அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்?

எஸ்.எம்.எம்.பஷீர். (பகுதி: இரண்டு )

ஸ்ரீ லங்கா முஸ்லிம் சிவில் சமூகம் (SLMCS) என்ற பெயரில் மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மஹிந்த எதிர்ப்பு, புத்த எதிர்ப்பு , தமிழ் எதிர்ப்பு என முஸ்லிம் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் விதத்தில் கோழைத்தனமாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு பொன்சேகாவை வெற்றியீட்ட முயற்சித்தும் மகிந்தவை வீழ்த்தமுடியவில்லை. ஆனால் அன்றைய அரசில் சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரசின் கிராம மட்ட கருத்தரங்குகளில் மேடைகளில் இத் துண்டுப்பிரசுர குற்றச்சாட்டுக்கள் அதில் எதிர்வு கூறப்பட்ட பீதிகள் மக்களின் பேசு பொருளாயிற்று. மக்கள் இக்கருத்துக்களை காரண காரியமின்றி கேள்விக்குட்படுத்த்தாமல் நம்பினார்கள். இலண்டனில் வசிக்கும் முஸ்லிம் காங்கிரசின் சட்ட உயர் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் உட்பட நான் இலங்கையில் தொடர்புகொண்ட முஸ்லிம்கள் பலர் இத்துண்டுப்பிரசுர குற்றச்சாட்டுக்களில் ஏதேனும் ஒன்றை அல்லது பலதை தீவிரமாக நம்பியதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அதனால் தான் முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கித் தளங்கள் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்திருந்ததை தேர்தல் முடிவுகளும் புலப்படுத்தின. மகிந்தவுக்கு எதிரான தமிழர் கட்சிகள் புலிகள் ( பிரபாகரன் பாலகுமார் ) உட்பட மஹிந்த மீது அல்லது அவரது ஆட்சி கூட்டணி மீது இவாறான தீவிர வகுப்பு வாதக்கருத்தினை முன்வைத்தார்களா என்று ஆராயும் தேவையும் இப்பிரசுரம் ஏற்படுத்திற்று.

இப்போது அரசின் அரசியல் திருத்தத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் தனது கூட்டணியையும் முஸ்லிம்களின் முதுகெலும்பை நிமிர்த்துகின்ற முஸ்லிம்களுக்கு சுயாட்சி வழங்க உறுதியளித்துள்ள ( என்னை பொறுத்தவரை முஸ்லிம்களின் முதுகெலும்பை முறிக்கின்ற; ஏன் அஸ்ரபும் கூட ரணில் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை ) ரணிலின் கூட்டுக்கு புது விளக்கமளித்து கருத்து தாவியுள்ளார்கள் , இதுவே பின்னர் கட்சி தாவலாகவும் மாறலாம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசுக்கு ஆதரவளிக்கும் திடீர் மாற்றத்துக்கான காரணம் அக்கட்சியிலிருந்து நால்வர் அரசுக்கு தாவப்போவதாக கட்சித்தலைமை பீடத்தை பயமுறித்தியதாகவும் அதனால்தான் அரசுக்கு ஆதரவளித்து ஒரு நல்லுறைவை பேணி அதன் மூலம் தமது தொகுதி மக்களுக்கு அரச தரப்பு எம் பிக்கள் போல் சேவையாற்ற முடியும் , தமது எதிர்கால – கட்சியை- ஸ்திரப்படுத்த; கட்சி மேலும் “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் போகாமல்” பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்ற தந்திரோபாய அணுகுமுறையினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளது என்பது புலப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ரவுப் ஹகீம் தமது உயர் மட்ட கட்சி கூட்டத்தில் இலங்கையை ஒரு பலமுள்ள தேசமாக உருவாக்கவே அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் எவ்வாறு அஷ்ரப் சந்திரிக்காவின் முதல் ஜனாதிபதி காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் நெருக்கமான உறவினை பேணிய போதும் சந்திரிக்காவிற்கு ஆதரவளித்தாரோ ( தலைவரை பின்பற்றி) நாமும் இப்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் உறவினை பேணும் போதும் மஹிந்த அரசுக்கு ஆதரவளிக்கலாம் என்று குறிப்பிட்டதாகவும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டிக்காடியுள்ளார். ஆனால் இன்னுமொரு செய்தியும் அந்த பத்திரிக்கையாளர் சுட்டிக்காட்ட தவறவில்லை. அதாவது ஹக்கீம் நீதித்துறை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் அவர் மீது நீதித்துறையை அவமதிக்கின்றவாறான கருத்துக்களை (contempt of court) அவர் அன்மைக்காலங்களில் வெளிப்படுத்தி இருந்தார் என்றும் அது தொடர்பில் இலங்கையின் அரச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதையும் , அரசு சார்பாக உள்ள எவரும் உச்ச நீதிமன்றில் எவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக எஸ். பீ திஸ்ஸநாயக்க (இப்போதைய கல்வி அமைச்சர் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக குற்றவாளியாக காணப்பட்டு சிறை வாசம் அனுபவித்தமை குறிப்பிடத்தக்கது.) மீது வழக்கு கொண்டுவந்தார்களோ அவ்வாறே இவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யும் சாத்தியம் உணரப்பட்டதனால் ஹகீம் திடுதிப்பென்று கொள்கை மாறினார் என்று ஊகத்தையும் அரசியல் வட்டாரங்கள் கொண்டிருந்ததாக அப்பத்திரிகயாளர் சுட்டிக்கட்டியுள்ளார். எது எப்படி இருப்பினும் அரசியலில் கருத்துக்கள் மாறுவது உண்டு ஆனால் அதுவும் இப்படி மாறுவது தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி சேறு பூசிவிட்டு சில நாட்களின் பின்னர் சந்தனம் பூசுவது; பின்னர் சேறு பூசுவது; பின்னர் சந்தானம் பூசுவது என்று இவர்கள் காலத்துக்கு காலம் புரிகின்ற கோமாளித்தனம் (மன்னிக்கவும் பொன்சேகா சொன்ன தமிழாக அரசியல் கோமாளிகள் இலங்கையில் அவருடனும் கூட்டு சேர்ந்து இருந்திருக்கிறார்கள்.) ஆச்சரியத்திலும் ஆச்சரியமானது . இது இப்போது மட்டுமல்ல சென்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நடந்தது. ஆயினும் அஸ்ரப் அரசியல் செய்தபோது காணப்பட்ட நாணயமான அரசியல் விமர்சத்தினை இவர்கள் செய்யாமல் மிகவும் கீழ் தரமான வார்த்தைகளால் தமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் எதிர் தரப்பு முஸ்லிம் முஸ்லிம் உறுப்பினர்களையும் மிகக் கேவலமாக விமர்சித்துவிட்டு அவர்கள் சார்ந்திருக்கும் அரசுக்கு முட்டுக்கொடுக்க முடிவெடுப்பது தேசத்தை கட்டியெழுப்ப அவசியம் என்று இப்போது கருத்துரைப்பது மகிந்தவை மக்கள் கவர்ச்சியும் செல்வாக்கும் மிகு தலைவராக காண்பது எல்லாமே அவர்களா இவர்கள் என்று மூக்கின் மேல் விரலை வைக்கும் வியப்பான செய்திகளாகும்.

2004 ஜனாதிபதித தேர்தலில் ஹக்கீம் ஆக்ரோஷமாக கூறியவை பற்றி திரும்பிப் பார்த்தால் சில உண்மைகள் புரியும். “நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் ஓர் சாமானியமான தேர்தலல்ல . இது ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான தேர்தலுமல்ல வட கிழக்கு மண்ணில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் அதனது துரோகிகளுக்குமிடையிலான தேர்தலேன்பதை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஆதரவாளர்கள் மனதில் நிறுத்தி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரசை துச்சமாக மதிக்கும் துரோகிகளை நாம் துரத்தி அடிக்க வேண்டும். ரணிலுக்கு நாம் பெற்றுக்கொடுக்கும் மாபெரும் வெற்றி முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பை நிமிர்த்துகின்ற பெரும்பான்மை வெற்றியாகும் “ என்று சூளுரைத்தவர் ரவுப் ஹக்கீம்.

2004 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மஹிந்த வெற்றி பெற்றவுடன் ரவுப் ஹக்கீமின் ஆத்திரம் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற அஸ்ரபின் மனைவி உட்பட அனைவர் மீதும் திரும்பியது. அரசியலில் தமிழர் கூட்டணி மேடைகளில் 1970/80 லில் பேசப்பட்ட அநாகரிக அரசியல் மொழிநடைகளை தனது பிரச்சாரங்களிலே பயன்படுத்தி தனது அரசியல் முன்னாள் நண்பர்களை (முஸ்லிம் காங்கிரஸ் மொழியில் சொல்வதானால் போராளிகளை ) – இவர் புஹாரிதீன் எம் பீ மூலம் 1990 ல் கட்சியில் சேருமுன்பு கிழக்கிலே அக்கட்சியை வளர்ப்பதற்கு இரவும் பகலும் பாராமல் தமது உயிரை பணயம் வைத்து செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக உறுப்பினர்கள் – அனைவரையும் தமிழர் அரசியல் பாஷையில் “துரோகியாக ” அடையாளப்படுத்தியதுடன் இன்றுவரை அதனயே செய்தும் வருகிறார்.

2005 ஜனாதிபதித் தேர்தல் முடிவு குறித்து ரவுப் ஹக்கீம் விடுத்த அறிக்கையிலே அறிகையிலேயே பின்வருமாறு குறிப்பிட்டார் “இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவாகத் தமது மாவட்டங்களில் குறிப்பாக தமது தேர்தல் தொகுதிகளில் படுதோல்வி அடைந்ததன் மூலம் தமக்கு எஞ்சியிருந்த அற்ப சொற்ப செல்வாக்கையும் அறவே இழந்துவிட்டு வெட்கம் கெட்டுப்போய் ஜனாதிபதி நியமித்த அமைச்சரவையில் குந்திக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் துரோகிகள் எதிர்வரும் நாட்களில் இதைவிடப் பெரிய அவமானத்தை அடையப்போகிறார்கள்.

“ பொறுத்தவரை பேரியல் அஷ்ரபுக்கு மட்டும் ஏதோ பழைய அமைச்சுப் பொறுப்பு கைக்கெட்டிய போதிலும், ஏனையோருக்கு உப்புச்சப்பில்லாத அமைச்சுப் பொறுப்புகளை எச்சில் இலைகளாக ஜனாதிபதி வீசி எறிந்திருக்கிறார். அதிலும் அரைவாசி பேருக்கு மேல் பாவம் தாம் அடைந்த அவமானத்தை மறைப்பதற்காக அமைச்சரவை அந்தஸ்தற்ற அர்த்தமில்லாத பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்”

ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே மேல் மாகாண சபைத் தேர்தல் நடந்த போது (நியு எல்பிடியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்) மஹிந்த அரசுக்கெதிரான தீவிர பிரச்சராத்தின் போது ரவுப் ஹக்கீம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “சிறுபான்மை சமூகங்கள் நிம்மதியாக வாழும் ஆட்சியொன்றை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே ஏற்படுத்த முடியும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அநியாயம் புரியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியைத் தொடர விடமாட்டோம். நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளது. நாட்டில் இரு வாரங்களுக்கான இறக்குமதியை மேற்கொள்வதற்கான வெளிநாட்டுச் சொத்துகள் மட்டுமேயுள்ளன”.

இவரை போலவே இவரது சிஷ்யனான ஹசன் அலியும் தனது பங்குக்கு உவமான உவமேயங்களுடன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“யானையைப் பார்த்த குருடர்கள் வர்ணித்ததைப் போல, எமது தேர்தல் வெற்றியைத் தடவிப் பார்த்து இல்லாத, பொல்லாத பொய்களையெல்லாம் கூறிக் கொண்டு திருப்திப்படும் எமது எதிர்த்தரப்புச் சகோதரர்கள், அவர்களது எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதைவேண்டுமானாலும் சொல்வதில் தப்பில்லை. ஆனால், வட, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் தீர்க்கமாக, தெளிவாக தங்கள் செய்திகளை உங்களுக்குப் புரியும்படி கூறியுள்ளார்கள். அமைச்சுப் பதவிகள் மட்டும் உங்கள் தலைகளில் சூட்டப்படாதிருந்தால் உங்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகத்தான் முடிந்திருக்கும். ஆனால், நீங்கள் சூடிக் கொண்டிருக்கும் அந்தக் கிரீடங்கள் பாரிய முள்கிரீடங்களாக மாறும் காலம் தூரத்தில் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கம் கூட படிப்படியாகத் தனது கொள்கைகளில் இருந்து நகர்ந்து வருவதை நாம் காண முடிகின்றது. தேர்தலில் வாக்களிப்பதற்காக விரல்களில் பூசிய சாயம் காய்வதற்கு முன்பே இந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இன்றைய ஜனாதிபதியை ஆட்சிக் கதிரையில் அமர்த்துவதற்கு எவ்வாறு சிங்களப் பெரும் தேசிய இனவாத, மதவாத சக்திகள் பங்களிப்புகளைச் செய்தனவோ, அவ்வாறே விடுதலைப் புலிகளும் தங்களது பங்களிப்பை எவ்விதத்திலும் குறையாத அளவில் செய்துள்ளனர். மொத்தத்தில் இரு துருவங்கள் ஒன்றிணைந்து ஒரு அதிகார பீடத்தை உருவாக்கியுள்ளன. இவ்வாறு முரணான சக்திகளின் விளைவால் உருவான அந்தக் கதிரை முகாரி ராகப் பாடலுடனான ஒரு சங்கீதக் கதிரை என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறெல்லாம் கூறி சில மாதங்கள் ஆகவில்லை இப்போது போலவே அப்போதும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர்களும் அவரின் சிஷ்யர்களும் குத்துக்கரணம் அடித்தார்கள்.

தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவப்போகிரார்கள் என்ற எச்சரிக்கையை விடுத்தவுடன் ( பாயிஸ் ) கட்சியை காப்பற்ற வேண்டி அரசுடன் (மகிந்தவுடன் ) முன்னர் சேர்த்தது பற்றி ஹக்கீம் குறிப்பிடும் போது “ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி பாணியில் முடிவு எடுத்தோம் இப்படிச்சொல்ல நான் வெட்கப்படவில்லை எதைப்பற்றியும் பேரம் பேச அன்று நேரம் இருக்கவில்லை தருவதை தாருங்கள் நாங்கள் வருகிறோம் என்று அரசில் இணைந்தோம்” என்று கூறிய இவரே பின்னர் மஹிந்த அரசில் மக்களுக்கு “துரோகம்” செய்து தபால் தந்தி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார்.

2007ல் நடைபெற்ற ஸ்ரீ.மு.கா வின் குருநாகல் மாவட்ட மாநாட்டில் (குளியாப்பிட்டிய நகர மண்டபத்தில் ) ஹக்கீம் மஹிந்த பற்றி சொன்ன கருத்தினை கேட்டு யாரும் தலையைப் பியித்துக்கொள்ளவில்லை. ஏனெனில் ஹக்கீம் அந்த மாநாட்டில் சந்திரசேகரனும் தொண்டமானும் சேர்ந்துள்ளதையும் குறிப்பிட்டு ” இவையெல்லாம் அவரின் (மகிந்தவின்) அரசியல் முதிர்ச்சியை காட்டி நிற்கின்றன தனது கட்சியை விட நாட்டை முதன்மை படுத்தும் ஒரு ராஜாதந்திரி அவர். பெரும்பாலான தலைவர்கள் தங்களின் நாட்டை விட கட்சியை முதன்மை படுத்துபவர்கள் . ஜனாதிபதி (மஹிந்த) எல்லா சமூகத்தையும் ஒன்றாகவே நடத்த விரும்புகிறார்.அதற்காகவே அவர் எல்லா அரசியல் கட்சிகளின் ஆதரவையும் நாடுகிறார். என்னால் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் அண்மித்து வருவதை காணமுடிகிறது. ( All these show his political maturity. he is a good statesman who keeps the country before the Party. Majority of other leaders keep the party before the country The president wants to serve all the communities alike . For that he seeks the co-operation of political parties I can see a new political culture in the offing” )

தொடரும்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...