிட தங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறையினை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பொத்துவில் பா.உ கனகரெத்தினம் புலிகளால் எவ்வாறு சுடப்பட்டர் என்பதனை என்னிடம் விபரித்த மட்டக்களப்பு நண்பன் இன்று உயிருடன் இல்லை. பின்னர் இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்துபோனார். தங்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைகாட்டிய அரசியல்வாதிகள் பலர் புலிகளின் தாக்குதலிலிருந்து தப்பமுடியவில்லை.


குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகளான முன்னாள் எம்.பி அலிசாஹிர் மௌலானா, ஹிஸ்புல்லா ஆகியோர் புலிகளுக்கு உதவிபுரிபவர்களாக நெருங்கிய தொடர்புகொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். இந்த புலிப்பயம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்காவைக்கூட விட்டுவைக்கவில்லை. கருணா புலிகளிலிருந்து பிளவுபட்டு புலிகளுக்கு சவாலாக கிழக்கில் அமைந்தபோது லண்டனிலுள்ள தமிழ் மனித உரிமைவாதிகளென சொல்லிக்கொள்பவர்கள், மேலும் தமிழ் தேசியவாதிகள் ஆகிய இருதரப்பிற்குமிடையில் சமரசப் பேச்சுவர்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்தே சொர்ணத்தின் தலைமையில் கடல்வழிப்பாதையால் வெருகலுக்கு புலிகளின் ஆயுததாரிகள் செல்வதற்கு அனுமதி வழங்கியது சந்திரிகா அம்மையார் என்னும் செய்தியினை தகவலறிந்த வட்டாரம் உறுதி செய்தது. இதில் கருணாவின் விசுவாசிகள் 310 பேர்வரை கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைகள் கோரமாக செய்து முடிக்கப்பட்டன என்பதனை அப்பகுதி மக்களுடன் நான் பேசியபோது உறுதி செய்யமுடிந்ததது. பிரேமதாசாவிற்குப் பின்னர் புலிகளுக்கு எதிரானவர்களை அழிப்பதற்கு துணைபோன இலங்கை அதிபர் சந்திரிகா அம்மையார் என்றவிடயம் சட்டவிசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயமாகும். புலிகள் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய பல நல்ல தீர்வுகளை தடுத்து இறுதியில் தமிழர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். நல்லவேளை இந்திய அரசின் அனுசரணையுடன் அன்று மாகாணசபை அறிமுகஞ்செய்யப்பட்டு அமுலில் இல்லாதிருந்திருந்தால் தமிழர்களின் சகல அரசியல் செயற்பாடுகளும், ஆயதப் போராட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராகப்போயிருக்கும். புலிகள் இந்திய –இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தது, பிரேமதாசாவுடன் தீர்வுகாண முற்படாமல் விட்டது, சந்திரிகாவின் அரசியலமைப்பு தீர்வுத் திட்டத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உட்பட நிராகரித்தது. தமிழீழம் என்ற மரணமுடிவுகண்ட பாதையில் இட்டுச் சென்றுள்ளது.


மீண்டும் கிட்டத்தட்ட மஹாவம்ச வரலாறு திரும்பவும் எழுதப்பட்டுள்ளது. புலிகளின் நடைமுறை ஆட்சி (De Facto) முடிவிற்குவந்து இலங்கை முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சிங்கள அரசு மஹாவம்ச மனப்பதிவுடன் செயற்படுவதாக காலத்திற்குக் காலம் குற்றஞ்சாட்டிவந்த தமிழ் தேசியவாதிகளும், புலிகளும் எல்லாள மனப்பதிவில் துட்டகைமுனுவைப் பழிவாங்கி தமிழ் தாயகத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் மஹாவம்சகால மனப்பதிவுடன்தான் செயற்பட்டிருக்கின்றார்கள். புலிகள் அநுராதபுர விமானப் படைததளத்தை சென்ற வருடம் விமானத்திலிருந்து தாக்கி தற்கொலைதாரிகளால் முற்றகையிட்டபோது எல்லாளன் படைத்தாக்குதலென புலிகள் பெயரிட்டிருந்தார்கள். மஹாவம்ச மனப்பதிவுடன் சிங்களவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ புலிகள் எப்போதுமே மஹாவம்ச காலதததிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். துட்டகைமுனுவை பழிவாங்கி எல்லாள வாரிசுகள் தங்களது நாட்டினை மீட்கவேண்டும் என்ற கருத்தியலை இலங்கை இனப்பிரச்சினைக்கு சுருதி சேர்க்கும செயற்பாடாக பேணிவந்துள்ளார்கள்.

மாவீரர் உரையிலும், பாலசிங்கத்தின் உரையிலும் ஏனைய புலி ஆய்வாளர்களின் உரைகளிலும் மஹாவம்ச மனப்பதிவு தவறாமல் நினைவு கூரப்படும்.. மறுபுறத்தில் அதிதீவிர சிங்கள தேசியவாத சக்திகள்கூட மஹாவம்சத்தையோ அல்லது அநாகரிக தர்மபாலாவின் குறுந்தேசியவாத கருத்தியல்களையோ ஒப்பீட்டளவில் மிகவும அபூர்வமாகவே குறித்துப் பேசுவர். ஆனால் பிரபாகான் அஸ்தியானபின்னும் புலி கொயபள்ஸ்கள் (Goebbels) பிரபாகனுக்கு உயிர் கொடுத்து ஒழித்து வைத்துக்கொண்டு ஓர்மப் பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லாளன்; துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்பட்டபோது எல்லாமக்களையும் அழைத்த மரணச்சடங்கினை துட்டகைமுனு செய்ததாகவும், எல்லாளனுடைய சமாதியைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களது தொப்பிகளையும் , பாதணிகளையும் நீக்கவேண்டுமென்றும் ஒரு கௌரவத்தினை ஏற்படுத்தினார். ஆனால் இன்று பிரபாகரனுடைய மரணத்திற்கு இன்றைய துட்டகைமுனு வழங்கினாரா? என்ற வினாவிற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததே! ஏனெனில் எல்லாளன் பயங்கரவாதியல்ல, மக்களை நேசித்த மக்கள் நேசித்த மன்னன்.


சமாதான காலத்தின்போது நோர்வே அரசு இச்சமாதானத்தினை முன்னெடுக்கின்ற முயற்சியில் புலிகளினதும், புலம்பெயர் புலி ஆதரவாளர்களினதும் சுயாட்சி இலக்கைக்கொண்ட சமாதான சதுரங்கத்தில் காய்களை கவனமாக நகர்த்தியுள்ளார்கள். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை தமது வலைக்குள் ஈர்த்துக்கொள்ள அவற்றின் முக்கிய உறுப்பினர்களான சேகு தாவூத் பஸீரை நோர்வே பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சமாதானம் குறித்த பயிற்சி வகுப்பினையும் நடாத்தினார்கள். இதன் பின்னணியில் முன்னாள் புளொட் பின்னாள புலி அனுதாபியுமான வ.ஐ.ச ஜெயபாலன் (கவிஞர்) இருந்துள்ளார் என்பது குறித்து செய்திகள் வெளியாகின. சேகு தாவூத் மூலமாக அஷரப் அவர்களுக்கு அறிமுகமான வ.ஐ.ச ஜெயபாலன் புலிகளுக்கும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினருக்குமிடையில் குறிப்பாக சேக தாவூத, பஸீர் மூலம் எத்தகைய இடைத்தரகர் பணியினைப் புரிந்தார் என்பது குறித்த ஆராயவேண்டிய தேவையும் உண்டு.

ஏனெனில் பின்னர் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷரப் அவர்கள் புலிகளின் சதிவலையில்சிக்கி பலியாகிப்போனார். சேகு தாவூதின் சமாதமானப் கற்கைநெறி தொடர்பான விரிவுரையாளரை சந்திக்கும் வாய்ப்பு நோர்வேயில ;எனக்குக் கிடைத்தது. நோர்வே பல்கலைக்கழகத்தில் பிரதான கல்விமானான இலங்கை சம்பந்தமான ஆய்வுகளை செய்பவரான டொக்டர் கிறிஸ்ரியன் ஸ்ரோக்(Dr. Kristian Stokke) “தமிழீழ தேசத்தினை நிர்மாணித்தல:, இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் உருவாகிவரும் அரச நிறுவனங்களும், ஆளுமை அமைப்புக்களும்” என்ற ஆய்வினை செய்தவர். இதன்மூலம் எத்தகைய சமாதான கருத்தியலை நோர்வே அரசும் அதன் கல்விமான்களும் கொண்டிருந்தார்கள் என்பதனை இது கோடிட்டுக் காட்டுகின்றது. மறுபுறம் இதற்கு எதிராக தமிழ் கல்விமான் டொக்டர் முத்துக்கிருஸ்ன சர்வானந்தன் “தமிழீழ கற்பனா அரசினை தேடுதல் –கிருஸ்ரின் ஸ்ரோக்கிற்குப் பதில் ” எனும தனது எதிர் ஆய்வினையும் முன்வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.   (தொடரும்)


May 2009
thenee, lankamuslims, unamikal and Mahavali


i

1 comment:

  1. உங்கள் கட்டுரைகளை படிக்கும் போது மிகவும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...