இணக்கபுள்ளிகளும் இனச்சமன்பாடும் : யாழ் முஸ்லிம்களின் அரசியல் அனுபவங்கள்

இணக்கபுள்ளிகளும் இனச்சமன்பாடும் : யாழ் முஸ்லிம்களின் அரசியல் அனுபவங்கள்

எஸ்.எம்.எம்.பஷீர் .


மு.கார்த்திகேசன் மறைந்த 33வது ஆண்டு நினைவையொட்டி “கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் - நகைச்சுவை – ஆளுமை – தீர்க்கதரிசனம்”என்ற நூல் பற்றிய ஆய்வரங்கு இன்று கொழும்பில் நடைபெறும் வேளையில் யாழ் முஸ்லிம் சமூகம் புலிகளின் இன வெறியின் பால் வெளியேற்றப்பட்டு மீண்டும் அங்கு சென்று தமது அரசியல் அந்தஸ்தினை பெற்று மீண்டும் வாழும் வாய்ய்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன வேறுபாடற்று திரிகரண சுத்தியுடன் நேர்மையான அரசியல் செய்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக முஸ்லிம் மக்களின் தோழனாக வாழ்ந்து மறைந்த கம்முனிஸ்ட் கார்த்திகேசு அவர்களின் இனங்களுக்கிடையிலான சமன்பாட்டினை நினைவில் கொண்டு யாழ் முஸ்லிம் அரசியல் பற்றிய ஒரு சிறு குறிப்பு இது.



கம்யுனிஸ்ட் காரத்திகேசு என அறியப்பட்ட கார்த்திகேசு ஆசிரியர் சட்டத்தரணி சுல்தானை யாழ் நகரபிதாவாக்க அரும் பாடுபட்டார். முதன் முதலில் 1955ல் ஓரு முஸ்லிம் யாழ்மகனை மாநகரசபையில் நகரபிதாவாக கொன்டுவந்த பெருமை அவரையே சாரும்.

சுல்தான் அகில இலங்கை நகர பிதாக்களுக்கான மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது அம்மாநாட்டில் உத்தியோக மொழியாக சிங்களம் மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டபோது அதனை எதிர்த்து நின்றார் . அவர் யாழ் திரும்பியதும் அவரின் துணிச்சலுக்காக யாழ்நகர உறுப்பினர்களாலும் பொது மக்களாலும் கவுரவிக்கப்பட்டார். கார்த்திகேசு ஆசிரியர் யாழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அதன் பின்னர் முஸ்லிம்களுக்கு நண்பராக செயற்பட்டவர் யாழ் முன்னாள் நகர பிதா அல்பிரேட் துரையப்பா.

மறுபுறத்தில் தமிழ் தேசியம் பேசிய தமிழர் கூட்டணியினரோ தமிழர் "விடுதலைக்கு" ஆயுதம் தூக்கி போராடியவர்களோ முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதில் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அவர்கள் செயற்படவில்லை, அதனால்தான் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் தனிப்பட்ட அடிப்படையிலேதான் தமது ஆதரவை அரசியலில் வழங்கி வந்திருக்கிறார்கள். முஸ்லிம்களை வெறும் தமிழ் பேசும் சகோதரர்கள் என பொதுமைப்படுத்தி அவர்கள் மீது சவாரி செய்தவர்கள்தான் தமிழரசுக் கட்சியினர். அந்த வகையில் முஸ்லிம் மக்களின் நலன் சார்ந்து செயற்பட்ட அரசியல்வாதிகளையே முஸ்லிம்கள் ஆதரித்தார்கள்.

கார்த்திகேசு ஆசிரியர் துரையப்பா போன்றோர் முஸ்லிம்களிடையே செல்வாக்கு மிகுந்தவர்களாக திகழ்ந்தார்கள். ஜி ஜி பொன்னம்பலம் கூட தமிழ் தேசியத்துக்கெதிராக தமிழரசுக்கட்சிக் கெதிராக தேர்தல்களை சந்தித்தபோதும் முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கிய வரலாறும் உண்டு. 1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது முஸ்லிம்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்பு வட மாகாண முஸ்லிம்களின் நலனோம்பு அமைப்பின் சார்பாக ஏ.சி .எம் .இக்பால் "யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் அங்குள்ள தமிழ் சகோதரர்கள் மீது வெறுப்புக்கொள்ளவில்லை ஏனெனில் அவர்கள் ஒரு பொழுதில் சுல்தானை நகர பிதாவாக ஆக்கியவர்கள் என்பதனாலாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2008 பிப்ரவரியில் நாங்கள் யாழ்ப்பாணம் செல்ல நேர்ந்தபோது அங்கு யாழ் முன்னாள் அரச அதிபர் கணேஷ் தலைமையில் சிவில் சமூக பிரதிநிகள் சிலரையும் சந்தித்து கருத்துப்பகிர்வு செய்யும் ஒரு நிகழ்வு யாழ் அரச அதிபர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அங்கு பிரசன்னமாகியிருந்த சிவில் சமூக பிரதிநிகளில் யாழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பாலசுந்தரம்பிள்ளையும் எங்களுடன் கருத்துப்பகிர நேரிட்டது. தாங்கள் திறந்த வெளி சிறைச்சாலைக்குள் வாழ்வதாகவும் தங்களுக்கு தோல்வியுற்ற 13வது திருத்தச்சட்டம பற்றி கதைப்பது அர்த்தமற்றது என்று குறிப்பிட்டார் என்பதற்கப்பால் நான் யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றபட்டபோது "நெட்டை நெடும் மரங்களென” நின்றிருந்தீர்களே ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டபோது அவர் முதலில் ஆத்திரமுற்றார் . இவரது ஆத்திரம் இவருக்கு இவர் பேராதனை பல்கலைக்கழக ஆசானாகவிருந்தபோது ஆத்திரமுற்ற மாணவர்கள் அதற்கான "வெகுமதியை " வழங்கியதாக ஒரு செய்தி அப்போது பரவலாக அறியப்பட்டது, அதுதான் எனக்கு அந்த கணத்தில் ஞாபகத்திற்கு வந்தது அதே ஆத்திரமுறும் மனிதராகவே அவர் அப்போதும் சுமார் முப்பது வருடங்களுக்கு பின்னரும் காணப்பட்டார்.

மேலும் எனது கேள்விக்கு அப்போதைய காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இமாம் எம் பீ யாக நியமிக்கப்பட்டதை கூறி யாழ் மக்களுக்கு எதோ பரிகாரத்தை தமிழ் சமூகம் செய்துவிட்டதாக நியாப்படுத்திய அவரின் "நியாயத்தை" "நேர்மையை" நீங்களே இதனை வாசிக்கும் பொது யோசிக்கலாம். சொத்துக்களும் சுகமும் சுரண்டப்பட்டு தமது மண்ணிலிருந்து விரட்டப்பாட்ட யாழ் முஸ்லிம் மக்களுக்கு அவர் கண்டுபிடித்த ஒரு சமன்பாடு இமாமை எம்.பீ ஆக்கியது அந்த வெளியேற்றத்தை ஈடு செய்ததுபோலாகும் என்பதாகும்.

அன்று அவர் தொடர்ந்து இடம்பெற்ற கருத்து பரிமாறல்களுக்கு ஈடுகொடுக்கும் பக்குவமின்றி உருத்திர தாண்டவமாடி அங்கிருந்து தனது இருக்கையை வேகமாக பின்தள்ளி வெளியேறினார். இதுவெல்லாம் அப்போது செய்ததற்கு காரணம் "தம்பி உடையான் படைக்கஞ்சான்" என்பதுதான். அவ்வாறான சம்பவங்களை மீட்டுப்பார்க்கும் போது சற்று பின்னோக்கி சென்று அரசியல் என்றால் என்னவென்று கற்பித்த சிலரை அடையாளங் காட்டமலிருக்க முடியவில்லை , அந்த வகையிலேதான் கார்த்திகேசு ஆசிரியர் நம்முன் உயர்ந்து நிற்கிறார். இவரின் பாசறையில் அரசியல் கற்ற இன்னொமொரு யாழின் முஸ்லிம் மைந்தன் மறைந்த இளங்கீரன் சுபைர் எனும் பிரபல முஸ்லிம் எழுத்தாளர்.

குறிப்பு: எனது கட்டுரையில் நானாக அறிந்து ஆய்ந்து எழுதிய விடயங்கள் சில மூலம் குறிப்பிடப்படாமல் பிரதி செய்யப்படுவதுடன் எனது பெயரும் திரிவுபடுத்தப்பட்டு கோழைத்தனமான முஸ்லிம் ஊடகவியலார்கள் நிறுவனங்கள் எழுத்தாளர்கள் சிலரினால் வெளியிடப்பட்டுள்ளன . அவர்கள் பற்றி விரைவில் எழுதுவேன்.

Thenee 10/10/2010
http://www.thenee.com/html/101010-6.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...