Thursday, 17 March 2011

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)

–எஸ்.எம்.எம் பஷீர்

”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும்
கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன
சிரத்தையுடன் தான் அமைத்த கோபுரமும்கோயிலும்
மண்ணோடு மண்ணாயின"
                                                           – கோகிம் நியண்தர்-இன்று புலிகளின் தலைவர் பிரபாகரனது உடலம் அவரது மரணத்தினை உறுதி செய்தும் இன்னமும் சிலர் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றாரென புலம்பத் தொடங்கியுள்ளார்கள். சூழ்ச்சிக் கோட்பாடுகளில்
(Conspiracy Theory) ஒன்றுதான் தொலைகாட்சியில் காட்டப்படும் கொலைக்காட்சி என்கின்றார்கள். தீவிர புலிப்பக்தர்கள் நம்ப மறுக்கின்றார்கள். புலிகளின் வியாபாரிகள் மிகவும் கீழ்தரமாக பிணத்தையும் வியாபாரமாக்கும் விவஸ்தையற்ற செயலில் கைதேர்ந்தவர்கள் இந்நிகழ்வையே மறுக்கிறார்கள் சுபாஸ் சந்திரபோஸ்போல் தொலைந்தவர் வருவார் என்று ஒருபுறம், ஜேசுவைப்போல உயிர்த் தெழுவாரென மறுபுறமும் புத்தி பேதலித்துப் பிதற்றுவோரும் இருப்பாரென ஐயம் ஏற்படுகின்றது.

ஏனெனில் புலிப்பக்தர்களுக்கு இவர் மனிதரல்ல கடவுள்! இவ்வாறுதான் 1996 ம் ஆண்டு யூலையில் முல்லைத்தீவு இராணுவ முகாமை புலிகள் தாக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்றதாக புலிகள் ஏக்காளமிட்டபோது பிரபாகரனுக்கும் காயமேற்பட்டதாக ஒரு புரளி கிளம்பியது. அப்போது புலிகளின் பிரமுகர் ஒருவர் கூறினார் ”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எவராலுமே அசைக்கமுடியாது” அவர்மீது எதிரியின் சிறு தூசிகூடப் படமாட்டாது என்று கூறினார். இந்த வீறாப்பும், வீம்பும் மட்டுமல்ல ஆயிரமாயிரம் சாபங்களும் இவர்களை துடைத்தழித்திருக்கிறது. இப்புத்தாயிரமாம் ஆண்டு தொடங்கி ஒரு தசாப்தத்துள் நம்பமுடியாத பல நிகழ்வுகள் நடந்தேறி விட்டன. குறிப்பாக சதாம் உசைனின் தூக்கு, மிலோசவிச்சின் அந்திம விசாரணை ஏன் இயற்கைச் சீற்றம் சுனாமி இன்றைய புலிகளின் அஸ்தமனம். நீண்டகால வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்கள் மிக விரைவாகப் புரட்டப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தேசத்தில் புலிகளை ஆதரித்தோர் சொல்ல மறந்தது புத்திமதி, சொல்லிவைத்தது முகஸ்துதி, உதாரணமாக புலி அரசனுக்கு சாமரம் வீசியவர்கள், மஹிந்தவிற்கு. சமாதானப் பேச்சுவார்த்தை குலைய முன்பே சவால் விட்டனர்.

“மீழும்போர் என்றே சொல்லிவிட்டார்
மீட்சியாளர் பிரபாகரனே, கேட்டாய் தானே
ஆளும் இன்றைய மஹிந்தாவே –கொஞ்சம்
அவதானி இன்றேல் போர் உறுதி” (தமிழினி, புதினம் 2005)

வம்பிற்கிழுத்து இன்று அழிந்துபோன புலிகளின் தலைவர் பிரபாகரனது மரணத்துடன் பல்வேறு சூழ்ச்சிக் கோட்பாடுகள் உலாவி வருகின்றன. அதில் ஒன்று தான் தப்பி ஓடும்போது கொல்லப்பட்டாரா, அல்லது சரணடையும்போது கொல்லப்பட்டாரா? ஹிட்லரைப் போல சாம்பலும் இல்லாமல் பெற்றோல் கலனுடன் நடமாடுவோர் என்று சொல்லப்பட்ட பிரபாகரன் எவ்வாறு உயிரற்ற உடலாய் மீட்கப்பட்டார் என்ற பின்னணியில் அவரது சயனைட் வில்லைகள் எங்கே போயின என்ற கேள்விகளும் எழுகின்றன. பச்சிளம் பாலகர்களையும், “மானத்துடன”; சயனைட் வில்லையை கடித்து சாகச்சொன்ன பிரபாகரன் ஒரு கோழையாக மானமின்றி சயனைட் வில்லைகளை கடிக்காமல் செத்திருக்கிறார். இவருக்கு சதாம் போல் பதுங்குவதற்குக்கூட ஒரு குழி “தமிழீழத்தில்” கிடைக்கவில்லை.

 மறுபுறம் பல புத்திஜீவிகளுக்கும், புலி ஆய்வாளர்களுக்கும், தமிழ் தேசியவாதிகளுக்கும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் பட்டம் வழங்க இப்போது பிரபாகரன் உயிருடனில்லை. இந்த ஆதங்கம் இந்திய தமிழ் புலி ஆய்வாளர் அப்துல் ஜபார் பிரபாகரன் செத்திருக்க மாட்டார் என்ற அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துவதிலிருந்து புலப்படுகின்றது. அருட்திரு ஜெகத் கேஸ்பார் பிரபாகரனைப்பற்றி தனது விடுதலைப்போராளி கட்டுரையில் தலைப்பாக ” எங்கள் கனவையும் இல்லாதுபோனவர்களது உயிர் கனவையும் சுமந்தவர். என்று சொல்லியிருந்தார். இன்று இல்லாதுபோன பிரபாகரனின் கனவை யார் சுமக்கப் போகிறார்கள்? புகலிட பத்திஜீவிகளில் பேராசிரியர் கிருஸ்ரி ஜெயம் ஏலீசர் (Prof-christie Jeyam-Eliezer) மாமனிதர் விருது வழங்கப்பட்ட முதல் வெளிநாட்டுப் பிரஜையாகும்.

இந்த வரிசை முன்னாள் எம்.பி நவத்தோடு நின்றுபோனது. இறந்தவர் பற்றி இகழ்ந்து பேசுதல் முறையல்ல என்ற நாகரீகக்காப்பு மனிதகுல விரோதிகளுக்கு பொருந்துமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க வரலாற்றைப் பொறுத்தவரை மனித குலத்தின் விரோதிகள், இரக்கமற்ற கொலைகாரர்கள் தப்பித்துக் கொள்வது வரலாற்றுத் துரோகமாக அமைந்துவிடும. இன்றைய கொழும்புச் செய்திகள் இன, மத, பேதமற்று இலங்கைக்கு இன்னுமொரு சுதந்திரம் முப்பது ஆண்டின் பின்னர் கிடைத்திருப்பதனை பலர் குறிப்பிட்டுக்கூறினர். எனக்கொரு ஞாபகம் கருணா பிரிந்து கிழக்கு முரண்பட்டு நின்றபோது எனது தாயிடம் சொன்னேன் மாற்றங்கள் தொடங்கிவிட்டன. பயங்கரவாதம் இல்லாதொழியும் என்று, தாய் கேட்டார் அப்படியும் நடக்குமா என்று பொறுத்திருங்கள் எல்லாம் நடக்கும் என்றேன் ஆனால் அதனைப் பாhப்பதற்கும் எனது தாயார் இன்று உயிருடனில்லை. புறநானூறு வீரமுள்ள சேர மன்னன் சோழனின் கைதியானபின்னர் தாகத்திற்கு நீர் இரந்து கேட்க விரும்பாமல் இறந்த குந்தையையும், வாளால் வெட்டிப் புதைக்கும் மரபுபேசி இறந்துபோன வரலாற்றைவிட பிரபாகரனின் இறுதி இகழ்விற்குரியது.

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
unmaikal May 2009

No comments:

Post a comment

பாரதி (யார் )? எஸ். எம் .எம் . பஷீர்

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...