ஆவதறிவது… கவிதைத் தொகுதி :அறிமுகமும் விமர்சனமும் :ச முருகையா

அறிமுகஆவதறிவது… கவிதைத் தொகுதிமும் விமர்சனமும் :ச முருகையா

≡ Category: நூலகம், ::கலை இலக்கியம், ச முருகையா | ≅
9.02.08 சனிக்கிழமை மாலை Surbitton Library(UK) நூலக மண்டபத்தில் தேசம் சஞ்சிகையினால் திருமதி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் தலைமயில் திரு ச முருகையா நூல் அறிமுகம் செய்து வைக்க திரு சேனனின் விமர்சனத்துடன் கவிஞர்கள் ஸையிட் எம் எம் பஷீர் மற்றும் அவரது சகோதரர் எஸ் எம் எம் நஸீர் இருவரும் இணைந்து எழுதிய ஆவதறிவது கவிதைத் தொகுதி வெளியீடு செய்யப்பட்டது.

ஆவதறிவது கவிதைத் தொகுதியை கவிஞர்கள் ஸையிட் எம் எம் பஷீர் மற்றும் அவரது சகோதரர் எஸ் எம் எம் நஸீர் இருவரும் இணைந்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருப்பது இந்தக் காலத்தில் ஓர் வித்தியாசமான முயற்சியாகவே தென்படுகிறது. மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக படிப்பை முடித்து இலண்டனில் சட்டத்தரணியாக பணிபுரியும் பஷீர் 21 தலைப்புக்களிலும் இந்தியாவில் மௌலவி கல்வியை முடித்து இலங்கை யில் இன்று மௌலவியாக இருக்கும் நஸீர் 11 தலைப்புக்களிலும் 20 வருடங்களுக்கு முந்தியதான காலகட்ட சமூகப் பிரச்சனைகளை கவிதை களின் கருப் பொருளாக கொண்டு இக்கவிதை தொகுதியை பூரணப்படுத்தி இருக்கிறார்கள் இதன் மூலம் இவர்கள் தமிழ் இலக்கிய சோலையில் புதுமணம் பரப்பும் புதிய மலர் மரங்களாக தங்கள் தமிழ் இலக்கிய பிரவேசத்தை தொடக்கி உள்ளார்கள்.

இலகுவான தமிழ் மொழி நடை, பொருத்தமான அதிலும் புதுமையான உவமான உருவகங்கள் இவர்கள் இருவரும் இஸ்லாத்தை தழுவியவர்களாக இருந்த போதும் கவிதைகளின் கருவில் மற்றைய மதங்களையும் மதிக்கும் போக்கு ஓர் சிறப்பம்சமாகும்.

மந்திரக்கோல் என்ற கவிதையில்……….

“உன்னிடம் இருக்கிறது
எழுது கோல்
அசைத்து விடு
மந்திரத்தால் கட்டுண்டு
மக்கள் நகர்வார்கள்’’
என்று பேனாவின் வலிமையையும்

“எழுதுகோல் தானே
இருண்ட குகையில்
குனிந்து திரிந்தவனை
அடியும் முடியும்
அற்றவனாக்கிற்று’’
என்று பேனாவின் வெற்றிகளையும்

“இலக்கை தேடிக் கொள்
இழப்புக்கள் சகஜமே’’
என்று மாறாத ஜதார்த்தத்தையும் மிகவும் இலகுவான தமிழில் கவிதை விரும்பும் அனைவரையும் கவர்ந்தழுக்கும் வார்த்தைப் பிரயோகம் அருமையாக இருக்கிறது.

நாளாந்தம் கற்பனை வாழ்விலே கனவுப் பொழுதைக் கழிக்கும் மானிடரின் தொடர்ச்சியான பயனற்ற வாழ்வின் பரப்பையும் மிக பவ்வியமாக நானும் ஒரு கோடி மனிதன் என்ற கவிதையில்
“தேடிக்கை பிடிக்க
நினைத்தவை ஆயிரம்
இரைகளை இழந்து
தூண்டில்கள் தொங்கின’’

என்று இங்கு கவிஞர் கையாண்டிருக்கும் எழிமையான உதாரணம் மிகவும் சிறப்பானதொன்றாகும்.

எழுபதுகளில் நிகழ்ந்த சமூக எற்றத்தாழ்வுகள் இணையவிடாது தடுத்த காதலனும் காதலியும் பிரிவு மட்டுமல்ல பிரிந்த பின் மறக்கவும் தியாகம் தேவை என்பதனையும் வழமையான கவிதைப் போக்கில் பெண்கள் மட்டுமே பிரிவின் துயரத்தையும் தியாகத்தையும் பொறுப்பேற்பார்கள் என்ற சிந்தனையை மறுதலித்து, மனதை மறந்து என்ற கவிதையில்
“அவனோ,
தன்னை அவள்
மறப்பதற்காக
தன்னை அவன்
மறப்பதற்காய்
எங்கோ போனான்.’’
என்று வெளிக்காட்டியிருப்பது ஓர் வித்தியாசமான சுதந்திரமான அணுகுமுறை.

பெரும்பாலான கவிதைகளில் எழுபது எண்பதுகளில் ஈழத்து சமூகத்தில் பலகோணங்களில் புலப்பட்ட சோகங்களையும் பல மட்டங்களில் அவற்றின் வெளிப்பாடுகளால் காணப்பட்ட சமூக அவலங்களையும் பஷீர் தொட்டுள்ள போதிலும் சாதாரண மக்களின் சராசரி பிரச்சனைகளையே முதன்மைப்படுத்தி செல்வது அவரின் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தி நிற்பதே இவரின் இக்கவிதை தொகுதியின் பிரதான சிறப்பம்சமாகும்.

அத்துடன் சமகால முரண்பாட்டு அம்சங்கள் எவையென தீர்க்க தரிசனமாக மதிப்பிட்டு அம்முரண்பாட்டு முறைப்பாடுகளில் இருந்து முரண்படாமல் வாசகர்களிடமிருந்து விலகிக் கொள்ள தன் முன்னுரையிலேயே அம் முறைப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளிகளாய் விளக்கம் கொடுத்திருப்பது உண்மையில் கவிஞர் பஷீர் சமூகத்தின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டதிற்கான சான்றாகும்.

றம்ளான் பிறை என்ற கவிதையில் இவர் செய்திருக்கும் குசும்பு ஓர் கவித்துவமான கவிஞனின் தரத்தை அடைந்திருப்பதற்கான அடையாளம் புலப்படுகிறது. இவர் கவிதைகளில் வைரமுத்துவினதும் மேத்தாவினதும் தாக்கம்; புலப்பட்ட போதிலும் இவர் தனக்குரிய ஓர் தனிப் பாணியில் தமிழை இலகு மொழியில் பயன்படுத்தியிருப்பது அவர் அவருக்கே தெரியாமல் செய்த அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.

சமூக விடுதலையில் மகாகவி பாரதி காட்டிய அதே பாணியில் கவிஞர் பஷீரின் மனித ஜாதி என்ற கவிதை மனதை தொட்டு நிற்கிறது. தாய் மீதும் தாத்தா மீதும் இவர் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் கவிதைகளும் மற்றும் மேதினம், மனிதச் சந்திரன் ஆகிய கவிதைகளும் மெழுகுவர்த்தி கவிதையில் மெழுகுவர்த்தியை ஓர் விதவைப் பெண்ணாய் உருவகித்தது மட்டுமன்றி அக்கவிதையினூடு பெண்மையின் தன்மையை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறார்.

விபுலானந்தரின் தமிழ் பணிக்கு மரியாதை செலுத்துதற்காய் இந் நூலில் விபுலானந்தர் என்ற கவிதை புனையப்பட்டிருப்பது இக் கவிதைத் தொகுதி க்கு மகுடம் வைத்தாற் போலுள்ளது. இவை கவிஞர் பஷீர் கவிதை யினூடு சமூகத்தில் பல விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக கவனமாக தெரிவு செய்யப்பட்ட தலைப்புக்களாக இருப்பதுதான் இக்கவிதை தொகுதியின் வெற்றியாகும்.

கவிஞர் நஸீரின் கவிதைகள் கவிஞர் பஷீரின் போக்கிலிருந்து சற்று மாறுபட்டு அரசியலால் சராசரியாக ஏற்படும் அவலங்களை சற்று சூடான அல்லது இறுக்கமான சாயலில் சமூகப்பிரச்சனைகளை தன் கவிதை களுக்கு கருப் பொருளாக்கியிருக்கிறார். இவரின் கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது மனிதனின் விலை என்ற கவிதை அதில் மனித உயிரின் பெறுமதியை
“மண்ணுக்கும் பொன்னுக்கும்
விலையேறிக்கொண்டேயிருக்கின்றது
ஆனால்
மனித உயிர்கள் மாத்திரம்
மலிவாகவே விலை போகின்றன’’
என்ற வரிகள் அதை வலியுறுத்தி நிற்கின்றன. நஸீரின் கவிதையில் அரசியல் வாசமற்ற கவிதையாக தாயின் சிறப்பை கூறும் சுவனத்து நுழைவுச் சீட்டு என்ற கவிதை மட்டுமே இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

நீயும் ஒரு நிருபரேதான் என்ற கவிதையில் நஸீர் நுளம்பை இரவு ராணியாக சித்தரித்து பின் நிருபராக்கியிருப்பது கவிதையில் அவர் செய்த லொள்ளுத்தனம் நகைச் சுவை இழையோடுவதை உணரமுடிகிறது.

இக்கவிதைத் தொகுதி இவர்களின் கன்னி வெளியீடாக இருந்த போதிலும் கவிதைகள் இவர்கள் புதியவர்கள் அல்ல கவிதைக்கு வெளியீட்டுக்குதான் புதியவர்கள் என்பது வெளிப்படுகிறது.

கையிலெடுத்ததும் வாசிக்கவோ அல்லது ஒருமுறை பக்கங்களை புரட்ட வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் புத்தக வடிவமைப்பு. இருந்தாலும் ஆங்காங்கே வரும் எழுத்துப் பிழைகள் சில இடங்களில் கவிதையின் கருப் பொருளையே மாற்றிவிடுகிறது.

ஆக மொத்தத்தில் இவ்விரு கவிஞர்களும் காலம் தாழ்த்தி தமிழிலக்கியச் சோலையில் தம்மை இணைத்துக் கொண்டாலும் இவர்களின் தமிழுக்கான இலக்கியப் பணிக்கு காலம் தாழ்ந்து விடவில்லை. காலம் கடந்த கவிதைகளை காலம் தாழ்த்தி வெளியிட்ட போது கவிதை வாசகர்களுக்கு கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வெட்டு, கொத்து, இரத்தம், போர், மரணங்கள், இழப்புகள், துயரம் என்ற கலைச் சொற்களை கவிதைகளில் வாசித்து பரீட்சயப்பட்டு சலித்துப் போன எம்மவர்க்கு இது ஓர் இழைப்பாறறுக் கவிதைத் தொகுதியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இருபது வருடங்கள் எம்மை பின்னோக்கிய நினைவுகளை மீட்ட சமூகத்தின் நெருடல்களையும் சோகங்களையும் கருவாய் கொண்ட இக்கவிதை தொகுதி எமக்கு இன்று இளைப்பாற்று கவிதையாக இருக்கின்றதென்றால் இன்று நாம் எவ்வளவு பெரிய துயரத்துக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஓர் சிறந்த அளவு கோலாகும். இக்கவிதை தொகுதி கவிஞர்களான பஷீர், நஸீர் இருவரும் அவர்களின் முதலாவது கவிதை தொகுதிபோல் மேலும் மேலும் பல கவிதை தொகுதிகளை தமிழிலக்கிய மலர்ச் சோலைக்கு தருவார்கள் என எண்ணுகிறேன்.

திரு ச முருகையா
முன்னாள் விரிவுரையாளர்
யாழ்- பல்கலைக்கழகம்





நன்றி : தேசம்

1 comment:

  1. நண்பர் பஷீர் அவர்களுக்கு

    உங்கள் கவித்தறன் அறிய ஆவல்.
    உங்கள் நூல் கிடைக்க வழி செய்யுங்கள்.
    MemonKavi
    91,Centre Road,
    Mattakuliya,
    Colombo-15
    Srilanka.
    94785128804
    memonkavi@gmail.com

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...